1.
அப்பாவின் பால்யம்
மக்காச்சோளம் அவித்த
வாசனையுடையது.
அப்பாவின் பால்யம்
காட்டுக்கீரைக் கடைசலின்
பச்சைநிறத்தைப்
பசைபோல விழுங்கியிருக்கிறது.
அப்பாவின் பால்யம்
தாத்தனுக்கு
சாராயம் வாங்க
செருப்பின்றி நடந்திருக்கிறது.
மதியத்தின் ஒரு கரண்டி
ரவை உப்புமாவுக்காக
குழிந்த வயிற்றுடன்
ஆறுமைல் தொலைவிலிருந்த பள்ளிக்கு
நடந்திருக்கிறது.
அப்பாவின் பால்யம்
சீட்டித்துணியிலொரு
சட்டை டவுசருக்காக
வருடமெல்லாம் காத்திருந்திருக்கிறது.
அப்பாவின் பால்யம்
வருடத்தின் இரண்டுநாட்கள் மட்டுமே
இட்லிகளைத் தரிசிக்கிற
கண்களைக் கொண்டிருந்தது.
அப்பாவின் பால்யம்
எட்டணா கூலிக்கு
சைக்கிள்கடை முதலாளியிடம்
ஸ்குரூடிரைவரின் கைப்பிடியால்
புறங்கையில் அடிவாங்கியிருக்கிறது.
அப்பாவின் பால்யம்
சோற்றுக்கு முடிதிருத்தும்
சவரக்கார மாரியின் வருகைக்காக
கரடிபோல முடிவளர்ந்தும்
காத்திருந்தது.
அப்பாவின் பால்யம்
தன் அம்மாவின்
பட்டினியைப் பார்த்தபடி நின்றிருந்த
நாளொன்றில்தான்
பஞ்சம்பிழைக்கத்
திருட்டு ரயிலேறியாவது
பட்டணம்போவதென்று
முடிவெடுத்தது.
*****
2

மூத்தோன்
************
அப்பன் செத்த அன்றைக்கு
எனக்கு இருந்த ஒரே ஆதரவையும் பறிச்சுட்டியே சண்டாளா
கையை உயர்த்திச் சபித்தபடி
அழுத அக்காளை
சலனமின்றிப் பார்க்கிற அய்யனாரிடம்தான்
கடல்கடந்த தேசத்துக்குப் பொழப்புக்குப்போற
புருஷனை
செல்வமும் செல்வாக்குமா
திரும்பக் கொண்டு வர
கறுப்புக் கெடா வெட்டுறதா
பேரம் பேசிட்டுக்கெடக்கா
அக்கா.
தக்காளி வெள்ளாமையில
பூச்சி விழுந்ததுக்கு
சராமாரியாத் திட்டு வாங்கினாலும்
இந்த அய்யனாரு
கோவிச்சிக்கிடலை அக்காகிட்டே.
மகன்
பத்தாப்பு பாஸானதுக்கு
டாஸ்மாக்குல வாங்கீட்டுவந்து
தட்சிணையா வெச்ச
கோட்டர் பாட்டிலை
வேண்டாண்ணு மறுக்கல.
எல்லாருக்கும் அந்தச்சிலை
அய்யனாரு சாமி.
எங்கக்காவுக்கு மட்டும்~
சித்தப்பன் முறை.
***
ஜெயாபுதீன்
கோவை.
One thought on “ஜெயாபுதீன் கவிதைகள்”
  1. கவிதைகள் அருமை…
    மிகவும் அருமை….
    அருமையிலும் அருமை.

    எஸ் வி வேணுகோபாலன்
    9445259691

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *