{ஒன்று}
2023ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் நாள் – இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நான்காவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு வந்து சேர்ந்தார். ‘மோடி, மோடி’ என்ற முழக்கங்கள் மைதானம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. தங்கரதம் போல வடிவமைக்கப்பட்டிருந்த கோல்ஃப் வண்டியில் ஏறி, பாதியளவில் நிரம்பியிருந்த ஸ்டாண்டுகளை நோக்கி கையசைத்துக் கொண்டே அவர்கள் இருவரும் அந்த மைதானத்தைச் சுற்றி வந்தனர். பின்னர் அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து நடன நிகழ்ச்சியைப் பார்த்தனர். தங்கள் அணி கேப்டன்களுக்குத் தொப்பிகளை வழங்கினர். பின்னர் அணி வீரர்களுடன் கைகுலுக்கிக் கொண்டனர். ஆனால் தனித்தனியாக தங்கள் சொந்த அணியினரிடம் மட்டுமே அதனை அவர்கள் இருவரும் செய்து கொண்டனர்.
அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் வழக்கமான கிரிக்கெட் போட்டியைக் காட்டிலும் அரசியல் பேரணியைப் போலவே பலருக்கும் தோன்றின. சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் ‘ஸ்டேடியத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பதாகைகள் கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் அரசியல் தலைவர்களே இப்போது முக்கியத்துவத்துடன் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன. மைதானத்தில் இருந்த மேடையை மோடி, அல்பனீஸுக்கு அளிப்பதற்காக இரண்டு கிரிக்கெட் அணிகளும் பயிற்சி வலைகளுக்குள் தள்ளப்பட்டிருந்தது அப்போதுதான் முதன்முறையாக நடந்த நிகழ்வாக எனது நினைவில் இருக்கிறது’ என்று கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். சுமார் எண்பதாயிரம் டிக்கெட்டுகளை ஆளும் பாரதிய ஜனதா கட்சி வாங்கியிருந்தது என்ற செய்தி திவ்ய பாஸ்கர் எனும் குஜராத்தி செய்தித்தாளில் வெளியாகி இருந்தது.
கிரிக்கெட் உலகிலேயே அதிகம் பணக்கார, அதிகாரம் மிக்க அமைப்பாக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஜெய்ஷாவால் பிசிசிஐ செயலாளர் என்ற உயர்பதவிக்கு வர முடிந்ததற்கு அவரது கிரிக்கெட் அனுபவமோ அல்லது திறமையோ காரணமாக இருக்கவில்லை. மாறாக அவர் இந்தியாவின் இரண்டாவது அதிகாரம் மிக்க மனிதராக இப்போதுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனாக இருப்பதே அதற்கான காரணமாக இருந்தது. இளைஞரான ஜெய்ஷா பிசிசிஐயில் இப்போது மோடி, பாஜக மற்றும் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். தன்னுடைய தந்தையின் நிழலில் சமீபகாலம் வரையிலும் மறைந்து வலம் வந்து கொண்டிருந்த அவர் மோடியின் படத்தை மோடிக்கே வழங்கி இந்த ஆண்டு நடைபெற்ற விழாக்களில் முன்னிலையில் நின்று வருகிறார்.
2015ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பழைய மோதிரா மைதானம் இருந்த இடத்தில் இப்போது நரேந்திர மோடி ஸ்டேடியம் அதன் வடக்குப் பகுதியின் குறுக்கே ஓடும் நதியுடன் மிகப் பரந்த அளவில் அற்புதமாகக் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக அது உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தின் ஒரு முனையில் உள்ள குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகையில் அந்த மைதானத்தில் மொத்தம் 110,000 இருக்கைகள் உள்ளன என்றும், மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள பலகையில் அந்த எண்ணிக்கை 130,000 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணத்தால் அந்தத் தகவல் நம்பத்தகாத அபத்தத்துடனே இருந்து வருகிறது. வெறுமனே விளையாட்டு அரங்கமாக மட்டும் அந்த மைதானம் இருக்கவில்லை. அங்கிருந்தவை அனைத்தும் மோடியின் பிம்பத்தை அதிகரிக்கும் வகையில் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அந்த மைதானம் மிகப் பரந்த அரசியல் திட்டத்திற்கான மேடையாகவும் இருக்கிறது.
குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மோடி 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார், அமித்ஷா அப்போது துணைத்தலைவராக இருந்தார். அதே ஆண்டில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை நிறுவனமான அகமதாபாத் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக ஜெய்ஷா நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் மூன்றாவது முறையாக முதலமைச்சராக மோடி பதவியில் இருந்தார். மோடியின் முதலாவது பதவிக்காலத்தில் 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வகுப்புவாத வன்முறைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாக இருந்தனர். அப்போதும் மோடியின் தளபதியாக அமித்ஷா அவருடன் இருந்து வந்தார்.
பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் மோதிரா மைதானத்திற்குச் செலவிடப்படும் பணம் குறித்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த மோடி தன்னிடம் கேட்டறிந்ததாக என்னிடம் கூறினார். சுமார் இருபது நாட்களுக்கு மட்டுமே கிரிக்கெட் விளையாடுவதற்காக அந்த மைதானம் பயன்படுத்தப்படுவதை அறிந்ததும் ‘மற்ற நோக்கங்கள், பிற விளையாட்டுகளுக்காகவும் இந்த மைதானம் பயன்படுத்தப்பட வேண்டும்… கிரிக்கெட்டுக்காக மட்டுமே இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது’ என்று அப்போது மோடி கூறியதை அந்த அதிகாரி நினைவு கூர்ந்தார். 2014ஆம் ஆண்டில் மோடி பிரதமரான பிறகு குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெய்ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த மைதானம் எண்ணூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள்ளாக முழுமையாகப் புனரமைக்கப்பட்டது.
அந்தப் புதிய மைதானத்தில் ஏற்பாடு செய்து நடைபெற்ற முதல் நிகழ்வு விளையாட்டுடன் தொடர்புடையதாக இல்லை. இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவி பெருகத் தொடங்கியிருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி இருபத்தி நான்காம் நாள் மைதானத்தின் ஸ்டாண்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘நமஸ்தே டிரம்ப்’ பேரணி அங்கே நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டே அந்த மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது.
‘தொழில்முறையான கிரிக்கெட் விளையாடுவதே அடிப்படையில் தேவைப்படுகிறது’ என்று என்னிடம் தெரிவித்த அந்த அதிகாரி ’ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் இப்போது நடத்துகிறார்கள்’ என்றார். மோடி-அல்பனீஷ் இருவரும் சேர்ந்து அந்த டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பாக ஏற்படுத்திய கவனச்சிதறல் குறித்து கோபம் கொண்டிருந்த அந்த அதிகாரி ‘இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முயல்வதன் மூலம், இப்போது பிசிசிஐ நிகழ்ச்சிகளை நடத்தித் தரும் மேலாண்மை நிறுவனம் போல மாறியுள்ளது. இனிமேல் அந்த மேடையில் வீரர்கள் வந்து நடனமாடக் கூடும். அவர்களுடைய ஆட்டத்தை நடுவர்கள் மதிப்பிடலாம்’ என்றார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவிற்கான முதல் கிரிக்கெட் சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு எதிராக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரண்டு டெஸ்ட், ஐந்து டி20 போட்டிகள் நடத்தப்பட்டன. நரேந்திர மோடி ஸ்டேடியம் அந்தப் போட்டிகள் உட்பட கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டிகளை நடத்திக் காட்டியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இறுதிப் போட்டிகள் இந்த ஆண்டு அந்த மைதானத்தில்தான் நடந்தன. ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக்கோப்பைக்காக அக்டோபர் ஐந்தாம் நாள் நடைபெறவுள்ள தொடக்கப் போட்டி, நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டி என்று மிகப் பெரிய உலகக்கோப்பை போட்டிகள் இந்த மைதானத்திற்கு ஒதுக்கப்படுவதை ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ உறுதி செய்து தந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியும் இந்த மைதானத்தில் அக்டோபர் பதினான்காம் நாள் நடத்தப்படவுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் விளையாட்டு வளாகம் என்று தற்போது அழைக்கப்படுகின்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு அகமதாபாத், காந்திநகர் ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் 2036ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்துவதற்கான மையமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதிரா ஸ்டேடியம் மற்றும் நரேந்திர மோடி ஸ்டேடியம் அமித்ஷாவின் காந்திநகர் மக்களவைத் தொகுதிக்குள் அமைந்திருக்கின்றன.
இந்த மைதானம் மோடி-ஷா ஆகியோருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. அது இன்றைய இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்குப் பொருத்தமான உருவகமாகவும் அமைந்துள்ளது. மைதானத்தின் ஆடம்பரம், நீலம், காவி மற்றும் மஞ்சள் என்று அதன் வண்ணங்கள், மிகப் பரந்த அவுட்ஃபீல்ட், வீரர்களுக்கான நான்கு விசாலமான அறைகள், சூழல் சார்ந்து வடிவமைக்கப்பட்ட கட்டிடம் என்று பலவகைகளிலும் இந்த மைதானத்தை மதிப்பீடு செய்யும் பெரும்பாலான வர்ணனையாளர்கள் மைதானம் முழுக்க அரை மணி நேரத்திற்குள்ளாக காலியாகி விடுவதாக தங்கள் பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அங்குள்ள வசதிகள் குறித்து சொல்லப்படும் அனைத்தும் இந்த மைதானத்தின் இரண்டாவது கேட்டைக் கண்டுபிடிக்கும் வரை நிச்சயம் உங்களுக்கு வியக்கத் தக்கவையாகவே இருக்கும்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியைக் காண்பதற்கான இரண்டாயிரம் ரூபாய் டிக்கெட் வைத்திருந்த எனது நண்பர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைவதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்குமான இடமாக இரண்டாவது கேட் இருந்தது. ஆஷ்ரம் சாலையில் இருந்து அந்த கேட் வழியாக மைதானத்திற்குச் செல்லும் மிக நீண்ட ஒன்றரை கிலோமீட்டர் பாதை மிகவும் குறுகலானது. செல்லும் வழியில் அமைந்துள்ள குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்குப் பிரத்தியேகமான கிளப்ஹவுஸ் பக்கம் மக்கள் செல்வதைத் தடுப்பதற்காக அந்தப் பாதையின் ஒரு பக்கத்தில் சுவர்கள், தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. மறுபுறத்தில் ஹவுசிங் காலனியின் வடிகால் ஓடுகிறது. இவையிரண்டிற்கும் இடையே ஆப்பு போன்று அந்த இரண்டாவது கேட் அமைந்துள்ளது. ஐபிஎல் போட்டி முடிந்ததும் அந்தக் கேட்டை நோக்கி தனது குழந்தைகளைக் கூட்டிச் சென்ற எனது நண்பரால் மிக மெதுவாகவே அங்கிருந்து வெளியேற முடிந்தது. அனைத்துப் பக்கங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறுகலான இடத்திற்குள் சிக்கிக் கொள்ளும் போது எழும் அச்ச உணர்வான கிளாஸ்ட்ரோஃபோபியா பயத்தால் என்னுடைய நண்பர் அதிகம் பயந்து போனார். அன்றைய தினம் எதுவும் நடந்திருக்கலாம் என்று என்னிடம் கூறிய அவர் உலகக் கோப்பை போட்டிகளைக் காண அங்கே வரப் போகின்ற கூட்டத்தால் உருவாக வாய்ப்புள்ள நெரிசல் குறித்து அதிகம் கவலை கொண்டார்.
அந்த மைதானத்தின் முதலாவது கேட் பெவிலியன் முனையை நோக்கிச் செல்லும் பெரிய சரிவுப் பாதையில் விறுவிறுப்பான நடையின் மூலம் விலையுயர்ந்த ஸ்டாண்டுகள், அதில் அமைக்கப்பட்டுள்ள எழுபத்தியாறு ஆடம்பரமான கார்ப்பரேட் பெட்டிகளுக்கு கொஞ்ச நேரத்தில் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் கிரிக்கெட் சங்கம் ஸ்டேடியத்தில் உள்ள இரண்டு சரிவுப் பாதைகள் வழியாக எந்த நேரத்திலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியும் என்று பறைசாற்றிக் கொள்கிறது. ஆனால் என் நண்பருக்கு அன்றிரவு அந்த மைதான வளாகத்தை விட்டு வெளியேற கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. மீண்டுமொருமுறை அங்கே செல்லவே போவதில்லை என்று தான் முடிவு செய்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார்.
மைதானத்தின் அந்த முதல் கேட் வரவிருக்கும் உலகக் கோப்பையின் போது தொலைக்காட்சியில் இந்த உலகிற்குக் காண்பிக்கப்படும் கிரிக்கெட்டைப் போல உள்ளது. இரண்டாவது கேட் பளபளப்பான மேடையின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் குறுகிய ரகசியக் கதவைப் போன்றிருக்கும் இந்திய கிரிக்கெட்டைப் போல உள்ளது.
அதிக அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு, அதிகப் பாதுகாப்புடன் இருக்கின்ற பிசிசிஐயின் இரண்டு பெரும் சொத்துக்களான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஐபிஎல் ஆகியவற்றைத் தவிர ஊழலில் மூழ்கித் திளைக்கும் பிசிசிஐயின் பணம் எதுவும் சரிவரக் கணக்கிடப்படுவதே இல்லை. பிசிசிஐயில் உயர்பதவியில் இருப்பவர்களுக்கிடையே நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. ஆயினும் வயது, பாலினம் பாராமல் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களைத் துஷ்பிரயோகம் செய்வது, சுரண்டுவது போன்ற செயல்பாடுகளால் அந்த அமைப்பின் மையம் வெறுமையாகவே காட்சியளிக்கிறது. மிகப் பெரிய அளவிலான கிரிக்கெட் ரசிகர் பட்டாளம், பிரம்மாண்டமான அளவிலான தொலைக்காட்சி பார்வையாளர்கள் போன்றோரே பிசிசிஐக்கான பணம், செல்வாக்கை உருவாக்கியுள்ளனர். ஆயினும் உலக கிரிக்கெட்டில் மிக மோசமான பார்வையாளர் அனுபவத்தையே மிகச் சாதாரண ரசிகர்களுக்கு பிசிசிஐ தொடர்ந்து வழங்கி வருகிறது. பதினைந்து ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள செல்வங்கள் அனைத்தையும் விழுங்கிச் செரித்திருக்கும் பிசிசிஐ தற்போதைய பாஜக ஆட்சியுடன் மிக நெருக்கமாக, புதிய வலுவுடன் இருந்து வருகிறது. ஆயினும் அது தன்னுடைய நிலத்தடி நீரில் கலந்திருக்கும் அமிலத்தை கண்டு கொள்ளாமலே இருக்கிறது.
{இரண்டு}
காலனித்துவத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டில் கிரிக்கெட்டும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. முதலில் நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே விரும்புவதாக அந்த விளையாட்டு இருந்தது. இறுதியில் இன்றிருப்பதைப் போல அது வெகுஜன விளையாட்டுத் தொழிலாக உருவெடுத்தது. நவீன இந்தியாவின் ஆற்றல் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாக மிகப் பரந்த அளவில் பிராந்திய, வர்க்க வேறுபாடுகளுடன் உள்ள வீரர்களை, பார்வையாளர்களைத் தன்வசம் அது ஈர்த்துள்ளது.
2018ஆம் ஆண்டில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக சுமார் 71.5 கோடி பார்வையாளர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புடன் இணைந்திருந்ததாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் குழுவின் (பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) அறிக்கை கூறுகிறது. நாட்டில் விளையாட்டு நிகழ்ச்சியைப் பார்க்கின்ற 76.6 கோடிப் பேரில் தொண்ணூற்று மூன்று சதவிகிதம் என்ற அளவில் அந்த எண்ணிக்கை உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் கட்டிலும் கூடுதலாக, அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கின்ற கிரிக்கெட்டிற்கான தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் பிசிசிஐயின் நிதி நிலைமை வலுவாக இருப்பதற்கான உந்து சக்தியாக இருந்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி தாராளமயமாக்கல் செயல்பாடுகளுக்கு இணையாக இருந்து வந்துள்ளது. ஆசைகள், கனவுகள், கோலாக்களை செயற்கைக்கோள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் அது விற்பனை செய்து வந்துள்ளது. 1990களில் கிடைத்த நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முழுக்க எடுத்துச் சென்றது. அந்தக் காலகட்டத்தில் அனைவரையும் கவர்ந்திழுப்பவராக இருந்த மும்பையின் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில் தொலைக்காட்சியில் தோன்றத் துவங்கினர்.
நவீன இந்திய விளையாட்டு வீரர்களில் இந்தியத்தன்மையை வெளிப்படையாக வெளிப்படுத்திய இருவரில் மூவர்ணக் கொடி பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்த சச்சின் முதலாமவராக இருந்தார். மற்றொருவர் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ். கிரிக்கெட் விளையாட்டின் ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக சச்சினிடம் இருந்த தகுதியே இந்திய கிரிக்கெட், அதன் ரசிகர்களிடையே புது வகையான உரையாடலை உருவாக்கியது. இப்போது வெளிப்படையாகத் தெரியும் ஆக்ரோஷமான அல்லது மோதல்தன்மை கொண்ட தேசியவாதமாக இல்லாமல் அது மிகவும் மகிழ்ச்சியான, உற்சாகமான தேசியவாதம் என்ற அளவிலே இருந்தது. மைதானத்தில் பெறும் வெற்றியைக் கணக்கில் கொள்ளாது தேசிய அணிக்கு ஆதரவாக அது இருந்தது. வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்த உலகமயமாக்கப்பட்ட உலகில் பாலிவுட்டைப் போல இந்திய தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கமாக கிரிக்கெட் நிலைநிறுத்தப்பட்டது.
ஐபிஎல் வருகையால் இந்திய கிரிக்கெட்டின் நிதி நிலைமை அனைவரும் பார்த்து வியக்கும் வகையில் முற்றிலுமாக மாறியது. தொலைக்காட்சி விளம்பரங்கள், சந்தைப்படுத்துதல், கிரிக்கெட் வர்ணனைகளில் வெளிப்பட்ட வலுவான போலி தேசபக்தியின் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடந்த பதினைந்து ஆண்டுகளில் கிரிக்கெட்டின் மீதான விசுவாசம், உற்சாகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயிடம் உள்ள பணத்தைக் கொண்டே இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. பிசிசிஐயின் நிகர சொத்து மதிப்பு 2021-22இல் 23,159 கோடி ரூபாய் என்ற அளவிலே இருந்தது.
இந்திய கிரிக்கெட் தொடர்பாக உள்ள இதுபோன்ற எண்களை ஆய்வு செய்யும் போது வெளியில் எதுவும் அதிகமாகத் தெரிய வருவதில்லை. கோடிக்கணக்கான டாலர் மதிப்பில் வழங்கப்படும் உரிமைகள், நிதியுதவிக்கான ஒப்பந்தங்கள், நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றின் மீது மட்டுமே பொதுமக்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். பிசிசிஐயிடம் பதிவு செய்து கொண்டுள்ள 1,041 உள்நாட்டு வீரர்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பேர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதே இல்லை. தங்கள் செயல்திறனுக்கேற்ற ஊதியம் அல்லது பிசிசிஐயின் வருவாயில் பங்கு என்று எதுவும் கிடைக்காமல் அவ்வப்போது ஊதியம் பெறுபவர்களாகவே அவர்களில் பெரும்பாலானோர் இருக்கின்றனர். பிசிசிஐயின் வருவாயில் எழுபது சதவீதத்தைப் பெறுகின்ற முப்பத்தியெட்டு மாநில கிரிக்கெட் சங்கங்கள் அந்தப் பணத்தை எப்படி, எவ்வாறு பயன்படுத்துவது என்று முடிவெடுப்பதில் கட்டுப்பாடற்ற அதிகாரங்களுடன் செயல்பட்டு வருகின்றன.
பெண்கள், மாவட்ட அளவிலான கிரிக்கெட் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டில் கீழ்மட்டத்தில் பணம் அல்லது பாலியல் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வீரர்களைத் தேர்வு செய்வது அதிகம் கவனிக்கப்படாத ரகசியமாகவே இருந்து வருகிறது. கிரிக்கெட் அதிகாரி ஒருவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மைனர் ஒருவர் புகாரளித்த வேலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டது. உயர்மட்டத்தில் இருந்த எவரும் அந்தப் புகாரைக் கண்டு கொள்ளவே இல்லை. பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்படாத ஆண் கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு உரிமையாளர்கள் நடத்துகின்ற மற்ற லீக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற வணிக ஒப்பந்த மீறல் விளையாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ கொண்டிருக்கும் கட்டுப்பாடையே தெளிவாகக் காட்டுகிறது. பிற உரிமையாளர்களால் நடத்தப்படும் லீக்குகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதுபோன்ற லீக்குகளில் விளையாடுவதற்கு ஆண் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஓய்விற்குப் பிறகு பிசிசிஐயிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்றாக வேண்டும். அந்தச் சான்றிதழைப் பெற வேண்டுமென்றால், அவர்கள் அனைவரும் ஓய்வு அறிவித்த பிறகு சில ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கலாம் என்று பிசிசிஐ இப்போது யோசித்து வருகிறது, தனது செயல்பாடுகளைத் தொழில்முறைப்படுத்திக் கொள்வதை நோக்கி நகர்வதற்குப் பதிலாக தனது எதேச்சதிகாரம், கையூட்டுகள் மூலம் பிசிசிஐ நிர்வாகத்தில் முழுமையாகப் பின்வாங்கியே இருக்கிறது.
பிசிசிஐயின் இந்த ஆணவப்போக்கு பணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் அது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் தொடர்புகளாலும் பயனடைந்து வருகிறது. இரு தரப்பு அரசியல்வாதிகளையும் அதனால் தன்வசம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனாலும் இப்போது நடைபெறுபவை சற்று வித்தியாசமானவையாகவே இருக்கின்றன. ஏற்கனவே ஏகபோகத்துடன் இருந்து வரும் கிரிக்கெட் வணிகத்தை ஒரு தன்னலக்குழு தற்போது கைப்பற்றி வைத்துள்ளது. பல்வேறு அரசியல்வாதிகளுக்குப் பதிலாக ஒரேயொரு அரசியல் கட்சியின் பலம் பிசிசிஐயில் படிப்படியாக வலுவடைந்து கொண்டிருப்பதை நம்மால் இப்போது முதன்முறையாகக் காண முடிகிறது.
கடந்த காலங்களில் பிசிசிஐ அரசின் ஆதரவை அல்லது தலையீட்டை ஏற்றுக் கொள்வதில் மிகவும் பெருமையுடன் இருந்தது. சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி வெளியான ‘பிட்ச் சைடு’ என்ற புத்தகத்தில் கிரிக்கெட் நிர்வாகி அம்ரித் மாத்தூர் சுவாரஸ்யமான கதையைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க 2004ஆம் ஆண்டு சுற்றுப் பயணத்திற்காக பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்பாக, அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியாவிற்கு ஒன்றிய அரசின் மூத்த அமைச்சரிடமிருந்து சுருக்கமான தொலைபேசி அழைப்பு வந்தது என்று தான் கேள்விப்பட்டதாக மாத்தூர் குறிப்பிடுகிறார். அது குறித்து எழுதும் போது, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பிசிசிஐ அந்தச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் விரும்பினார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ‘நான் பிசிசிஐயின் தலைவர். இந்தச் சுற்றுப்பயணம் தொடர வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது அரசில் இருக்கும் உங்களுக்கு இந்தச் சுற்றுப்பயணத்தில் விருப்பமில்லை என்றால், தயவுசெய்து அதனை ரத்து செய்து விடுமாறு உத்தரவிடுங்கள்’ என்று தெளிவான, உறுதியான பதிலை டால்மியா அளித்ததாக மாத்தூர் அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அரசிடமிருந்து இந்திய கிரிக்கெட் விளையாட்டு தனித்து சுதந்திரமாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்ததற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அந்த நிகழ்வு இருக்கிறது.
அரசியல்வாதிகள் யாராக இருந்த போதிலும் விளையாட்டின் நேரடி நிர்வாகத்துடன் எந்தவொரு தொடர்பும் அவர்களுக்கு இருந்ததில்லை என்று என்னிடம் தெரிவித்த மூத்த கிரிக்கெட் நிர்வாகி ‘அந்தச் சூழலை அவர்கள் ஒருபோதும் அரசியலாக்கிடவில்லை. நிர்வாகத்திற்குள் எந்தவொரு அரசியல் அமைப்பையும் அவர்கள் கொண்டு வந்ததில்லை. கட்சிகளுக்கு அப்பாற்பட்டே பிசிசிஐ செயல்பட்டு வந்தது. எந்தவொரு நிறுவனத்தின் செயல்பாட்டுக்குள்ளும் ஒருபோதும் அவர்கள் தங்கள் அரசியல் பின்னணியை கொண்டு வந்ததில்லை’ என்றார்.
கடந்த நாற்பதாண்டுகளில் மிகப் பெரிய அளவிலான தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ள பாஜக ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களின் மீதும் அரசின் கட்டுப்பாட்டைத் திணித்துள்ளது. இந்தப் புத்தாயிரத்தில் அதிக நிதி பலம், கலாச்சார வரம்புகளைக் கொண்டுள்ள பிசிசிஐ மீது முழுமையான உரிமையைப் பெற்றுக் கொள்ள பாஜக விரும்புகிறது. இந்திய கால்பந்து, பேட்மிண்டன், மல்யுத்தம், டென்னிஸ் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உயர்மட்டத்தில் பாஜக கனவான்கள் பலரும் இடம் பெற்றுள்ள போதிலும் கிரிக்கெட்டே பாலிவுட்டைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில், அனைத்திந்தியாவிற்குமான பாப்-கலாச்சாரத் தளத்தை வழங்குவதாக இருக்கிறது.
பிசிசிஐ அதிகம் மையப்படுத்தப்பட்டதாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக, அதிகாரம் அனைத்தையும் உச்சமட்டத்தில் கொண்டுள்ள நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. அப்படியிருப்பது ஒன்றும் அசாதாரணமானது அல்ல. அதுவே கடந்த காலங்களிலும் அதிகாரம் மிக்க பிசிசிஐ அதிகாரிகளிடம் நிலையான அம்சமாக இருந்துள்ளது. ஆனால் இப்போது அதில் இரண்டு முக்கியமான வேறுபாடுகள் தென்படுகின்றன. முந்தைய பிசிசிஐ தலைவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு வாரியத்திடம் உள்ள செல்வத்தை எளிதாக அணுகியதில்லை. அவ்வாறு செய்தவர்கள் எவரும், இந்த ஐபிஎல் சகாப்தத்தில்கூட, அரசு கட்டுப்பாட்டில் இருந்தவர்களில்லை. ஆனால் இந்த இரண்டையும் ஜெய்ஷா ஒருசேர நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்.
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான அனுமதி, ஸ்டேடியங்களைக் கட்டுவதற்குத் தேவையான மலிவான நிலம் போன்றவற்றைத் தவிர அரசின் தயவு வேறெதற்கும் தேவைப்படாத, நிதி சார்ந்து மிகவும் சுதந்திரமாக இயங்குகின்ற, இந்திய விளையாட்டின் ஒரே தங்க வாத்தின் மீதான முழுப் பொறுப்பையும் ஜெய்ஷா தனக்கெனப் பெற்றுக் கொண்டிருக்கிறார். பிசிசிஐ ஆண்டுதோறும் விளையாட்டு அமைச்சகத்திடமிருந்து அரசு அங்கீகாரம் தேவைப்படும் வகையில் இருந்து வருகின்ற தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பட்டியலில் இடம் பெறவில்லை. அதுபோன்ற நிலைமை ஒழுங்குமுறை ஆய்வுகள் மற்றும் விளையாட்டுச் சட்டங்களிடமிருந்து தன்னை அது விலக்கி வைத்துக் கொண்டிருப்பதையே குறிக்கிறது. அடிப்படையில் போட்டி எதுவும் இல்லாததொரு பந்தயத்தில், பிசிசிஐயின் நிர்வாகத் தரத்தை அளவிடுவதற்கென்று எதுவும் இல்லாத இந்த நாட்டில் தன்னை மிகப் பெரிய நிதியாதாரமும், கிரிக்கெட்டிற்கான வெகுஜனத் தளமும் மட்டுமே ‘மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் இந்திய விளையாட்டு அமைப்பு’ என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு பிசிசிஐக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளன.
பிசிசிஐ 1929ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்ற தகவல் அது சுதந்திர இந்தியாவைக் காட்டிலும் பழமையானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த அமைப்பு மகாராஜாக்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே நடத்தப்பட்டது. கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்ட அவர்கள் அனைவரும் கிரிக்கெட் வாரியத்தின் நலன்களை தங்கள் சொந்த நலன்களாகக் கருதி பாதுகாக்கின்ற பொதுவான நோக்கத்தில் ஒன்றாக இணைந்தே செயல்பட்டு வந்தனர். பிசிசிஐ எனும் இந்த வாரியம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மூத்த மற்றும் பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அணிகள் என்று இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு அணிகளை மேற்பார்வையிட்டு, இந்திய கிரிக்கெட் சார்ந்த அனைத்து விஷயங்களையும் நிர்வகித்து வருகிறது. தன்னுடைய திறன்கள், வளங்கள் அனைத்தையும் கடந்த முப்பதாண்டுகளில் நன்கு விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மைதானங்களில் பல்வேறு வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட போட்டிகளை ஏற்பாடு செய்து வரும் வாரியத்தின் செயல்பாடுகள் அதன் பலத்தைக் காட்டுகின்றன.
பிசிசிஐயின் முன்னணி அதிகாரிகளாக இருந்த கொல்கத்தா தொழிலதிபர் ஜக்மோகன் டால்மியா, சண்டிகரைச் சார்ந்த இந்தர்ஜித் சிங் பிந்த்ரா ஆகியோர் 1990கள் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தொலைக்காட்சி உரிமை மதிப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பணமாக்கிக் கொள்வதற்கான வழியைக் கண்டறிந்த வேளையில் காட்சிகள் அனைத்தும் மாறின. பெரும் தூக்கத்தில் இருந்த பிசிசிஐ பிராந்திய அளவில் அணிதிரட்டக் கூடிய ஆற்றலைப் பெற்றது. இப்போது அது உலகளாவி அடாவடியாகச் செயல்படும் நிலைக்குச் சென்றுள்ளது.
தனது வருவாயின் பெரும்பகுதியை 1990களின் நடுப்பகுதியில் இருந்து 2008ஆம் ஆண்டு வரையிலும் தொலைக்காட்சி, மல்டிமீடியா உரிமைகள், சமீபத்தில் ஆடவர் அணி போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமைகளை விற்பனை செய்தே பிசிசிஐ ஈட்டி வந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் இருபத்தியிரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐம்பத்தைந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியின் போட்டிகளுக்கான நிலப்பரப்பு, பிராட்பேண்ட் மற்றும் இணைய உரிமைகளைப் பெறுவதற்காக 2006ஆம் ஆண்டில் நிம்பஸ் நிறுவனம் பிசிசிஐக்கு 61.2 கோடி டாலர் பணத்தைச் செலுத்தியது.
2008ஆம் ஆண்டில் ஐபிஎல்லின் வருகை ஊடக உரிமைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் பிசிசிஐயின் தொனியை அடியோடு மாற்றியது. இப்போது ஐபிஎல் கிரிக்கெட் ‘இருபத்தியோராம் நூற்றாண்டு கிரிக்கெட்டின் மிகப்பெரிய சீர்குலைப்பு நிகழ்வு’ என்று மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்லாது உலக கிரிக்கெட் பொருளாதாரத்தையும், கிரிக்கெட் விளையாட்டின் தன்மையையும் மாற்றியமைத்திருக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல்லிற்கான உந்து சக்தியாக 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பிசிசிஐயின் துணைத் தலைவராக, அமெரிக்க சிட்டி ஃபிரான்சைஸ் லீக்குகளால் ஈர்க்கப்பட்டவராக இருந்த லலித் மோடி இருந்தார்.
பிசிசிஐயின் போட்டிகளுக்கான கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்டு உள்நாட்டு டி20 கிளப் போட்டிகளில் பங்கேற்பதற்கான உரிமத்தை முதன்முறையாக எட்டு அணிகளுக்கு விற்பனை செய்ய முன்வந்தது. ஊடக உரிமைக் கட்டணத்தில் ஒரு பங்கை பெற்றுக் கொள்ளும் அந்த அணிகளின் உரிமையாளர்கள், அதனை இந்திய, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உதவியாளர்களைக் கொண்ட தங்கள் அணிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொரு அணிக்குமான சொந்த மைதானம் மற்றும் வெளி மைதானங்கள் என்ற அடிப்படையில் அந்த லீக் போட்டிகள் இந்திய உள்நாட்டுப் போட்டிகள் முடிவடையும் ஏப்ரல் மாதத்தில் ஆறு வாரங்களுக்கு நடத்தப்படுவதாக இருந்தன.
பாலிவுட் நட்சத்திரங்கள், இந்திய வணிக நிறுவனங்கள், அதற்கு முன்னர் அவ்வளவாக அறியப்படாத தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்ந்த எட்டு உரிமையாளர்கள் 11.16 கோடி டாலரில் துவங்கி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணி), 7.6 கோடி டாலர் வரையிலும் (எமர்ஜிங் மீடியா தலைமையிலான தொழில் நிறுவனக் கூட்டமைப்புக்குச் சொந்தமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி) தங்களுக்கான அணிகளை வாங்கிக் கொண்டனர். லீக்கின் நிர்வாகத் தலைவராக இருந்த லலித் மோடி, அமெரிக்க நடைமுறைக்கு ஏற்ப தன்னை ஐபிஎல் ஆணையராக நியமித்துக் கொண்டார்.
ஒவ்வொரு அணியும் ஐம்பது லட்சம் டாலர்கள் (அப்போது இருபது கோடி ரூபாய்) என்ற ஊதிய வரம்புடன் இருந்தன. அந்த தொகையைக் கொண்டு தங்கள் அணிகளை முதன்முறையாக ஏலத்தின் மூலம் உரிமையாளர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பதினைந்து லட்சம் டாலருக்கு அந்த ஏலத்தின் மூலம் வாங்கப்பட்ட எம்.எஸ்.தோனி முதலாவது ஐபிஎல் கோடீஸ்வரரானார். ஐபிஎல் ஏலத்தில் இருந்த பதினோரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 2010ஆம் ஆண்டில் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் ஐபிஎல் ஏலத்தில் இருந்து காணாமல் போயினர். ஐபிஎல் நிர்வாகம் அல்லது பிசிசிஐ சார்பில் அதற்கான எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.
