‘குந்தி’ நாவல்
ப. ஜீவகாருண்யன்
நிவேதிதா பதிப்பகம்,
சென்னை.
பக்கங்கள் 176..
விலை ரூ. 150.
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.
மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் புனைவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.
ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும். ‘குந்தி’ நாவலும் அவ்வாறே தன் வரலாற்று நூலாக தனித்துவம் பெற்று வாசகர் கைகளில் தவழ்கிறது.
இந்தியாவின் இணையற்ற இதிகாசங்கள் எனக் கருதப்படும் மகாபாரதம் இராமாயணம் இரண்டுமே பல மொழிகளில் பலவிதமான புனைவுகளுடன் பலவிதமான தர்க்க விவாதங்களுடன் பின்னப்பட்டுள்ளன. எனினும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நின்று கதை சொல்லும் ‘குந்தி’ நாவலின் ஆசிரியர் ஜீவகாருண்யன் மகாபாபாரதம் தொடர்பான நாவலாசிரியர்களுள் தனித்துவமாகத் திகழ்கிறார் எனின் மிகையன்று.
மகாபாரதத்தில் திரௌபதி எனும் கதாநாயகியை விடுத்து குந்தி எனும் பெண் பாத்திரம் வழியாகக் கதை சொல்வதற்குத் துணிவும் ஆற்றலும் வேண்டும். அது நாவலாசிரியரிடம் நிறையவே இருக்கிறது. இதுவரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவர் படைத்தளித்துள்ள சிறுகதைகளும் நாவல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் அவருக்கு அளித்த அனுபவ வெளிச்சத்திலும் முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதைப் போல் கும்பகோணம் மகாபாரதப் பதிப்பு ஒன்பது நூல்களையும் அவர் படித்ததும் துணை புரிந்துள்ளன. ‘குந்தி’ ஜீவகாருண்யன் வழி திறந்த புத்தகமாய் அவதரித்திருக்கிறாள்.
தமிழகத்தில் இன்றளவும் கோடை காலங்களில் மகாபாரதம் குறித்த சொற்பொழிவும் அதன் தொடர்ச்சியாக ‘வில் வளைப்பு’ முதல் ‘பட்டாபிஷேகம்’ வரை தெருக்கூத்துகளும் பரவலாக நடைபெற்று வருவது கண்கூடு. இத்துடன் ‘திரௌபதி திருமணம்’, ‘அர்ச்சுனன் தபசு’, ‘பகாசூரன் வதம்’, ‘படுகளம்’, ‘பட்டாபிஷேகம்’ போன்ற சிறப்பு நிகழ்வுகள் திரௌபதி ஆலயத்திலும் வீதிகளிலும் நடைபெறுவதுண்டு.
எனின் கிராமத்து மக்களிடம்..அதிலும் பெருசுகளிடம் மகாபாரத கதாபாத்திரங்கள் ஊடும் பாவுமாக இன்றளவும் இருப்பதென்பது இயற்கையே.
மக்களின் மனங்களில் பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி ஆகியோர் தெய்வங்களாகவும் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரியான கிருஷ்ணன் பகவானாகவும் நிறைந்திருக்கிறார்கள். எனவேதான் மகாபாரதத் திருவிழாக் காலங்களில் பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி, கிருஷ்ண பகவான், ஆகியோருக்குப் பூஜை புனஸ்காரங்களும் வீதி உலாக்களும் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு உள்ளும் வெளியும் பூஜிக்கப்படும் பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி, குந்தி உள்ளிட்டவர்களைத் தவறாக விமர்சிப்பதை ஏலாதவர்கள் கிராமத்து மக்கள்.
குந்திக்கு இயற்கை தெய்வமான சூரியன் கொடுத்ததே கர்ணன். எமனுக்குப் பிறந்தவர் யுதிஷ்டிரன் எனப்படும் தர்மர், வாயுக்குப் பிறந்தவன் பீமசேனன், என்ற கதையாடலில் காலம்காலமாக நம்பிக்கை கொண்டவர்கள்.
குந்தி எனும் இள மங்கையின் காமத்துக்கு ஈடு கொடுக்க இயலாத ஆண்மையற்ற கணவன் பாண்டுவே கர்ப்ப தானம் என்ற பெயரில் மனைவி குந்தியை
பிற ஆடவரோடு கலவியுறச் செய்து ஆண் சுகத்துக்கு ஏற்பாடு செய்து பிள்ளைகளைப் பெறுகிறாள் குந்தி.
அதற்கு ‘நியோகம்’ எனப் பெயரிடப்பட்டு நடந்து வந்துள்ள ஏற்பாட்டை இப்புதினம் மூலம் உணர முடிகிறது. ‘நியோகம்’ குறித்து நூலாசிரியர் குந்தியின் மூலம் குறிப்பிடுகையில் கணவன் வழி உறவினர்கள் மூலமாகவோ மனைவியின் விருப்பமானவர்கள் மூலமாகவோ பிராமணர்கள் மூலமாகவோ உடல் சுகம் பெற்று பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்பதிலிருந்து அப்போது நிலவி வந்த பிராமண ஆதிக்கத்தையும் அறிய முடிகிறது.
மேலும் பாண்டு பணிப்பெண் மாத்ரியை மனைவியாக்கி அவளுக்கும் ‘நியோகம்’ மூலம் நகுலனும் சகாதேவனும் பிறப்பதும் மாத்ரி மற்றும் பாண்டுவின் மரணத்திற்குப் பின் பாண்டவர்கள் ஐவரும் பாண்டு-குந்தியின் மைந்தர்களாகவே வெளியுலகிற்கு அறிய வைக்கப்படுவதும் இந்நூலின் அரிய பகுதி. மேலும் குந்தி-பாண்டுவின் திருமணத்துக்கு முன்பே இருவரிடம் சோரம் போன குந்தி பெற்றெடுத்த கர்ணனின் தகப்பன் யாரென குந்தியாலேயே அறிய முடியாதது இனம் புரியாத சோகம்.
குந்தி காமக் கிழத்தியாகப் படைக்கப்பட்டு அவள் வழியாகவே அவளது விரக தாபங்களை விவரிப்பதற்கும் அவற்றுக்கான வடிகால்களைக் காட்சிப்படுத்துவதற்கும் துணிவும் துணையும் வேண்டும். அது நூலாசிரியருக்கு நிறையவே வாய்த்திருக்கிறது.
மகாபாரதமே காமம், பேராசை, வஞ்சகம், சூழ்ச்சி, சண்டை, சேதாரம், துன்ப துயரங்கள் என்னும் கலவையாகும். இதில் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் தமிழ்ப் பண்பாட்டுக்கு இடமில்லை. ஆகவேதான் விற்போட்டியில் திரௌபதியை வென்று வந்த அர்ச்சுனனுக்கு உரிய திரௌபதியைக் கனியாக்கி ஐவருக்கும் பத்தினி(?) ஆக்கிய கொடுமை இயல்பாய் நடந்தேறியது. அன்னையின் யோசனையை விவாதப் பொருளாக்காமல் பஞ்ச பாண்டவர்கள் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி காமசுகத்துக்காக ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் அவரவர் சமர்த்துப்படி செல்லுமிடங்களில் பலரைச் சம்போகித்து மனைவிகளாக்கிக் கொள்கின்றனர் ஐவரும்.
மகாபாரதத்தில் ஊடாடும் சூதும் வாதும் பஞ்சமா பாதகங்களும் கூடாதென நெறிப்படுத்தத் தயாரில்லை பெற்றோர்கள். கௌரவர்களின் பெற்றோர்கள் திருதராஷ்டிரன் காந்தாரியாகட்டும்..தந்தை பாண்டுவுக்குப் பின் தந்தையும் தாயுமான பஞ்ச பாண்டவர்களின் தாய் குந்தியாகட்டும் இரு தரப்பிலுமே அவரவர் போக்கில் அனுமதிக்கப்படுவதை குந்தியின் வழியாகவே இந்நாவலில் நாம் உணர முடிகிறது.
