கவிஞரைப்பற்றி
John Donne (/dʌn/ DUN; 22 January 1572[1] – 31 March 1631)[2] was an English poet and cleric in the Church of England.
ஜான் டன் 22 ஜனவரி 1572- 31- மார்ச் 1631 ஒரு ஆங்கிலக்கவி சிறந்த மொழிபெயர்ப்பாளர் அரசியல்வாதி ( எம்பியாக இருந்தவர்) ஒரு மதபோதகர் (பாதிரியார்)அனைத்திற்கும் மேலாக metaphysical poets. ( பௌதீகம் கடந்த கவிஞர்கள் ) என்ற கவிஞர்கள் குழுவின் முன்னோடி. அவருடைய கவிதைகளில் உணர்வுகளும் காட்சிப்படிமங்களும் முற்றிலும் வேறு பரிமாணங்கள் எடுக்கும். ஆங்கிலத்தில் அத்தனை கவிதை வடிவங்களையும் ( சானட்ஸ் இரங்கற்பா மதப்பாடல்கள் ) எழுதி முயற்சித்துப்பார்த்தவர். ஏறத்தாழ ஷேக்ஸ்பியருக்கு எட்டு வயதே இளையவர். பதினேழாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆளுமை.
ஆனால் வாழும் காலத்தில் பரவலாகக்கூட அறியப்படாதவர். டாக்டர் சாமுவேல் ஜான்சன் இவரை கவிதைகளை கெடுத்ததில் தலையாயவர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
‘’ முரண்பட்ட கருத்துக்களை வலுக்கட்டாயமாக கவிதைகளில் ஒன்றிணைத்தவர்கள் இந்த மெட்டாபிசிகல் கவிஞர்கள் ‘’ என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் டிஎஸ் எலியட் தான் இவரின் மேதமையை அடையாளம் கண்டு இவரை வெளிஉலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். பன்னிரெண்டு குழந்தைகளுக்கு தந்தையான டன் காதல் திருமணம் புரிந்தவர். கடைசிகாலம் வரையிலும் வறுமையிலேயே வாழ்ந்தவர். கடைசி காலங்களில் சிறந்த மதபோதகராக பல்லாயிரக்கணக்கான மக்களின் மத்தியில் மிகப்பிரபலமாக விளங்கியவர். சிறந்த அரசியல்வாதியாக வரமுடியவில்லை. ஆசைப்பட்டபடி நீதிபதியாக வரமுடியவில்லை. ஆனால் பிரசங்க கலை கைவந்தது. கடைசி காலங்களில் இறைவனைப்பற்றி அருமையான பலகவிதைகள் செய்தவர் .58 ஆண்டுகளே வாழ்ந்த ஜான் டன் ஆங்கிலக் கவிதைகள் நிலைத்திருக்கும் வரை தானும் நிலைத்திருப்பார்.

கவிதை 1
The Good-Morrow
காலை வணக்கம் காதலி
கவிதைச்சூழல்
இரவு முடிகிறது புதிய விடியல் பிறக்கிறது. இரவு முழுவதும் இணைந்திருந்த காதலியின் முகம் பார்த்த கணம் கவிஞரின் இதயக்கதவுகள் படீரெனத்திறக்கின்றன. உள்ளே நுழைந்தவருக்கு ஆன்மாவின் தரிசனம் கிட்டுகிறது. காதலர்கள் இருவரும் இதற்கு முன்பு இச்சைகளால் நிரப்பப்பட்ட காகிதம் தன்னிச்சையாக காற்றில் பறந்து திரிவது போல காற்றில் பறந்து திரிந்தவர்கள். ஒருவரை ஒருவர் அன்பாக நேசிக்க ஆரம்பித்த விநாடியிலேயே அவர்களின் மாசடைந்த உலகம் மாற்றமடைகிறது .அன்பென்னும் சாவி ஆன்மாவின் புதுஉலகை திறக்கிறது. கவிஞர் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு காதலை கொண்டாடுகிறார்.
கவிதை
மெய்யாகவே
நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறேன் அன்பே
நிஐமாகவே நேசிப்பதற்கும் முன்பு
நாம் எவ்வாறு இருந்தோம்?
தாய்ப்பாலை மறந்துவிட்டு
விசக்காம்புகளை சப்பித்திரியும்
இரு மழலைகள் போல அல்லவா?
திரும்ப முடியாத இருட்குகையின் ஆழத்தில்
மீளாத்துயிலின் அந்தகாரத்தில்
குறட்டைஒலிகளுக்குள் புதைந்து போயிருந்த
பாவப்பட்ட சீவன்கள் போல அல்லவா?
ஆம் அப்படித்தான்
கடந்த காலங்களில் நான் கொண்ட
எல்லா இன்பங்களும்
துயிலில் கண்ட கனவுகள் தானோ
எனில்
அத்தனை கனவுகளிலும் நான் கண்டதெல்லாம்
உன் சாயல்கள் அன்றி வேறில்லையே ?
விடிந்துவிட்டது
விழித்துக்கொண்டன நம் ஆன்மாக்கள்
ஒன்றை ஒன்று அன்பால் ஈர்க்கும்
அவைகளுக்கு இது இனிய காலையே
நம் கண்களின் பாவையிலெல்லாம்
அன்பு தளு தளும்புகின்றது
காணும் காட்சிகளிளெல்லாம்
பேரன்பின் பிம்பங்களே
நிரம்பி வழிகின்றன
காதலில் நிறைந்திருக்கும் கணம்
இந்த சின்னஞ் சிறிய அறையே
நமக்கு எல்லையற்ற பிரபஞ்சமாக
விரிந்து கொண்டே செல்கிறது
புதிய உலகை கண்டுபிடிக்க புறப்பட்டவர்கள்
கடற் பயணம் போகட்டும்
அவர்களை அடுத்தவர்கள்
தொடரட்டும்
புவி வரைபடங்களிலெல்லாம்
புதிய புதிய உலகங்கள் தோன்றட்டும்
ஆனால் நம்மிடமிருப்பது ஒரே உலகம் மட்டுமே
அதாவது உன்னிடம் ஒன்று
என்னிடம் ஒன்று
ஆனால் இணையும் போது
அவை இரண்டும் ஒன்றே
என் முகம் உன் கண்களிலும்
உன் முகம் என் கண்களிலும்
மிதக்கின்றன
கள்ளமற்ற இதயங்கள் இரண்டும்
கபடற்ற கண்களில்
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன
வடமுனையை மறுதலித்துவிட்டு
மேற்கை மட்டும்இணைத்துக்கொண்டால்
இணையான இரு அரைக்கோளங்கள் தோன்றுமா?
சமநிலை தானே வாழும் கலை
சமநிலையற்றவை யாவும் இணைந்தால்
இங்கே சத்தியமாக சாகின்றன
அன்பே
நம் இருவர் நேசமும் சமமானதால்
இருவர் நேசிப்பும் சமமானதால்
நமக்கு சாவென்பதே ஏது
அல்லது
நம்மை பிரிப்பதென்பது ஏது ?

கவிதை 2
Valediction: Forbidding Mourning
பிரிவென்பது அழுவதற்கல்ல
கவிதைச்சூழல்
காதலன் பணி நிமித்தமாக வெளிநாடு செல்கிறான். காதலி கண்ணீர் விடுகிறாள். காதலன் கவிஞன் . இணைதலைப்போலவே பிரிதலையும் கொண்டாடுவதே காதலின் தனிச்சிறப்பு என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். ஆத்மார்த்தமான காதலர்களுக்கு பிரிவு என்பதே இல்லை என்று உண்மையை கவிதையில் உரைக்கிறான்
உடல் சார்ந்த காதலர்களுக்குத் தான் பிரிவு என்பது வேதனையாது. ஏனென்றால் அவர்களின் காதல் கட்டுமானம் உடலை மையமாக வைத்து எழுப்பப்பட்டது. ஆனால் ஆத்மார்த்தமான காதலர்களுக்கு அது அவ்வாறனதல்ல. கிளையிலிருந்து இலை உதிர்தல் போல அது ஒரு இயல்பான நிகழ்வு. ஒரு சுவாசத்தை போன்றது அது. காற்று உள்ளே வருவதும் வெளியே செல்வதும் ஒரு இயற்கையான நிகழ்வேயன்றி வேறில்லை. என்று கவிஞர் காதலிக்கு உணர்த்துகிறார்.
கவிதை
உன்னதான ஞானிகள் தங்கள் ஆன்மாவிடம்
மிக மெல்லிய இரகசியக் குரலில் நான் கிளம்புகிறேன் என்று
இறுதி விடைபெற்று விடுகிறார்கள்
ஆனால் அவர்களின் அறியா நண்பர்களோ
இதோ மூச்சு போய்விட்டது
இல்லை இன்னும் இருக்கிறது என்று
விவாதத்தில் இறங்கி விடுகிறார்கள்
அன்பே கண்ணீர் வெள்ளம் வேண்டாம்
கதறல் வேண்டாம்
கூக்குரல் வேண்டாம்
பெருமூச்சுகள் புயலைப்போல
விம்மி எழவேண்டாம்
அவைகள் காதலின் புனிதத்தை
கறைபடிய வைத்துவிடுபவை
வா நாம் ஒருவரை ஒருவர் தழுவியபடி
காலத்தில் அப்படியே கரைந்து போய்விடலாம்
மெய்யறியா மனிதர்கள்
இந்த சின்னஞ்சிறு பூமியைப் போன்றவர்கள்
ஒரு சிறு நடுக்கத்திற்கே
யாவருக்கும் இது பயத்தையும்
உண்டாக்கி விடுகின்றது
நாமோ விண்வெளியில் சுழலும்
அண்ட சராசரங்கள் போன்றவர்கள்
எத்தனை வேகமாக மோதிக்கொண்டாலும்
எவருக்கும் சிறு அதிர்வையும் தருவதில்லை
உடலால் காதலை கட்டியமைத்தவர்கள்
தங்களுக்குள் ஓர் நாளும் பிரிவை
அனுமதிப்பதில்லை
உடல்பிரிந்துபோகும் போது
அவர்களை விட்டு விட்டு
காதலும்
பிரிந்து போய்விடுகிறது
ஆனால் நாமோ நம் காதலை
அன்பின் ஆன்மாவால் அல்லவா
கட்டியமைத்திருக்கிறோம் ?
கண்கள் கைகள் இதழ்கள்
இதர உறுப்புகள் பிரிகின்றன என
ஆன்மாக்கள் ஓர் நாளும் அழுவதில்லையே ?
அன்பே நமது இருவரின் ஆன்மாக்களும் ஒன்றல்லவா?
ஒன்றே தான் என்றால்
பிரிவு என்பது காதலில் உடைதலா ?
காதலின் நீட்சிதானே ?
தங்கத்தை தட்டினால் உடைந்து போகுமா ?
நீண்டு கொண்டேதானே போகும்
நம் நேசத்தைப்போல
நமது ஆன்மாக்கள் இரண்டென்கிறாயா?
சரி இரண்டென்றால் இரண்டுதான்
ஆனால் ஒன்றாக இணைக்கப்பட்ட இரண்டு
அதாவது
ஒரு கவராயத்தின் இரண்டு கால்கள் நாம்
தாளின் மத்தியில் நீ நிலையாக
நின்று கொள்கிறாய்
நான் உன் பிடியில்
உலகமெல்லாம் சுற்றி வருவேன்
நீ மட்டும் வளைந்து கொடுக்காவிட்டால்
வட்டம் என்பதேது ?
வரைதல் என்பதேது ?
நான் உன் பிடியில்
உலகமெல்லாம் சுற்றி வருவேன்
உலகமெல்லாம் சுற்றி வருபவன்
கடைசியில் உன் மடியில் தான் வந்து விழுவேன்
அன்பே !
இறுதியில் நாம் இருவரும்
ஒன்றாக இணையும் போதுதானே
மீண்டும் எழுகிறோம்
என் பயணம் ஆரம்பமான இடத்திலேயே
முடிவதும் உன்னிடம் தானே ?

கவிதை 3
கவிதைச் சூழல்
காதலியை கூடி மகிழ காதலன் எத்தனை எத்தனை வழிகளைத்தான் கண்டுபிடிக்கிறான். இங்கே ஒரு தெள்ளுப்பூச்சி காதலிலிருந்து கட்டிலுக்கு அழைத்துச் செல்கிறது.
The Flea தெள்ளுப்பூச்சி
By John Donne ஜான் டன்
கவிதை
இந்த தெள்ளுப்பூச்சியை உற்றுப்பார்
என்னை நீ மறுக்கும் காரணம்
எத்தனை அற்பமானது
என்று கண்டுகொள்வாய்
அது என்னுடலின் குருதியை முதலில் உறிஞ்சியது
பிறகு உன்னுடலில் இருந்தும் வேண்டிய அளவு
உறிஞ்சிக் கொண்டது
இப்பொழுது நம்மிருவர் குருதியும்
அதனுடலில் ஒன்றாக கலந்து விட்டன
அதாவது அதனுடலில் நமது ஈருயிர்கள்
இதை நீ பாவமென்பாயா
பழியென்பாயா ?
என் கன்னித்தன்மையை களவாடிவிட்ட
கயவன் என்பாயா?
என்னால் முடியாததை கேட்காமலே எடுத்துகொள்ளும்
அது
எத்தகைய கொடுத்து வைத்த ஜீவன் ?
பொறாமையாய் இருக்கிறது
என் அனுமதியின்றி என்னைத் தீண்டி
உன் அனுமதியின்றி உன்னை தீண்டி
உயர்ந்த பழச்சாறு போன்ற உன் இரத்தத்தை உறிஞ்சி
உடல் கொழுத்துக் கொண்டிருக்கிறது அது
ஓ …. ஒருடலில் மூவர் அதிசயம்
நீ நான் மற்றும் தெள்ளுப்பூச்சி
நாமிருவரும் திருமணமான தம்பதியராய்
அதனுடலிலே
உள்ளே நம் குருதிகலக்கும் முதலிரவின்
சிருங்கார படுக்கை
அதுவே நம் காதலின் கோவிலும் கூட
உன் பெற்றோர் விரும்பாவிட்டாலும்
உனக்கே பிடிக்காவிட்டாலும்
சின்னஞ்சிறு ராக்கெட்டைப்போல
தோற்றம் தரும் அதற்குள்ளே
நாமிருவரும் சங்கமித்து விட்டோம்
என்னை கொல்வது போல உனக்கு கோபம் வருகிறதா ?
ஆனால் அதற்காக அந்தப்பூச்சியை கொன்று விடுவதற்கு
ஏன் கைகளை உயர்த்துகிறாய்
மூன்று பாவங்கள் வந்து உன்னை சூழும்
உன்னை நீயே கொல்வதால் தற்கொலை
என்னை கொல்வதால் கொலை
மூன்றாவதாக ஒரு அப்பாவி ஜீவனை வதைப்பது
அன்பே ஏன் அதை அத்தனை சீக்கிரம்
கொன்று விட்டாய்
உன் நகங்கள் வேண்டுவது என்ன
ஒரு அபலைப்பூச்சியின் இரத்தப்பூச்சா?
உன் இரத்தத்தை பூப்போல உறிஞ்சியதைத்தவிர
அந்த தெள்ளுப்பூச்சி என்ன பாவம் செய்தது?
உன்னை என்னை ஒரு உயிரினத்தை
யாவையும் எத்தனை அநாயசமாக
ஒரு விரலால் நசுக்கிவிட்டாய்
அதற்காக குற்ற உணர்வு கொண்டாயா ?
நீ வெற்றி பெற்றுவிட்டதாய் எண்ணுகிறாய்
பயம் என்பது எத்தனை பொய்யானது என்று
இப்போது கண்டுகொண்டாயா?
நீ என்னோடு இணைந்திருந்தால்
ஒரு அப்பாவி பூச்சியின் உயிர்
பலியாகியிருக்காது அல்லவா?
மூலம் – ஜான் டன்
மொழிபெயர்ப்பு – தங்கேஸ்