2010ஆம் ஆண்டில் ஏலத்திற்கான ஊதிய வரம்பு அணிக்கு எழுபது லட்சம் டாலர் என்று அதிகரிக்கப்பட்டது, பின்னர் 2014ஆம் ஆண்டில் அது அறுபது கோடி ரூபாயாக மாறியது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு அணிக்கான தொகை தொன்னூற்றி ஐந்து கோடி ரூபாய் என்றிருந்தது. இந்த ஆறு வார கிரிக்கெட் போட்டிகள் கடந்த பதினைந்து சீசன்களில் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் கவர்ச்சிகரமான வேலையாக மாறியுள்ளன. இங்கிலாந்தைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் சாம் கரண் ஒரு சீசனில் ரூ.18.5 கோடி சம்பாதிக்கிறார். அதிக வருமானம் ஈட்டும் இந்திய வீரராக பதினேழு கோடி ரூபாய் சம்பாதிக்கும் கே.எல்.ராகுல் இருக்கிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளம் ஆண் கிரிக்கெட் வீரரும் தன்னுடைய மாநில அணியை அல்லது இந்திய அணியை எதிர்பார்த்துக் கொண்டிராமல் ஐபிஎல் ஒப்பந்தத்தை நோக்கி வேலை செய்வதையே இப்போது தங்களுக்கான முன்னுரிமையாகக் கொண்டுள்ளனர். அதுவரையிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடாத ‘அன்கேப்டு’ இந்திய வீரரான, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி 2022ஆம் ஆண்டு டிசம்பர் ஏலத்தில் ஆறு கோடி ரூபாய் என்ற அதிக தொகையைப் பெற்றார்.
2022ஆம் ஆண்டு போட்டியில் அகமதாபாத், லக்னோ என்று இரண்டு அணிகள் மொத்தம் 12,200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு புதிய அணிகளாக ஐபிஎல்லுக்குள் நுழைந்தன. இரண்டு அணிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 5,100 கோடி ரூபாய் அளிப்பதாகக் கூறிய அதானி குழுமம் ஏலத்தில் மூன்றாம் இடத்தில் இருந்தது. அகமதாபாத் அணியின் ஏலம் தனியார் பங்கு நிறுவனமான சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸுக்குக் கிடைத்தது. லக்னோ அணிக்கான உரிமையை சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா (RPSG) குழுமம் பெற்றது. லக்னோ அணிக்கான ஒப்புதல் கடிதத்தை பிசிசிஐ உடனடியாக வழங்கியது. ஆனால் சூதாட்ட நிறுவனங்களுடன் சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸுக்கு இருந்த தொடர்புகள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அகமதாபாத் அணிக்கான அனுமதியை அந்த நிறுவனத்திற்கு வழங்கிட நான்கு மாத காலம் ஆனது.
அமெரிக்காவில் லீக்குகளின் உரிமை ஃபிரான்சைஸிகளிடம் மட்டுமே இருக்கும். விளையாட்டிற்கான தேசிய நிர்வாகக் குழுக்களிடம் அந்த உரிமை இருப்பதில்லை. இதுவே அமெரிக்க ஃபிரான்சைஸ் லீக்குகளுக்கும், ஐபிஎல்லுக்கும் இடையில் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடாக உள்ளது. ஐபிஎல்லில் நிதி தொடர்பான அல்லது லீக்கின் நிர்வாகத்தை பிசிசிஐ எந்த வகையிலும் ஃபிரான்சைஸ் உரிமையாளர்களுக்கு விட்டுத் தரவில்லை.. சில சீசன்களுக்கு முன்னால் கொல்கத்தா அலுவலகத்தில் நடந்த அதிகாரப்பூர்வமற்ற உரையாடலின் போது டால்மியா என்னிடம், கார்ப்பரேட்டுகள் பிசிசிஐயை கையகப்படுத்தப் போவதைக் குறிக்கும் வகையில் இருந்ததாலேயே ஐபிஎல் போட்டியை தான் எதிர்த்து வந்ததாகக் கூறினார். அவ்வாறு நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஐபிஎல் உருவாக்கம், அதன் செயல்பாட்டிற்கான பெருமையை தனக்கானது என்று எடுத்துக் கொண்ட லலித் மோடி அதற்குத் தகுதியானவராக இருந்தார் என்றாலும், இந்திய கிரிக்கெட்டிற்குள் பணத்தைக் கொண்டு வருவதற்கு சிறிதளவு மார்க்கெட்டிங் மேதைமையும் தேவைப்பட்டது. ஐந்தாண்டு கால ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகளுக்காக 2017ஆம் ஆண்டில் ஸ்டார் இந்தியா நிறுவனம் 255 கோடி டாலர் செலுத்தியது. 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் வரையிலான ஐபிஎல்லின் ஊடக உரிமைகள் தொடர்பான விற்பனையில் தொலைக்காட்சி, டிஜிட்டல் விற்பனைக்காக முறையே வயாகாம்18, டிஸ்னி ஸ்டார் நிறுவனங்களிடமிருந்து 620 கோடி டாலரை பிசிசிஐ 2022ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டது. பிசிசிஐயால் நடத்தப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கான 2028ஆம் ஆண்டு வரையிலான தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகளை இந்த ஆண்டு வயாகாம்18 நிறுவனம் 67.8 கோடி ரூபாய் அளித்து பெற்றிருக்கிறது.
இது போன்று அதிக அளவில் கிடைக்கும் பணத்தை தனக்கான ஆயுதமாக, கேடயமாகவே பிசிசிஐ பயன்படுத்தி வந்துள்ளது. உலகளாவிய கிரிக்கெட் விளையாட்டில் தனக்கான வழியைத் தற்காத்துக் கொள்ளும் ஆயுதமாக, இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் ஆட்டங்கள் குறித்து எழுகின்ற எந்தவொரு கேள்வியையும் திசைதிருப்புவதற்கான கேடயமாக தன்னிடமுள்ள நிதி வளத்தைப் பிசிசிஐ பயன்படுத்தி வருகிறது. ஐபிஎல் வருவாயை இந்திய கிரிக்கெட்டின் வருமானத்துடன் இணைத்துப் பார்ப்பது தவறானதாகும். ஒன்றும் அறியாதவர்களே அவ்வாறு இணைத்துப் பார்ப்பார்கள். பிசிசிஐயிடம் உள்ள செல்வத்தின் பெரும்பகுதி மாநில கிரிக்கெட் சங்கங்களிடமே சென்றடைகிறது. அவ்வாறு மாநில சங்கங்களுக்குச் செல்லும் பணத்தில் பெரும்பாலான பங்கு எந்தவொரு தணிக்கைக்கும் உள்ளாவதில்லை. எனவே பிசிசிஐயின் அந்தப் பணத்திற்கான கணக்கைக் கண்டுபிடிக்கவே முடியாது. தனியார் சங்கமாக இருப்பதாலும், அரசு நிதியைப் பயன்படுத்துவதில்லை என்பதாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பிசிசிஐ கோரி வருகிறது.
பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவை வழிநடத்திய தில்லி முன்னாள் காவல்துறை ஆணையர் நீரஜ் குமாரிடம் அவரைப் பொருத்தவரை சட்ட அமலாக்கத்தின் பார்வையில் பிசிசிஐயின் சூழல் எவ்வாறு இருந்தது என்று நான் ஒருமுறை கேட்டேன். அவர் ‘பணம் விநியோகிக்கப்படும் விதம், மௌனமாக அமைதி காக்கும் ஒப்பந்தங்கள், வெளிப்படைத்தன்மையின்மை என்று அதிகாரிகளால் நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட (வெள்ளை காலர்) குற்றமாகவே அது உள்ளது’ என்று கூறினார். குமார் எழுதியுள்ள ‘கிரிக்கெட்டில் ஒரு காவலர்’ (எ காப் இன் கிரிக்கெட்) என்ற நூல் சட்டவிரோதமான சூதாட்டம், ஸ்பாட் பிக்சிங்கிற்கு அப்பாற்பட்டு கிரிக்கெட்டில் இருக்கின்ற பெரும் ஊழல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ‘எல்லோரும் ரசிக்கிறார்கள். ஏதாவது வெளியில் தெரிய வரும் வரையிலும் யாரும் அது பற்றி எதுவும் சொல்வதே இல்லை. ஐபிஎல் மூலம் ஊடக உரிமைக்காக நான்காயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளதாக வெளிப்படையாக கூறப்படும் போது, பொதுமக்களுக்கு அந்த பணம் எங்கே, எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கின்றன’ என்றே அவர் கருதுகிறார்.
ஐபிஎல் போட்டி ஒன்றின் முக்கியமான திருப்பங்களை சூதாட்டத் தரகர்களுடன் கூட்டுச் சேர்ந்து முன்கூட்டியே தீர்மானித்ததாக மூன்று கிரிக்கெட் வீரர்களை 2013ஆம் ஆண்டு தில்லி காவல்துறை கைது செய்தது. அந்த மிகப் பெரிய ஊழல் புகாரால் பிசிசிஐ அதிகம் பாதிப்பிற்குள்ளானது. பம்பாய் உயர் நீதிமன்றம் அந்த வழக்கில் பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் சட்டவிரோதமானவை எனக் கருதியது. வெற்றிகரமான ஐபிஎல் அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தன்னிடம் வைத்திருந்த பிசிசிஐயின் அப்போதைய தலைவர் என்.சீனிவாசன் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செய்தார். நீடித்த சட்டப் போராட்டம் இரண்டு குழுக்களை உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது.
குறிப்பிட்ட அந்த ஐபிஎல் ஊழலை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைப் பரிந்துரைக்க வேண்டுமென்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பிசிசிஐயின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அதன் நிர்வாகம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவின் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது குழு பணிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிகரிக்கப்பட்ட லோதா குழுவின் பரிந்துரைகள் பிசிசிஐ அமைப்பு விதிகளை மாற்றியமைத்தன. அந்தப் பரிந்துரைகள் வாரியத் தேர்தல்களுக்கான வாக்காளர்களை மாற்றுவது, கருத்து வேறுபாடுகளால் எழுந்த சிக்கல்களைத் தீர்ப்பது, அன்றாட நிர்வாகத்தை தொழில்முறைப்படுத்துவது, கௌரவப் பொறுப்பாளர்களிடமிருந்து பிரிந்திருப்பது, அவர்களுக்கான வயது, பதவிக்காலத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது என்றிருந்தன.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான அனுராக் தாக்கூர் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பிசிசிஐ தலைவர் பொறுப்பை ஷஷாங்க் மனோகரிடம் இருந்து ஏற்றுக் கொண்டிருந்தார். பிசிசிஐ, உச்சநீதிமன்றத்துக்கு இடையிலான மோதல் அடுத்த சில மாதங்களில் தீவிரமடைந்தது. மாநில அதிகாரிகள் பலரும் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்பதால் வயது குறித்த கட்டுப்பாடுகள், மூன்றாண்டு பதவிக்கால வரம்பு என்று விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து பிசிசிஐ தனது ஆட்சேபணைகளைத் தெரிவித்தது. லோதா குழுவின் பரிந்துரைகளை மீறி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு அணிகளில் இடம் பெறும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மூவருக்குப் பதிலாக ஐந்து பேர் கொண்ட குழுவை பிசிசிஐ தேர்ந்தெடுத்துக் கொண்டது. நடைமுறை சிக்கல்கள் என்று கூறி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை பிசிசிஐ அக்டோபர் மாதம் தவற விட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் வரை பிசிசிஐ நிதியைச் செலவழிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.
இறுதியாக 2017ஆம் ஆண்டு ஜனவரியில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த மறுத்ததற்காக அனுராக் தாக்கூர், பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. அவர்களுக்குப் பதிலாக பணிகளை மேற்கொள்வதற்காக நான்கு பேர் கொண்ட நிர்வாகிகள் குழுவை நீதிமன்றம் அமைத்தது. லோதா குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் நோக்குடன் அந்த நிர்வாகக்குழு முப்பத்துமூன்று மாதங்களுக்கு பிசிசிஐயின் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டது. தற்போது அனுராக் தாக்கூர் மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருக்கிறார்.
லோதா குழுவின் சீர்திருத்தங்களுக்கு எதிரான இழுபறி அனைத்துத் தரப்பிலும் தொடர்ந்தது. தனது பழைய எதிரியான சீனிவாசனுடன் கைகோர்த்துக் கொண்ட அனுராக் தாக்கூர் நீதிமன்றத்திடமிருந்து வாரியத்தின் கட்டுப்பாட்டை மீளப் பெறுவதற்கு கட்சிரீதியான அதிகாரத்தை, சட்டப்பூர்வமான மனிதவளங்களைப் பயன்படுத்திக் கொண்டார். அந்தக் கலகத்திலிருந்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, ஜெய்ஷா போன்ற இளைய முகங்கள் வெளிப்பட்டன. கங்குலி மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரராக, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக இருந்தார். அதே நேரத்தில் ஜெய்ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக இருந்தார்.
பிசிசிஐயின் 2019ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜெய்ஷாவை வாரியத்தின் செயலாளராக்குவதற்கு பாஜக ஆதரவு அளித்தது. பின்னர் அசாம் முதலமைச்சராக ஆன, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஹிமந்தா பிஸ்வா சர்மா மும்பையில் உள்ள டிரைடென்ட் ஹோட்டலில் முகாமிட்டு அவருக்காக ஆதரவு திரட்டினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தில் நீண்டகாலமாகத் தலைமைப் பொறுப்பில் இருந்தவருமான பிரிஜேஷ் படேலை தலைவர் பதவிக்கான வேட்பாளராக சீனிவாசன் முன்மொழிந்தார். கங்குலிக்கு துணைத் தலைவர் மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பதவிகளை வழங்குவதாகவும் அவர் கூறினார். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த கங்குலி தனது அறைக்குத் திரும்பினார். நிலைமை தனக்குச் சாதகமாக இருக்கும் என்றே அவர் எதிர்பார்த்திருந்தார். 2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களுடன் கங்குலியை இணைத்துக் கொள்ள முயன்ற பாஜக விசுவாசிகளின் உந்துதல் அவ்வாறான ஒப்பந்தத்தை உறுதி செய்து கொடுத்திருந்தது.
பதவிக்கால வரம்பு குறித்த லோதா குழுவின் பரிந்துரையின்படி தங்கள் மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஏற்கனவே இரண்டு முறை பதவி வகித்தவர்கள் என்பதால் ஜெய்ஷா, கங்குலி இருவருமே பிசிசிஐயில் பதவி வகிக்கத் தகுதியற்றவர்களாகவே இருந்தனர். ஆனாலும் சிறிதளவும் வெட்கப்படாமல் புதிய விதிகள் புறக்கணிக்கப்பட்டு பழைய முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பிசிசிஐ அமைப்பில் திருத்தங்களை அனுமதிக்குமாறு கோரி 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனுவைத் தாக்கல் செய்தது. அந்த வழக்கின் விசாரணையில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்கள் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருந்து கொள்வதற்கான அவகாசத்தை அளித்தன. பிசிசிஐ அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை மீண்டும் எழுதிய 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கங்குலி பிசிசிஐயிலிருந்து வெளியேறியிருந்தார். நிர்வாகப் பதவிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன. பிசிசிஐயின் ஒரே அதிகாரியாக ஜெய்ஷா மட்டுமே இருந்தார். பிசிசிஐயில் ஐபிஎல்லின் தலைமை செயல்பாட்டு அலுவலராகத் தனது பணியைத் தொடங்கிய ஹேமங் அமீன் கடந்த மூன்று ஆண்டுகளாக பிசிசிஐயில் எந்தவொரு அதிகாரமும் இல்லாத செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
வாரியத்தின் உயர்மட்டக் குழுவே பிசிசிஐ விவகாரங்களின் நிர்வாகத்திற்கான முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும், பொதுக்குழுவின் அனைத்து அதிகாரங்களும் அந்த உயர்மட்டக் குழுவிற்கு உள்ளது என்றும் புதிய பிசிசிஐ அமைப்பு விதிகள் கூறுகின்றன. அந்த உயர்மட்டக் குழு ஐந்து அலுவலக நிர்வாகிகள், அந்த நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதல் கவுன்சிலர் ஒருவர், கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் பிரதிநிதிகள் இருவர் (ஆண் ஒருவர், பெண் ஒருவர்), கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் அலுவலகப் பிரதிநிதி ஒருவர் ஆகியோரைக் கொண்டது. லோதா குழுவின் சீர்திருத்தங்களிலிருந்து தனக்குத் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்ட பிசிசிஐ, அனைத்து அதிகாரங்களையும் பொறுப்பாளர்கள் அல்லது குறிப்பாக அதிக அதிகாரம் கொண்ட பொறுப்பாளர் இருந்த உயர்மட்டக் குழுவிடம் வழங்கியது. பிசிசிஐயின் அன்றாட நிர்வாகத்தை, அதன் பொறுப்பாளர்களிடமிருந்து – பொறுப்பாளர்களில் தொழில்ரீதியான வல்லுநர்களாக இருந்தவர்களிடமிருந்து – பிரித்து வைக்கும் வகையில் இருந்த லோதா குழு சீர்திருத்தங்களின் நோக்கம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது.
உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி 2022ஆம் ஆண்டில் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் தலைவரானார். ஜெய்ஷாவுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தவராக, கங்குலியை ஒப்பிடுகையில் மிகவும் இணக்கமான ஆளுமையுடனிருந்த பின்னி பின்னணிக்குச் சென்று விட்டார். மீதமிருந்த மூன்று பொறுப்பாளர்களில் இருவர் பாஜக விசுவாசிகளாக இருந்தனர். பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலர் மும்பையைச் சார்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர். இணைச் செயலாளராக ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நெருக்கமானவரான அசாமின் அரசு தலைமை வழக்கறிஞரும், அசாம் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான தேவஜித் சைகியா இருந்தார்.
அவர்களிடையே வித்தியாசமானவராக பிசிசிஐ துணைத் தலைவராக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சுக்லா இருந்தார். பின்னியுடன் உலகக் கோப்பையை வென்ற அணியிலிருந்த வீரரான கீர்த்தி ஆசாத் முன்னாள் தேர்வாளராக, இப்போது திரிணாமுல் காங்கிரஸைச் சார்ந்த அரசியல்வாதியாக, நாடளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்தக் குழப்பங்கள் குறித்து விளக்கமளித்த கீர்த்தி ஆசாத் ‘ஊழலில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்’ என்றார். ‘பழைய பிசிசிஐயைப் பிரதிபலிக்கும் ராஜீவ் சுக்லா அரசியல் வேறுபாடுகள் முக்கியமில்லை என்றே கருதுவார்’ என்று என்னிடம் கூறிய ஆசாத் ‘அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்’ என்றார். மேலும் ‘ராஜீவ் சுக்லாவைப் பாருங்கள். அவர் ஒரு தக்காளியைப் போல – அவரை உங்களால் காய்கறிக் கூட்டிலும், அதே நேரத்தில் சாலட்டிலும் காண முடியும். தக்காளியாக இருப்பதற்காக அவரைப் பாராட்டுகிறேன். எந்த அரசாங்கம் இருந்தாலும், யார் தலைவராக இருந்தாலும், அவர் அங்கே தொடர்ந்து இடம் பிடித்துக் கொள்கிறார்’ என்று ஆசாத் கூறினார்.
பாஜகவும், ஆளும் அரசும் தங்களுடைய கவசப் பிடிக்குள் இந்திய கிரிக்கெட்டை வைத்துக் கொண்டிருப்பதற்கு ஏதாவது ஆதாரம் தேவைப்படும் என்றால், அது பின்னியிடமிருந்தே வர வேண்டும். கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியினர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அப்போது தன்னுடைய அணியிடமிருந்து பின்னி தன்னை விலக்கியே வைத்துக் கொண்டார். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசும் போது ‘சிக்கலைத் தீர்த்து வைக்கும் வேலையை தகுதியுள்ள அதிகாரிகள் செய்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரராக விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என அவர் கூறினார். அதனாலேயே தனது அணியினர் வெளியிட்ட அந்த அறிக்கையில் தான் கையொப்பமிடவில்லை என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
{மூன்று}
லண்டன் தி ஓவல் மைதானத்தில் இந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஐசிசி விருந்தோம்பல் பகுதி நுழைவாயிலில் ஜெய்ஷா தடுத்து நிறுத்தப்பட்டார். தனக்கான அடையாளம் எதையும் தன்னுடன் அவர் கொண்டு செல்லவில்லை. எனவே ஸ்பான்சர்களின் பணிப்பெண்களால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ‘நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா’ எனக் கேட்குமளவிற்கு நிலைமை தீவிரமடைவதற்கு முன்பாக ஜெய்ஷாவைக் கண்டறிந்து கொண்ட ஐசிசி ஊழியர் ஒருவர் அவரை விரைவாக இருக்கைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஸ்பான்சர்கள், ஊடகவியலாளர்கள், பிற கிரிக்கெட் அதிகாரிகள் அனைவரும் அப்போது ஆகச் சிறந்த இந்திய கிரிக்கெட்டின் தலைமை தளர்ந்து, மண்டியிட்டதைக் காண நேர்ந்தது.
ஊடக உரிமைகளுக்கான ஒப்பந்தங்கள், ஊதிய உயர்வுகள், இந்திய பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிப்பது போன்ற பல பிரமாண்டமான அறிவிப்புகளுடன் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் தொடங்கியது. நிலவிய குழப்பங்களில் பெரும்பாலானவை மிகவும் கவனத்துடன் புறக்கணிக்கப்பட்டன. தொடக்கப் போட்டிக்கு நூறு நாட்களே இருந்த நிலையில் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை மிகத் தாமதமாக வெளியிட்டதன் மூலம் ஜெய்ஷாவின் நிர்வாகத் திறன் உலகளாவிய கவனத்திற்கு வந்தது. பொதுவாக உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை ஓராண்டிற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டு விடும். அட்டவணை குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு மாதத்திலேயே மீண்டும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.
அக்டோபர் பதினைந்தாம் நாள் நடைபெறுவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான நாளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் கசிந்த செய்திகள் பொதுமக்களைச் சென்றடைந்தன. குறிப்பிட்ட அந்தப் போட்டிக்கான நாளை மாற்றுவது ஒட்டுமொத்த அட்டவணை மீது அடுத்தடுத்த மாற்றங்களை ஏற்படுத்தியது. போட்டி நடைபெறவிருந்த நாள் நவராத்திரி தினம் என்பதாலேயே அந்த மாற்றம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் ஜெய்ஷா அந்தக் காரணத்தை மறுத்து, அட்டவணையில் உள்ள நாட்களுடன் இரண்டு அல்லது மூன்று உறுப்பு நாடுகள் உடன்படாததே காரணம் என்றார். போட்டி நடைபெறும் நாட்கள் குறித்து இப்போது ஆட்சேபணைகளை எழுப்பும் உறுப்பினர்கள் இதற்கு முன்பு அதற்குச் சம்மதித்துத்தான் கையெழுத்திட்டிருந்தார்களா, அவர்கள் இப்போது தெரிவித்துள்ள ஆட்சேபணைகள் யாவை, ஆட்சேபணை தெரிவித்துள்ள நாடுகள் யாவை என்பது போன்ற எந்தவொரு கேள்வியையும் எந்தவொரு பத்திரிகையாளரும் ஜெய்ஷாவிடம் கேட்கவே இல்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது பிசிசிஐ பிரதிநிதி ஒருவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிடுவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக அப்போது அங்கே இருந்த நிருபர் என்னிடம் கூறினார். சங்கடமான இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டபோது அந்தப் பிரதிநிதி அளித்த பதில் ‘இதற்கு முன் இதுபோன்று நடந்த போதெல்லாம் இதுபோன்று ஏன் கேள்வி எதுவும் எழுப்பப்படவில்லை’ என்று இந்த அரசு தொடர்ந்து கூறி வருகின்ற பதிலைப் போலவே இருந்தது. கோவிட்-19 தொற்று 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை விளையாட்டைப் பாதித்த போது, டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்ப அளிப்பது பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்திடம் நீங்கள் ஏன் கேள்வியெழுப்பவில்லை என்ற கேள்வியையே அந்த அதிகாரி பதிலாக அளித்தார்.
இறுதியாக இரண்டு மாதங்களுக்கும் குறைவான அவகாசத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமங் அமீன் முதன்முறையாகக் கையெழுத்திட்ட புதிய அட்டவணை, டிக்கெட் நடைமுறைகள் பற்றிய தகவலை ஐசிசி ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. தாமதம் குறித்து எழுப்பிய கேள்விக்கு ‘போட்டியை நடத்துபவர்கள், உறுப்பினர் வாரியங்கள், அந்தந்த அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய பங்குதாரர்கள் அனைவரின் ஒருமித்த கருத்துடன், தேவையான அனுமதிகளைப் பெற்று உலகக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று பிசிசிஐ எனக்குப் பதிலளித்தது.
ஜெய்ஷாவின் முந்தைய சாதனைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், உலகக் கோப்பை அட்டவணை குறித்து ஏற்பட்ட தாமதங்கள் ஆச்சரியமளிக்கப் போவதில்லை. கங்குலி-ஜெய்ஷா தலைமையில் இருந்த போது 2021ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றால் உருவாக்கப்பட்ட உயிர்க் குமிழியின் விளைவாக ஐபிஎல் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன. மீதமிருந்த ஐபிஎல் போட்டிகள், 2021ஆம் ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை என்று இரண்டு போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டன. 2020–21ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 2021 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது. அதற்கிடையில் அந்த ஆண்டில் இந்திய மகளிர் அணி எட்டு மாதங்களுக்கும் மேலாக தலைமைப் பயிற்சியாளர் இல்லாமலே இருந்தது. இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தின் போது உறுதியளிக்கப்பட்ட போதிலும், பாலியல் துன்புறுத்தலைக் கையாள்வதற்கான குழுவை பிசிசிஐ இன்னும் நியமிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் விளையாட்டு சாதனங்களுக்கான அதிகாரப்பூர்வமான ஸ்பான்சர்களில் மூன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜெர்சிகளுக்கு மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று வெவ்வேறு ஸ்பான்சர்கள் இருந்துள்ளனர். பிசிசிஐ இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி, உள்நாட்டுப் போட்டி கோப்பைகளுக்கான ஸ்பான்சர்ஷிப்கள் என்று இரண்டு ஒப்பந்தங்களில் தனது அடிப்படை விலையை பிசிசிஐ குறைத்திருக்கிறது.
2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருந்து வருகின்ற ஜெய்ஷாவின் பதவிக்காலம் பாகிஸ்தான் கிரிக்கெட் மீது தொடர்ச்சியான விரோதப் போக்கையே கொண்டிருக்கிறது. பிசிசிஐ செயலாளராக மீண்டும் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்ட பிறகு ஜெய்ஷா வெளியிட்ட முதல் அறிவிப்புகளில் ஒன்றாக 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை பொதுவான ஓரிடத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் இருந்தது. ‘ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற முறையில் நான் இதைச் சொல்கிறேன். நாங்கள் அங்கே செல்ல முடியாது. அவர்களால் இங்கே வர முடியாது. கடந்த காலங்களிலும் ஆசிய கோப்பை இதுபோன்று பொதுவான இடத்தில் நடத்தப்பட்டிருக்கிறது’ என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா விடுத்த முதலாவது முக்கிய அறிக்கையாக இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இறுதியில் அது கலவையானதொரு நிகழ்வை நடத்த ஒப்புக் கொண்டது. மொத்தம் பதின்மூன்று போட்டிகளில் நான்கு போட்டிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறும், மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும், ஆசிய கோப்பையை நடத்துகின்ற பாகிஸ்தான் தன்னுடைய சொந்த மண்ணில் இரண்டு ஆட்டங்களை மட்டும் விளையாடும் என்ற திட்டம் வகுக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆசிய கோப்பை நடவடிக்கைகளைத் துவக்கி வைக்கும் வகையில் லாகூரில் நடைபெறும் விருந்தில் பிசிசிஐயைப் பிரதிநிதித்துவப்படுத்தி பின்னி, சுக்லா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும், ஜெய்ஷா அதில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. துபாயில் 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையே நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியை மற்ற உயரதிகாரிகளுடன் அமர்ந்து ஜெய்ஷா பார்த்துக் கொண்டிருந்தது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஆனாலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய்ஷா ஆசிய கோப்பைக்கான விழாவில் கலந்து கொள்ளவில்லை.
பிசிசிஐயின் மும்பை அலுவலகத்தில் மிக அரிதாகவே ஜெய்ஷா வேலை செய்து வருகிறார். அதற்குப் பதிலாக பெரும்பாலும் அவர் அகமதாபாத்தில் இருந்தே செயல்படுகிறார். இணைய வழியில் அல்லது நேரில் உயர்மட்டக் குழு கூட்டங்கள் நடைபெறும் போது அனைவரின் கருத்துக்களையும் அவர் கேட்டுக் கொள்வதாகவும், அனைத்து தரப்பினருக்கும் அவர் மரியாதை தருவதாகவும் கூறப்படுகிறது. ‘ஆனாலும் இறுதியில் தான் விரும்பியதை மட்டுமே அவர் செய்வார்’ என்று பிசிசிஐ ஊழியர் ஒருவர் கூறினார். தகவல்கள் இறுக்கமாக மூடி வைத்துக் கொள்ளப்படுவதால் வாரியத்தில் உள்ளவர்களிடம் முணுமுணுப்பு, வெறுப்பு நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறது. பிசிசிஐ தன்னுடைய அறிவிப்புகள், செய்திக்குறிப்புகளில் ‘பொறுப்பாளர்களுக்கு நாங்கள் முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கி வருகிறோம்’ என்று தெரிவித்து வருகிறது. ஆனாலும் என்னுடன் பேசிய வாரியத்தின் மற்றொரு அதிகாரி ‘அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் ஒருபோதும் நடைமுறைக்கு வருவதில்லை அல்லது அந்த முடிவுகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை’ என்றே கூறினார். ‘பெரும்பாலான அதிகாரிகள் அவருக்கு முன்னால் ஆஹா, அற்புதம் ஜெய்பாய்! என்று கூறுவார்கள். ஆனால் அவ்வாறு உற்சாகத்துடன் கூறியவர்கள் அந்த அறையிலிருந்து வெளியேறும்போது அவர்களுடைய கருத்துகளுக்கு எதிர்மாறாகவே எல்லாம் நடக்கும். பாஜகவைச் சேர்ந்தவர்களைப் பற்றியே நான் பேசுகிறேன்’ என்றும் அவர் கூறினார்.
கங்குலி தலைவராக இருந்தபோது அவரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டாம் என்று ஜெய்ஷா மற்றவர்களுக்கு அறிவுறுத்தியதை பிசிசிஐ ஊழியர் ஒருவர் கேட்டிருந்தார். குறிப்பிட்ட போட்டி அல்லது நிகழ்வு குறிப்பிட்ட நாளில் நடைபெறும் என்று கங்குலி தயாரிப்புகள் எதுவுமின்றி கூறினால் அந்த நிகழ்வு அதற்கு முந்தைய நாள் அல்லது அதற்குப் பிறகே நடக்கும். பெரும்பாலான ஊழியர்கள் என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையுடன் பதட்டத்துடனே ஜெய்ஷாவின் முன்னிலையில் இருக்கிறார்கள் எனவும், தங்களுக்குள்ளாக அவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் மூலம் மட்டுமே பேசி வருகிறார்கள் எனவும் அந்த ஊழியர் கூறினார். தான் கலந்து கொள்ளும் ஊடக சந்திப்புகள் வீடியோவில் பதிவு செய்து கொள்ளப்படுவதை ஜெய்ஷா விரும்புவதில்லை.
ஜெய்ஷாவின் ஒப்புதல் இல்லாமல் பிசிசிஐயில் இன்றைக்கு எதுவும் நடக்காது. காரியங்கள் நடைபெற பல மாதங்களுக்குக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது என்று மற்றுமொரு ஊழியர் என்னிடம் கூறினார். நடுவரின் தொப்பி-பேண்ட் ஸ்பான்சர்களுக்குத் தரப்பட வேண்டிய தொகையைச் செலுத்துவது பற்றி அல்லது 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை அட்டவணையை அங்கீகரிப்பதாக அந்த வேலை இருக்கலாம். ‘உங்கள் அலுவலகத்தில் இதுபோன்று நடப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்ட அந்த பிசிசிஐ ஊழியர் ‘யாரோ ஒருவர் உங்களிடம் உங்கள் ஸ்டேப்லரைத் தருமாறு கேட்கிறார். அந்த ஸ்டேப்லரை அவருக்கு கடனாகக் கொடுக்கலாமா எனக் கேட்டு நீங்கள் உங்கள் மேலதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு ‘சார், அந்த ஸ்டேப்லர் அப்ரூவல் என்ன ஆச்சு’ என்று மாதக்கணக்கில் உங்கள் மேலதிகாரி பின்னால் நீங்கள் அலையவும் வேண்டியிருக்கும்’ என்றார்.
‘அவரது தந்தையின் காரணமாக அவருடன் முரண்பட்டு எதையும் யாரும் கூறுவதில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிலைமை மாறப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று மற்றுமொரு பிசிசிஐ ஊழியர் கூறினார். டர்பனில் நடந்த ஐசிசியின் வருடாந்திர மாநாட்டிற்கு மெய்க்காப்பாளர்களுடன் பிசிசிஐயின் பிரதிநிதி வந்த அசாதாரணமான காட்சியை ஐசிசி உறுப்பினர்கள் கண்டனர். சில சமயங்களில் ஜெய்ஷாவுடன் இரண்டு உதவியாளர்கள் வருவார்கள். கிரிக்கெட் அதிகாரி ஒருவர் ‘அவர்களில் யாரோ ஒருவர் அவரது மின்னஞ்சலை எழுதுகிறார். மற்றொருவர் அவரது தொலைபேசியில் பதிலளிக்கிறார். தன்னிடம் ஒரு பேரரசு இருப்பதாகவே அவர் கருதுகிறார்’ என்று கூறுகிறார்.
இதற்கிடையில் தந்தையின் செல்வாக்கிலிருந்து ஜெய்ஷாவைப் பிரித்து அவருக்கென்று தனித்த அடையாளத்தை நிறுவுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. முன்னோக்கு சிந்தனை கொண்ட கிரிக்கெட் நிர்வாகியாக, விளையாட்டில் உண்மையான ஆர்வம் கொண்டவராக, பெண்கள் கிரிக்கெட்டிற்கான வெற்றியாளராக அவர் சித்தரிக்கப்பட்டு வருகிறார். பிசிசிஐயின் மக்கள் தொடர்பு நிறுவனமான அட்ஃபேக்டர்ஸ் நிறுவனம் ஜெய்ஷாவின் ஊடக பிம்பத்தைக் கையாள்வதற்கான அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கேள்விகளின் பட்டியலுக்கு ஜெய்ஷா பதில் எதுவும் அளிப்பதில்லை.
ஐசிசி கூட்டங்களில் ‘இல்லை, இல்லை அதை அப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என்று அங்கிருப்பவர்களிடம் ஜெய்ஷா கூறுவார் என்று கூறிய அந்த கிரிக்கெட் அதிகாரி ‘தான் அனைத்துக் குழுக்களிலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஐசிசியின் உள்துறை அமைச்சரைப் போலவே அவர் அனைவரிடமும் நடந்து கொள்வார்’ என்றார். ஐசிசியின் முன்னாள் அதிகாரி ஒருவர் என்னிடம் ‘முன்பெல்லாம் வாரியத்தின் கூட்டங்களில் ஆகச் சிறந்த சமநிலை காணப்பட்டது. அந்தக் கூட்டங்கள் அனைத்தும் அந்த நேரத்தில் வாரியத்தில் இருந்தவர்களின் திறமைகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலேயே நடைபெற்றன’ என்று கூறினார். தற்போதைய ஐசிசியை நிகழ்வு மேலாண்மை நிறுவனம் என்பதாகவே உறுப்பினர்கள் பலரும் விவரித்துக் கூறுகின்றனர். ‘உலகளாவிய அளவில் கிரிக்கெட்டை ஆளுகின்ற இந்தக் குழு விளையாட்டுக்கு, அதன் ரசிகர்களுக்கு, அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் சரியானதைச் செய்து தருவதைக் காட்டிலும் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருபவர்களாலேயே வழிநடத்தப்படுகிறது’ என்று ஐசிசி முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
தனது சொந்த நிகழ்வுகளை நடத்துவதிலேயே ஐசிசி பின்தங்கியிருப்பதை நிரூபிக்கும் சான்றாகவே உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளன. அது அதிர்ச்சியளிக்கிரது என்று என்னிடம் கூறிய உறுப்பினர் ஒருவர் ‘இரண்டு வாரங்களுக்கு முன்புதான் உலகக் கோப்பை போடிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அது உண்மையில் நகைப்புக்குரியதாகும். இப்படி நடந்தால் உலகின் ஏதோவொரு இடத்திலிருந்து முன்பதிவு செய்து பயணம் செய்து இங்கே போட்டியைக் காண வர விரும்பும் ரசிகரின் பயணத்தில் என்ன மாதிரியான அனுபவங்கள் அவருக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேள்வியெழுப்பினார்.
போட்டிகளுக்கான காலவரிசை, அட்டவணைகள், தங்களுடைய போட்டிகளை நடத்துகின்ற மைதானத்தின் தரம் குறித்து கடந்த காலங்களிலும் ஐசிசியின் நிர்வாக அலுவலகத் தலைவர்கள் பிசிசிஐ அதிகாரிகளுடன் மோதியிருக்கின்றனர். முன்னாள் ஐசிசி நிர்வாகி ஒருவர் ‘சிலர் பிசிசிஐக்குச் சவால் விடுக்கும் வகையில் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்து வந்த வேளையில் நாங்கள் தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர் ஆகியோருக்கு இடையில் பிசிசிஐக்கு ஆதரவாக நிற்க வேண்டியிருந்தது. அப்போதுது ஆகச் சிறந்த சமநிலையுடன் அது இருந்தது’ என்று என்னிடம் கூறினார்.
ஐசிசியின் வருவாயில் பிசிசிஐ அதிகப் பங்கைக் கைப்பற்றிக் கொண்ட பிறகு அந்தச் சமநிலை சீர்குலைந்து விட்டது. ஜெய்ஷாவால் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் உலகளாவிய சதி என்றே அது குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று மற்ற இரண்டு லாபகரமான கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து ஐசிசியின் வருவாயில் வர வேண்டிய பங்குகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை மற்ற நாடுகளுக்குக் கொடுப்பது, வாக்களிப்பதற்கு ஈடாக இலவசமாக எதையாவது சிறிய நாடுகளுக்கு வழங்குவது என்று 2013ஆம் ஆண்டில் சீனிவாசன் உருவாக்கிய பிசிசிஐ உத்தியின் தொடர்ச்சியாகவும் அதைக் காண முடிகிறது. ‘மூன்று பெரியவர்கள் முன்மொழிவிற்கு’ சில நாடுகளில் இருந்து எதிர்ப்பு வந்ததா சில ஆண்டுகளுக்கு அது நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், இறுதியில் அது நிறைவேற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
{நான்கு}
பிசிசிஐயின் நிதி தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் கடந்த பதினெட்டு மாதங்களாக பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளன. அந்த அறிவிப்புகளில் காணப்படும் எண்கள் இந்திய கிரிக்கெட்டிடம் உள்ள செல்வத்தைக் கண்டு ஏற்கனவே மயங்கிப் போயிருக்கும் பார்வையாளர்களை மேலும் திகைக்க வைத்து, திசை திருப்பியிருக்கின்றன. பிசிசிஐயின் இரண்டு அலங்காரச் சொத்துக்களான ஐபிஎல், இந்திய தேசிய அணிக்கு மெருகேற்றிய பிறகு உண்மையில் அந்தப் பணம் எங்கே சென்று சேருகிறது என்பது பற்றி எந்தவொரு கேள்வியும் யாராலும் கேட்கப்படுவதே இல்லை.
ஐந்து ஆண்டுகளுக்கான 48,390.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஎல் ஊடக உரிமை ஒப்பந்தத்தை பிசிசிஐ 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு ஜூலையில் உறுப்பினர் நாடுகளிடையே தன்னுடைய வருவாயைப் பிரித்துக் கொள்வதற்கான கொள்கையை ஐசிசி திருத்தியமைத்தது. பிசிசிஐ இன்னும் கூடுதலாக பெருமளவிலான பங்கை அதன் மூலம் பெற்றுக் கொண்டது. ஐசிசி அது குறித்து முறையான அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை என்றாலும் ஐசிசியின் ஆண்டு வருவாயில் 38.4 சதவிகிதம் என்ற அளவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தோராயமாக 1,863 கோடி ரூபாய் பிசிசிஐக்குக் கிடைக்கும் என்றும், மற்ற முழு உறுப்பு நாடுகள் ஒற்றை இலக்க சதவிகிதப் பங்குகளையே பெறும் என்றும் 2023 மே மாதம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. முன்னாள் ஐசிசி தலைவர் எஹ்சான் மணி இந்தப் புதிய மாடல் நிதி பிரிப்பால் குறைந்தபட்ச அளவில் நிதி தேவைப்படுகின்ற நாட்டிற்கே அதிக அளவிலான பணம் ஐசிசியிடமிருந்து கிடைக்கும் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
பிரமாண்டமான உள்நாட்டு கிரிக்கெட் வலையமைப்பைக் கொண்டு ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்ற, மிகக் குறைவான நிதியே தேவைப்படுகின்ற நாடு அதிக வருவாயைப் பெறுகின்ற நிலையில், தாங்கள் பெறுகின்ற ஊதியத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். ஐபிஎல் வருவாயில் பதினெட்டு சதவிகிதம் ஊதியமாகப் பெறுவதாகக் கூறப்படும் இரட்டை வருமானம் கொண்ட இந்திய பணக்கார சர்வதேச நட்சத்திரங்களால்கூட, போட்டிக்கான உரிமை மதிப்பு மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் தன்னை உயர்வாக ஒப்பிட்டுக் கொள்ள ஐபிஎல் பயன்படுத்திக் கொள்ளும் பெரிய சர்வதேச விளையாட்டு லீக்குகளின் நட்சத்திரங்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற முடிவதில்லை என்பதே உண்மை. பேஸ்பால், கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து என்று மூன்று பெரிய அமெரிக்க லீக்குகளில் விளையாடி வரும் வீரர்கள் அந்த லீக்குகளின் வருவாயில் 48 சதவிகிதம் அளவிற்குச் சம்பாதிப்பதாகவும், இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் உள்ள கால்பந்து கிளப்புகளுக்காக விளையாடும் வீரர்கள் அந்தக் கிளப்புகளின் வருவாயில் 71 சதவிகிதம் என்ற அளவில் ஊதியம் பெறுவதாகவும் டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட சுமார் நூற்றி ஐம்பது இந்திய வீரர்களில் பதினெட்டு பேர் மட்டுமே ஒரு சீசனில் பத்து கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சம்பாதிப்பதாகவும், எழுபத்தியாறு பேர் ஒரு கோடி ரூபாய் என்ற அளவிலேயே சம்பாதித்ததாகவும் ஐபிஎல் கிரிக்கெட் அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஒட்டுமொத்த இந்திய ஆண்கள் கிரிக்கெட் சமூகத்தில் எட்டு சதவிகிதத்திற்குக் குறைவானவர்களுக்கே ஐபிஎல்லில் இடம் கிடைத்துள்ளது. அந்த வருமானம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்திய ஆண்களில் 1,041 பேர் தங்களை தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர் என்று சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சம்மேளனத்தின் (இந்த சம்மேளனத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது) 2022ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான உலகளாவிய தொழில்முறை வேலைவாய்ப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரஞ்சி டிராபி கிரிக்கெட் வீரர்கள் ஏராளமாகப் பணம் சம்பாதித்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல என்பதை யாரும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை என்று பிசிசிஐயின் முன்னாள் நிர்வாகி ஒருவர் என்னிடம் கூறினார். மேலும் அவர் ‘இன்றைக்கு உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் கிடையாது. ஒரு சீசனில் விளையாடவில்லை என்றால் ஊதியம் என்று எதுவுமே அவர்களுக்குக் கிடைக்காத நிலைமையே இப்போது இருக்கிறது’ என்றார்.
பிசிசிஐ குறித்த இதுபோன்ற விவரங்களைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லோதா குழு பரிந்துரைகளுடன் முரண்பட்ட பிசிசிஐ தன்னுடைய கணக்கு வழக்குகள் பற்றிய குறிப்புகளை இணையதளத்தில் பதிவேற்றுவதை 2017ஆம் ஆண்டு நிறுத்திக் கொண்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று பிசிசிஐயின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு முந்தைய நாள் இரவு மாநில சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 2021–22க்கான ஆண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது என்று மாநில சங்கத்தின் தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார். அதனால் தான் மகிழ்ச்சி அடைந்ததாக அவர் கூறினார். ஒழுங்குமுறைகளின்படி அவசியம் என்பதால் அந்த அறிக்கை ஐசிசிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஜூலை மாதம் நான் அனுப்பி வைத்த கேள்விகள் பட்டியலுக்குள் இடம் பெற்றிருந்த சமீபத்திய ஆண்டறிக்கைகள் தேவை என்ற எனது கோரிக்கை பிசிசிஐயால் புறக்கணிக்கப்பட்டது. அதற்காக ஐசிசியை அணுகிய போது ‘அந்த அறிக்கை எங்களுடையதல்ல என்பதால் பகிர்ந்து கொள்ள முடியாது’ என்ற பதிலே எனக்கு அவர்களிடமிருந்து கிடைத்தது. பிசிசிஐ இணையதளத்தை தொடர்ந்து அந்தத் தகவல்களுக்காக நான் கவனித்து வந்தேன். ஆகஸ்ட் பதினாறாம் நாளுக்குப் பிறகு பிசிசிஐ இணையதளத்தில் ஆண்டறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், கடந்த ஐந்து நிதியாண்டுகளுக்கான தணிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருந்தன. ஆகஸ்ட் பதினெட்டாம் நாள் முதல் வெளிவரத் தொடங்கிய தணிக்கை அறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட ஐபிஎல் வருவாய் மற்றும் பிற விவரங்கள் குறித்து செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின. அந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள 2021-22ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ கணக்கு வழக்கு குறித்த குறிப்பில் வாரியத்தின் நிகர சொத்து மதிப்பு 23,159 கோடி ரூபாய், ஆண்டு வருமானம் 4,360.56 கோடி ரூபாய், மொத்தச் செலவு 1,668.96 கோடி ரூபாய் என்ற அளவிலே குறிப்பிடப்பட்டிருந்தன.
முப்பத்தியெட்டு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட 840.23 கோடி ரூபாயே வாரியம் செலவழித்த மிகக் கூடுதலான செலவாகும். இரண்டாவது பெரிய செலவினமாக ஆண்கள் சீனியர் மற்றும் ஜூனியர் உள்நாட்டுப் போட்டிகள், தேசிய கிரிக்கெட் அகாடமி. சர்வதேச வீரர்களுக்கான தக்கவைப்புக் கட்டணம், வாரியத்தின் வருமானத்தில் பெறப்பட்ட மொத்த உள்நாட்டு வருவாய் பங்கு, கிரிக்கெட் பந்துகள் நுகர்வு, வீரர்கள், நடுவர்கள் மற்றும் ஊக்கமருந்து தடுப்பு கண்காணிப்பாளர்களுக்கான மருத்துவச் சிகிச்சை போன்றவற்றை உள்ளடக்கிய ‘பிற கிரிக்கெட் நடவடிக்கைகளுக்காக’ 629.11 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருந்தது. இவை தவிர பயிற்சிக்காக 30.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகப் பட்டியலிடப்பட்டிருந்தது.
சர்வதேச வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், மொத்த வருவாயில் வீரர்களுக்கான பங்கைத் (ஜிஆர்எஸ்) தருவதற்காகவும் 124.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற வீரர்களுக்கான ஓய்வூதியமாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.120.23 கோடியையும் சேர்த்தால் மொத்தத்தில் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.244.34 கோடி என்ற அளவில் இருக்கிறது. ஆண்களுக்கான சர்வதேச சுற்றுப்பயணங்கள், போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான கட்டணம், தினசரி அலவன்ஸ் ரூ.59.13 கோடியாகும். இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து பிசிசிஐயின் மொத்த வருவாயான 4,630.56 கோடி ரூபாயில் மேற்குறிப்பிட்ட வகைச் செலவுகளுக்காக ஆறரை சதவிகிதம் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.
வருவாய்ப் பகிர்வு குறித்த அந்தத் தரவு மாநிலங்களில் இருந்து செலவழிக்கப்படும் பணத்திற்கான கணக்கு எதுவும் இல்லாமை, பிசிசிஐ வீரர்களுக்கான வருமானம் மிக விசித்திரமாக பெரும்பான்மையான வீரர்களுக்கு அப்படியே நிலையாக இருப்பது என்று இரண்டு கதைகளை நமக்குத் தெரிவிக்கிறது. பிசிசிஐயின் வருவாய்க்கான மிக முக்கியமான ஆதாரமாக இருக்கின்ற சர்வதேச நட்சத்திரங்கள், ஐபிஎல் வீரர்கள் போன்ற கிரிக்கெட் வீரர்கள் வாரியத்தின் பணத்திலிருந்து மிகக் குறைவான பங்கையே பெற்று வருகின்றனர்.
இந்த ஐபிஎல் சகாப்தத்தில் முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்த, நன்கு நிறுவப்பட்ட ரஞ்சி டிராபி அணியைச் சார்ந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையில் தான் விளையாடிய ஆட்டங்களுக்காகப் பெற்றுக் கொண்ட வருமானம் குறித்த விவரங்களை எனக்கு அனுப்பி வைத்தார். அவர் ஒரு சீசனில் சராசரியாக ஏழரை லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். போட்டிகளுக்கான கட்டணமாக ஓராண்டில் அவர் அதிகம் சம்பாதித்த தொகை பதினான்கு லட்சம் ரூபாய் என்ற அளவிலே இருந்திருக்கிறது. போட்டிகள் ரத்து செய்யப்பட்ட 2020–21ஆம் ஆண்டு சீசனில் போட்டிக் கட்டணத்தில் ஐம்பது சதவீதம் இழப்பீடாக உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் மிகக் குறைவாக ஒரு லட்சத்துக்கும் குறைவாக சம்பாதித்துள்ளார். சமீபத்திய சீசனில் பெற்றுக் கொண்டதைக் காட்டிலும் தன்னுடைய முதல் சீசனிலேயே அவர் ஐம்பதாயிரம் ரூபாய் அதிக ஊதியம் பெற்றிருக்கிறார். கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் தொகை ஒவ்வொருவருக்கும் இடையில் மாறுபடும் என்பதால் துல்லியமான தொகைகள் குறிப்பிடப்பட்டால் தன்னை எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று அந்த வீரர் கருதியதால், இங்கே தரப்பட்டுள்ள பணத்தின் அளவு அவருடைய அடையாளத்தை மறைக்கும் வகையில் முழுமையாக்கி மாற்றித் தரப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை எடுத்துக் கொண்டாலும் அனைத்து உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடுகின்ற வீரர் ஒருவரால் அந்த சீசனில் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் இறுதிப் போட்டி வரை வந்தாலும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கவே முடியாது என்று அந்த கிரிக்கெட் வீரர் என்னிடம் மேலும் கூறினார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான ஊதியம் அவ்வப்போது மெதுவாகவே அதிகரிக்கப்படுகிறது. 2004-05ஆம் ஆண்டு சீசனில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாயிலிருந்து பதினாறாயிரம் ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் லீக்கிலிருந்து ஜீ நிறுவனம் 2007ஆம் ஆண்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த போது பல உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அதிலிருந்து விலகினர். அந்த வேளையில் ஆட்ட நாளுக்கான வீரர்களின் கட்டணம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் என அதிகரித்தது. தினசரி அலவன்ஸ் ஐநூறு ரூபாயிலிருந்து ஆயிரத்தி ஐநூறு ரூபாயாக அதிகரித்தது. ஐபிஎல் வருகைக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஊதியக் கட்டமைப்பு மாறவே இல்லை. அந்தக் காலகட்டத்திற்குள் வாழ்க்கைச் செலவு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி இருந்தது. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சற்றே மாயையான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. நாற்பது போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களுக்கு ஒரு நாளைக்கு அறுபதாயிரம் ரூபாய், இருபது முதல் நாற்பது போட்டிகளில் விளையாடியவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், நாற்பதுக்கும் குறைவான போட்டிகளில் விளையாடியவர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்று மூன்று வெவ்வேறு தரங்களில் ஊதியம் அதிகரித்துக் கொடுக்கப்பட்டது. மிகச் சாதாரண வேலையில் இருப்பவர்களுக்குக்கூட குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐந்து முதல் பத்து சதவிகிதம் ஊதியம் உயர்த்தப்படுவதாக என்னிடம் கூறிய உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் ‘ஆரம்பத்தில் தனியாக இருக்கும் போது கிடைக்கின்ற பணத்தை மிக மகிழ்ச்சியாகச் செலவழிப்பீர்கள். உங்கள் நண்பரைக் காட்டிலும் உங்களால் முன்னதாகவே கார் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மனைவி, குழந்தையுடன் இருக்கும் போதும் அதே தொகையைச் சம்பாதிப்பது உங்களுக்கு நிச்சயம் போதாது’ என்றார். பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குறைந்தபட்சம் சில ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது உள்நாட்டு வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் பத்து சதவிகிதம் அதிகரித்துத் தரப்பட வேண்டும் என்று என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறுகிறார்.
பிசிசிஐயின் வருவாயில் ஒரு பகுதி உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கின்ற நிலையில், வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியாக மாறாமல் இருப்பது பிசிசிஐயின் மொத்த வருவாய் குறித்த கணக்கை மோசமாகவே காட்டுகிறது. எடுத்துக்காட்டாக 2016–17ஆம் ஆண்டில் விளையாடிய கிரிக்கெட் வீரருக்கு மொத்த வருவாயில் பங்கிலிருந்து வரக்கூடிய பணம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரலாம். அந்தத் தொகை ஆட்டம் ஒன்றிற்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறுகிறார். மொத்த வருவாயில் கிடைக்கும் பங்கின் மூலம் ஒரு சீசனில் வீரர் ஒருவருக்கு பன்னிரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கலாம் என்றும் அவர் கணக்கிட்டுக் கூறினார். அந்தத் தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்று தங்களுக்குத் தெரியாது என்று கூறிய அவர் இப்போதுதான் தனக்கு அந்தத் தொகை கிடைத்தது என்றார். ஏழாயிரம் ரூபாய்க்கு பட்டியல் தருமாறு தன்னிடம் ஒரு சீசனின் போது கேட்டுக் கொண்டார்கள் என்று கூறிய அந்த வீரர் ‘அவர்கள் ஒரு பூஜ்ஜியத்தைத் தவற விட்டு விட்டார்கள் என்றே முதலில் நினைத்தேன். என்னுடைய நண்பரான இன்னொரு சர்வதேச கிரிக்கெட் வீரரை அழைத்து அதுகுறித்து விசாரித்தேன். அவர் ஆமாம். உன்னைக் காட்டிலும் எனக்கு இருநூறு ரூபாய் குறைவாகக் கிடைத்துள்ளது என்றார்’ எனத் தெரிவித்தார்.
திடீரென 2004ஆம் ஆண்டு முதல் அதிகரித்த பிசிசிஐயின் வருவாயின் விளைவாக உருவான ஜிஆர்எஸ் எனப்படும் ‘மொத்த வருவாயில் பங்கு’ என்பது பிசிசிஐயின் புரிந்து கொள்ள முடியாத கணக்கியல் தந்திரமாகவே இருந்து வருகிறது. அதன் தோற்றம் பிசிசிஐயின் முதல் ஆட்டக்காரர் ஒப்பந்தங்கள் உருவான விதத்தில்தான் இருந்தது. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்குத் தரப்பட்டு வந்த தரப்படுத்தப்பட்ட ஊதிய முறையை 1997ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய வீரர்கள், அந்தச் சுற்றுப் பயணத்திற்கான மேலாளர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் அக்குவேறாக அலசி ஆராய்ந்தனர். தொலைக்காட்சி உரிமைகள் மூலம் வாரியத்தின் வருவாய் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் அவர்கள் இந்திய வீரர்களுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பிசிசிஐயை அணுகினர். 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தக் கட்டமைப்பு இருபத்தைந்து முன்னணி இந்திய வீரர்களைக் கொண்ட குழுவை உருவாக்கியது. அந்த வீரர்கள் முறையே ஐம்பது லட்சம், முப்பத்தைந்து லட்சம், இருபது லட்சம் ரூபாய் அளவிலான ஆண்டு தக்கவைப்புத் தொகையுடன் மூன்று தரவகைகளாகப் பிரிக்கப்பட்டனர். செயல்திறன் அடிப்படையில் போட்டிகளில் விளையாடும் பதினொருவருக்கு உள்நாட்டு டெஸ்ட் போட்டிக்கு இரண்டு லட்சம் ரூபாய், வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு ரூ.2,40,000, வெளிநாட்டு ஒருநாள் போட்டிக்கு ரூ.1,85,000 போட்டி கட்டணமாக வழங்கப்படும். போட்டியில் விளையாடாதவர்களுக்கு போட்டி கட்டணத்தில் பாதி அளவு தரப்படும்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா டிக்கெட் விற்பனை உட்பட தன்னுடைய வருவாயில் இருபத்தைந்து சதவிகிதத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் உள்ள சர்வதேச, உள்நாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடம் பிசிசிஐயின் மொத்த வருவாய்ப் பங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு வழங்கப்படும் என்று அந்த நேரத்தில் கேட்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்களைக் காட்டிலும் ஒரு சதவிகிதம் கூடுதலாக இருபத்தியாறு சதவிகிதப் பங்கு தரப்படும் என்று அவர் அப்போது அறிவித்தார். அன்றிலிருந்து அந்த அளவு சர்வதேச வீரர்களுக்கு 13 சதவிகிதம், உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு 10.4 சதவிகிதம், ஜூனியர் விளையாட்டுகளுக்கு 2.6 சதவிகிதம் என்று இன்றுவரை அப்படியே மாறாமல் உள்ளது என்று முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.
ஆனாலும் ஐசிசியின் வருவாயில் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் இருபத்தியாறு ரூபாய் நேரடியாக வீரர்களுக்குத் தரப்படுவதில்லை என்பதே உண்மை. மொத்த வருவாயில் எழுபது சதவிகிதப் பணத்தை மாநில சங்கங்களுக்குப் பகிர்ந்து கொடுத்த பிறகு மீதமுள்ள முப்பது சதவிகிதத்தில் இருபத்தியாறு சதவிகிதம் என்ற அளவிலேயே அது தரப்பட்டு வருகிறது. வருமானத்தில் முதலில் கிடைக்கும் நூறு ரூபாய் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பிசிசிஐக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு நூறு ரூபாய் வருவாயிலும் மொத்த வருவாய்ப் பங்கு (ஜிஆர்எஸ்) தொகையாக சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.3.90, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.3.12, ஜூனியர்களுக்கு 78 பைசா மட்டுமே கிடைக்கிறது.
ஐபிஎல்லுக்குப் பிறகு பிசிசிஐயின் மொத்த வருவாய் அதிவேகமாக அதிகரிக்கத் தொடங்கியதால் மொத்த வருவாய் எது என்பதை மறுவரையறை செய்திட வாரியம், அதன் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில சங்கத் தலைவர்கள் முடிவு செய்தனர். ஐபிஎல் மூலம் கிடைத்த வருவாய் பிசிசிஐயின் மொத்த வருவாயில் இருந்து உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. ஐசிசியின் ஊடக உரிமைகளுக்கான தொகை அதிகரித்ததன் காரணமாக பிசிசிஐக்குக் கிடைத்த பங்குத் தொகை அதிகரித்தது. ஐசிசியிடமிருந்து கிடைத்த அந்த வருவாய்க்கும் மொத்த வருவாய் கணக்கீட்டில் இடம் இல்லாமல் போனது. மொத்த வருவாய்த் தொகுப்பில் இருந்து பிசிசிஐயின் தயாரிப்புச் செலவுகளும் கழித்துக் கொள்ளப்பட்டன.
2017–18 சீசனுக்கான பங்கே தாங்கள் கடைசியாகப் பெற்ற மொத்த வருவாய்ப் பங்கு வருமானம் என்பதை இரண்டு மாநிலச் சங்கங்களின் வீரர்கள் என்னிடம் உறுதிப்படுத்திக் கூறினர். மொத்த வருவாய்ப் பங்கை தான் பெற்று சில ஆண்டுகள் ஆகி விட்டதாக முதல்தர கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறுகிறார். மற்றொருவர் அடுத்த தவணை விரைவிலே தரப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். பிசிசிஐயின் வருடாந்திர தணிக்கை அறிக்கையிலிருந்து பிசிசிஐ தன்னுடைய் மொத்த வருவாயிலிருந்து பங்குப் பணத்தை மாநிலங்களுக்குச் செலுத்தி வருவது தெளிவாகத் தெரிய வருகிறது. ஆனாலும் அந்தப் பணம் வீரர்களைச் சென்றடைகிறதா என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அது குறித்து பிசிசிஐயிடம் நான் எழுப்பிய கேள்விகளுக்கு ‘மொத்த வருவாய்ப் பங்கில் எந்தவொரு மீறலும் நடக்கவில்லை. வீரர்களுக்கு வழங்கப்படும் கட்டண முறையின் ஒரு பகுதியாகவே அது இன்னமும் இருந்து வருகிறது. அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அந்தக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வீரர்களூக்குத் தொடர்ந்து பணம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு முடிவுகளின்படி வீரர்களுக்கான மொத்த வருவாய்ப் பங்கு வழங்கப்படுகிறது’ என்ற பதில் அளிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே 2017ஆம் ஆண்டு மே 21 அன்று வீரர்கள் மற்றும் இணை-ஊழியர்களுக்கான ஊதியம் தொடர்பான விதிமுறையில் மாற்றத்தை உள்ளடக்கிய விளக்கக்காட்சி ஒன்றை வழங்கினார். வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் கொள்கையைப் போல அது சர்வதேச மற்றும் உள்நாட்டு அணிகளுக்கான செயல்திறன் போனஸ், கேப்டன்களுக்கான போனஸ் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. தன்னுடைய குடிகளுக்குப் பெரும் தொகையாக கோடிக்கணக்கான மதிப்புள்ள விருதுகளை வழங்கி வந்த தற்காலிகக் கொள்கைக்குப் பதிலாக வாரியத்திலிருந்து கிடைக்கும் வருமானம், செயல்திறன் ஊக்குவிப்பிற்கான மதிப்பூதியத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாகக் கொண்டு வருவதே அதன் நோக்கமாக இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு கும்ப்ளேவின் பயிற்சி முறைகள் குறித்து அணித் தலைவர் விராட் கோலியுடன் கருத்து வேறுபாடுகள் உருவானதாக வதந்திகள் பரவத் தொடங்கிய நிலையில் ஜூன் 20 அன்று பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகினார்.
வீரர்களுக்கு அதிக இழப்பீடு/அலவன்ஸ் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படக் கூடிய வகையில் வீரர்களுக்கான ஊதியம்/ இழப்பீடு சமன்பாடு நிதி (PR/CEF) எனப்படும் புதிய நிதி பிசிசிஐயின் ஒருங்கிணைந்த உபரியிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் குழு கூட்ட முடிவுகள் குறித்த குறிப்பில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை.
பிசிசிஐ தலைவராக 2019ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று கங்குலி வெளியிட்ட முதல் அறிவிப்புகளில் ஒன்றாக ‘முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த அமைப்பு’ உருவாக்கப்படுவது குறித்த செய்தியும் இடம் பெற்றிருந்தது. அதற்கான சாத்தியம் பற்றி கேட்ட போது அலுவலக அதிகாரி ஒருவர் வீரர்கள் ஏற்கனவே மிகப் பெரிய அளவில் பணம் சம்பாதித்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு இன்னும் ஏன் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருப்பதால், அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியதாக நிருபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். உள்நாட்டு வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் குறித்த வாக்குறுதியும் நிறைவேறவே இல்லை. விளையாட்டு வீரர்களைப் பண்டங்களாக, வீரர்களால் உருவாக்கப்படும் செல்வத்தை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாகக் கருதுகின்ற வகையிலேயே பிசிசிஐயின் பார்வை இருந்து வருகிறது.
‘எந்தக் கொள்கைகளை உருவாக்கினாலும் அதன் பின்னால் ஏதாவதொரு தர்க்கம் இருக்க வேண்டும். சர்வதேச வீரர்கள், உள்நாட்டு வீரர்கள் ஏன் இரண்டு வெவ்வேறு தரவரிசை முறைகளைக் கொண்டுள்ளனர்? சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ தரவரிசை முறைப்படி கடந்த சீசனில் அவர்களின் செயல்திறன் அடிப்படையிலேயே கிரேடுகள் வழங்கப்படும். உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களைப் பொருத்தவரை நாற்பது போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களுக்கு ஒரு நாளைக்கு அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கும். இருபது போட்டிகளில் விளையாடாதவர் என்பதால் இரண்டு சீசன்கள் நன்றாக விளையாடி அந்த இரண்டு சீசன்களிலும் நட்சத்திர வீரராக இருக்கும் புதுமுக வீரரால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்கூட பெற முடியாது. அவர்களைக் கேள்வி கேட்க யாருமில்லை. அதனாலேயே அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்’ என்று பிசிசிஐக்குள் இருக்கும் ஒருவர் கூறுகிறார்.
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்பதாலேயே அவர்கள் ஊதியம் பெறுவதில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். தேசிய அளவிலான நட்சத்திரங்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ளப்பட்டு, ஐபிஎல் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பிசிசிஐயின் மீதிப் பணம் – குறிப்பாக மாநிலங்களுக்குச் செல்லும் அதன் வருவாயில் எழுபது சதவிகிதம் பணம் – எங்கே போகிறது என்பது குறித்து அதிக அளவு கவனம் செலுத்தப்படுவதில்லை.
செயல்பாட்டில் உள்ள முப்பத்தியெட்டு மாநிலச் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கிளப், கொல்கத்தா தேசிய கிரிக்கெட் கிளப், பல்கலைக்கழகங்களின் சங்கம் எனும் விளையாட்டில் ஈடுபடாத மூன்று உறுப்பினர்களைத் தேர்தலுக்கான வாக்காளர்களாக பிசிசிஐ உள்ளடக்கிக் கொண்டுள்ளது. மாநிலச் சங்கங்கள் கோட்பாட்டளவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிசிசிஐ தேர்தல்களில் தங்கள் வாக்குகள் மூலம் பிசிசிஐக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அல்லது நீக்குவதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ளன. வரலாற்று ரீதியாக இந்த தேர்தல்கள் முக்கிய நிர்வாகிகள், வணிகப் பிரமுகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இடையே நடைபெறும் கடுமையான போட்டியாகவே இருந்து வந்துள்ளன. ஆயினும் சமீபகாலமாக தனிநபர்கள் பெரும்பாலும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அமைதியான களங்களாக இந்தத் தேர்தல்கள் மாறிவிட்டன.
இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம்கூட மாநிலச் சங்கங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதே பிசிசிஐயின் தலைவராக இருப்பவரின் முன்னுரிமையாக இருந்திருக்கிறது. சர்வதேசப் போட்டிகள் மற்றும் வாரியத்தின் குழுக்களில் பதவிகளை வழங்குவது, கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தாராளமான அலவன்ஸ்களை அளிப்பது, தேசிய அணிக்கான மேலாளர் பதவி போன்றவற்றை வழங்குவது என்று மாநிலச் சங்கங்களிடம் தாராளம் காட்டப்பட்டு வந்தது. ஆனால் 1990களில் வந்த தொலைக்காட்சி உரிமைகள், ஐபிஎல் பணப் புழக்கம் போன்றவை அந்த வேலையை எளிமையாக்கி விட்டன. மாநிலச் சங்கங்களிடன் செயல்பாடு பற்றியோ அல்லது பிசிசிஐ நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது பற்றியோ அவற்றிடம் எந்தவொரு கேள்வியும் எழுப்பப்படுவதில்லை. மாநிலச் சங்கத்தின் வேலை அது பெறும் பணத்தின் அளவு குறித்ததாக இருப்பதில்லை. மாறாக அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அந்தத் தகவல் எந்த அளவிற்கு ரகசியமாக வைக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்வதாகவே அவற்றின் வேலை உள்ளது.
பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் இருபத்தியேழு மாநிலச் சங்கங்களின் தணிக்கையை நடத்துமாறு டெலாய்ட் டச் தோமட்சு என்ற பிரிட்டிஷ் நிறுவனத்திடம் 2015ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டார். ‘என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலச் சங்கத்திற்கும் சமமான அளவு பணமே வழங்கப்பட்டது. ஆயினும் சில சங்கங்கள் நஷ்டத்தில் இருந்தன’ என்று கூறிய அவர் ‘அது அவ்வாறு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் கொடுக்கப்பட்ட பணத்தை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டறிந்து கொள்வதற்கு முடிவு செய்தேன்’ என்றார்.
‘கிரிக்கெட்டின் காமன்வெல்த்: மனிதகுலம் அறிந்துள்ள மிக நுட்பமான, அதிநவீன விளையாட்டுடன் வாழ்நாள் முழுமைக்குமான காதல்’ என்ற புத்தகத்தில் அந்த டெலாய்ட் அணியை தான் சந்தித்தது குறித்து நிர்வாகக் குழுவில் நான்கு மாத காலம் இடம் பெற்றிருந்த வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதியுள்ளார். ‘அவர்கள் கண்டுபிடித்தவை அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன. எனவே அவற்றை வெளிவராமல் பார்த்துக் கொண்டனர்’ என்று எழுதியுள்ள குஹா ‘ரகசியத்தன்மையைக் காப்பதற்கான விதியைக் கடைப்பிடிப்பதாகக் கூறி டெலாய்ட் அந்த அறிக்கைகளை எங்களுடன்கூடப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் தாங்கள் கண்டறிந்தது பற்றிய கண்ணோட்டத்தை வழங்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்’. குஹா அவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்டார். ‘அவர்கள் மாநில சங்கங்களில் நடைபெற்று வந்த அனைத்து வகையான முறைகேடுகளையும் கண்டறிந்தனர். ஒரு மாநிலச் சங்கம் ‘கிரிக்கெட்டிங் உள்கட்டமைப்பு’ என்ற வகையில் பதினெட்டு கார்களை வாங்கியிருந்தது. கையால் எழுதப்பட்ட கணக்குகளைச் சில சங்கங்கள் பராமரித்து வந்திருந்தன… பிசிசிஐ வழங்கிய நிதியில் இருந்து அதிகாரிகளுக்காக பிளாட்டுகள் வாங்கப்பட்டிருந்தன. இல்லாத வழித்தடங்களில் விமானங்களில் பயணம் செய்தததாகப் பணம் வழங்கப்பட்டிருந்தது. கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்காக என்று மாற்றிக் கொள்ளப்பட்ட நிலங்களில் இன்னும் பயிரிடப்பட்டு வந்தது.
