சிறுகதை: ஜீவகாருண்யம் – ஜனநேசன்அந்த பிரபல காட்சி ஊடக முதன்மை ஆசிரியர் தனக்கு வந்த கடிதத்தை வாசித்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் உற்றார். துணைஆசிரியரிடம் அக்கடிதம் குறித்து விவாதித்து அந்தக் கடிததாரர் அந்த விலாசத்தில் உள்ளாரா ? அவரின் உண்மைத்தன்மையை அறிய அந்தப்பகுதி செய்தியாளரை  பணித்தார் .ஒருமணி நேரத்தில் தகவல் வந்தது.

இக்கடிதம் வந்த காலச்சூழலின் முக்கியத்துவம் கருதி துணை ஆசிரியரையே அனுப்ப முடிவானது. துணை ஆசிரியர் மறுக்க இயலாமல் தயக்கம் தொனிக்க  முறுவலித்தார். ஆசிரியர் புரிந்து கொண்டு ” அன்பானந்தம் ” என்ற பெயருள்ள  நீங்கள் இந்த கொடூர செய்தி சேகரிப்பது முரண்பாடாக இருக்குமுன்னு தானே யோசிக்கிறீர் ?  அது பற்றி கவலை வேண்டாம். உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடித நகல் நமக்கு அனுப்பப் பட்டுள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது. விளம்பரத்துக்காகவே சிலர் இப்படிச் செய்கிறார்கள். இதை விசாரிக்க நீங்களே பொருத்தமானவர் என்பதாலே அனுப்புகிறேன். அனைத்தையும் காணொலி செய்து வாருங்கள் .“

அந்த சிறுநகரத்தின் மைய்யமான வீதியை ஒட்டியுள்ள சந்தில் அந்த ‘வீடு இருந்தது . “கருணையகம் “ என்ற பெயரிட்டிருந்தது. வீட்டின் முற்றத்தில் புத்தர், திருவள்ளுவர், இயேசு , ராமலிங்கவள்ளலார் , காந்தி, மார்க்ஸ், பாரதி ஆகியோரின் படங்கள் அலங்கரித்தன.           இரா.விவேகானந்தன், செயல்அலுவலர் ஓய்வு, இந்துஅறநிலையத்துறை என்று மங்கிய பெயர் வில்லை சுவற்றில் பொருத்தப் பட்டிருந்தது. செய்தியாளரின் புருவம் உயர்ந்து பின் கேள்வியோடு நெளிந்தது. அந்தக் கடிதத்தின் செய்திக்கு, முரண்பட்ட சூழலாக இருக்கிறது . சற்று கவனமாக ஆழமாக கேள்வி கேட்டு திக்குமுக்காடச் செய்யாமல் எளிமையான கேள்விகளைக் கேட்டே அவரின் உள்ளப் போக்கைத் தெரிந்து கொள்ள முயலுவோம். தேவைப்பட்டால் சிக்கலான கேள்விகளைக் கேட்டு பதிலைக் கறக்கலாம் என்று முடிவெடுத்தார்.

செய்தியாளர்  உள்வீட்டின் அழைப்புமணியை அழுத்தும் முன்னே முற்றத்தில் அசைந்த நிழலுணர்ந்து விவேகானந்தன் வெளியே. வந்தார். யார் நீங்கள் என்று அவர் கேட்கும்முன்னே முகத்தில்  எழுந்த ஐயமுணர்ந்து இவரே தன்னையும் ஒளிப்பதிவாளரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார் . வாருங்கள் என்றவர் கையிலிருந்த காசோலைஏட்டை மேஜையில் வைத்துவிட்டு மனைவியை அழைத்து தண்ணீரும் காபியும் கொண்டுவரச் சொல்லி உள்நோக்கி குரல் கொடுத்தார்.   இவர்  அறையை காமிராகண்ணோடு நோட்டம் விட்டார். மேஜையில் இடப்புறம் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றும், ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  வலப்புறம் திருவருட்பாவும் , சத்தியசோதனையும், பாரதியார் பாடல்கள் புத்தகம் ஒன்றும் கனப்பரிமானத்துக்கு தக்க அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜையின் மத்திய பகுதியில் வைக்கப்பட்ட காசோலைத்தாளில்  வள்ளலார் அறப்பணி நிலையம், ரூபாய் 5000/ என்று எழுதப்பட்டிருந்தது. மின்விசிறி ஜதிக்கு காசோலைத்தாள் கால்தூக்கி ஆடியது. மேஜையின் இடப்புறம் தொலைக்காட்சிபெட்டி மௌனித்து இருந்தது.                        

வலப்புறம் அலமாரி போலிருந்த சிறுபூஜைஅறையில் புத்தர்,வள்ளலார் , காந்தி சிற்பங்கள் இருந்தன. அவற்றின் முன் இருஅகல்விளக்குகள் சுடர்ந்து அலைந்து அலைந்து புத்தர்,வள்ளலார் ,காந்தியின் மொழிகளை மௌனமாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன . அந்த சூழலுக்கேற்ப விவேகானந்தன்  தாடியோடோ திருநீர்ப்பட்டையோடோ இல்லை. மழித்த முகமும் சுடரும் கண்களும் திடத்தேகமுமாகவே இருந்தார். நெற்றியில் மெல்லிய சந்தனக்கீற்று பொட்டு மாதிரி இல்லாமல். நிலாப்பிறையாக மிளிர்ந்தது. அவரைப் பார்த்ததும்  வணங்கத் தோன்றியது. கனிந்த உள்ளம் கொண்டவராகத் தோன்றும் இவர் எப்படி இந்த குரூரச் செயலுக்கு வெளிப்படையாகத் துணிந்தார். இவருக்கு ஆச்சரியமாகவும் நம்ப இயலாததாகவும் இருந்தது.

இவர் அன்பானந்தம் என்று தனது பெயரைப் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் .“ரொம்ப மகிழ்ச்சி .என்னை நீங்க நல்லா புரிஞ்சுக்குவீங்க . நல்லது.  நீங்க உங்க பாணியில் கேளுங்க.  கடிதம் எழுதிய நோக்கத்தை நான் சொல்லுறேன்.”

“உங்கள் கடிதத்தில் உள்ள விஷயத்திற்கும் , இந்த வீட்டின். சூழல் , உங்கள் தோற்றம் எல்லாம் முற்றிலும் முரண்பட்டுத் தோன்றுகிறதே. அறநிலையத்துறையில் கோயில்செயல்அலுவலராக பணியாற்றி  வள்ளலார் ,காந்தி பக்தராக இருக்கும் நீங்கள் இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது. சரி , அந்த கேள்விக்கு போவதற்கு முன் ஒருகேள்வி. உங்கள் குடும்பம் குறித்து தெரிந்து கொள்ளலாமா? “

“எங்கப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். சுதந்திரம் அடைந்தபின் அவரது வயசும் படிப்பும் பார்த்து அவருக்கு வருவாய்த் துறையில் வேலை கொடுத்தார்களாம். அவர் வேலை பார்த்ததால் தியாகி பென்ஷனுக்கோ , இலவச வீட்டடிமனைக்கோ விண்ணப்பிக்க மறுத்து விட்டார். அவ ர் 1970ல் இறந்தார்.  அப்பாவழி ஆதரவு இழந்த நிலையில் கஷ்டப்பட்டு படித்து அரசுப்  பணிக்காகத் தேர்வெழுதினேன். எனக்கு அறநிலையத் துறையில் வேலை கிடைத்தது. என் சுபாவத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஒத்துப் போகவில்லை. வருஷம் தவறினாலும் இடப்பெயர்வு தப்புவதில்லை. முக்கியமில்லா கோவில் களுக்கே அனுப்பப் பட்டேன் . பணியாற்றும்  கோயில்களின் சிறப்பை வெளிக் கொணர்வேன். நானும் குடும்பத்துக்காக இரு பிள்ளைகளுக்காக சளைக்காமல் அலைந்தேன். முப்பதுவருஷம் பணிமுடிந்த பின் ஓய்வுபெற மூன்றுவருஷம் இருக்கையிலே விருப்பஓய்வில் வந்து விட்டேன். இங்கே அன்பை வளர்க்கும் ஆன்மீகப் பணி செஞ்சுகிட்டு இருக்கிறேன். எங்களுக்கு ஒருஆண் ,ஒருபெண் என்று இருபிள்ளைகள். இருவரும் வங்கிப் பணிகளில் இருக்கிறார்கள். கல்யாணமாகி அவரவர் குடும்பத்தோடு தனியே இருக்கிறார்கள். நானும் மனைவியும் இதே வீட்டில் இருந்து பொதுச்சேவைககளில் ஈடுபடுகிறோம்.”

“இப்படிஅமைதியான வாழ்க்கைச்சூழல் அமைந்த நீங்கள் ஏன்  தூக்குதண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் பணிகளை  செய்ய விருப்பம் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், எங்கள் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் கடிதம் எழுதினீங்க…?.!..”

“வாழ்க்கை ஓட்டம் அமைதியாகத் தோன்றலாம். ஆனால், அடியோட்டம் குமுறலும் கொந்தளிப்புமாக இருக்கின்றது. இன்னைக்கு செய்தித்தாளை புரட்டினால் பக்கத்துக்குப் பக்கம் வன்முறையும் பாலியல் வன்புணர்ச்சி கொலையும் , கொள்ளையும் ,வழக்குமன்றங் களில் இழுத்தடிப்பும் கண்டனமுமாக அரசியல் திசை திருப்பல்களுமாக இருக்கின்றன.நீதி கிடைக்குமா என்ற  ஏக்கமும் ,பழிவாங்கல் கொலைகளும் , அரசு சட்டரீதியாக குற்றவாளிகளை  விசாரித்து தண்டனை பெற்றுத் தராமால் ,விசாரணை இன்றி சுட்டுக் கொள்வதும் ; அதனைத் தீரச் செயல்போல் மௌனமாக அங்கீகரிப்பதும்  மக்களின் மனங்களை மயக்கி, நீதியின் மீதான  நம்பிக்கையை  மழுங்கச் செய்கின்றன. நீதிக்கான தடங்கல் குறைஞ்சு நீதிபரிபாலனத்தில் நம்பிக்கை ஏற்பட்டால் ஒழிய பொதுச்சமூகத்தின் மனசுக்கு நிம்மதி இல்லை. இந்த சூழலை மாற்ற அரசு தாமதிக்கும்போது சாத்தியமானது செய்ய தனிமனித முயற்சி தேவைப்படுகிறது.                                                           

உங்களுக்கு தெரியாததில்லை. தூக்கு தண்டனை வழங்கப்பட்ட எத்தனை வழக்குகள் நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப் படுகின்றன.? அரசியல் மற்றும் சமூகப்பின்னணி உள்ளவர்களின் வழக்குகள் நீதி வழங்கப்படாமலே நிர்வாகக் காரணங்கள் , சட்டஜாலங்களால் திசையற்று திகையாமல் கிடக்கின்றன. வழக்குகளை நடத்தத் தேவையான நீதிபதிகள் இல்லை .தூக்குதண்டனை நிறைவேற்ற ஆள் இல்லை என்பது ஒரு சாக்கா… ? இதற்கு யார் காரணம்…? இதில் உடைப்பை ஏற்படுத்த என்னைப் போன்று மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் குரல்கொடுக்கவும் இதற்காக உழைப்பினைச் செலுத்தவும் தயாராகிறோம்.  தயவுசெய்து இதைத் தனிநபர் பிரபல்யத்துக்காக என்று கொச்சைப்படுத்த வேண்டாம்! உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிடப்பில் போடப் படாமல் தடுக்கவே உங்களைப் போன்ற ஊடகங்களுக்குஅனுப்பினேன் !”

“அய்யா , ஒருசந்தேகம். நீங்கள் மதிக்கும் தலைவர்கள் எல்லாம் உயிர்கொலையை, உயிர்வாதையை எதிர்த்தவர்கள்.புத்தர் , வள்ளலார் , காந்தியை வணங்கும் நீங்கள் தூக்குதண்டனையை நிறைவேற்ற வாய்ப்பு கேட்கலாமா ?”

“உயிர்பலியை மறுத்த புத்தர், இறந்த விலங்குகளை உண்பதைத் தடுக்கவில்லை. உண்ணுவதற்காகவும் ,யாகங்களின் பொருட்டும் விலங்குகள் கொல்லப் படுவதைத் தான் தவறென்றார். தவறை திருத்துவதை அவர் தலையிடவில்லை. இதேபோல கருணாமூர்த்தியாக நம்முன் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தி, உயிர்வாதையை சகிக்க முடியாமல் நோயுற்ற பசுவை சுட்டுக்கொல்லலாம் என்றார். நோய் உருவாக்கும் விஷக்கிருமிகளை அழிக்க அவர் தடை சொல்லவில்லை. சகமனிதரின்பால் தீராவெறுப்பு என்னும் கொலை நோயுற்ற குற்றவாளி களைக் கொல்வதால் இது போன்று குற்றவாளிகள் இனி உருவாகாமல் தடுக்கலாம். இதற்க்காகவாது இந்தக் குற்றவாளிகள் தாமதமின்றி தூக்கிலிடப்பட வேண்டும் அல்லவா…? தூக்கிலிட ஆளில்லை என்று மேலும் தாமதமாகக் கூடாது . நீதியின் கைகளும் கட்டப்படக் கூடாது என்பதற்காகவே ஜீவகாருண்யத்தைப் பேணும் நான் நிற்பயா  பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவோனாக பணியாற்ற அனுமதிக்க  கேட்டு எழுதினேன்.                                

இது நல்ல  பயிரைக் காக்க முள்புதரை நீக்கும் விவசாயியின் முயற்சியே. உரிய தோட்டக்காரன் கண்டும் காணாமல் இருந்தால் அக்கம் பக்கத்தார் தம் தோட்டத்திற்குள் முள்புதர் பரவாதிருக்கச் செய்ய வேண்டிய முயற்சிதான்.  இதில் சுயவிளம்பரம் இல்லை. என்னைப் பொருத்தவரை எங்களது பிள்ளைகள் தமக்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர் .. நான் வெறுமனாக அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று சொல்லிக் கொண்டு வழியில் கிடக்கும் முள்ளை அகற்றாமல் ஆருயிர்க்கெல்லாம் எப்படி அன்பு செய்யமுடியும் ?                            தூக்கிலிடுவதால் மட்டும் நாட்டில் வன்முறை வக்கிர செயல்கள் குறைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு வந்துருமா? என்று நீங்க கேட்கலாம்.

இது ஒரு வழி. ஆனா இந்த வக்கிரங்களை முடிவுக்கு கொண்டு வரணுமுன்னா இதன் தொடர்ச்சியாக சகமனிதரை மதிக்கும் வகையிலான பாலியல்கல்வி போதிக்கப்பட்டால் பாலுணர்வின்பால் முறையற்ற ஈர்ப்பும் கவர்ச்சியும் குறையுமல்லவா…? ஆண் பெண் உடலியல்கூறுகளும் இயங்கும் தன்மைகளும் அறிந்தால் வீண்கற்பனையான கற்பிதங்களுக்கும் இடமில்லை அல்லவா? உடலிச்சையைவிட மனிதருக்கு இடையில் நிலவும் உண்மையான நேயமே முக்கியம் என்ற உணர்வு மனதில் பதியுமல்லவா? இதை நோக்கி நம்நாட்டை நகர்த்த வேண்டும்! இந்த சிந்தனை பொதுவெளி யில் விவாதிப்பதற்கு இதுவே பொருத்தமான தருணம்! இத்தகு நடவடிக்கைகளே  நிர்பயாக்கள் உருவாவதைத் தடுக்கும்! காந்தி சொன்னது போல் நள்ளிரவிலும் பெண்கள் அச்சமின்றி நடமாட முதல்கட்ட நகர்வாகும்.!“

ஒளிப்பதிவாளர்  அறையிலுள்ள படங்களையும் சூழலையும் , காசோலையின் ஆடலையும் அகல்விளக்குகளின் அசைவுகளையும் விவேகானந்தனின் உணர்வோட்டமான உரையாடலையும் காணொலியில் பதிவுசெய்தபடி இருந்தார். இந்தக்  காணொலி நேர்காணல்  அனைத்து  இந்திய மின்னூடகங்களிலும் நேரலை  செய்யப்பட்டு விவாதப்பொருளாக மாறியது. கல்வியலாளர்களும் , முன்னாள் நீதிபதிகளும் பங்கேற்று பரிமாறிய கருத்துகள் மத்திய உள்துறையை  உசுப்பியது.