திருமணப் பரிசாய் வந்த
எவர்சில்வர் சம்புடத்தில்
கொத்தியிருந்த
பெயரின் மீதேறி
கால்நூற்றாண்டுக்கு முன்னால்
போய்இறங்கிவிட்டாள்
அம்மா.
அங்கிருந்த
அத்தையின் ஞாபகங்களை
கண்ணீராகவும்
தன் திருமணக் குதூகலத்தை
வெட்கமாகவும்
ஆக்கிக் கலந்த
முகத்துடன்
அப்பாவின் புகைப்படத்தை
உற்றுப் பார்க்கிறாள்
அம்மா.
பெயர்கள் பொறித்த
வேறு பாத்திரங்கள்
வேறு காலங்களுக்குள்
கொண்டுபோகும்
சுரங்க வழிகளாகின்றன.
உறவினர்களின் பெயர்களற்ற
புதுவீட்டின்
நாகரீகமடைந்த மருமகளின்
புதிய பாத்திரங்களுடன்
ஒட்ட மறுக்கிறாள் அம்மா.
மொட்டைமாடியில் கோணிச்சாக்குக்குள்
உச்சி வெயிலில் கிடக்கும்
பழைய பாத்திரங்களில் பொறித்த
உறவுகளின் பெயர்களாய்
தகித்துக் கிடக்கிறாள் அம்மா.
******
//நகரத்து மலர்//
01
மொட்டைமாடித் தொட்டியில்
மலர்ந்த
நகரத்து மலரொன்று
கண்ணறியாமல்
வாடிப்போகிறது.
02
அத்தனை எளிதாய் வாடாத
கொய் மலரொன்று
தினமும் ப்ரிஜ்ஜுக்குள்ளிருந்து
வெளிவந்து கூந்தலேறிப் பயணிக்கிறது.
காம்புள்ள
ரத்தச்சிவப்புநிறப் பறவையாய்
தினமும்
கூட்டுக்கு மீள்கிறது.
வாரக்கடைசியின் முன்னிரவில்
பழைய ரோஜாக்கள்
காலாவதியானபிறகே கூந்தலேறுகின்றன
நெருக்கிக் கட்டிய
மல்லிகைமொக்குகள்.
03
பெருநகரத்தின்
தெருவோரப் பூக்கடையில்
மலர்ச் சரங்களில்
டீசல்புகை மணக்கிறது.
குளிர்ந்து கிடக்கும்
மகிழ்வுந்துகளில் பயணிப்பவை மட்டுமே
ஆசீர்வதிக்கப்பட்டவை.
04
இத்தனை வாகனங்கள்
உன்மத்தம் பிடித்தலையும்
இப் பெருநகரங்களில்
விபத்து மரணங்கள் நிகழத் தொடங்குமுன்னே
மலர் வளையங்கள்
தயாராக இருக்கின்றன.
05
நகரத்து மலர்கள் ஒருசடங்குபோல
அவசரத்தின் கைகளால்
வாங்கப்படுகின்றன.
நறுமணத்தை நுகரவும்
நேரமற்ற வாழ்வியலுக்குள்
யாராலும்
முகரப்படாமல் வாடிப்போவதே
சாபம்.
06
போலியாய்ப் புன்னகைக்கும்
கொய்மலர்க் கொத்துகள்
நகரத்துக் கனவான்களை
மலர்த்துகின்றன.
பயனிலாச் சொல்போல
பயனிலாமலர் ஊதாரித்தனம் என்பவனை
பெருநகர வாழ்வு
பிதுக்கி வெளியேற்றுகிறது.
07
தகனத்துக்குப் போகும்
பிணவூர்திஉதிர்க்கிற
மலர்கள்
நகரத்தின் தார்ச்சாலையில்
தகிக்கும் டயர்களிடம்
தோற்று நசுங்குகின்றன.
08
பூச்சூட அனுமதி மறுக்கப்படும்
மழலையர் பள்ளிக்குள்
பெண்குழந்தைகளின்
ஸ்கூல்பேக்குக்குள்
ரோஜாக்கள் மணக்கின்றன.
09
பூக்களும் பண்டங்களாகிவிட்ட
பெருநகர வாழ்வில்
தொன்மங்களைச் சுமக்கும்
மனிதர்களுக்குள் மட்டுமே
நறுமணம் படர்த்துகின்றன
நகரத்து மலர்கள்.
***
ஜெயாபுதீன்
கோவை.