கொற்கை ஆசிரியர் பற்றி
‘புலம்பல்கள்’ எனும் கவிதை , தமிழக அரசின் விருது பெற்ற ‘ஆழி சூழ் உலகு’ எனும் நாவல் , ‘விடியாத பொழுதுகள்’, ‘எனது சனமே’ ‘Towards Dawn’ போன்ற ஆவணப் படங்கள் என பல படைப்புகளை உருவாக்கி இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த நெல்லை மாவட்டம் உவரியில் பிறந்தவர் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஆர்.என்.ஜோடி குரூஸ் . திருச்சி புனித வளனார் கல்லூரியில் எம்ஃபில் பட்டம் பெற்று வணிக கப்பல் நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணிபுரிகிறார் . அதன் தாக்கமோ என்னவோ கொற்கை முழுவதும் நம்மால் காண முடிகிறது.
கொற்கையின் மைய கதாபாத்திரமாக இங்கே வடிக்கப்பட்டிருப்பது காலம். ஆம் காலம் தான் இங்கு கதாநாயகன் கதாநாயகி மற்றும் இதர கதாபாத்திரங்களும் கூட . 1110 சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் இருக்கும் காலம் இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலங்களில் பயணம் செய்யும் இந்த நாவல் கடல் சார்ந்த சமூகத்தின் மாற்றத்தை வாசிக்க வாசிக்க நமக்கு புலப்பட வைக்கிறது .
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம் , அந்த காலகட்டங்களில் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை என பாரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை துல்லியமாக நாவலில் கடத்தி இருக்கிறார் ஆசிரியர். பலவிதமான கதாபாத்திரங்களின் மூலம் மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் வியக்கத்தக்க வகையில் நுட்பமாக சித்தரித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
இனி நூல் குறித்து:
பரதவர் மலிந்த பயங்கெழு மாநகர்…
ஆம் , மூன்று தலைமுறைகள் சார்ந்த குடும்பங்களின் நிகழ்வுகளில் காணப்படும் சலனங்களை பதிவாக்கி கதைகளாக துலக்கம் பெறுகிறது இந்நாவல். கொற்கை தோணித் துறையையும் அங்கு நடக்கும் செயல்பாடுகளையும் வாசித்து பார்ப்பதற்கு கண்கள் போதாது. ஒரு தோணியிலிருந்து பாய் மரத்தை இறக்குவதில் இருந்து, கட்டி முடித்த தோணியை கடலில் தள்ளிப் பின் பாய்மரம் நட்டி இதர வேலைகளை பார்ப்பது வரை அனைத்து வேலைகளையும் பரதவர்கள் பெரிய எந்திரங்களின் உதவி இல்லாமலேயே முனைப்பாக செய்வதை நாம் காண முடிகிறது. அதிலும் ஆரம்பித்த சில அத்தியாயங்களிலேயே எந்திரத்தின் உதவி இல்லாமல் வலைகுடிக்காரர்களால் அர்ப்பணிப்போடும் ஆச்சரியத்தோடும் தட்டுமிடதப்பானில் ஸ்டீம் என்ஜினை மிதக்க வைக்கும் வேலை “தே ஆர் நாட் மேட் பீப்பிள்”, “தே ஆர் கிரேட்” என்று வெளிநாட்டவரை சொல்ல வைக்கிறது .
தங்களால் ஒரு வேலையை செய்ய முடியாத பொழுது ‘மரியே மாதாவே’ என்று குரலோடு அவர்கள் பாடுவதாகட்டும்..
தங்களுக்குள் கேலியும் கிண்டலுமாக பெண்கள் குறித்த பேச்சுக்களை பேசி நக்கல் செய்வதாகட்டும்.. அவர்களுக்கே உரிய பாணியை அப்படியே அச்சாக மாற்றி இருக்கிறார் ஆசிரியர். பரதவர் சமுதாயத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பின்னால் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது , சந்தனமாரி வழிபாடல் மேரி மாதாவாக மாறியதும் , மதமாற்றம் ஆனாலும் தன் குலதெய்வத்தை மறக்க முடியாமல் கொடை செய்ய அவர்கள் யாருக்கும் தெரியாமல் முயலும் போதும் அவர்களின் உள் உணர்வுகளை அப்படியே கடத்தி இருக்கிறார் ஆசிரியர்.
அதற்காகவே அந்த சமுதாயம் கல்வியை கையில் எடுத்து பல துறைகளில் ஒளிர்வதை கொற்கை முடிகின்ற தருவாயில் நம்மால் காண முடிகிறது. பெரிய கப்பல்களுக்கு எல்லாம் பெண்களின் பெயர்களை சூட்டி அவற்றையும் ஒரு பெண்ணாகவே கடலன்னை போல் பாவித்து இருக்கிறார்கள். 1914 ஆம் வருடம் நடப்பதாக ஆரம்பிக்கும் இந்த நாவல் 2000 ஆண்டில் முடிவடையும் விதமாக நூலாகப்பட்டுள்ளது. இதில் அந்த காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டமும் வெவ்வேறு நாட்டவரின் வணிகம் சார்ந்த துறைமுக கையாடலும் முழுவதும் விரவிக் கிடைக்கின்றது.
“யாவாரம் பாக்குறான்வ, நாடு புடிக்கிறானுவ, மதத்தை எதுக்குன்னம் பரப்புறானுவ”, என்று சாதாரண மக்களும் சிந்திக்கும் வண்ணம் சில கேள்விகளும் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளது. ஒன்பதாவது அத்தியாயத்தில் ஆரம்பிக்கும் ஃபிலிப் என்ற சிறுவனின் வாழ்க்கை மூன்று தலைமுறைகளாக விவரிக்கப்பட்டு 133 வது அத்தியாயத்தில் அவரது முடிவோடு கொற்கை நிறைவடைய , காலத்தின் மைய கதாபாத்திரமாக ஃபிலிப் தண்டல் வந்து போகிறார்.
வரலாற்று காலத்தில் முத்துக்கு பெயர் பெற்ற இடமாய் விளங்கிய கொற்கை பஞ்சு வியாபாரத்திலும் ஏற்றுமதியிலும் முன்னணி துறைமுகமாக மாறியுள்ளது . இதன் காரணமாகவே பல்வேறுபட்ட தொழில்களும் வளர்ச்சி அடைய தொழில் தேடி பல தரப்பு மக்களும் கொற்கை வர ஆரம்பித்துள்ளார்கள். அதேபோல கொற்கை உப்புக்கு வடக்கே நல்ல மதிப்பும் இருந்துள்ளது. கொற்கையில் இருந்து பம்பாய்க்கும், மிக முக்கியமாக கொழும்புக்கான வர்த்தகம் பெரிதும் விரிவடைந்து கொழும்பில் பரதவ மக்கள் குடியேறும் அளவுக்கு வியாபித்து இருந்திருக்கிறது.
தோணி, கரிக்களம் , உப்பளம், கூட்ஸ் வண்டி , குதுர லாயம் , சுக்கான், கரு மருது, பருவான், கச்சான் என வார்த்தைகள் மட்டுமல்ல கதை மாந்தர்களின் பெயரும் கூட எல்லாமே புதிதாய் தான் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் புரிகிறது. மொத்தத்தில் கத்தோலிக்கம் விசுவாசம் என்பதெல்லாம் கடற்கரை பரதவர்களை ஆட்சி அதிகாரம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வித்தைகளேயன்றி வேறு எதுவும் இல்லை என்பது தான்.
