ஜீவாவும் நானும் – தா. பாண்டியன் | நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ் , தேனி

ஜீவாவும் நானும் – தா. பாண்டியன் | நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ் , தேனி

நூலாசிரியர் தா. பாண்டியன் நாடறிந்த மார்க்சியவாதி. அவருக்கு நெருக்கமான தலைவராகவும் தோழராகவும் விளங்கிய தோழர் ப. ஜீவானந்தம் பற்றி எழுதிய சம்பவங்கள் வரலாகிறது. இது வரலாற்று ஆவணம் என்றால் மிகையாகாது.
வரலாறு எழுதவேண்டிய அளவிற்கு ஜீவா அவ்வளவு முக்கியமான நபரா என்றால் ஆம் என்றுதான் சொல்வோம் இந்நூலைப்படித்தபின்.
கன்யாகுமரியில் உள்ள பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்து பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஒருவர், இந்நூலில் அவருடைய தாய்தந்தை பெயர் கூட குறிப்பிடப்படவில்லை, அப்படியொரு ஏழ்மை நிறைந்த பின்புலத்தில் இருந்து வந்து, முறையான பள்ளிப்படிப்பற்ற ஒருவர். முப்பது ஆண்டுகாலம் தமிழக மக்களை தன் நாவன்மையால் கட்டிப்போட்ட ஒருவர், எந்தவித முதலீடில்லாமல், சிராவயலில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்காகவும் ஒரு பள்ளியியை நடத்திய ஒருவர், நாடே காந்தியடிகளின் பின்னால் ஒன்று திரண்டு நின்ற நாட்களில் அத்தைகய மாபெரும் மனிதர் சென்று பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நின்ற ஒரு மனிதர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் புறம்போக்கு நிலத்தில் குடிசையில் வழ்ந்து மறைந்த ஒருவர், தமிழகம் முழுக்க பாரதியின் பெருமைகளை அறியவைத்த ஒருவர், எந்தப்பதவியும் இல்லாமல், குடியிருக்க ஒரு குடிசையை மட்டுமே சொந்தமாகக்கொண்டிருந்த அந்த ஒருவர் இறக்கும்போது லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவரை வழியனுப்பிவைத்தால், அவர் ஒரு வரலாற்றைப படைத்தவர்தானே, அப்படிப்பட்ட ஜீவா என்று தமிழகமக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களையே  தமது அற்புதமான எழுத்தில் அருமையாகக்கொடுத்துள்ளார் தோழர் தா. பாண்டியன்.
1963 ல் ஜீவா இறக்கிறார். ஜீவாவின் மூத்தமகள் உஷாவின் திருமணம் பெரியாரின் ஏற்பாட்டில் (மாப்பிள்ளை பார்த்தது, திருமணச்செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டது என எல்லாம்) நடந்தது, திருமண விழாவிற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சரான அண்ணாவும் சென்றிருந்தார். அப்போது அந்த மணவிழாவில் பேசிய அண்ணா “நான் பெரியாருக்கு ஒரு கனி கொண்டுவந்துள்ளேன், சீர்திருத்தமுறை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் ஆகும் என்ற சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று வந்துள்ளேன் “எனக்கூறினார். தம் வாழ்நாள் முழுதும் சீர்திருத்தத்திற்காக பெரியாரோடு இணைந்து போராடியவர் மகளின் திருமணம்  தமிழ்நாட்டில் முதன்முதலில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட சீர்திருத்த திருமணம் ஆக நடந்தது. எவ்வளவு பொருத்தமானது.
தமிழ் தமிழர் என்ற கொள்கைகளோடு வளர்ந்தெழுந்த தி. மு. க. பற்றி ஒரு சிலர் ஜீவாவிடம் உங்கள் கட்சியும் அதேமாதிரி விஷயங்களை முன்னெடுக்கலாமே என்று கேட்டதற்கு நாங்கள் சர்வலோகவாதிகள், எங்களுக்கு அப்படிப்பட்ட குறுகிய பார்வை தேவையில்லை என்று கூறியவர் மேடைக்கு மேடை யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பழந்தமிழரின் பெருமையைப்பற்றிப் பேசுபவர்கள் அதை மறந்து போய் இனம் மொழி என்று தங்களை குறுக்கிக்கொள்வது எந்தவகை நியாயம் என்றார்.
  ஒரு சமயம் குமாரசாமிராஜாவுடன் ஜீவா பேசிகொண்டுள்ளபோது ராஜா, “இந்தியாவின் சுதந்திரத்திற்கு நாம எல்லாம் ஒன்னு சேர்ந்துதான் போராடிக்கொண்டிருந்தோம், ஒன்னாதான் ஜெயில்ல இருந்தோம், இப்ப சுதந்திரம் கிடைத்தப் பிறகு நம்மால முடிஞ்சமட்டும் பள்ளிக்கூடம் கட்டியிருக்கோம், ரோடு போட்ருக்கோம், அணைகட்டி இருக்கோம், தொழிற்சாலைகள் இப்பதான் படிப்படியாய் பெருகுது, இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறணும், நீங்க ஒரே நாள்ல புரட்சின்னு சொல்றீங்க, எதற்காக புரட்சி, எங்க நேருவே உங்கள் கொள்கைகளைத்தானே நிறைவேற்றியிருக்கிறார் என்று எங்கள் கட்சியிலே பேசிக்கிறாங்க, ஆனா, நீங்க நேருவை எதிர்க்கிறீங்க, ஏன் ஜீவா ஆவியை கெடுத்துகிறீங்க “என்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒருவர் பேசியதற்கு, ஜீவா அளித்த பதில், “நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா இவ்வளவுக்கும் பிறகு ஏழைகள் இருக்கத்தானே செய்றாங்க, அந்த ஏழைகளுக்காக இந்த ஏழைக்கட்சி இருந்தே ஆகணும், அந்த ஏழைகளின் விடுதலையை பார்க்காமல் எனக்கும் விடிவு இல்லை. பேசவேண்டியதுதான் சாகவேண்டியதுதான் “என்று கூறியதை படிக்கும்போது அந்த ஒப்பற்ற ஏழைபங்காளனை நினைத்து நம் மனம் ஒரு நிமிடம் கலங்கத்தான் செய்கிறது.
காரைக்குடி கம்பன் விழாவில் பலபேர் திரு சா. கணேசனிடம் அந்த விழாவிற்கு ஜீவாவை அழையுங்கள் என்று வற்புறுத்தியதால், வேறுவழியின்றி கம்பன் விழாவில் ஒரு கம்யூனிஸ்ட் வந்து என்ன பேசப்போகிறார் என்று வேண்டாவெறுப்பாக ஜீவாவை அழைக்கிறார் ஜீவா பேச வேண்டிய நேரம் மேடைத்தலைமை பெரும்புலவர் சரவண முதலியார், ஜீவாவிடம் தங்களின் பேச்சு நேரம் 45மணித்துளிகள் என்று நினைவு படுத்தி பேச அனுமதிக்கிறார். கம்பன் விழா வரலாற்றில்முதன்முறையாக  குறிப்பிட்ட நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டேயிருந்தவர் ஜீவா மட்டுமே. தலைவரும் மணியடிக்காமல் விட்டு விட்டார். அதற்குப்பின்னான கம்பன் விழா ஜீவா இன்றி நடக்கவில்லை. அந்த அளவுக்கு பேச்சுத்திறன் வாய்ந்தவர் ஜீவா.
இந்தக்கட்டுரையில் மறைந்த பெரியவர் குன்றக்குடி அடிகளார் பற்றி ஒரு குறிப்பு தருகிறார். ஒரு சமயம் காரைக்குடி பள்ளி ஒன்றில் ஒரு விழா. தலைமை அடிகளார். அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது அடிகளார் சைக்கிளில் வந்து சேருகிறார், காரணம் கார ரிப்பேர். நேரத்திற்குள் செல்லவேண்டும் என்ற நோக்கில் அடிகளார் சைக்கிளில் வந்துள்ளார், ஏன் இப்படி? என்று கேட்டதற்கு மடாதிபதிகளுக்கும் கையும் காலும் உண்டுதானே, அதை உபயோகப்படுத்தத்தான் கடவுள் அந்த உறுப்புகளை கொடுத்துள்ளார் என்று பதிலளித்துள்ளார். எளிமையான மனம் படைத்தவர் அடிகளார்.
அடிகளார் மடத்திற்கு இவர்களை அழைத்துள்ளார். மடத்து நூல்நிலையத்தை பார்வையிட்டுள்ளார்கள். அங்கே மார்க்சிய நூல்களும் இருந்துள்ளதை நினைத்து வியப்படைகிறார். மக்களும் அடிகளாரை காவியுடையில் ஒரு கம்யூனிஸ்ட் என்றே அழைத்தனர். இந்தியாவில் வேறு எந்த மபாதிபதியும் பெரிய அடிகளாரைபோல் மக்கள் நலத்திட்டங்கள் ஆற்றியவர் யாருமில்லை.
கம்யூனிஸ்ட் தோழர்கள் கைமுஸ்டியை காட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வார்கள், அதற்குப்பின்னாலும் ஒரு கதையுண்டு. ஜெர்மனியில் ஹிட்லர் வளர்ந்துவரும் சமயத்தில் அவருக்கு இணையாக எர்னஸ்ட் தால்மன் என்ற ஒரு தோழர், மேடைகளில் அருமையாக பேசுவார். ஹிட்லருக்கு கூடும் கூட்டம்போல் இவருக்கு கூட்டம் பெருகத்தொடங்கியது கண்ட ஜெர்மனி கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து தால்மன் னின் பேச்சுகளையோ, கூட்டங்களைப்பற்றியோ வெளியிடாமல் இருந்தன ஊடகங்கள். ஊடகங்களின் முழுமையான ஆதரவு ஹிட்லருக்கே கிடைத்தது. அப்படியிருந்த ஒரு சமயம் தால்மன் ஒரு கூட்டத்தில் கைமுஸ்டியைக் காண்பித்து ஒரு ஆட்டு ஆட்டி சவால் விடுத்தாராம், அப்போதிருந்து தோழர்களுக்கு அது தங்களுடைய உறுதியைக்காட்டும் ஒரு அடையாளமாக மாறிப்போனது.
இதே போன்று நிறைய செய்திகளை கொண்டுள்ளது இந்நூல். தமிழகத்தின் வெளியில் தெரியாத ஒரு வரலாறாகத்தான் இந்நூல் உள்ளது.
ஜீவா ஒரு ஒப்பற்ற மக்கள் தலைவன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நூல் =ஜீவாவும் நானும் 
ஆசிரியர் =தா. பாண்டியன் 
பதிப்பு =NCBH 
விலை =ரூ. 195/
அன்புடன் – பெ. அந்தோணிராஜ் 
தேனி
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *