B. Jeyamohan (ஜெயமோகன்) Short Story Pallaku Synopsis Written by Ramachandra Vaidyanath. Book day website is Branch of Bharathi Puthakalayam

கதைச்சுருக்கம் 53: எழுத்தாளர் ஜெயமோகனின் *பல்லக்கு* சிறுகதை



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

நிலப்பிரபுத்துவ பண்பாட்டியலின் வீழ்ச்சியை வெகு அழுத்தமாக சொல்லக்கூடிய இது ஜெயமோகனின்  குறிப்பிடத்தக்க ஆரம்ப காலச் சிறுகதைகளில் ஒன்றாகும்.

பல்லக்கு

ஜெயமோகன்

பாடச்சேரி அப்பி  வந்திருப்பதாக திவாகர மேனோனுக்கு ஆள் வந்தது.  மூக்குக்கடைத் திண்ணை மீது சோம்பி அமர்ந்திருந்தவருக்கு சட்டென்று சுறுசுறுப்பு ஏற்பட்டது.  கடைக்கார அருணாசலம் தலைநீட்டி “உம் ஏமானுக்கு கோளுதேன். சில்லறையில்லா சிக்கப் போவுது…” என்றான்.  பீடிக்கடை முத்து நாயகம் அங்கிருந்தபடியே உரக்க, “ஏமானே சிட்டம் பைதாவை உடனடி தீத்துப் போடணும் மாதம் கொறெ ஆச்சு” என்றான்.  மேனோன் பெருந்தன்மையாகச் சிரித்துத் தலையசைத்தபடி நடந்தார்.  

ரோட்டிலிருந்து பிரிந்த பள்ளத்தில் இறங்கி தோப்புக்குள் நுழைந்தது பாதை. தோப்புக்கு அப்பால் பொற்றயில் தரவாட்டு வீடும் முற்றமும் இருந்தன.  வீட்டைச் சுற்றி மரங்களேயில்லாமல் வெறிச்சோடியிருந்தது.  வீடு நாலா புறமும் இடித்து அகற்றப்பட்டு, மொட்டை அஸ்திவாரம் கடப்பைக் கற்கள் இளகிச் சரிந்து பரவியிருப்பது தெரிய, அமங்கலமாக நின்றது.

“என்னடேய் அப்பி, கண்ணிலே படமாட்டேங்குதே” என்றபடி மேனோன் நெருங்கினார்.

அப்பி பதறி எழுந்து தலைத்துண்டை அக்குளில் செருகி முன்வளைந்து வாய்பொத்தி நின்றான்.  “ஓ” என்றான்.  

“செரி அப்ப உட்காரு” என்றார் மேனோன்.  “டேய் அப்பி, அண்ணைக்குக் கொண்டு போன தேக்கு உத்தரம் என்ன விலைக்குடோய் போச்சு?”

“என்னத்த ஏமானே, செல்லுயதுக்கு?  காலங்க கெடக்கத கெடப்பு! ஒண்ணும் பேயாண்டாம்.  கேட்டுதா, இப்பம் ஆரு தேக்குத்தடியிலே உத்தரம் போடுதா?  ஆருகிட்ட வக்கு இருக்குதுங்குதேன்?  உத்தரத்த அறுத்து ஒரு உருப்படி செய்யவும் ஒக்காது.  வச்சுக்கிட்டு தேம்புயதப் பாத்து  ரண்டு பேரு வந்து என்னதுண்ணு கேட்டாவ, சங்கதியச் சொன்னேன்.  நூறு ரூவா குடுக்கிட்டுமாண்ணு கேட்டாவ.  இன்னி வச்சுகிட்டிருந்தா சங்கதி கொளப்பம் எண்ணு கருதி ஒடனே குடுத்துக் கையக் களுவிப் போட்டேன்.”

“நல்ல வெள்ளைத் தேக்கு”.

“பின்னே இல்லியா?  ஒருவாடு கேட்டிட்டுண்டு ஏமானே.  காலம் கலிமுத்தின காலம் ஏமானே! இல்லெங்கி இப்பிடி யொக்கெ ஆவுமா?  நிண்ணெடம் நெறஞ்சு நிண்ண பங்களா இப்படி ஓஞ்சு போச்சே! கல்லறைக் காடுகணக்கா ஆயிப்போச்சே! எனக்கக் சங்கு போட்டு ஏமானே! ஓர்மிச்சா எனக்குக் கரச்சில் வருது ஏமானே..”



“அது எனக்குத் தெரியாதா?” என்றார் திவாகர மேனோன் நெகிழ்ந்து. “முந்தா நாளைக்குப் பாரு கோயிலிலே உற்சவம்னு போயிருந்தேன், யார் நடத்த கொடைன்னு எப்பிடி நமக்குத் தெரியும்?  சரி, ஏதோ வந்தோம், சாமி  பிரசாதம் தின்னட்டு போவோம்னு பாத்தா கொட ஆருடைய கொடை?  நம்ம முருகேசன் பயல் கெம்பீரமா ஒரு சரிகை மேல்வேஷ்டியை மூடிக்கிட்டு, வாட்ச் கட்டிக்கிட்டு, கிராப்பும் பவுடரும் பக்கமேளவுமா நிக்கதான்.  சவுக்கியமான்னு ஒரு மரியாதைக்குக் கேட்டா ஆமான்னு தலையாட்டிட்டு ஒரு வார்த்தை நம் சவுக்கியத்தைக் கேட்கேல்ல.  நம்ம வீட்டிலே ஆசாரிப்பணிக்குக் கோமணமும் பணிப் பெட்டியுமா வந்த நீலகண்டன் முத்தாசரிக்க மகன்,  இப்பம் பேங்கில் உத்தியோகம்.  என்ன பவிஷு! அவன் பவிஷு அவனுக்கு – நமக்கென்ன?”

“அப்புறம் கேளு.  பாயாசம் வௌம்புறான் பயல்.  சாமி பிரசாதமாச்சேண்ணு நானும் கையை நீட்டினேன்.  முகத்தப் பாத்து சொல்லுதான் அப்பி – ‘எல்லோரும் போயி வரிசையா நிக்கணும் எல்லோருக்கும் உண்டு’ ன்னு சொல்லுதான்.  நம்ம குலமென்ன? இருந்த இருப்பென்ன, ஏது?

“மூடு மறக்கப்பிடாது எமானே. . .”

“அதைச் சொல்லு! நல்லா நாலு வார்த்தை கேட்டிருப்பேன். பின்னே அது கோயில். எதுக்கு வம்பும் வழக்கும்.  பேசாம சாமி கை நீட்டத்தை வாங்கிட்டு வந்தேன். அப்படியிருக்கு காலம்”.  

உள்ளிருந்து மேனோனின் அம்மா வந்து எட்டிப் பார்த்து “என்னத்த அங்க பேச்சும் சீராடலும்? பறப்பய புலைப்பயண்ணு பாக்காமா? வந்த காரியத்தை முடிச்சுட்டு அவன அனுப்புத வழியைப் பாக்காம” என்றாள்.  

மேனோன் “அதாவது சங்கதி என்னாண்ணா அப்பி. . .” என்றார்.  “இப்பம் பைசாய்க்குக் கொஞ்சம் தட்டு.  அடுத்த வாரம் வந்துடும்  சொல்லியிருக்கேன்.  ஆனா பணம் பொறுக்கும்.  ரேஷன் கடைக்காரன் பொறுக்க மாட்டானே, ஏது? உனக்கிட்டே ஒரு நூறு இருந்தா பார்க்கிறது.”

“அதுக்கென்ன, ஏமானுக்கு இல்லாத பணமா? ஆனா உத்தரத்துக்கொண்ணும் இப்பம் வலிய  டிமாண்டு இல்லை.  அதாக்கும் சங்கதி.”

“இன்னி இங்கே உத்தரமும் இல்லை அப்பியே. .  இருக்கற ரூமையும் பொளிச்சு வித்தா தெருவிலேயா செண்ணு படுக்கறது?” என்றது உள்ளிருந்து கிழவியின் குரல்.

“அதும் வாஸ்தவம்தேன்” என்றான் அப்பி. “தம்புராட்டி இருந்த சீரென்ன! தங்க சப்பரத்தி லேயில்லியா போவும்! என்னைய மாதிரி நீசப் பெறவிகள் கண்ணாலப் பார்த்துக்கிட ஒக்குமா? நாங்க இந்தப் படி தாண்ட ஒக்குமா? எனக்க ஏமானே, இப்படி சீரளிஞ்சு போச்சே காலம்…! எனக்க சங்கு நோவுதே.” அப்பியின் கண்கள் கசிந்து கன்னத்தில் வழிந்தன.  

“என்ன செய்றது அப்பி?  எங்கிளுக்க உன்னை விட்டா வேறு கெதி இல்லை.”

“நான் வேணுமெங்கி அப்புறோஸ் பெருவட்டருகிட்ட கேட்டு பாக்குதேன், ஆனா மூணு வட்டி கேட்பானே பேதீல போறபய.”

“செரி வேற வளியில்லையே.”

“வீட்டுக்கு அடமானப் பத்திரம் கேட்பானே…” என்று  அப்பி யோசித்தான் பிறகு “ஒண்ணு வேணுமெங்கி செய்யிலாம் ஏமானே. ஏமான் வீட்ட எனக்கு அடமானம் தரணும். எனக்க வீட்ட நான் பெருவட்டனுக்கு அடமானம் தாறேன்.”



“வீடு அம்மா பேரில இருக்கு அப்பி.”

“இருக்கட்டும். தம்புராட்டி நெறைஞ்ச மாராசி.  அவுங்க பேரிலேயே இருக்கட்டும்,  நாம என்ன வெலையா போடுதோம்? அடமானம்னு சென்னா என்னத்த, ஒரு வரியத்துக்குதானே?”

“ஏன்லே அப்பி இந்தக் கடப்பைக் கல்லு யாருக்காவது வேணும்னா கேட்டுப் பாரேன்.  நல்ல பாளீஷ் கல்லாக்கும்.  முற்றத்தில் பாவினா மொசைக் மாதிரி இருக்கும்.”

“நல்ல கரிங்கல்லு.  கனமாட்டு கனக்கும்.  கொண்டு போறதுக்கே எப்பிடியும் நூறு ரூபா ஆயிடும்.”

“ஒரு அம்பது கெடச்சாக்கூட குடுத்துப் போடலாம்டே அப்பி.”

“அம்பதுக்க இஞ்ச எவன் வருவான்? மேலத்தரை சின்னப்பன்  வீடு கட்டுதான்.  கேட்டுப் பாக்குதேன். ஒரு இருவத்தஞ்சுக்கு குடுத்தாக்கூட ஒண்ணும் கொறையில்லை ஏமானே.”

“சரி” என்று திவாகரன் தலையசைத்தார்.  திடீரென்ற நினைவு கூர்ந்து “இரு அப்பி” என்றபடி உள்ளே போனார்.  மரத்தாலும் பிரம்பாலுமான ஒரு சாமானைக் தூக்கிக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டார் மேனோன்.  அது ஒட்டடையும் கரியும் படிந்து இருந்தது.  பகல் ஒளியில் ஏதோ அந்தரங்க உறுப்பைத் திறந்து வைத்தது போல் அசிங்கமாக இருந்தது.

“டேய் டேய்” என்றபடி கிழவி பின்னால் வந்தாள்.  அப்பியில் பார்வை படாமல் கதவுக்கப் பின்னால் நின்றபடி “டேய் மகாபாபி” என்று கூவினாள்.

“அந்தக் காலத்திலே தம்புராட்டிகள் ஏறிப்போன மூடு பல்லாக்கு.  பெண்கள்தான் இதைச் சுமப்பாங்களாம்.  கனமே இல்லை.  ஆனா நல்ல அசல் மரமும் பிரம்பும்” என்றார்.

“குலசாபம் வேணாம்டா திவாகரா” என்று உள்ளிருந்து குரல் மன்றாடியது.

அப்பி அதைத் தூக்கிப் பார்த்தபடி “பளைய சரக்கு” என்றான்.

“வெள்ளியும் தங்கமுமா அலங்காரம் இருந்தது.  அதெல்லாம் எப்பவோ பிடுங்கி வித்தாச்சு.  அம்மா சின்ன வயசிலே ஏறினது எடுத்து வச்சுகிட்டு பொலம்பணுமே.  அதுக்காக வச்சிருக்கு.”

உள்ளே அழுமையும் பிலாக்கணமும் கேட்டது.  மேனோன் உள்ளே திரும்பி “கொஞ்சம் பேசாம இருக்கியா எளவு,  நீ கெட்ட கேட்டுக்கு பல்லக்கு ஒண்ணுதான் கொறை, மூதேவி” என்றார்.

“ஒரு இருபது ரூபா வரதா?”

“இருவது ரூபாயா? இருவதுக்கு நாலு சேர் வாங்கிப் போடலாமே. அஞ்சு ரூபா கிட்டினா அதிகம்.”

“அஞ்சு ரூபாயா? என்னத்த அப்பி இது?”

“ஏமான் அஞ்சு ரூபா வச்சுக்கிடணும்.  மிச்சத்த பெறவு பாக்கலாம்.”

“டேய் திவாகரா, ஒரு மணி அரிசி இல்லைடா” என்றது கிழவியின் குரல்.



“உனக்கு என்ன வேணும்? அரிசிதானே? பேசாம கிட” என்றார் மேனோன்.  அய்யன் கடையில் ஒரு கிலோ அரிசி வாங்கித் துண்டில் முடிந்து கொண்டார்.  கடைக்குப் பின்னால் போய் இரண்டு ரூபாய்க்கு வார்ணீஷ் அடித்துக் கொண்டார்.  மறுநாள் கல்லுக்கான பணம் வந்து சேர்ந்தது.  ஒருவாரம் வார்ணீஷ் கவலை விட்டது.  அதற்குள் கிழவியைக் கூட்டிக் கொண்டு அருமனை பதிவு அலுவலகம் போய் வீட்டை அடமானம் வைத்துப் பணம் பெற முடிந்தது.  கிழவிக்கு செக்காலை பாக்கரன் கடையில் கொத்து பரோட்டாவும் மட்டன் சாப்ஸும் வாங்கிப் பொட்டலம் கட்டி எடுத்து வந்து, பதிவு அலுவலகக் காத்திருப்பு அறையில் ரகசியமாகக் கொண்டு வந்து தந்ததில் அவளுக்கும் வருத்தம் போய் உற்சாகம் வந்தது.

பாடச்சேரி சத்துணவு ஆயா பாக்கியம்மாள் பள்ளிக்கூட ஷெட்டில் தயாரித்து விற்கும் சாராயத்தை அருந்திவிட்டு தெரு நிறைந்து நடந்து திரும்பிக் கொண்டிருந்த மேனோன் அந்த ஊர்வலத்தைக் கண்டார்.  முன்னால் கியாஸ் விளக்குகள் வந்தன.  பாண்டு வாத்தியக் கோஷ்டி காற் – பாறையின் மேல் – காட்டினவன்-பூத்தியுள்ளவன் என்று வாசித்தபடி வந்தது.  பின்னால் ஜரிகை பளபளக்கும் சேலைகள் நெளிய பெண்கள், வெள்ளை வேட்டி கட்டிய விவசாயிகள், கண்ணாடி வைத்த ஒரு பாதிரியார் அங்கி அலைபாய தலை குனிந்து வந்தார்.  அவர்களுக்கு பின்புறமாக ஒரு மேடை அசைந்து வருவது தெரிந்தது.  ஜரிகைத் தொப்பியும், கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான்.  சட்டென்று மேனோன் அதை அடையாளம் கண்டார்.  

அவருடைய பல்லக்கு.  அப்பியின் மகன் விக்டர்ராஜன்தான் அதில் உட்கார்ந்திருந்தது.  ஊர்வலம் அவரைக் கடந்தபோது அப்பி ஒதுங்கி அவரருகே வந்து “ஏமான் ஏது இங்க?” என்று தலைகுனிந்து பவ்யமாகக் கேட்டான்.  பளீரென்று சிரித்தபடி “பயலுக்க கல்யாணம், மாப்பிள்ளை விருந்து இண்ணாக்கும்” என்றான்,

போதையில் மேனோனுக்கு அழுகைதான் பீறிட்டு வந்தது.

1988 

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *