ஜான் கால்ஸ்வொர்த்தியின் நாடகம் ’ஸ்ட்ரைஃப்’ (Strife) – யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடியும் தொழிற்சங்கப் போராட்டம்.
—பெ.விஜயகுமார்.
ஜான் கால்ஸ்வொர்த்தி (1867-1933) ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்து சட்டம் படித்து தன் தந்தையைப்போல் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டியவர். ஆனால் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசையில் நாவல்கள், சிறுகதைகள் எழுதத் தொடங்கி சிறந்த நாடகாசிரியராக வெற்றி பெற்றார். தி சில்வர் பாக்ஸ், ஜாய், ஜஸ்டிஸ், தி லிட்டில் டிரீம்ஸ், தி பீஜியன்ஸ், ஃபௌண்டேஷன்ஸ் போன்ற முப்பத்திரெண்டு நாடகங்கள் எழுதினார்.1921இல் கால்ஸ்வொர்த்தி PEN (Poets, Essayists, Novelists) என்ற உலகாளவிய எழுத்தாளர்கள் அமைப்பின் தலைவரானார். 1932 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இப்பரிசின் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் PEN அமைப்பிற்குக் கொடுத்தார். எப்போதும் ஏழைகளின் நலன்கள் பற்றியே பேசியும், எழுதியும் வந்த கால்ஸ்வொர்த்தி, ஏழைகளுக்கு நிறைய பொருளுதவியும் செய்தார்.
சமூகப் பிரச்சனைகளையே தன் நாடகங்களின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தார். சமூகத்தின் மேல்தட்டு மக்கள் சுயநலத்துடனும், போலித்தனமாகவும் வாழ்வதை தனது நாடகங்களில் பகடி செய்தார். ஏழை மக்களின் வாழ்வியல் சோகங்களையே மேடைகளில் அரங்கேற்றினார். சட்டத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்பதால் எந்தவொரு பிரச்சனையையும் நடுநிலையிலிருந்து பார்த்தார். சோசலிசக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த கால்ஸ்வொர்த்தி முதலாளித்துவத்தின் கோர முகத்தை தன் நாடகங்களில் சித்தரித்தார். நாடகத்தைக் கலை வடிவமாக மட்டுமே மதித்த கால்ஸ்வொர்த்தி, அதன் மூலம் பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை. பிரச்சனையின் இரு பக்கங்களையும் காட்சிப்படுத்தி முடிவினை பார்வையார்களிடம் விட்டுவிடுகிறார்.
கார்ல் மார்க்ஸ் காலத்துக்குப் பின்னர் எழுத்துலகில் நுழைந்தாலும் கால்ஸ்வொர்த்தி மார்க்சிய சிந்தனைகள முழுவதும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் மேலோங்கியிருந்த கற்பனாவாத சோசலிசவாதியாகவே இருந்தார். வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாதது; அதன் இறுதியில் முதலாளித்துவம் வீழ்ந்து பட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற மார்க்சிய சித்தாந்தம் இவரின் எழுத்துகளில் பிரதிபலிக்கவில்லை. சமூகப் பிரச்சனைகளை ஒரு மிதவாதியாகவே அணுகினார். வர்க்கப் போராட்டத்தை விடுத்து வர்க்க ஒற்றுமையை வலியுறுத்தும் எழுத்தாளராகவே கால்ஸ்வொர்த்தியைப் பாக்கிறோம்.
’ஸ்ட்ரைஃப்’ நாடகத்தில் முதலாளித்துவக் கோட்பாடுகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள அந்தோனி என்ற டின் ஃபேக்டரி அதிபருக்கும், அந்த ஃபேக்டரியின் பொறியாளரும், தொழிலாளர்களின் தலைவருமான ராபர்ட்ஸுக்கும் இடையில் நடக்கும் மோதலே நாடகத்தின் கருப்பொருளாகிறது. டின் ஃபேக்டரி தொடங்கி முப்பதாண்டுகளுக்கும் மேலாக அதன் அதிபராக இருக்கும் அந்தோனி தொழிலாளர்களின் போராட்டத்தை நான்குமுறை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர். அவருக்குச் சரியான போட்டியாக அந்த ஃபேக்டரியின் தொழிலாளர்கள் தலைவராக ராபர்ட்ஸ் கம்பீரமாக எழுந்து நிற்கிறார். தொழிலாளர் வர்க்கத்தின் நலனை மட்டுமே மனதில் நிறுத்தி அவர்களின் நலன்களுக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்துப் போராடுகிறார்.
அந்தோனியின் மகன் எட்கர், மகள் எனிடு இருவரும் தந்தையைப்போல் இல்லாமல் தொழிலாளர்களைப் பரிவுடன் பார்க்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். எனிடு டின் ஃபேக்டரியின் மேலாளர் அண்டர்வுடு மனைவியுமாவார். அண்ணனும், தங்கையும் ஒருமித்த கருத்துடன் டின் ஃபேக்டரியில் நடக்கும் தொழிலாளார்கள் போராட்டத்தை ஆதரிப்பதுடன், தங்கள் தந்தையின் பிடிவாதம் கண்டு அஞ்சுகிறார்கள். எழுபத்தைந்து வயதான அவர் உடல்நலம் குறித்துப் பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் ஃபேக்டரியின் போர்டு ஆஃப் டைரக்டர்கள் வேன்கிலின், ஸ்கெண்டில்புரி மற்றும் வைல்டர் மூவரும் அந்தோனிக்கு ஆதரவாக நிற்கிறார்கள். போராடும் நிர்வாகத்துக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் சமரசம் செய்ய தொழிலாளர் நல அதிகாரி சைமன் ஹார்னஸ் முயற்சிக்கிறார்.
பல மாதங்களாக வேலை நிறுத்தம் நடப்பதால் தொழிலாளர் குடும்பங்கள் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகியுள்ளன. பசியின் கொடுமை வாட்டுகிறது. கடுமையான குளிர் காலத்தில் குளிர்காய நிலக்கரி இல்லாமல் தவிக்கின்றனர். ராபர்ட்ஸின் மனைவி ஆனி ராபர்ட்ஸ். சரியான மருத்துவம் இல்லாமல் நெஞ்சு வலியில் அவதிப்படுகிறார்.
நாடகத்தின் முதல் காட்சியில் எனிடு அண்டர்வுட் தம்பதிகளின் வீட்டில் போர்டு ஆஃப் டைரக்டர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காலை பத்து மணி. தொழிலாளர் நல அதிகாரி ஹார்னஸ் முன்மொழிந்துள்ள சமரச உடன்படிக்கையை ராபர்ட்ஸ் நிராகரித்துள்ள செய்தி தெரிய வருகிறது. தந்தையிடம் எட்கர் தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசுகிறார். ’’தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.’’ என்று தந்தையிடம் வேண்டுகிறான். அந்தோனி கோபத்துடன், ‘’எட்கர்! ஒன்றைப் புரிந்துகொள். ஒரு முறை நிர்வாகம் கீழிறங்கினால் தொடர்ந்து கீழிறங்க நேரிடும். ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால் அடுத்து ஒன்பது கோரிக்கைகளுடன் வருவார்கள். நீ பிறந்தபோது தொடங்கப்பட்ட இந்த ஃபேக்டரியை முப்பது ஆண்டுகளாக நான் தலைமைதாங்கி நடத்துகிறேன். உன் மென்மையான போக்கு நிர்வாகத்துக்கு உதவாது.’’ என்று சொல்கிறார்.
அவரைத் தொடர்ந்து மூன்று டைரக்டர்களும், ‘’ஆம்; எட்கர்! நிர்வாகத்தின் பங்குதாரர்கள் எப்போது டிவிடெண்டு கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு போர்டு ஆஃப் டைரக்டர்கள் ஆகிய நமக்கு உள்ளது. எனவே உன் தந்தை சொல்வதுபோல் ஃபேக்டரியின் லாபமே நமக்கு முக்கியம். தொழிலாளர்கள் போராட்டத்துக்கு அவர்களே காரணம். நம் தரப்பு நியாயத்தை மிஸ்டர் ஹார்னஸிடம் தெரிவித்துவிட்டோம். அவர் இரு தரப்புக்கும் பொதுவானவொரு நியாயத்தைச் சொல்லியுள்ளார். அதை ஏற்கமால் பிடிவாதம் பிடிப்பது தொழிலாளர்களின் தலைவர் ராபர்ட்ஸ்தான். உன் தந்தை சொல்வதே சரி. நாம் கீழிறங்கி வரவேண்டாம்.’’ என்று கூறுகிறார்கள். போர்டு ஆஃப் டைரக்டர்கள் கூட்டம் இத்துடன் முடிகிறது. எட்கர் மன வருத்தத்துடன் இருக்கிறார்.
கூட்டம் முடிந்ததும் அந்தோனியின் செயலர் ஹென்றி டென்ச் கூட்ட முடிவுகளை நோட்டில் எழுதி அதிபரிடம் கையெழுத்து வாங்குகிறார். அதிபர் அந்தோனி கையெழுத்திட்டதும் அவரிடம் பணிவுடன்,’’நீங்கள் இந்த ஃபேக்டரியின் நலன் குறித்துக் கவலைப்படுகிறீர்கள். ஆனால் மற்ற டைரக்டர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு லாபம் மட்டுமே குறி. தேவைப்பட்டால் உங்களைக் கூட தலைமையிலிருந்து நீக்கவும் தயாராக இருக்கிறார்கள். உங்களிடம் அவர்கள் உண்மையைப் பேசுவதில்லை.’’ என்ற ரகசியத்தைக் கூறுகிறார். அதிபர் கனத்த மனதுடன் செல்கிறார்.
நாடகத்தின் அடுத்த காட்சி தொழிலாளர்களின் தலைவர் ராபர்ட்ஸ் வீட்டில் நடக்கிறது. மதியம் மூன்று மணி. ராபர்ட்ஸ் மனைவி ஆனியைச் சந்திக்க எனிடு வருகிறார். ஆனி, சில காலம் எனிடுக்கு பணிப் பெண்ணாக வேலை பார்த்துள்ளார். எனிடு அவளிடம் எஜமானியாகப் பழகாமல் தோழியாக அன்புடன் பழகுகிறார். ஆனி ராபர்ட்ஸ் சமையலறையில் இருக்கிறார். வீட்டில் குளிர் காய்வதற்குப் போதுமான நிலக்கரி இல்லை. ஆனி குளிரில் நடுங்கிக் கொண்டு சமையலறயில் உட்கார்ந்துள்ளார். ‘’ஆனி! நான் உனக்கு அனுப்பிய பொருட்கள் எதையும் நீ எடுத்துக்கொள்ளவில்லையே, ஏன்?’’ என்று எனிடு கேட்டதும்,’’ஆம்; உங்களிடமிருந்து எந்த உதவியையும் என் கணவர் விரும்பவில்லை. எனவேதான் உங்கள் உதவியைத் திருப்பி அனுப்பிவிட்டேன்.’’ என்கிறார் ஆனி.
’’ஆனி! உன் கணவரிடம் போராட்டத்தை நிறுத்தச் சொல். தொழிலாளிகள் குடும்பங்கள் அனைத்தும் சிரமப்படுகினறன. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, குளிர் தாங்காமல், நோயில் விழுந்து வாடுகின்றனர்,’’ என்று எனிடு சொன்னதும்,’’மேடம்! இதை உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள். அவரின் பிடிவாதமே போராட்டத்திற்கான காரணம். என் கணவர் அவர் கொள்கையில் உறுதி கொண்டவர். தொழிலாளர்கள் நலனை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்,’’ என்று ஆனி சொல்கிறாள். அப்போது டின் ஃபேக்டரி தொழிலாளர்கள் வீட்டுப் பெண்கள் ஆனியைப் பார்க்க அங்கு வருகின்றனர். ஆனியைப் பார்த்ததும், ‘’மேடம்! நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள்? வேவு பார்க்க வருகிறீர்களா?’’ என்று எனிடை கோபத்துடன் கேட்கிறார்கள். உடனே எனிடு, ‘’ஆனி! நான் மருத்துவரை அனுப்புகிறேன். அவர் உன் உடல்நிலையைச் சோதித்துப் பார்க்கட்டும், என்று சொல்லி அங்கிருந்து வெளியேறுகிறார்.
எனிடு வெளியேறும்போது ராபர்ட்ஸ் வீட்டுக்குள் நுழைகிறார். ’’ராபர்ட்ஸ்! உங்கள் மனைவி ஆனியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. போராட்டத்தை நிறுத்திவிட்டு தயவுசெய்து அவளின் உடல்நிலையைக் கவனியுங்கள்’’என்கிறார். ’’எங்கள் கோரிக்கைகளை வெல்லாமல் நாங்கள் போராட்டத்தை முடிக்க முடியாது. உங்கள் தந்தை பங்குதாரர்களின் டிவிடெண்டு குறித்துக் கவலைப்படுகிறார். ஆனால் ஏழைத் தொழிலாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்கிறார். போராட்டத்தை முடிப்பது அவர் கையில்தான் இருக்கிறது.’’ என்கிறார். எனிடும் மற்ற பெண்களும் வெளியேறியதும், ராபர்ட்ஸ் தன் கோட்டைக் கழற்றி குளிரில் நடுங்கும் ஆனியின் மீது போர்த்துகிறார். ’’ராபர்ட்ஸ்!’’நீங்கள் ஏதேனும் சாப்பிடுங்கள். காலையிலிருந்து நீங்கள் எதுவும் சாப்பிடவில்லை’’ என்கிறார் ஆனி. ’’வேண்டாம் ஆனி; நீ உன் உடம்பைப் பார்த்துக்கொள். நான்கு மணிக்கு தொழிலாளர்கள் கூட்டம் உள்ளது.’’ என்று சொல்லி தன் அன்பு மனைவியிடமிருந்து விடைபெறுகிறார் ராபர்ட்ஸ்.
அடுத்த காட்சி ஃபேக்டரி அருகிலிருக்கும் ஒரு கூடாரத்தில் நடக்கிறது. தொழிலாளர்கள் கூடியுள்ளனர். தொழிலாளர் நல அதிகாரி ஹார்னஸ் முதலில் பேசுகிறார். நிர்வாகம் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளையும், ஏற்க மறுக்கும் கோரிக்கைகளையும் விளக்குகிறார். பொறியாளர்கள் மற்றும் ஃபேக்டரி உலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, சனிக்கிழமை இரவு நேரப் பணிக்கு அதிகப்படியான சம்பளம் ஆகிய கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள நிர்வாகம் மறுக்கிறது. மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. தொழிலாளர் நல அதிகாரி என்ற முறையில்,’’நான் இதை ஆதரிக்கிறேன். இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்.’’ என்று சொல்லி முடிக்கிறார்.
தொழிலாளர்கள் தங்கள் கருத்தினைச் சொல்கிறார்கள். சிலர் ராபர்ட்ஸை ஆதரித்து போராட்டம் தொடரட்டும் என்கிறார்கள். பலர் ’’இத்துடன் போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம். இதற்கு மேல் நம் குடும்பத்தினர் தாக்குப் பிடிக்க மாட்டார்கள். குழந்தைகள் பட்டினி கிடப்பதைப் பார்ப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஹார்னஸ் இது திருப்திகரமான தீர்வு என்கிறார். மேலும் தேவாலயமும் இதற்கு மேல் போராட்டம் தொடர வேண்டாம் என்று நினைக்கிறது. எனவே போராட்டத்தை நிறுத்திக்கொள்வோம்.’’ என்கிறார்கள். இறுதியில் ராபர்ட்ஸ் பேசுவதற்கு எழுகிறார்.
ராபர்ட்ஸ் உணர்ச்சிமிகு உரையாற்றுகிறார். ‘’நிர்வாகம் தொடர்ந்து நம்மை ஏமாற்றுகிறது. நிர்வாகத்துக்கு அடிபணியச் சொல்லி நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். ஹார்னஸும் நிர்வாகத்தின் முடிவு சரியானதே என்கிறார். தேவாலயம் போராட்டத்துக்கு எதிராக இருப்பதில் ஆச்சரியமில்லை. தேவாலயம் இயற்கைக்கு எதிராகவே பேசும். ஆனால் நாம் தான் இயல்பு நிலையை அறிவோம். இன்னும் ஒரு வாரம் ஒற்றுமையுடன் போராடுவோம். இறுதி வெற்றி நமதே என்று அவன் பேசும்போது, ஒரு பெண் ஓடிவந்து ராபர்ட்ஸ் மனைவி ஆனி இறந்த செய்தியைச் சொல்கிறார். அதிர்ச்சியில் ராபர்ட்ஸ் வீட்டுக்கு ஓடுகிறார். ராபர்ட்ஸ் சென்ற பின்னர் போராட்டத்தை நிறுத்துவது என்ற முடிவைத் தொழிலாளர்கள் எடுக்கின்றனர். முடிவை எடுத்துக்கொண்டு ஹார்னஸ் நிர்வாகத்திடம் செல்கிறார்.
மூன்றாவது காட்சி மீண்டும் எனிடு – அண்டர்வுடு தம்பதிகளின் வீட்டில் நடக்கிறது. எனிடு தன் அண்ணனிடம் ராபர்ட்ஸ் வீட்டுக்குச் சென்றதைச் சொல்கிறார். ராபர்ட்ஸ் மனைவி ஆனியின் உடல்நிலை, மிகவும் மோசமாக இருக்கிறது. தொழிலாளர்கள் குடும்பத்துப் பெண்களும், குழந்தைகளும் சொல்லில் அடங்கா துயரத்தில் இருக்கிறார்கள். ராபர்ட்ஸின் பிடிவாதத்தால் மட்டுமே போராட்டம் தொடருகிறது என்று சொல்லி ஆதங்கப்படுகிறார். எட்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிலாளர்கள் நலங்கருதிதானே ராபர்ட்ஸ் பிடிவாதமாக இருக்கிறார். இதில் தவறேதும் இல்லையே என்கிறார். இருவரும் தந்தையின் உடல்நிலை குறித்துக் கவலையடைகிறார்கள்.
நிர்வாகத்தின் செயலாளர் ஹென்றி டென்ச் டைரக்டர்கள் கூட்டம் தொடங்கவிருப்பதைத் தெரிவிக்கிறார். எட்கர் தங்கையிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறார். அந்தோனி கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்துள்ளார். போர்டு ஆஃப் டைரக்டர்கள் முடிவை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று ஹார்னஸ் சொன்னதும் டைரக்டர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அதிபர் அந்தோனி கோபத்துடன்,’’இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு சமரசத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்வாகத்தின் நலம் காக்கவே நாம் இருக்கிறோம். இது ஏதோ நமக்கும் நம் ஃபேக்டரி தொழிலாளர்களுக்கும் இடையிலான போராட்டம் மட்டுமல்ல. இது முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான போராட்டம். இந்தப் போராட்டத்தில் நாம் தோற்கக்கூடாது. அது இந்த நாட்டின் தோல்வியில் முடியும். உணர்ச்சிகளை அடக்கி ஆளக் கற்றுக் கொள்ளுங்கள். ஃபேக்டரியின் நலனுக்கு எதிரான இந்த முடிவை நான் ஏற்க முடியாது.’’ என்கிறார்.
தொழிலாளர்கள் பிரதிநிதிகள் வருகை அறிவிக்கப்படுகிறது. ராபர்ட்ஸ் தவிர மற்றவர்கள் வருகிறார்கள். தொழிலாளர் நல அதிகாரி ஹார்னஸ் முன்மொழிவை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள். அதிபர் அந்தோனி தவிர மற்ற டைரக்டர்கள் வரவேற்கின்றனர். ராபர்ட்ஸின் வருகை அறிவிக்கப்படுகிறது. அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள். ‘’என்னுடைய வருகை உங்களை எல்லாம் ஆச்சரியப்படுத்தலாம். இந்தப் போராட்டம் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக வந்துள்ளேன். எங்கள் கோரிக்கைகள் எதையும் விட்டுகொடுக்க முடியாது.’’ என்று ராபர்ட்ஸ் சொல்லி முடித்ததும் ஹார்னஸ்,’’தொழிலாளர்களுடனான ஒப்பந்தம் முடிந்துள்ளது. இதோ டைரக்டர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறார்கள்’’ என்றதும் அந்தோனியும், ராபர்ட்ஸும் அதிர்ச்சி அடைகிறார்கள். எந்த இரண்டு வர்க்கங்களின் சார்பாக இவ்விருவரும் போராடினார்களோ அவர்களாலேயே இருவரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தம் கையெழுத்தானதும் அந்தோனி அதிபர் பொறுப்பிலிருந்து விலகுவதை அறிவிக்கிறார். ’’நாம் இருவரும் தோல்வியைத் தழுவி உள்ளோம்’’ என்று அந்தோனியைப் பார்த்து ராபர்ட்ஸ் உணர்ச்சி பொங்கிடச் சொல்கிறார். வெறுப்புகளை மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் பார்த்துக் கொள்கிறார்கள். தள்ளாடி நிற்கும் தங்களின் தந்தையை எட்கரும், எனிடும் கைத்தாங்கலாக நடத்திச் செல்கின்றனர். தள்ளாடி நிற்கும் ராபர்ட்ஸைப் பார்த்து ஹார்னஸ், ‘’அமைதியுடன் வீட்டுக்குச் செல்லுங்கள் ராபர்ட்ஸ்!’’ என்று சொன்னதும் ‘’வீட்டுக்கா? வீட்டுக்கா?’’ எங்கிருக்கிறது வீடு?’’ என்று கேட்டு அதிர்ந்து நிற்கிறார். திரை விழுகிறது.
’ஸ்ட்ரைஃப்’ நாடகம் பல உண்மைகளை விளக்குகிறது. தொழிலாளி வர்க்கம் சமரசமின்றி போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும். போராட்ட முடிவை தலைமைதான் எடுக்க வேண்டும். ராபர்ட்ஸைப் புறக்கணித்து மற்றவர்கள் எடுக்கும் முடிவு தொழிலாளர் இயக்கத்தை பின்னுக்குத் தள்ளும் என்பதை உணர்த்துகிறது. போராட்டத்தைத் தொடங்கத் தெரிந்த ராபர்ட்ஸ் அதை எப்போது முடிக்க வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கிறார். கோரிக்கைகள் அனைத்தையும் ஒரே போராட்டத்தில் முடிப்பது சாத்தியமில்லை என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை. போராட்டம் ஒரு தொடர்கதை என்பதை தொழிலாளர் தலைவர் ராபர்ட்ஸும், சமரசம் தோல்வியாகாது என்பதை அதிபர் அந்தோனியும் அறியாததே அவர்களின் தோல்விக்குக் காரணமாகிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஸ்ட்ரைஃப் (Strife) |
| ஆசிரியர்: | ஜான் கால்ஸ்வொர்த்தி (John Galsworthy) |
| வெளியீடு: | BK Publication |
| விலை: | ₹.199 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பெ.விஜயகுமார், மதுரை- 18. இமெயில்: vijayakumarmuta@gmail.com |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