தில்லி, ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலச் சங்கங்கள் தணிக்கையை முற்றிலுமாகத் தவிர்த்தன என்று அவுட்லுக் இதழ் தெரிவித்தது. ஜார்கண்ட், ஒடிசா, அசாம், குஜராத், கோவா மாநில சங்கங்களைச் சார்ந்த அதிகாரிகள் தணிக்கையாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததும் வாரியத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் பிசிசிஐ அதிகாரிகள் கொண்டு வந்ததும் புதிதாக தணிக்கை நடத்துவதற்கான விருப்பம் இல்லாமல் போனது.
ஏழு வடகிழக்கு மாநிலங்கள், புதுச்சேரி மற்றும் சண்டிகர் போன்ற சிறிய யூனியன் பிரதேசங்கள் போன்ற புதிய அணிகளை இந்திய கிரிக்கெட்டின் உள்நாட்டு கட்டமைப்பில் சேர்ப்பதால் நிதி தவறாக நிர்வகிக்கப்படலாம் என்ற கவலை உருவானது. வடகிழக்கு மாநிலங்களைச் சுற்றி எழுந்துள்ள ஊழல் பிரச்சனைகள் பற்றி எழுதுவதற்காக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவரான நீரஜ் குமார் தனது நினைவுக் குறிப்பில் ஓர் அத்தியாயத்தையே அர்ப்பணித்துள்ளார். மாநிலங்களின் புதிய ஜூனியர் அணிகளில் திறமையான கிரிக்கெட் வீரர்களைச் சேர்த்துக் கொள்ளும் ஆர்வத்தால் இடைத்தரகர்களின் மோசடிக்கு வழிபிறந்தது என்பதை விளக்கிக் காட்டியுள்ள அவர் அருணாச்சலப் பிரதேச சங்கம் அலிகாரில் சோதனைளை நடத்தியது போன்ற நிகழ்வுகளை விவரித்துள்ளார். தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்கவும், தங்களுடைய பங்கேற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் தேவையான ஆவணங்களைப் பெறுவதற்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு இளம் கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்கள் உள்ளாகின. ‘வடகிழக்கு மாநிலங்களுக்கு முழு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டதன் மூலம் இடைத்தரகர்கள், பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்களை உள்ளடக்கி பல கோடி ரூபாய் அளவில் மோசடிகள் ஒழுங்கமைத்து உருவாகின. அந்த மோசடிகளின் ஒரே நோக்கம் இளைஞர்களை, அவர்களின் பெற்றோர்களை ஏமாற்றுவதாகவே இருந்தது’ என்று குமார் எழுதியுள்ளார். பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய கிரிக்கெட் வீரர் ஒருவர் தொழில்முறை விளையாட்டு வீரராகவும், அதே நேரத்தில் தனது அணிக்குச் சாதனங்களை விற்று வருபவராகவும் இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் செய்வது மட்டுமே கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல் என்று நினைப்பது கிரிக்கெட் ஊழலைப் பற்றி சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது’ என்று குமார் எழுதுகிறார். ‘கிரிக்கெட் நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கும் மிகப் பெரிய அளவிலான ஏமாற்று வேலையில் ஃபிக்சிங் என்பது மிகச் சிறிய பகுதி மட்டுமே. இந்தியாவில் கிரிக்கெட் மூலம் ஈட்டப்படும் பெருமளவிலான வருவாயானது பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்ற இடங்களுக்கே பெரும்பாலும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தப் புத்தகத்தில் எங்கேயாவது, எப்படியாவது விளையாட விரும்பும் இளம் கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுவது குறித்து பிசிசிஐ ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு அளிக்கப்பட்ட புகார்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. ‘ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கான இடங்களாக இருக்கின்ற மாநில கிரிக்கெட் சங்கங்கள் மாவட்ட அமைப்புகளின் தலைமையில் தங்கள் சொந்தக் கைக்கூலிகளை நியமித்து நடத்தி வருகின்றன… அத்தகைய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்படுபவர்கள் பொதுவாக மாநிலச் சங்கத்தில் பொறுப்பில் உள்ள முதலாளியின் உறவினர்கள் அல்லது ஊழியர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு மாநில அளவிலான தேர்தல்களில் வாக்களிப்பதற்காக மட்டுமே அவர்களுக்கு மாவட்டத்தில் பொறுப்பு வழங்கப்படுகிறது. பிசிசிஐ-யிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் பெறுகின்ற மானியத்தை மாவட்டச் சங்கங்களுடன் மாநிலச் சங்கங்கள் பகிர்ந்து கொள்கின்றனவா என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு பணம் பகிர்ந்து கொள்ளப்படுவது உண்மை என்றால், அது எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது, அந்தப் பணத்திற்கான கணக்குகள் பராமரிக்கப்படுகின்றனவா, பயிற்சி முகாம்கள் அல்லது தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகின்றனவா, யார் அவர்களைக் கண்காணிக்கிறார்கள் என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன.
வீரர்களைத் தேர்வு செய்ய பணம் வாங்குவது அல்லது நிதி முறைகேடு செய்வது பற்றிய வதந்திகள் புதிதாகத் தொடங்கப்பட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவில்லை. ஜூனியர் கிரிக்கெட்டில் பணத்தை வாங்கிக் கொண்டு தேர்வு செய்யும் கதைகள் நாடு முழுவதிலுமிருந்து நிரம்பி வழிகின்றன. இதுபோன்ற புகார்கள் மீது விரைவான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சமீபத்திய கூட்டத்தில் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் என்னிடம் கூறினார்.
பெங்கால் கிரிக்கெட் சங்கம், தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட் சங்கம், குஜராத் கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகிய மாநிலச் சங்கங்களின் இணையதளங்களில் ஆகஸ்ட் முதல் நாள் வரையிலும் சமீபத்திய ஆண்டறிக்கை அல்லது நிதிநிலை அறிக்கை வெளியாவதற்கான எந்தவொரு அறிகுறியும் காணப்படவில்லை. பிசிசிஐ பொருளாளர் சார்ந்திருக்கும் மும்பை கிரிக்கெட் சங்கம் தன்னுடைய ஆண்டறிக்கையை கடந்த 2017-18ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தது.
தான் சார்ந்துள்ள தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தனது வசம் உள்ள பணம், மைதானத்தைக் கொண்டு தனக்கான அகாடமியை ஏன் தொடங்கவில்லை என்பதை அறிந்து கொள்ள கீர்த்தி ஆசாத் விரும்புகிறார். அவ்வாறான அகாடமி இல்லாத ஒவ்வொரு மாநிலச் சங்கத்திற்கும் இந்தக் கேள்வி பொருந்தும். ‘தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அல்லது பிற மாநிலச் சங்கங்களில் உள்ளவர்கள் தாங்களே சொந்தமாக அகாடமிகளை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு குழந்தையிடம் இருந்து முப்பது முதல் நாற்பதாயிரம் வரையிலும் அவர்கள் பணம் வசூலித்துக் கொள்கிறார்கள்’ என்று அவர் கூறினார். ‘தில்லியில் ஒவ்வொரு குழுவும் தனக்கென்று தேர்வாளரை வைத்துக் கொண்டுள்ளது. தங்கள் குழந்தைகளையே அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்’. மாநிலச் சங்கங்களுக்கு பிசிசிஐ கொடுக்கும் பணம் ‘பெர்முடா முக்கோணம்’ போல மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிசிசிஐயுடன் அதிகாரப்பூர்வமாக இணைவிக்கப்பட்டது. திகிலூட்டும் வகையில் நான்கு ஆண்டுகளுக்குள்ளாக அந்த சங்கத்தில் ஏராளமான நிர்வாக முறைகேடுகள் குவிந்தன. பாலியல்ரீதியாக தங்களைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று மூன்று சிறார்கள் உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தில் பெண்கள் கிரிக்கெட்டிற்கான முன்னாள் இணை-கன்வீனர் மீது குற்றம் சாட்டினர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கணக்குகள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பிய காரணத்தால் அந்த மாநிலச் சங்கத்தின் முதல் பொருளாளரான பிருத்வி சிங் நேகி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு துவங்கி தான் பணிநீக்கம் செய்யப்பட்ட 2021 மார்ச் 21 வரையிலான காலத்திற்கு உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செலவுகள் பற்றிய கணக்குகள் எதுவும் தன்னிடம் தரப்படவில்லை என்று நேகி என்னிடம் கூறினார். ‘எந்தவொரு கணக்கும் எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக என் மீது பில்களில் நான் கையெழுத்திடுவதில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பில்கள் எனது மேஜைக்கு வரும் போது அவையனைத்தையும் சரிபார்க்க வேண்டியது எனது கடமையாகும். கேள்வி அல்லது ஆட்சேபணை எதுவும் இருந்தால் அதனைத் திருத்தச் சொல்ல வேண்டும். பில்லில் விற்பனையாளரின் நிரந்தரக் கணக்கு எண் (பான்) இல்லை என்றால் அதைக் கேட்டு வாங்க வேண்டும். இந்த வேலையை அவருக்கு யார் கொடுத்தது என்பதையும் பார்க்க வேண்டும். அது எங்கிருந்து வந்தது, அந்த நபர் எப்படி விற்பனையாளராக மாறினார் என்று கேட்க வேண்டியதும் எனது கடமையாகும்’ என்று அவர் கூறினார்.
நேகி வெளியேற்றப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக உத்தரகாண்ட் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்த வாசிம் ஜாஃபர் தகுதியற்ற வீரர்களைத் தேர்வு செய்யச் சொல்லி தேர்வாளர்கள் மற்றும் செயலாளரின் குறுக்கீடு, பக்கச்சார்பு இருப்பதாகச் சுட்டிக் காட்டியிருந்தார். உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா அதற்குப் பிறகு மத நடவடிக்கைகள் மூலம் ஜாஃபர் அணியைப் பிளவுபடுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். மஹிம் வர்மா வேறு யாருமில்லை – பத்தொன்பது வயதுக்குட்பட்ட இந்திய வீரர் ஒருவரை மிரட்டி அவரது தந்தையிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிதான் வர்மா. என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்த வர்மா ‘இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து எதுவும் சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனாலும் வீரர்களிடம் பணம் பறிப்பது தொடர்பாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. என்னையும், எனது நற்பெயரையும் இழிவுபடுத்துவதற்காகவே அந்தக் குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என்றார். இந்த உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கம்தான் ரஞ்சி டிராபி கிரிக்கெட் வீரர்களுக்கு தினசரி அலவன்ஸை ரூ.1,500க்குப் பதிலாக ரூ.100 என்று வழங்கியது. அது வாழைப்பழங்களுக்கு ரூ.35 லட்சம், தண்ணீர் பாட்டில்களுக்கு ரூ.22 லட்சம் என்று பணம் செலவழித்த சங்கமாகவும் இருந்தது.
உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கம் மற்றும் அதனுடன் இணைந்த மாவட்டச் சங்கங்களின் பணி மற்றும் நிர்வாகத்தில் மிக மோசமான சட்ட விரோதங்களும், முறைகேடுகளும் நடைபெற்றிருப்பதாக குறை கூறி இந்த ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் நாள் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று பட்டியலிடப்பட்டது. பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றதாகவும், நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், வீரர்களை மோசமாக நடத்தியதாகவும் அந்தப் பொதுநல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. டேராடூன், குர்கான், ஃபரிதாபாத் போன்ற இடங்களில் மிரட்டி பணம் பறித்ததற்காக உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘அந்த மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. எந்தவொரு தகுதியும் இல்லாதவை. சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராகத் தேர்தலில் தோல்வியடைந்த சில உறுப்பினர்கள் சங்கத்திற்கு எதிராக நடத்தி வரும் மோசமான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவர்கள் சங்கத்தின் மீதும், உத்தரகாண்ட் மாநிலத்தில் கிரிக்கெட் வளர்ச்சியின் மீதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த முயல்கின்றனர்’ என்று வர்மா கூறினார்.
தன்னுடைய வருவாயில் எழுபது சதவிகிதம் என்ற அளவில் பிசிசிஐ மாநிலச் சங்கங்களுக்குத் தொடர்ந்து வழங்கி வரும் பணத்திற்கு பெரும்பாலும் உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் வாழைப்பழ பில் போல விவரிக்க முடியாத அல்லது தணிக்கை செய்யப்படாத செலவுகளே கணக்கு காட்டப்படுகின்றன. மாநிலச் சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி வழங்குவது ஒரே மாதிரியாக இருக்கக் கூடாது என்றும் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் சார்ந்து தேவையைப் பொருத்தே நிதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிறுவப்பட்ட நிதி-விநியோகக் கொள்கை பற்றி நிர்வாகக் குழுவின் கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலச் சங்கங்கள் பிசிசிஐக்குப் பதில் சொல்லும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்ற கொள்கை 2017ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று நடைபெற்ற பிசிசிஐ சிறப்புப் பொதுக் கூட்டத்தில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. அவர்கள் ஏன் தங்கள் நலனுக்கு எதிரான முடிவை எடுக்கப் போகிறார்கள்?
கிரிக்கெட் விளையாடுபவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தேவை அல்லது சுயாதீனமான மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மறுகட்டமைப்பிற்காக மாநிலச் சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியே பிசிசிஐயின் பணம் செலழிக்கப்படுவதில் மிகவும் அதிகமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நிதியின் பயனாளிகள் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.
{ஐந்து}
மாநிலச் சங்கங்களைப் போல கறைபடிந்து இருக்கவில்லையென்றாலும் ஜெய்ஷாவின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கும் பெண்கள் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டில் மற்றுமொரு செழிப்பான துறையாக உருவெடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி இடம் பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு மிகப் பரந்த அளவில் இடம் பிடித்தது. அப்போது பிசிசிஐயில் பெண்களை முன்னிறுத்துபவராகத் தன்னை அனைவரும் காண வேண்டும் என்று ஜெய்ஷா விரும்பினார். 2022ஆம் ஆண்டு அக்டோபரில் பிசிசிஐ செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் ஜெய்ஷா இந்திய ஆண்கள், பெண்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்குச் சமமான போட்டிக் கட்டணத்தை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கின் போது உலகளவில் பெண்கள் அணி விளையாட்டுகளில் மிக அரிதாக இருக்கின்ற சம்பளத்தை பிசிசிஐ வழங்கியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஊதிய சமத்துவம் ஒரு முக்கியமான தருணமாக உள்ளது என்றும், ஐபிஎல்லுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய கிரிக்கெட் லீக்காக மகளிர் பிரீமியர் லீக் இருக்கும் என்றும் தான் நம்புவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த விரிவான நேர்காணலில் ஜெய்ஷா கூறியிருந்தார். ஐந்தாண்டு ஊடக உரிமை ஒப்பந்தத்திற்கு 951 கோடி ரூபாய் மற்றும் இருபத்தியாறு ஆண்டுகளாக இருந்து வரும் பெண்கள் தேசிய கூடைப்பந்து சங்கத்தைக் காட்டிலும் வீரர்களுக்கு அதிகமான சம்பளம் என்று பெண்களுக்கான கிரிக்கெட்டில் மகளிர் பிரீமியர் லீக் மிகச் செழிப்பான தொழிலாக மாறியுள்ளது.
தலைப்பு செய்திகளுக்கு அப்பாற்பட்ட கதைகள், தெளிவின்றி அந்த தலைப்புகளில் இடம் பெற்ற எண்கள் அச்சுறுத்துவதாக இருந்தன. உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தில் மகளிர் கிரிக்கெட்டிற்கான இணை ஒருங்கிணைப்பாளரும், சமோலி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளருமான அறுபத்தைந்து வயதான நரேந்திரஷாவுக்கு எதிரான வழக்கை இந்த ஆண்டு டேராடூனில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் விசாரித்தது. பாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்துதல், ஆபாசமான தொலைபேசி அழைப்புகள் என்று பல்வேறு குற்றங்களை இளம்பெண் ஒருவர் அவர் மீது சுமத்தியிருந்தார். உரையாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தனது மகளை நரேந்திரஷா துன்புறுத்தி வருவதாகவும், தகாத முறையில் தொடுவதாகவும் காவல்துறையிடம் அளித்த புகாரில் இந்த செப்டம்பரில் பதினாறு வயதாகும் அந்தப் பெண்ணின் தந்தை கூறியிருந்தார்.
நரேந்திரஷா உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா, உறுப்பினர் தீரஜ் பண்டாரி ஆகியோரின் உடல் தேவைகளைப் புகார்தாரர் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கூறினார் என்றும் முதல் தகவல் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ‘தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் உயர்சாதி மக்களுடன் வாழ உங்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. ஆனாலும் நான் உங்களுக்கு விளையாட வாய்ப்பு தருகிறேன்’ என்று கூறி மைனர் பெண்ணை நரேந்திர ஷா சாதி துஷ்பிரயோகம் செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கை குற்றம் சாட்டியது. நரேந்திர ஷா மிகச் சிறிதளவு காலத்திற்கு மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தார். அவரை காவலில் வைப்பதற்கான காவல்துறையின் முறையீட்டை நரேந்திரஷாவின் உடல்நலக்குறைவு, தற்கொலை முயற்சியைக் காரணம் காட்டி மாஜிஸ்திரேட் நிராகரித்தார். தற்போது அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திரஷா நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் இருப்பதைக் காரணம் காட்டி இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்த மஹிம் வர்மா ‘விஷயம் வெளியில் தெரிய வந்த பிறகு உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் உயர்மட்டக்குழு நரேந்திரஷாவைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டது. மேலும் இந்த விவகாரம் உள் புகார் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட்டில் கிடைக்கும் அதிக அளவிலான பணம், உரிய பாதுகாப்புகள் எதுவுமற்ற நிலைமையில் தங்கள் மேலதிகாரிகளான பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள், அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக மதிப்பிட முடியவில்லை. விளையாட்டை விட்டு வெளியேறியுள்ள பெண் கிரிக்கெட் வீரர்களால் அந்த நிலைமையை தெளிவாக்கிட முடியும். ஆனால் அதற்கு அவர்களுடைய பெயர்களை அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாநிலங்களை வெளிப்படுத்தக் கூடாது.
