கதைச்சுருக்கம் 55: எழுத்தாளர் ஜெயபாரதியின் *நைட் ஷோ* சிறுகதை

Jeyabharathi (ஜெயபாரதி) Short Story Night Show Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day is Branch of Bharathi Puthakalayamகதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதை எழுத்தாளரான ஜெயபாரதி பின்னர் திரைப்படங்களை இயக்கத் துவங்கினார்.  இவரது எல்லா படைப்புகளிலுமே பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.  எல்லா தளங்களிலுமே பெண்கள் ஒடுக்கப்பட்டு நசுக்கப்படுவது மெல்லிய கீற்றாக இவரது கதைகளில் ஓடுகிறது.

நைட் ஷோ

ஜெயபாரதி

வரிசையாக புனிதம், மரகதம், குமாரி, ராதாபாய் வந்து நின்றார்கள்.  அவர்கள் தலையில் சும்மாடு மாதிரி டிசம்பர் பூ கனத்தது.  நான்கு பேரும் தங்கள் முகத்துக்கு மட்டமான ஒரு பவுடரைத் தடவிக் கொண்டிருந்தார்கள்.  

“நாலு பொம்பளைங்கதானா?”

கேட்டவன் துரை.  பீடி அணைந்து போனது தெரியாமல் இழுத்துக் கொண்டிருந்தான்.  அவன் தலை கலைந்து கண்கள் ஒரேயடியாய்ச் சிவந்து போயிருந்தன.  

“என்ன ராசாத்தியம்மா, வேற கேர்ல் கெடயாதா இல்லே வேற எவனோடாவது?”

“இல்லே துரை, மல்லிகா இருக்கா.  ஆனா வரமாட்டா.  இதே ரோதனையா பூட்ச்சு அவளாலே.  திடீர்னு பத்தினி ஆயிட்டா.  புள்ளை பெத்துக்கப் போறாளாம்.”

“யாரு மல்லிகாவா? பட்டுக் குஞ்சலம் கேக்குதா களுதைக்கு?”

அவள் இருந்த குடிசைக் கதவைத் தள்ளிப் பார்த்தான் துரை.

“இன்னா மல்லிகா நான் துரை வந்திருக்கேன்.  மேலே ரெண்டு ரூவா கேளு.  தந்துட்டாப் போவுது.   எளுந்து வா மல்லிகா!”

“போய்யா நீயும் உன் முகரக் கட்டையும்” கத்தினாள் அவள்.

அன்று இரவு பக்கத்தில் இருந்த டாக்கீஸில் படம் பார்க்க எல்லோரும் போனார்கள்.  கண்டிப்பாக வாரத்தில் ஒருநாள் சீக்கிரமாகவே தொழிலை முடித்துக் கொண்டு இரண்டாம் ஆட்டம் பார்க்கக் கும்பலாகப் போவார்கள்.  ஆனால் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் எங்கேயும் போவதில்லை.  காரணம் சுற்று வட்டாரங்களில் இருக்கும் மில், அரிசி மண்டி, ஃபாக்டரிகளில் சம்பளம் வாங்கியவர்கள் நேராக அவர்களிடம்தான வருவார்கள்.    

பஜார் ரோடை விட்டு விலகி இறங்கும் பாதை ஒரு பள்ளத்தில் போய் முடிகிறது.  அந்தப் பள்ளத்தில்தான் அந்த குடிசைகள் இருக்கின்றன.  அந்தப் பாதையோடு இணைந்து ஓடும் ஊரின் சாக்கடை மாதிரிதான் அவர்களிடம் வந்துவிட்டுப் போகிறவர்களும் நடந்து கொள்கிறார்கள்.

“மல்லிகா அக்கா, ஆள் இட்டாந்திருக்கேன்!”

“அம்மாகிட்டே போய்ச் சொல்லு”.

பையன் ராசாத்தியம்மாளிடம் போய்ச் சொன்னான்.  “ஏய் கயிதேங்களா மரகதம், ராதாபாய், குமாரி வாங்கடி” மெள்ளக் கத்தினாள் ராசாத்தியம்மா

“எங்கேடி அவளுக?”“சோறு துன்ன உக்காந்துட்டாங்க”.

“இன்னாடி அதுக்குள்ளாரச் சோறு, வந்த ஆம்பிளைங்களைக் கூட கவனிக்காம?”

புனிதத்தின் பக்கத்தில் மல்லிகா வந்து நின்றாள்.  குடிசைக்குள்ளிருந்து மற்றவர்கள் ஈரக்கைகளைப் பின்னால் இடுப்புக்குக் கீழே துடைத்துக் கொண்டே வந்து வரிசையாக நின்றார்கள்.  குறைந்த இருட்டில் தன்னை மறைத்துக் கொண்டிருந்த அவன் ரொம்பத் தயங்கினான்.

“யாருயா வேணும்?” ராசாத்தியம்மா அதிகாரமாகக் கேட்டாள்.  காடா விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் பளபளத்தது.  அவன் மல்லிகாவைப் பார்த்தான்,

அவள் மூலையில் சுருட்டி வைத்திருந்த ஒரு பாயை எடுத்துக் காற்றில் உதறி தரையில் போட்டு உட்கார்ந்தாள்.  அவன் சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்துக் கொண்டு நெருப்புப் பெட்டியைத் தேடினான்.  அவள் அவனை சட்டென்று பார்த்தாள்.  சாதாரண உயரத்தில் இருந்த அவன் கன்னங்களில் கறுப்பான ரோமங்கள் இறங்கிக் கொண்டிருந்தன.  கீற்றான புருவங்கள் அடியில் பூனைக் கண்கள் மின்னின. தலையின் பின்புறத்தில் முரட்டுக் காலர் மேல் உராயும் கிராப் வறண்டு இருந்தது.

அவன் தெற்கேயிருந்து நண்பனின் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான்.  கல்யாண வீட்டில் பொழுது போகாததால் பஜார் ரோட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவனைப் பையன் ஆசை காட்டி இங்கே அழைத்து வந்து விட்டான்,

அவன் திரும்பிப் போகும்போது அவள் கையில் ஓர் ஐந்து ரூபாய் நோட்டை வைத்து விட்டு “போயிட்டு வரேன் மல்லிகா” என்றான்.  அவள் கண்கள் ஏனோ வேகமாக கோத்துக் கொண்டன.  “ம்” என்று தலையாட்டி சாக்கடையைத் தாண்டி அவன் போகும் வரை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.

மறுநாள் ராசாத்தியம்மாள் வந்து நின்று கூப்பிட்டாள்.

“நான் வரலே உடம்பு சுகமில்லே குமாரியைப் போகச் சொல்லு”.

“இன்னா ஒடம்பு ஒனக்கு?  நல்லாத்தானே இருக்கே.  தெனம் இப்படிப் பண்ணினா எப்படி?”

மல்லிகாவின் தலையைக் குடிசை சுவரின் மீது மோதி அவள் முகத்தில் துப்பிவிட்டுப் போனாள்.  புனிதம் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள்.  மெல்லத் தலையைத் தடவிக் கொடுத்தாள்.

ஒங்கிட்டே ஒண்ணு சொல்றேன்.  மனசோட வச்சுக்க அவளிடம் விஷயத்தைச் சொன்னாள்.  புனிதம் ஆச்சரியத்தால் அவளைப் பார்த்தாள்.  

“எத்தனை நாளைக்கு இதை மறைச்சு வெக்க முடியும்?  மாசம் ஏறிக்கினே போனா வெளியிலே தெரியுமே!”

ஆமாம் காலம் போனவுடன் புனிதம் சொன்னமாதிரி ராசாத்தியம்மாள் தெரிந்து கொண்டாள்.  

“கொழந்தை பொறந்தாத்தான் போகணுமா? எங்கே போவே?” புனிதம் கேட்டாள்

“எங்கேயாவது ஏதாவது ஒரு ஊட்லே வேலை செய்யலாம்னு பாக்கறேன்.”

“கிடைக்கலேன்னா?”

“கிடைக்கும்!”

“இப்படி உன் மனசை மாத்தின ஆள் யாரு மல்லிகா?”

“கொழந்தை பொறந்தாப் பாரேன்.”

அவள் நினைவில் அவன் கிருதாவும், பூனைக் கண்களும் வந்து போயின.

பிரசவம் திடீரென்று ஒரு நாள் நடந்தது.  ராசாத்தி அம்மாள் உள்ளூர் மருத்துவச்சியை அழைத்து வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்தாள்.

மல்லிகா படுத்துக் கொண்டே தலையைத் திரும்பிப் பார்த்தாள்,  பக்கத்தில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே ஜடமாகத் துணிமேல்  கிடந்த அந்த சதைப் பிண்டத்தைப் பார்த்தாள். திறந்திருந்த அதன் கண்கள் அந்தக் குறைந்த இருட்டிலும் பளபளத்தன.  ஆனால் பூனைக் கண்களாக இல்லை.  துரையின் சிவந்த கண்களாகக் காட்சி அளித்தன.

சில நாட்களுக்குப் பிறகு மரகதம், புனிதம், ராதாபாய், குமாரி வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.  “நாலு பொம்பளைங்கதானா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் துரை.  அவன் கண்கள் சிவந்திருந்தன.  

மல்லிகா துரையைப் பார்த்தவுடன் எழுந்து வந்து வரிசையில் நின்று கொண்டாள்.

“அட மல்லிகா, எப்ப மனசு மாறிச்சு? நீ இருக்கும் போது மத்த பொம்பளைங்க எனக்கு எதுக்கு?” என்று கூறிவிட்டு ஒரு குடிசைக்குள் போனான்.

வரிசையில் நின்று கொண்டிருந்த மற்ற பெண்கள் கலைந்து போனதும் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த மல்லிகா ஓர் ஆவலுடன்  துரை போன குடிசைக்குள் ஓடினாள்.  ஆமாம், இங்கிருந்து போய்விட அவளுக்கு ஒரு குழந்தை வேண்டியிருக்கிறது.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.