பொதுவாக மகாபாரதத்தில் குந்திக்கு ஐந்து புதல்வர்கள் பிறந்தபின் காந்தாரி பொறாமை மற்றும் ஆதங்கத்தால் வயிற்றை அம்மிக் குழவினால் இடித்துக் கொண்டு அதன் விளைவாக வெளியேறிய குருதி கலந்த உயிரணுக்களை நூறு குடங்களில் இட்டு அதன் மூலம் கரு வளர்ந்து குழந்தைகளானவர்களே கௌரவர்கள் நூறு பேர் என்ற கதையுமுண்டு.
இதன்மூலம் மேலும் அக்காலத்திலேயே குளோனிங் முறை இருந்தது என இன்றைய சங்பரிவாரங்கள் கதைப்பதும் இன்றைய தனிக்கதை.
ஆனால் அதைப் பரிசீலனைக்குட்படுத்தி திருதராஷ்டிரன் காந்தாரியோடு உடன்பிறந்த சகோதரிகள் பத்துப் பேரையும் மனைவிகளாக்கி அவர்களும் போதாதென சேவை செய்பவளையும் மனைவியாக்கி இவர்கள் மூலமாகப் பிறந்தவர்களே கௌரவர்கள் நூறு பேர் என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர்.
இள வயதிலேயே கணவனை இழந்த குந்தி பஞ்ச பாண்டவர்களுடன் பட்ட துயரங்கள் யாவுமே கௌரவக் கூட்டத்தால் தான் எனினும் அவர்களுடனேயே இயைந்து வாழும் வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறாள். மகாபாரதப் போருக்குப் பின்பும் பிள்ளைகளைத் துறந்து திருதராஷ்டிரன் காந்தாரியுடன் குந்தி மேற்கொள்ளும் இறுதிப் பயணமும் அதன்வழி பின்னோக்கிப் பயணித்து குந்தி தன் வரலாறு கூறலும் என நூலாசிரியர் கடைப்பிடித்த உத்தி வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கெனவே காலங்காலமாக புனிதம், தெய்வீகம் என்ற பெயர்களால் கற்பிதம் செய்யப்பட்ட மகாபாரத கதாபாத்திரங்கள் இந்நாவல் மூலம் தவிடுபொடியாகின்றன. சராசரி மனிதர்களை விடக் கேவலமான லௌகீக வாழ்க்கை வாழும் பாத்திரங்களே மகாபாரதக் கதாபாத்திரங்கள் என்பதை முக்கியக் கதாபாத்திரமான குந்தி மூலம் உணர்த்தியுள்ளது சிறப்பு. புனிதம், தெய்வீகம் போன்ற கற்பிதங்களைச் சுக்குநூறாக்கி இயல்பான இக்கால மனிதர்கள் பின்பற்றும் ஒழுக்கம், நாகரிகம், பண்பாடு, எல்லாவற்றுக்கும் மேலான மனித நேயம் போன்றவற்றைக் கற்பிக்காத மகாபாரதம் காலம்காலமாக உச்சாணிக் கொம்பில் வைக்கப்பட்டுப் போற்றப்படுவது பொத்தென கீழே போட்டு வெட்ட வெளிச்சம் ஆக்கியதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது. அதுவே இந்நூலின் வெற்றி.
நூலைக் கையிலெடுத்தால் கீழே வைக்க வேண்டும் என்ற எண்ணம் வராமலே நீரோடையாய் பயணிக்கும் வாசிப்பு அனுபவம் இந்நூலில் கிடைக்கிறது. குந்தி வழியாக மகாபாரதச் சுருக்கத்தை வித்தியாசமான கோணத்தில் வாசிக்கும் அனுபவம் அலாதியனது. அது சொல்வதால் கிடைக்காது. படித்தாலே கிடைக்கும். அது உங்களுக்கும் கூட.
..பெரணமல்லூர் சேகரன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.