விளையாடும் பதினோரு பேரில் ஒருவராக இடம் தருவதற்குத் தன்னிடம் பாலியல் சலுகைகளை எதிர்பார்த்த பயிற்சியாளரைப் புறக்கணித்த காரணத்திற்காக பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் கிரிக்கெட்டிலிருந்தே வெளியேற்றப்பட்டார். ஒரு தொடரில் விளையாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அந்த வீராங்கனையிடம் அடுத்த நாள் நடைபெறப் போகும் ஆட்டத்தில் விளையாடத் தயாராகுமாறு சொல்லப்பட்டது. ஆனாலும் விளையாடும் அணியில் அந்த வீராங்கணை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அந்த தொடர் முழுவதும் அதுபோலவே நடந்தது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் நாளைக்குத் தயாராக இருங்கள் என்ற அதே அறிவுறுத்தல் வந்து சேர்ந்தது. கடைசி ஆட்டத்திற்கு முந்தைய நாள் இரவு பத்து மணியளவில் ஏதோவொரு சாக்குப்போக்கைக் கூறி அந்த வீராங்கனையைத் தன்னுடைய அறைக்கு அந்தப் பயிற்சியாளர் வரவழைத்தார். ‘அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எதை நம்புவது என்று தெரியவில்லை’ என்று அந்தப் பெண் கூறினார்.
அந்தக் கிரிக்கெட் வீராங்கனை வதந்திகளும், அறிகுறிகளும் இருந்து வந்ததாகக் கூறினார். தொடருக்கு முன்பு மாநில அளவில் நடைபெற்ற முகாமில் பயிற்சியாளர் அவரை நோக்கித் திரும்பிய போது பெண்கள் விளையாட்டில் நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதற்காக ஆய்வாளர்கள் குழு ஒன்று அந்த மைதானத்திற்கு வந்தது. ‘அவருடைய முகம் நிறம் மாறியது. ‘எங்கள் சங்கம் நன்றாக இருக்கிறது, வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன’ என்று மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும் என்று அவர் எங்கள் அனைவரையும் எச்சரித்தார்’ என்று அப்போது அந்தப் பயிற்சியாளர் நடந்து கொண்ட விதத்தை அந்த வீராங்கனை நினைவு கூர்ந்தார்.
பயிற்சியாளர் அன்று இரவு அவரை அழைத்தபோது அந்த வீராங்கனை தன்னுடைய மொபைல் தொலைபேசியை அணைத்து வைத்திருந்தார். தன்னுடைய அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியையும் அவர் கழற்றி வைத்து விட்டார். மாநில முகாமுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு மாவட்டத்திற்காக விளையாடிய அந்தப் பெண், அடுத்த நாளும் விளையாடவில்லை. வெளியே உட்கார வைக்கப்பட்டு அவர் மீண்டுமொரு முறை ஏமாற்றத்திற்குள்ளானார். ‘போட்டிகளில் விளையாடாமல் அவ்வாறு வெளியே அமர்ந்திருந்தது – மூன்று ஆண்டுகள் தொடர்ந்த் நடந்தது’ என்றார். அதேபோன்று சந்தேகத்திற்கிடமான வகையிலேயே அவரது மாநில மகளிர் கிரிக்கெட் கமிட்டியின் தலைவரும் நடந்து கொண்டார். ‘வெளியே அதைப் பற்றி பேச யாரும் விரும்பவில்லை’ என்று அவர் கூறினார். ‘இந்த அமைப்பை எதிர்த்துப் போராடுவது எளிதானதல்ல. விளையாட்டு வாழ்க்கை பாழாகி விடக் கூடாது என்பதால் நான் அமைதியாக இருந்தேன். இன்னும் சில வருடங்களே எஞ்சியிருந்த காரணத்தால் இப்போது அவசியம் விளையாட வேண்டும் என்றே நினைத்தேன்’ என்றார்.
வேறொரு மாநிலத்திற்காக விளையாட முடியுமா என்பதைக் கண்டறிந்து கொள்ள முயன்ற வேளையில் அவரால் இளம் இந்திய ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் – ஆண் அல்லது பெண் – தேர்வில் மற்றுமொரு ஊழல் நிலவி வருவதைக் காண நேர்ந்தது. தேர்வுக்காகப் பாலியல் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதாக இல்லாமல் அது பணம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையாக இருந்தது. ‘என்னுடைய மாநிலத்திலிருந்து என்ஓசி பெற்று வேறு மாநிலத்துக்குச் செல்ல முயன்ற போது, வேறு மாநிலத்தில் சீனியர் விளையாட ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். இன்றைக்கு அது நிச்சயம் ஏழு முதல் பத்து லட்சம் வரை அதிகரித்திருக்கும்’ என்றார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முழுமையடையவில்லை என்று கூறிய அவர் ‘பெண்கள் பிரீமியர் லீக் எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று காத்திருந்தேன். ஆனால் அது வந்த பிறகு நான் கிரிக்கெட்டை விட்டே வெளியேற வேண்டியிருந்தது. மிக மோசமாக உணர்ந்தேன். சில விஷயங்கள் வீரர்களின் கைகளில் இருப்பதில்லை. நாங்கள் ஆதரவற்றவர்களாகவே இருந்து வருகிறோம்’ என்றார்.
அதற்கும் மேல் விதியின் திருப்பமாக காயம் அல்லது தேர்வாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியில் மோசமாக விளையாடுவது அல்லது தங்களைக் காட்டிலும் சிறப்பான திறமையுள்ளவர்கள் தோன்றுவது போன்ற நிகழ்வுகளாலும் ஒருவரின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்படலாம். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரியை பாலியல் விழிப்புணர்வு பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி விலகிக் கொண்டது நிறுவனத்தின் மற்றொரு அம்சத்தை வெளிப்படுத்தியது.
பிசிசிஐயிடம் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வத் தேவையான உள் புகார்க் குழு அமைக்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பிய போது ‘2023ஆம் ஆண்டு மே இருபத்தியேழாம் நாளன்று அகமதாபாத்தில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் கொள்கையை ஏற்றுக் கொள்வதும் இணைத்துக் கொள்ளப்பட்டது’ என்று பொத்தாம் பொதுவான பதிலே கிடைத்தது. மேலும் ‘கூட்டத்தில், பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தேவஜித் சைக்கியா, ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் அடங்கிய குழுவிடம் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் கொள்கை வரைவை மறுபரிசீலனை செய்யும் பொறுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் கொள்கையை மறுஆய்வு செய்து இறுதிப்படுத்துவதற்காக அந்தக் குழுவிடம் வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அந்தக் கொள்கையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பிசிசிஐ உள் குழுவை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மிக விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது’ எனத் தெரிவித்திருந்தனர்.
ஊழல் அல்லது மோசமாகச் செயல்படும் மாநிலச் சங்கங்களில் பெண்கள் கிரிக்கெட்டின் திடீர் எழுச்சியானது ஜூனியர் கிரிக்கெட்டில் நுழையும் சிறார்களின் நிலைகளை அதிகம் பாதிக்கக்கூடியதாக மாற்றியுள்ளது. பிசிசிஐ தனக்கென்று சொந்தமாக பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் கொள்கையை உருவாக்குவதற்கான குழுவை இன்னும் அமைத்திடவில்லை என்பதுடன் துன்புறுத்தல், மிரட்டல், கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக மாநில அளவிலான அதிகாரிகள் மீது சாட்டப்பட்ட வழக்குகளில் அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலிருப்பது குற்றம் இழைப்பவர்களுக்கு கூடுதல் தைரியத்தை அளித்து வருகிறது.
ஐபிஎல் ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஐசிசி வருவாய்ப் பகிர்வு முறையின் அறிவிப்புகளுக்கு இடையில் நமக்குப் பல எச்சரிக்கைகள் உள்ளன. ஊடக உரிமைகளுக்கு அப்பால் இந்திய அணிக்கான அனைத்து ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களும் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் சொத்துகள் சிலவற்றின் மதிப்பீடு 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. அணிக்கான சாதனங்கள், ஜெர்சி மற்றும் தொடருக்கான தலைப்பு ஸ்பான்சர்ஷிப்கள் என்று பிசிசிஐயின் ஸ்பான்சர்ஷிப்களிலிருந்து பழைய பார்ட்னர்கள் வெளியேறி இருக்கிறார்கள். குறுகிய கால புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணியின் ஜெர்சிக்கு மூன்று ஸ்பான்சர்கள் இருந்துள்ளனர். ஓப்போ நிறுவனம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிசிசிஐ உடனான ஐந்தாண்டு ஒப்பந்தத்திற்காக 1,079 கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தது. அந்த ஏற்பாட்டில் இருந்து 2019ஆம் ஆண்டு அந்த நிறுவனம் விலகிக் கொண்டது. அதே விதிமுறைகளின் கீழ் கல்வி-தொழில்நுட்ப நிறுவனமான பைஜுஸ் நிறுவனம் உரிமை பெற்றது. ஆரம்பத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தைப் புதுப்பித்த பைஜுஸ் கூடுதலாக பதினெட்டு மாதங்களுக்கு அந்த ஒப்பந்தத்தை 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீட்டித்துக் கொண்டது. ஆனால் அந்த நிறுவனம் ஆறு மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டது. தன்னை ஒப்பந்தத்திலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து ஜெர்சிக்கான புதிய ஸ்பான்சரை தேடத் தொடங்கிய பிசிசிஐ 2017ஆம் ஆண்டில் ஓப்போ நிறுவனம் வென்ற ஏலத்தொகையிலிருந்து நாற்பது சதவிகிதம் தள்ளுபடி செய்து அடிப்படை விலையை 358 கோடி ரூபாய் என்று நிர்ணயித்தது. ஓப்போ நிறுவனம் ஒரு போட்டிக்கு ரூ.4.61 கோடி செலுத்த உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் ஏலத்தில் பங்கெடுத்த இருவரில் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ஜெர்சி ஸ்பான்சராக உருவெடுத்த இந்தியாவின் மிகப்பெரிய ஃபேன்டஸி கேமிங் தளமான ட்ரீம்11 நிறுவனம் பிசிசிஐயின் அடிப்படை விலைக்கு ஒப்புக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அதாவது ட்ரீம்11 இந்தியா பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று கோடி ரூபாய் அளிக்கும்.
அதிகாரப்பூர்வமான சாதனங்கள் மற்றும் வணிக ஸ்பான்சர்களிலும் அதாவது அனைத்து விதமான இந்திய அணி ஜெர்சிகளையும் வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. இரண்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் மூன்று மாற்றங்களைக் கண்டுள்ளதாக சிக்னல் ஸ்போர்ட்ஸ் பிசினஸ் செய்திமடலான பிளேபுக் விரிவாகப் பதிவு செய்துள்ளது. சாதனங்களுக்கான பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக 2006ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த நைக் நிறுவனம் தன்னுடைய வருடாந்திர 370 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை 2020ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. எந்தவிதத்திலும் ஸ்போர்ட்ஸ் ஆடைகளுடன் அதுவரையிலும் தொடர்பிலே இல்லாத எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ மூன்றாண்டுக்கான ஒப்பந்தத்தில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு கில்லர் ஜீன்ஸ் தயாரிப்பாளரான கேவல் கிரண் க்ளோதிங் லிமிட்டெட் என்ற நிறுவனம் ஐந்து மாத கால ஒப்பந்தத்திற்குள் நுழைந்தது. அவர்களுடைய லோகோவை அணிந்து இந்திய அணி இரண்டு போட்டிகளை விளையாடிய பிறகே அந்த நிறுவனம் அதற்கான ஊடக அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் புதிய லோகோ முதன்முதலாக இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் ட்விட்டர் ஊட்டத்தில் தோன்றியது. 2023ஆம் ஆண்டு மே மாதம் ஜெய்ஷா தனது ட்விட்டர் கைப்பிடியில் சாதனங்களுக்கான பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சார் மற்றும் வணிக ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் கையொப்பமிட்டுள்ளதாக அறிவித்தார். 2028ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். புள்ளிவிவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அடிடாஸ் நிறுவனம் ஒரு போட்டிக்கு எழுபத்தைந்து லட்சம் ரூபாய் செலுத்தும் என்று எகனாமிக் டைம்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த தொகை நைக் ஒரு போட்டிக்குச் செலுத்திய எண்பத்தியெட்டு லட்சம் என்ற தொகையைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.
பிசிசிஐயின் நீண்டகால ஸ்பான்சர்களில் மற்றொருவரான பே டிஎம் இந்தியாவின் உள்நாட்டுத் தொடர்களின் தலைப்பிற்கான உரிமையைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு போட்டிக்கு 2.4 கோடி ரூபாய் என்றும், அதற்குப் பின்னர் 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு போட்டிக்கு 3.8 கோடி ரூபாய் என்றும் தொடர்ச்சியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவடைவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே அந்த நிறுவனமும் வெளியேறியது. தொடரின் தலைப்பிற்கான உரிமைகள் 2022 செப்டம்பர் மற்றும் 2023 மார்ச் மாதத்திற்கு இடையில் மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் தொடரின் தலைப்பிற்கான புதிய ஸ்பான்சரை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புக்கொண்டிருந்த தொகையான ஒரு போட்டிக்கு 2.4 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் பிசிசிஐ தேடத் தொடங்கியது. ஆண்கள், பெண்கள் சர்வதேச போட்டிகளுக்கும், உள்நாட்டு மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டுக்கும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தை தலைப்பிற்கான புதிய ஸ்பான்சராக ஆகஸ்ட் இருபத்தைந்தாம் நாள் பிசிசிஐ அறிவித்தது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் வெளியான செய்திகளில் ஒரு சர்வதேசப் போட்டிக்கு 4.2 கோடி ரூபாய் முதல் 6.6 கோடி ரூபாய் வரை கட்டணம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பண-மிகுந்த கல்வி மற்றும் ஃபின்-டெக் ஸ்டார்ட்-அப்கள் தங்கள் முதலீட்டு உத்திகளை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ள மாறிவரும் பொருளாதார நிலைமையின் ஒரு பகுதியாகவே இதுபோன்ற ஏற்ற இறக்கமான ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனாலும் பிசிசிஐ இவ்வாறு அடிப்படை விலைகளைக் குறைப்பது, ஸ்பான்சர்ஷிப் பொறுப்புகளை மாற்றித் தருவது போன்றவை இந்திய சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான மதிப்பாகச் சந்தை கருதுவது, இந்திய கிரிக்கெட்டிற்கு நிதியை வழங்கத் தயாராக உள்ள வேறு வகையான ஸ்பான்சர்கள் இருப்பதைச் சரிசெய்து கொள்வது என்று வேறு இரண்டு காரணிகளையும் குறிக்கிறது. எம்பிஎல் ஸ்போர்ட்ஸ், ட்ரீம்11 ஆகிய இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்கள் என்ற புதிய வகையான போட்டி கிரிக்கெட் பண முதலாளிகள் இரண்டைக் காண முடிகிறது. விளையாட்டு மற்றும் ஆன்லைன் கேமிங்கில் இருபத்தியெட்டு சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது குறித்த அரசின் சமீபத்திய அறிவிப்பு அவர்களுடைய லாபத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலைமையும் உள்ளது. ஆக பளபளக்கும் புதிய ஒப்பந்தங்கள் நிச்சயமற்ற பாதைகளில் திடீர்திடீரென நடந்தேறி வருகின்றன.
‘பிசிசிஐ தன்னுடைய வரலாற்றில் மிகவும் மோசமான ஊழலுக்கு மிக அருகில் இப்போது இருப்பதாகவே எனது உள்ளுணர்வு கூறுகிறது’ என்று கூறிய பிசிசிஐ அதிகாரி மாநில டி20 லீக்குகளில் நடைபெறும் ஊழல்கள், பிசிசிஐயுடன் இணைந்து கூட்டாண்மையில் நடத்தப்படும் ஃபேண்டசி கிரிக்கெட் போன்ற சிக்கல்களையே குறிப்பிடுகிறார். ஐபிஎல் ஊழல் முறைகேடு போல் இந்திய கிரிக்கெட்டின் பிம்பத்தை மீண்டும் ஒருமுறை சரி செய்து கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இவை மாறக்கூடும். ஆனால் பிசிசிஐ தேசிய அணி மீது கவனத்தைச் செலுத்துவதற்கு முன்பாக தொடர்ந்து ஐபிஎல்லை நடத்தி கடந்த காலத்து மோசமான நிலைமையைத் தொடர்ந்து வருகிறது. இன்று வெளியே பளபளத்துக் கொண்டிருந்தாலும், அந்தப் பளபளப்பிற்குக் கீழே அரசியல், பணம், அதிகாரம், அணுகல், சுரண்டல் போன்றவற்றால் இந்திய கிரிக்கெட்டிற்கு அதிக அளவில் சீர்குலைவே ஏற்பட்டிருக்கிறது.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக விளையாட்டுத் துறை பத்திரிகையாளராக இருந்து வரும் சார்தா உக்ரா தி ஹிந்து, இந்தியா டுடே, ஈஎஸ்பிஎன் மற்றும் மிட்-டே ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.
https://caravanmagazine.in/sports/bjp-bcci-jay-shah
சார்தா உக்ரா
தமிழில்: தா.சந்திரகுரு
நன்றி: கேரவான் இதழ்
2023 செப்டம்பர் 01
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.