கொற்கையில் கடல் அமைதியாய் இருப்பது பற்றி புராண கால செய்தியாகவும் கதை ஒன்று இங்கே சொல்லப்பட்டுள்ளது . கொற்கையின் இன்னொரு பெயர் திருமந்திர நகர். கடற்கரை மணலில் செறிந்து கிடந்த கார்னட், இல்மனைட் , ரூட்டைல் என்ற தனிமங்களை கண்டறிந்து அவற்றை வணிகரீதியாக ஏற்றுமதி செய்வதிலும் ரிபேரா குடும்பத்தினர்கள் இருந்திருக்கிறார்கள். ரிபேரா குடும்பம் தவிர நாடார்கள், பர்னாந்துமார் , பல்டோனாக்கல், பாண்டியாபதி, ஃபிலிப்பின் குடும்ப உறுப்பினர்கள் நிலைத்து நிற்கின்றனர்.
நாவல் முழுதும் கடலும் கடற்கரையும் கடல் பயணமும் அதன் தொடர்பான ஆண் ஆதிக்கமும் இருந்தாலும் , அங்கங்கே சொல்லப்படும் பெண் கதாபாத்திரங்கள் நீங்கா இடம் பிடித்து விடுகிறது . குறிப்பாக முதல் நெகட்டிவ் கதாபாத்திரமான சித்தப்பாவின் மனைவியாக வரும் ரஞ்சிதம் இறக்கும் வரையிலும் தனது எதிர்மறை கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆசிரியரின் மற்றும் ஒரு அசாத்தியமான கையெடுப்பு என்னவென்றால் மதம் சார்ந்த பங்குதந்தைகளை பங்கம் இல்லாமல் குறை சொன்னது தான். “கோயில் பூனை திருட்டுக்கு அஞ்சாது”, என்று சொல்வது போல சாமியார்களின் மற்றொரு பக்கத்தை வெளிப்படையாக கொட்டி இருக்கிறார்.

கத்தோலிக்கம் காப்பதாக சொல்லிக்கொண்டு ஊர் பங்குகளுக்கு வரும் இந்த சாமிமார் தங்கள் நலனை பேணிக் கொண்டார்களே அல்லாமல் துளியும் மக்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை . தங்களுடைய நிர்வாக அமைப்புக்கு பங்கம் வருகிறபோதெல்லாம் இப்படி ஏதாவது பொது பிரச்சினையை தூண்டிவிட்டு ஊரை இரண்டாக்கி அந்த சூட்டில் குளிர் காய்வது கடற்கரை ஊர்களில் வாடிக்கையான நிகழ்வாகவும் இருந்திருக்கிறது.
“கொஞ்சமா சாப்பிட்டு அதிகமா வேலை பார்த்து எஜமான் விசுவாசத்தோடு இருக்கிற ஒரு கூட்டம் எங்கள் தமிழ்நாட்டில இருக்கு . நீக்ரோ அடிமை கிடைக்கலைன்னு ஏங்க கவலைப்படுறீங்க ..?”, என்று சொல்லி 1840 ல் ஏற்பட்ட வேர்ப் பஞ்சம் காலத்தில் இவர்களின் உழைப்பை உறிஞ்ச அவர்களை அள்ளிப்போட்டு கப்பல் கப்பலாய் 52 நாடுகளுக்கு மேல் கொத்தடிமைகளாக அனுப்பி இருக்கிறார்கள்.
இப்படி வணிகத்துக்கு மட்டும் பெயர் போன கொற்கை தென் தமிழகத்தில் கொலை நகரம் எனவும் பெயர் வாங்கியிருக்கிறது. வணிகம் நடக்கும் தோணிகளில் தண்டல்களுக்கே தெரியாமல் சரக்கு கடத்தும் முதலாளிமாரும், முதலாளிமாருக்கு தெரியாமல் சரக்குகளை கடத்தும் தண்டல்மாரும் கூட இருந்திருக்கிறார்கள்.
அந்தந்த காலகட்டங்கள் வரும்பொழுது அன்றைய அரசியலையும் , அதன் நிகழ்வுகளையும் கொற்கை சுட்டிக்காட்ட தவறவில்லை . உதாரணமாக துக்ளக் என்று நாளிதழில் சோ எனும் எழுத்தாளர் அன்றைய காலகட்டங்களில் கலப்படத்தை குறித்து அவர் வெளியிட்ட செய்திகளையும் துணுக்குச் செய்திகளாக கொற்கைக் கொண்டுள்ளது.
இப்படி பலதரப்பட்ட கலவைகளின் உணர்வுகளை வெளிக்கொணரும் விதமாக நாவல் நம்மை கூட்டிச் சென்றாலும் , தாய்ப்பாசம் கணவன் மனைவி ஊடல், கூடல் காதல் பரிவு பிரிவு முதலாளித்துவம் ஆதிக்கம் அடக்குமுறை மதச்சார்பின்மை மதமாற்றம் வணிகம் கொள்ளை கொலை தவறான உறவு முறை வாழ்வியல் அரசியல் என எல்லாவற்றையும் அலசி விடுகிறது.
கதைகளின் ஊடே அங்கங்கே கொடுக்கப்பட்டுள்ள சின்ன சின்ன காதல் ஜோடிகள் கதை பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி நம் மனம் கவர்ந்து விடுகிறார்கள். இளசுகளுக்கு இணையாக முதுமை காதல் பேசும் ஜோடிகளும் மனம் கவர…
“வெள்ளைக்காரன் தெரியுமா உனக்கு குடும்ப பிடிப்பே இருக்காது. ஜாலியா இருப்பான் . ஒரு குறிப்பிட்ட வயசு வரை பிள்ளை வளர்த்து விடுறத விட சரி.. வருஷம் பூராவும் உல்லாசப்பயணம் போய்கிட்டே இருப்பானாம்”, என்று புனிதாவின் தாத்தா பாட்டியிடம் பேசும் வசனங்கள் மெய் மறக்க வைக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க துணை இல்லாமல் இருக்கும் நபர்களின் புலம்பல்களும் ஆங்காங்கே உப்பளங்களாய் கண்முன்னே தெரிகிறது.
மூன்று தலைமுறைகள் கடந்த உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் கண் முன் காட்சிக்கு வருவது ஃபிலிப் தண்டல் மட்டுமே. இறுதியில் இதுதான் வாழ்க்கை இனிமேல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைக்கும் பொழுது வாழ்க்கை அவருக்கு தந்த பரிசு , இயல்பு வாழ்க்கையில் நமக்கும் கூட கிடைக்கலாம். நமக்கு கிடைக்கும் முன்னர் நாம் இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
கடற்கரை கிராமத்தில் பரதவர்களோடு வாழ்ந்த உணர்வு மேலிட்டாலும் பக்கங்களை கடத்த கடத்தவே அந்த மொழி கைவசமாகிறது. மொழி கைவசம் ஆன பின்னர் புலப்படாத வார்த்தைகளுக்கும் நம்மால் பொருள் புரிந்து கொள்ள முடிகிறது . இருப்பினும் புத்தகத்தின் இறுதியில் அதற்கான அகராதியும் , ஒவ்வொரு குடும்பங்களின் குடும்ப வரைபடமும் பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு என்று கூறலாம். ஆனால் அதற்கான தேவை நீங்கள் அவர்களில் ஒருவராக மாறிய பின்பு இருக்காது.
காலச்சக்கரத்தில் அமர்ந்து கொற்கையில் வாழ வேண்டுமா.. வாசித்து பாருங்கள் நீங்களும் இந்த நாவலை…
நூலின் விவரம்:
புத்தகத்தின் பெயர்: கொற்கை
ஆசிரியர் : ஜோ டி குரூஸ்
விலை : 1100
பக்கங்கள் : 1176
வகைமை : நாவல்
பதிப்பகம் : காலச்சுவடு
எழுதியவர் :

✍️பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


விமலா தேவிக்கு எனது பணிவான வணக்கமும் வாழ்த்துகளும். நன்றி ஜோ டி குருஸ்