Jiang Rong in Tamil Translation (S. Mohan) Onai Kula Chinnam (ஓநாய் குலச்சின்னம்) Book Review By Na. Jagadeesan. Book Day

ஓநாய் குலச்சின்னம் நாவல் வாசிப்பனுபவம்



ஓநாய் குலச்சின்னம் நாவல்
ஆசிரியர் : ஜியோங் ரோங்
தமிழில் : சி. மோகன்
பதிப்பகம் : அதிர்வு
பக்கம் : 670

மங்கோலிய மேய்ச்சல் நிலப்பகுதியில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அந்நிலப்பகுதியில் ஏற்பட்ட விளைவுகளே இந்த நாவல் எழுதப்பட அடிப்படை காரணம். அந்த விளைவுகள் மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் இயற்கை வாழ் பிற உயிரினங்களுக்கும் எதிரானதாக திரும்புவதையும் உயிரினங்களின் வாழ்வு சிதைவுறுவதையும் பதிவு செய்கிறது இந்த நாவல்.

உணவுச் சங்கிலியை அடிப்படையாகக்கொண்டு இயற்கையில் உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. இந்த உணவுச் சங்கிலி தொடர்பில் ஒரு குறிப்பிட்ட உயிரினம் மட்டும் அழிக்கப்பட்டுவிட்டால் அந்த சங்கிலி தொடர்பில் உள்ள மற்ற சில உயிரினங்கள் பெருகிவிடவோ சில உயிரினங்கள் அழிந்து விடவோ கூடும். இது உயிரினங்களின் எண்ணிக்கை சமநிலையை குழைத்து அந்த நிலம் பாழ்பட வழிவகுக்கிறது என்பதை தனது அனுபவத்தின் வாயிலாக இந்த நாவலை படைத்திருக்கிறார் ஜியாங் ரோங். இந்த நாவலை தமிழின் மொழி அமைப்புக்கும் பொருள் அமைவிற்க்கும் ஏற்றவாறு சிறப்பான முறையில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் சி. மோகன்.

1950களில் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த மங்கோலியப் பகுதிகளை சீனா புனரமைக்க முற்படுகிறது. அந்தப் பகுதிகளை தனது உற்பத்திக்காக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. அப்படி பயன்படுத்திக் கொள்ள முயலும் போது ஏற்படும் சிக்கல்களை மையமாகக்கொண்டு இந்த நாவல் புனையப்பட்டிக்கிறது. ஆடு வளர்ப்பு, குதிரை வளர்ப்பு மற்றும் தானியங்கள் விளைவிப்பு போன்ற உற்பத்தி காரணங்களுக்காக காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த மங்கோலிய மேய்ச்சல் நில கோட்பாடுகள் தகர்க்கப்படுகிறது. அப்படித் தகர்க்கப்பட்டு உற்பத்தி பெருமளவில் மேற்கொள்ளப்படும்போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அது பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது. சிறிது காலத்திலேயே அந்த நிலம் பாழ்பட்டு பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிடுகிறது என்பதை ஆழமாக உணர்த்துகிறார் ஆசிரியர்.

இந்த இடத்தில் ஓர் ஐயம் எழ வாய்ப்புள்ளது. மனித குலத்தின் முன்னேற்றங்களை தடுக்கலாமா? வளர்ச்சி என்பதே கூடாதா? மாற்றம் என்பதே கூடாதா? பழமையான மங்கோலிய கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா?என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழலாம்.

மனிதனின் வளர்ச்சி மாற்றங்களுக்கும் இயற்கையின் வடிவமைப்பிற்கும் இடையேயுள்ள நுட்பமான கூறுகளை வெளிப்படுத்துவது தான் இந்த நூலின் சிறப்பம்சம்.

Jiang Rong in Tamil Translation (S. Mohan) Onai Kula Chinnam Book Review By Na. Jagadeesan. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சி. மோகன்

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்று தமிழிலும் முதுமொழி உள்ளது. புதியன வேண்டும் தான். ஆனால் இயல்பை சீர் குலைக்காத வகையில் புதியன கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை இந்த நாவலில் வரும் பில்ஜி தொடர்ந்து வலியுறுத்துகிறார். தமது முன்னோர்களின் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் நம்பிக்கைகளையும் கைக்கொண்டு வாழ்ந்து வரும் பில்ஜி புதிய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள தான் செய்கிறார். ஆனால் நிலத்தின் இயல்புத்தன்மை கெடாதவாறும் சார்பு வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலி பாதிக்கப்படாதவாரும் உற்பத்தி இருக்க வேண்டுமென்று செயல்படுகிறார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறுவதில்லை. உற்பத்திக்காக தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படுபவர்கள் மரபு சார்ந்த, நிலம் சார்ந்த கோட்பாடுகளை கடைபிடிப்பதில்லை. அவற்றை அறிந்து கொள்ளவும் முற்படுவதில்லை. அறிந்து கொள்ளவே முன்வராத போது ஆய்வுகள் செய்யவும் அவற்றை அங்கீகரிக்கவும் வாய்ப்புகளே இல்லாமல் போய்விடுகிறது.

மங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் வாழ்க்கைச் சூழலை இந்த நாவல் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அவர்களின் இடம்பெயர்தல், உணவு முறைகள், வேட்டை உத்திகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை பதிவு செய்திருக்கும் ஒரு காலப்பெட்டகம் இந்த நாவல்.

இறந்த மனிதனின் உடலை குறிப்பிட்ட இடங்களுக்கு எடுத்துச் சென்று கழுகிற்கு வைக்கிறார்கள். இதை வான்புதை என்கிறார்கள். இது அவர்களின் மூதாதையர்களின் வழியாக தொன்று தொட்டு வரும் பழக்கம். மேய்ச்சல் நில சமநிலையை பாதுகாக்க முனையும் கடைசி மனிதர் பில்ஜி. பில்லி இறந்த பிறகு அவரை வான்புதையலிடுகிறார்கள். வான்புதைக்கு செல்லும் கடைசி மனிதரும் அவரே! நாவலின் உருக்கமான பகுதி இது.

இறந்தவர்கள் வானிற்கு செல்கிறார்கள் என்ற நம்பிக்கை இந்தியர்களிடையேயும் உண்டு. இந்த நம்பிக்கை வான்புதையிலிருந்தும் பிறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆய்வு செய்ய வேண்டிய பகுதி இது.

உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும் பதிவு செய்கிறது இந்த நாவல். பில்ஜியின் மகளாக வரும் கஸ்மாயி ஆண்களுக்கு நிகரான உழைப்பை தருகிறார். தமது முன்னோர்களின் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவராகவும் உடல் திறன் மிக்கவராகவும் உழைப்பின் மீதும் சமூக கட்டமைப்பின் மீது ஆர்வம் உள்ளவராகவும் காணப்படுகிறார்.

கூரிய பற்கள், கழுத்தை கவ்வுதல், நடுநிசியில் பயமுறுத்தும் நீண்ட ஊளை என்று மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எதிரானதாக கருதப்படும் ஓநாய்களின் இன்னொரு பக்கத்தை காட்டுகிறது இந்த நாவல். இந்த பக்கங்களில் மனித குலம் கவனிக்கத் தவறவிட்ட ஏராளமான தகவல்கள் உள்ளன. இந்த பக்கங்கள் ஓநாய் பற்றிய பிம்பங்களை தகர்க்கிறது.

நாவல் நிகழ்காலத்தில் சீன மாணவர்கள் தொலைதூர கிராமங்களுக்கு சென்று அங்கேயே தங்கி கற்கும் செயல் வழிக் கல்வியை அறிந்து கொள்ள முடிகிறது. சீன மாணவனான ஜென் மங்கோலிய மேய்ச்சல் நிலப்பகுதிக்கு கல்விகற்க செல்கிறான். அங்கு அவன் கற்று கொள்ளும் அறிந்து கொள்ளும் உணர்ந்து கொள்ளும் விசயங்களே இந்த முழு நாவல் எனலாம். உற்பத்திக்கு உதவ செல்லும் ஜென் உற்பத்தி திட்டங்களுக்கும் அங்குள்ள மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை உணரத் தொடங்குகிறான். அவனது பார்வையிலேயே நாவல் நகர்கிறது.

ஜென் அம்மக்களின் நம்பிக்கைக்கு எதிராக ஒரு ஓநாய் குட்டியை எடுத்து வளர்க்கிறான். என்னதான் அதை வளர்த்து பழக்கப்படுத்தினாலும் வளர்ந்து பெரியதானதும் தம் மூதாதையர்களின் தன்னியல்பிலிருந்து மாறாததாக அது இருக்கிறது. ஓநாய் கூட்டத்தின் தொடர்புகள் துளியும் இல்லாது அந்த ஓநாய் குட்டியானது வளர்க்கப்பட்ட போதும் ஓநாய்களின் இன இயல்பை, இயல்பாகவே அது பெற்றுவிடுகிறது. இந்த ஓநாய் குட்டி ஊளையிட கற்றுக்கொள்ளும் காட்சிப்படைப்பு அற்புதம்.

Jiang Rong in Tamil Translation (S. Mohan) Onai Kula Chinnam Book Review By Na. Jagadeesan. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

ஒரு நிகழ்வை நேரில் கண்டு அதனுடன் வாழ்ந்து அதனை அனுபவித்து மனதில் ஊறிய பின் படைக்கப்படும் படைப்பு அசாத்தியமானது. ஓநாய்குட்டி ஊளையிட கற்றுக்கொள்ளும் அந்த தருணங்களும் ஓநாய்களின் குழு வேட்டை நிகழ்வுகளும் சிறப்பான காட்சி படைப்புகள். இதில் ஆசிரியரின் அனுபவங்களையும் படைப்புத்திறனையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

அங்கு வாழும் மக்கள் தங்களது கோடைக்கால பனிக்கால உணவுகளை தயாரித்துக் கொள்ளும் முறைகளும் அவர்கள் வேட்டையாடும் விதங்களும் அந்தப் பகுதியில் வாழும் எலிகள், மர்மோட்டுகள் போன்ற உயிரினங்கள் பருவ மாற்றத்திற்கேற்ப தங்களது உணவுகளை சேமிக்கும் முறைகளையும் நாவல் பதிவு செய்கிறது. பின்வரும் பனி காலத்திற்கான உணவை முன் வேனில் காலத்திலேயே உயிரினங்கள் தயாரித்துக் கொள்ளும் விதங்களை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.

ஓநாய்கள் எவ்வாறு குழுக்களை ஏற்படுத்திக் கொள்கிறது. அந்த குழுக்கள் எவ்வாறு குழு வேட்டையில் ஈடுபடுகிறது. குழுக்களை வழி நடத்துவதில் தலைமை ஓநாயின் பங்கு. ஓநாய் குழுக்களை பாதுகாப்பதிலும் வேட்டையாடுவதிலும் உளவு ஓநாய்களின் பங்கு. வயதான மற்றும் குட்டி ஓநாய்களுக்கான உணவு பகிர்ந்தளிப்புகள் என ஓநாய்களின் வாழ்க்கைமுறையை சிறப்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். இதில் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.

நாவலாசிரியரின் கற்பனை நயத்தை பாராட்ட ஒரு காட்சியை சொல்ல விழைகிறேன். நாவலின் ஓரிடத்தில் ஒரு ஓநாயானது ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அந்த காட்சியை மற்ற ஆடுகள் நடுங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும். உயிரிழந்து உணவாகிக் கொண்டிருக்கும் அந்த ஆட்டைப் பார்த்து உயிருடன் இருக்கும் மற்ற ஆடுகளின் எண்ண ஓட்டத்தை இவ்வாறு பதிவு செய்கிறார். “நல்லவேளை ஓநாய் உன்னைத் தின்கிறது. என்னை இல்லை” என்று சொல்வது போலவும் “நீ செத்து விட்டாய் அதனால் நான் வாழ்கிறேன்” என்பது போலவும் அந்த ஆடுகளின் பாவனைகள் இருந்தன. இந்த காட்சி ஓநாய்களுக்கு மட்டுமா பொருந்தும் என்ற கேள்வியை உள்ளடக்கியிருக்கும் இலக்கிய இன்பம் அளப்பரியது.

இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ற ஆழ்ந்த கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது. நாவலை வாசித்து முடிக்கையில் இந்த பூமி நீடித்து நிலைக்க மனிதன் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

வான்புதையுண்ட பில்ஜியின் நினைவுகளோடும் உணர்வுகளோடும் ஜியாங் ரோங்கின் வார்த்தைகளைக் கொண்டு நிறைவு செய்கிறேன்.

“பாவம் பில்ஜி, அவருக்கு தான் ரொம்ப சிரமம். ஆனால் மேய்ச்சல் நிலத்திற்காகவும் அதன் மக்களுக்காகவும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சமநிலையைப் பேணி பாதுகாப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் அவர் மேற்கொள்வார்…”

எழுதியவர்:

ந. ஜெகதீசன்
பூந்தமல்லி.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. ramdass

    மிகச் சிறப்பான விமர்சனம். கண்டிப்பாக இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்…

    நன்றி.
    ராம்தாஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *