செந்நிலம். நிலம், பல மனிதர்களின் குருதிகளை குடித்து ருசிக் கண்டு உள்ளதை வரலாறு சொல்கிறது, மேலும் ருசித்துக் கொண்டிருக்கிறது என்பதை சம கால நிகழ்வுகள் சொல்லிக் கொண்டே இருக்கிறது. நிலத்தில் வாழும் மனித மனங்களும் அவ்வழியே செல்கிறது. நவகிரங்கள் 9 திசைகளில் இருந்தாலும் அவை கிரகங்கள் எனவே பெயர் சூடபட்டிருப்பது போல இச்சிறுகதை தொகுப்பில் 9 கதைகளின் பேசுப்பொருள் வெவ்வேறாக இருந்தாலும் அதன் கரு ஆளுமை செலுத்துபவனிடம் அடங்கி போகும் மனிதர்கள் பற்றியே பேசுகிறது. இதில் ஆண் பெண் பேதமில்லை.
அம்மாவின் பிரசவம். பெற்ற குழந்தைகளுடன் கூட மகிழ்ச்சியாக வாழ முடியாமல், வாழும் பெண்களின் நிலையை பேசுகிறது இந்த சிறுகதை. முதல் குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால் அடுத்த முறை கருதரிக்கும் போது கருவோடு சேர்த்து குற்ற உணர்ச்சி கலந்த பயத்துடன் வாழும் நிலையை பல பெண்கள் இன்றும் அனுபவித்து வருகிறார்கள். கருவை பெண் சுமப்பதால் அந்த கருவின் பாலினத்திற்கு பெண் மட்டுமே எப்படி பொறுப்பேற்க முடியும். ஆண் வாரிசு வேண்டும் என 5 பெண் குழந்தைகள் பெற்றவர்களும் உண்டு. ஆண் வாரிசு வேண்டும் என மறுமணம் செய்துக் கொண்டு மறுபடியும் பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு.
எந்த பெண்ணும் ஆண் வாரிசுக்காக மறுமணம் செய்துக் கொண்டதாக தெரியவில்லை. எப்போது உணரும் இந்த சமூகம் என பதிலற்ற கேள்வி எழுகிறது?
செந்நிலம். ஜாதியை பகடையாக்கி பகையை சுமந்து திரியும் ஜடங்கள். “ஆடை” “சைக்கிள்” கேட்க சாதாரணமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆடையை அணிய, சைக்கிளில் பயணிக்க ஒருவன் அவன் வாழ் நாள் முழுவதும் போராட வேண்டும் எனில் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோமா என கேள்வி எழுகிறது. ஒருவனுக்கு சாதாரணமாக கிடைப்பது ஒருவனுக்கு கனவாக உள்ளது.
காலங்காலமாக மனித குலம் ஜாதியை தனது தலைமுறையினருக்கு கடத்திக் கொண்டே உள்ளது. அது மறையும் வரை இந்த மேல் கீழ் போராட்டம் ஓயப் போவதில்லை. ஒவ்வொரு மனிதனும் அவனின் அடையாளமாக ஜாதி கழிவை இந்த நிலத்தில் கழித்து கழித்து செந்நிலமாகவே மாற்றிவிட்டார்கள். இந்த செந்நிலத்தை கழுவ இயலும் எனில் நன்நிலம் செழிக்கும். மனிதம் தழைக்கும்.
Universal language போல உடலின் தேவைகள். நீர் பாரபட்சமின்றி அனைத்து உயிரணங்களின் தாகத்தை தனிக்கும். தண்ணீருக்கு தோஷம் இல்லை என்பார்கள். அந்த தண்ணீருக்கும் குலம் ஒரு தடை எனில் அதை உடைத்து எறிவது தப்பில்லை தப்பில்லை.
தாகம் தனித்துக்கொள்ள மதமாற்றமா என கேள்வி எழலாம்? உயிர் வாழ தானே கடவுள் வேண்டும். அதை எந்த கடவுள் தந்தால் என்ன?
நெடும்புகழ் மாதேவி. மூடநம்பிக்கையை மூடமாக்கினால் தான் முன்னேற்றம் அடைய முடியும், அது அரசியாக இருந்தாலும் என்பதனை தெளிவாக சொல்லும் கதை. மூடநம்பிக்கையை மக்கள் மனதில் சாலையாக்கி அதில் பயணிக்கும் புரோகிதர்களுக்கு புதிதல்ல. அந்த பாதையில் சிக்காமல் மாற்று பாதையில் தப்பித்து செல்ல ஒரு சூட்சுமத்தை கடைப்பிடித்து பெண் அடிமைத்தனத்தை மீட்டெடுத்த விதம் சிறப்பு
நமது செயல்கள் மற்றவர்கள் மறந்தாலும் நமது உள்ளுணர்வு மறக்காது என்பதை ஆறாமவன் கதைகளம் நமக்கு சொல்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
குலத்தை காக்க ஆண் வாரிசு வேண்டும். அதற்காக குடும்பத்தில் இருக்கும் எல்லா பெண்களையும் பலி கொடுக்க தயாராக உள்ளது. வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான். அதே போல நம்ம ஜாதிகாரன் நமக்கு கெடு நினைக்க மாட்டான் என்ற மாய பிம்பத்தை சிதைக்கும் கதைகளம் குலச்சிங்கக்ஸ கனவு.
ஆதிக்க உணர்வின் உச்சம், நதி மூலம். ஜாதியை சுமந்து கொண்டு வாழும் மனிதர்களின் மனதில் எத்தனை வன்மம். வாசிக்க வாசிக்க நம்மை ஏதோ செய்கிறது. இன்றும் இது நடக்கிறது என்பது தான் அவலம்.
வனக்கிழவியின் மூகம்மா காடு. இவர்களுக்கு காடு தான் எல்லாம். அதிலிருந்து அவர்களை பிரித்தால் அவர்கள் உயிர் பிரிந்து விடும். காடு அவர்களின் தொப்புள் கொடி.
செவ்வரளி பூச்சரம். நகைச்சுவை கலந்த விழிப்புணர்வை தூண்டும் சிறுகதை. பரிகாரங்களுக்கும் பிராத்தனைகளுக்கும் பெரும்பாலும் பெண்கள் தான் பலி ஆகிறார்கள். ஒருவேளை பூசாரி ஆண் என்பதால் தான் என்னவோ? ஆண் அந்த பரிகாரங்கள் நிறைவேற்றும் நிலை வந்தால் அந்த சாஸ்திர சம்பர்தாயத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதனை நயமாக பேசுகிறது.
மொத்தத்தில் யாரோ ஒருவர் மற்றொருவரை ஏதோ ஒரு விதத்தில் அடிமைபடுத்த மட்டுமே நினைக்கிறான் என்பதை இந்த புத்தகத்தின் அனைத்து கதைதளங்களும் பேசுகிறது. எழுத்தாளர் ஜெயராணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
நூலின் விவரங்கள்:
நூல் : செந்நிலம் (Sennilam)
ஆசிரியர் : ஜெயராணி (Jeyarani)
வெளியீடு : சால்ட் பதிப்பகம் (Salt publications)
விலை: ரூ.300
எழுதியவர் :
✍🏻 திருமதி. சாந்தி சரவணன்
சென்னை 40
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
