ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx) – நூல் அறிமுகம்
காரல் மார்க்ஸ் எனக்கு அறிமுகமான பின்பு என்னுடைய தேடல் முழுவதும் ஜென்னியை பற்றியதாகவே இருந்தது. காரல் மார்க்ஸ்-ஜென்னி இருவரின் காதல் கதையை வாசிக்க நீண்ட நாள் ஆசையாக இருந்தது .அது இன்று நிறைவேறியது மகிழ்ச்சி.
ஒரு புத்தகம் சிரிப்பு ,ஆவேசம், போராட்ட உணர்வு, காதல் மற்றும் அழுகை என அனைத்தையும் கொண்டு வர முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். இந்த புத்தகத்தை படித்து மேற்கண்ட அனைத்து உணர்ச்சிகளையும் நான் அனுபவித்தேன்.
மார்க்ஸ்-ஜென்னி குடும்பம் ஒரு நல்ல நட்பு உறவில் இருந்து வந்துள்ளது. ஜென்னியின் அழகு ,அமைதியான பண்பு, சிறந்த கல்வி அறிவு இவை அனைத்தும் காரல் மார்க்சால் ஈர்க்கப்பட்டு இருவருக்கும் காதல் மலர்ந்தது.
மார்க்சை விட ஜென்னி நான்கு வயது மூத்தவள்.ஆயினும் வயது அவர்களின் காதலுக்கு ஒரு தடையாக இல்லை.
மாறாக பிரபு வம்சத்தை சேர்ந்த ஜென்னிக்கும் சாதாரண வழக்கறிஞர் குடும்பமாக மார்க்ஸ் உம் திருமணம் நடக்குமா?என்பதுதான் கேள்வியாக இருந்தது.
பள்ளி படிப்பை முடித்த காரல் மார்க்ஸ் சட்டப்படிப்பு படிக்க விரும்பி டிரியர் நகருக்கு பிரயாணம் ஆகிறார். அங்கே வரலாறு, இலக்கியம், தத்துவம், சட்டம், கலை என பல மொழிகளை கற்று புலமைப் பெறுகிறார்.
இதற்கு இடையில் ஜென்னியுடன் கடிதத் தொடர்பில் காதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன் காதலனை இவ்வளவு உருக்கமாக காதலிக்க முடியுமா? ஜென்னி எழுதுகிறாள்…..
என் அன்பிற்குரிய ஒரே ஒருவனே…. காரல் வழக்கத்தை விட அதிக நாட்கள் நான் கடிதம் எழுதாமல் இருந்துவிட்டேன் என்பதால் மட்டும் சந்தேகம் தெரிவித்து கடிதம் எழுதலாமா? காரல்….. உன்னுடைய இன்றைய கவர்ச்சி மிக்க வாலிபக் காதலை நினைவிலேயே கொள்ள தகுமளவுக்கு சக்தி படைத்தவன் அல்ல நான். உன்னுடைய அழகான வருடலும் அமைதியான காதலும் அதைக் குறித்து விவரிக்க முடியாத அளவுக்கு அழகான விவரிக்கும் உன்னுடைய கற்பனையில் இருந்து தோன்றக்கூடிய ஆகர்ஷிக்கத்தக்க படைப்பாக்கமும் வேறு எந்த பெண்ணையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
உன் மனதில் நான் இருக்கிறேனா என்பதே தெரியாமல் நான் இப்படி உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். உன் மனதில் நான் இருக்கிறேன் என்பதே தெரியவில்லையே என்று உருக்கத்தோடு எழுதுகிறாள் ஜென்னி.
காலங்கள் கடக்கின்றன. மார்க்ஸ் ஜென்னி இருவருக்கும் திருமணமும் நடைபெறுகிறது
திருமணம் முடிந்து இருவரும் தங்களுடைய பாச வெள்ளத்தில் திளைக்கின்றனர்.
திருமணம் முடிந்து நான்கு மாதத்தில் பாரிசுக்கு வருகின்றனர் இந்த தம்பதியினர். அங்கே ஜெர்மன் பிரெண்ட்ஸ் வருடாந்திர புத்தகங்கள் என்ற இதழ்க்காக மார்க்ஸ் இரண்டு கட்டுரைகளை எழுதுகிறார். அதே இதழிற்க்காக லண்டனில் இருந்து பிரெடரிக் ஏங்கேல்ஸ் ஒரு கட்டுரையை அனுப்பி வைக்கிறார். இருவரின் கருத்துக்களும் ஒத்துப் போகவே இருவரும் நண்பராகிகின்றனர்.
மார்க்ஸ் இன் புரட்சிகரமான கருத்துக்களுக்கு ரஷ்யா அரசு கடும் கண்டனங்களை தெரிவித்து அவர்களை நாடு கடத்துகிறது. ஜென்னியும் மார்க்சும் நாடு விட்டு நாடு மாறிக்கொண்டே இருக்கின்றனர்.
அப்பொழுது கூட ஜென்னிக்கு மார்க்ஸின் மீது இருந்த காதல் சற்றும் குறையவே இல்லை. ஜெர்மனி பிரான்ஸ் பெல்ஜியம் என மாறி மாறி பாட்டாளி வர்க்கத்திற்காக இவர்களின் பயணம் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த ஓட்டத்தில் சற்றும் தளராத ஜென்னி காரல் மார்க்ஸ்க்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
போராட்டம் ஒருபுறமும் வறுமை ஒரு புறமும் இவர்களை வாடித்துக் கொண்டிருந்தது. ஜென்னி தனது திருமணத்தின் போது வந்த பணத்தை எல்லாம் கஷ்டத்தில் இருக்கும் நண்பர்கள் எடுத்துக் கொள்ளுமாறு பணப்பெட்டியை திறந்தே வைத்திருப்பார்.
தனி உடமை என்பது இல்லாத சமுதாயமே வறுமை இல்லாத சமுதாயமாக இருக்க முடியும் என்று எங்கள்ஸ் கூறியது போன்று மார்க்ஸ் ஜென்னி தம்பதியர் தங்களுக்கு என்று எந்த ஒரு பணமோ பொருளோ எதையும் சேர்த்து வைக்காது பாட்டாளி மக்களுக்காகவே தங்கள் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்தவர்கள்.
ஜென்னி தன்னுடைய வறுமையை கூறி தன்னுடைய நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பார் கடிதத்தில் இவ்வாறு இருக்கும்…
செவிலித்தாய் அமர்த்துவது என்றால் மிகவும் செலவாகும் என்பதால் எனது மார்பிலும் முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான வேதனை இருந்த போதும் குழந்தைக்கு நானே பாலூட்டுவது என்று முடிவு செய்தேன். அவனுக்கு இருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து நடுங்கும் அவனது சிறிய வாய்ப்புகள் ரத்தம் கொட்டியது.
வறுமையின் உச்சகட்டம். இருந்தும் ஜென்னி கூறுகிறார் நான் மகிழ்ச்சி உள்ள சலுகை பெற்ற அதிஷ்ட காரி என்று என்னை கருதுகிறேன், காரணம் எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமை கணவர் இன்றும் என் அருகில் இருக்கிறார்.
காதலில் வாழ்ந்து மூழ்கி திளைத்துள்ளனர்.
இவர்களின் வறுமை காலங்களில் தன்னுடைய குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். தன்னுடைய சின்னஞ்சிறு மகள் இறப்பின் போது அவளை புதைப்பதற்கு கூட வழி இன்றி தவிக்கின்றனர். ஜென்னி கூறுகிறாள்…
என் குழந்தை இந்த உலகத்திற்கு வந்த பொழுது அவளுக்கு தொட்டில் இருக்கவில்லை .இறந்த பொழுது அமைதி பெறும் இடமும் வெகுகாலம் மறுக்கப்பட்டது//
மகள் இறந்த மூன்று வருடங்கள் கழித்து தங்களுடைய ஆசை மகனும் இறக்கின்றான். அந்த குழந்தை இறக்கும் பொழுது காரல் நிலைகுலைந்து போகின்றார். தன்னைப் போலவே தன் மகனும் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமாக இருக்கின்றான். என்னை போலவே என் மகனும் சமூகம் சார்ந்து செயல்படுவான் என்று நினைத்த மார்க்சுக்கு அவனுடைய இறப்பு பெரும் இழப்பாகவே இருந்தது.
இவர்களுடைய வறுமை இவர்களை எவ்வாறு யோசிக்க வைக்கிறது என்றால்? தன்னுடைய மூத்த மகள்களை இரண்டு பேரையும் தத்து கொடுத்துவிட்டு இளைய மகளுடன் ஏழைகளுக்கான இல்லத்தில் அடைக்கலம் புகுந்து விடலாம். அல்லது குழந்தைகளும் நானும் இறந்து விடுவதே மேல் என்று ஜென்னி கூறும்அளவிற்கு வறுமை வாட்டி வதைக்கிறது.
ஜென்னி தன்னுடைய இறுதி காலங்களை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது…. நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தபோது மார்க்ஸ் இடிந்து போய் விட்டார்.
இந்த நேரம் மாக்ஸ்கும் நுரையீரல் பிரச்சனை வந்ததால் இருவரும் பக்கத்து பக்கத்து படுக்கை அறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த நேரத்தில் கூட காரல் மார்க்ஸ் தன்னுடைய மனைவியிடம் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்ததை பார்க்கும் பொழுது இரண்டு இளம் காதல் ஜோடிகள் காதல் செய்வது போன்றே இருக்கிறது என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கூறுகிறார்.
ஜென்னி எவ்வளவு வறுமையிலும் தன்னுடைய முகத்தில் சிரிப்பை மட்டுமே வெளிக் காட்டி இருக்கிறார். இறக்கும் தருவாயில் கூட தன்னுடைய குழந்தைகளிடமும் மருத்துவர்களிடமும் எதையோ ஒன்று சொல்லி சிரித்துக் கொண்டும் அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டும் தான் இறந்திருக்கிறார்.
ஜென்னி இறக்கும் பொழுது மார்க்ஸ் தன்னுடைய சுய நினைவையே இழந்து விட்டார். ஜென்னியின் கடைசி காரியங்கள் கூட அவர்களின் நண்பரான எங்கில்ஸ் தான் பார்த்திருக்கிறார்.
ஒரு நல்ல காதலியாக நல்ல மனைவியாக பாட்டாளி வர்க்கத்திற்கு நல்ல ஒரு போராளியாகவும் நட்பிற்கு எடுத்துக்காட்டாகவும் இருந்த ஜென்னி என்றும் வாழ்க..
நூலின் தகவல்கள் :
புத்தகம்: ஜென்னி மார்க்ஸ்
ஆசிரியர் :என் ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
பக்கங்கள்: 64
விலை:60/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
நளினி மூர்த்தி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.