கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH) | John Steinbeck Kopathin Kanigal

 

*ஓர் முக்கிய அறிவிப்பு

இந்நூலின் விலையோ, அதன் பக்கங்களோ, நூலின் எழுத்தோ வாசிப்பிற்கு குறுக்கே எங்கும் தடையாக நிற்காது; மாறாக எழுத்து உங்களை வசீகரிக்கும்; மனதை கொள்ளை கொள்ளும் என்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறேன் தோழர்களே. இந்நூலை வாசித்த பின்பு “இந்நூலை ஏன் இவ்வளவு காலம் வாங்காமல் விட்டுவிட்டோம்” என்று நாம் நினைக்கத் தோன்றும்.

இதோ 2020ல் நான் வாசித்து மிரண்டுபோய், பல நாட்கள் இந்நூலின் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த அனுபவம் ஏற்பட்டதென்றால் பாருங்களேன். இப்போது வரை அதன் சூடு குறையாத அனுபவத்தை உங்களோடு.
கொஞ்சம் நேரமானாலும் வாசித்து விடுங்கள் தோழர்களே என்னுடைய பதிவை. ஏனெனில் 50 வயது ஆணிற்கு குழந்தை பெற்றெடுத்த இளந் தாய் ஒருவர் தாய்ப்பால் கொடுப்பார். ஏன் என்பதற்கு உள்ளே வாசியுங்கள் விடை கிடைக்கும்.

*நூலில் நுழைவோம்…

அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களின் வரிசையில் ஜான் ஸ்டீன்பெக் அவர்கள், அமெரிக்காவின் பொருளாதார பெருவீழ்ச்சி காலத்து விவசாய அரங்கத்தையும், அப்போது நடைபெற்ற பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான இந்நாவலை 1939ல் ஆங்கிலத்தில் எழுதினார்.

அதை பாரதி புத்தகாலயம் வெளியீடாக தமிழில் கி.ரமேஷ் அவர்கள் மிக மிக அழகாக 2019ல்
மொழிபெயர்த்த நூல் தான்
கோபத்தின் கனிகள்!

இந்த நாவலை யாரொருவர் படித்த பின்பும் நாடோடியாக செல்லும் மக்கள் மீது செலுத்தும் பார்வை மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில் உலகம் முழுவதும் பண்ணையடிமை, நிலபிரபுத்துவ கொத்தடிமை, முதலாளித்துவ சுரண்டல் என்கிற பரிணாமத்தில் இயங்கி வருகிறது.

உலக மக்களுக்கு அமெரிக்கா சொர்க்க பூமியாக தெரிவது போன்ற ஒரு மாயத் தோற்றம் நீண்ட நாள் நீடித்தது. இப்போது கொரானா அவற்றையெல்லாம் உடைத்து போட்டு அங்கே தெரிவது காணல் நீரே என்பதை நிரூபித்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவது என்பது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

பொருளாதார நெருக்கடி வரும்போதெல்லாம் வங்கிகளும், லேவாதேவியினரும், சோம்பேறி கார்பரேட்டுகளும் மக்களின் வயிற்றை திருடி விடுவதும், வாழ்க்கையை பூட்டி விடுவதும் வாடிக்கையாகி விடுகிறது.

இந்த நாவலில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் நிலத்தோடு ஒட்டி உறவாடிய ரத்தமும் சதையுமாகக் கொண்ட குத்தகை விவசாய குடும்ப உறவுகள்.

கடனை பெற்றவர்கள், காலநிலை உட்பட எல்லாம் கைவிட்ட பிறகு வாங்கிய கடனை அடைக்க வழியில்லாத சூழலில், வீரம் கொண்ட? வங்கிகள் உடனடியாக அவர்களை வெளியேற்றும் செயலில் இறங்கி, முதலாளித்துவ விசுவாசத்தைக் காட்டி, அவகாசம் கொடுக்காமல் வெளியேற்றும். அவர்களின் வீடும் நிலமும் பெரும் இரைச்சல் கொண்ட டிராக்டர்கள் உடனடியாக சமப்படுத்தி விடும்.

இப்படியாக வீடு நிலமிழந்த இலட்சக்கணக்கான குடும்பங்கள் பிழைப்பைத் தேடி ஆயிரக்கணக்கான கிமீ பயணித்து, தங்களுடைய பசியோடு சண்டை போடும் காட்சிகளை அரங்கேற்றினர்.

‘கலிஃபோர்னியா’ ஆம் மக்களின் மனங்களில் பதிந்திட்ட அழகிய நகரம். ஆரஞ்சும், பீச் பழமும், திராட்சையும், ஆப்பிளும் கொட்டிக் கிடக்கும் பகுதிக்கு சென்றுவிட்டால் நல்ல வீடு வாங்கலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம், எந்நேரமும் பழங்களை உண்டு மகிழலாம் என்ற கணவுகளோடு ’66 உயர்ரக’ சாலைகளில் மூட்டைப்பூச்சிகளாய் உடைசல் ட்ரக், கார்களில் மக்கள் அலையலையாக பயணிக்கும் காட்சி வாசிக்கும் நம் நெஞ்சை பதற வைக்கும்.

வயதானவர்கள், குழந்தைகள், கற்பினிகள், அவர்களின் உணவாக உப்புக்கண்டம் போட்ட பன்றி இறைச்சிகள் கொஞ்சம், கொஞ்சம் உருளைக்கிழங்குகள், சோள மாவு, அடுப்பு என முடிந்தவற்றை தேய்ந்துபோன சக்கரங்களின் ட்ரக் மூச்சுத்தினறும் வரைக்கான பொருட்களை ஏற்றிய வாகனம், மழை, வெயில், புழுதிக்காற்று என எல்லாவற்றையும் எதிர்கொண்டு புலம்பெயரும் தொழிலாளர்கள்.

வழியில் இறந்தவர்களை அங்கேயே புதைத்துவிட்டு புலம்பெயரும் கண்ணீர் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும்.

ஆங்காங்கே இரவு நேரங்களில் கூடாரமிட்டு தங்கும்போது, இவர்களின் எதிர்பக்கமாக பயணித்தவர்கள் பயமுறுத்தும் காட்சிகள் இன்னும் மிரட்டும்.

‘ஒரு தோட்டத்தில் ஆரஞ்சுப்பழங்களை பறிக்க 500 வேண்டுமெனில் நிலச்சுவான்தார் 2000 பேர் வரை திரட்டி, 5செண்ட் கொடுத்து வாங்க வேண்டிய ‘வேலைகளுக்கு 1செண்ட் கொடுப்போம்’ என்று கூறினாலும், பசியின் கொடுமையால் விழுந்தடித்து மக்கள் செல்வார்கள். ஏனெனில் மக்கள் பலநாள் பட்டினியில் இருக்கும்போது அதை பயன்படுத்தி அவர்கள், தொழிலாளர்களிடம் போட்டியை உருவாக்கி தங்களின் இலாபவெறியை தீர்த்துக்கொள்வார்கள்’ என்று எதிர்பட்டவர் கூறும்போது விரக்தி அடைந்தாளும் நம்பிக்கையோடு பயணிப்பர்.

ஒரு விவசாயியிடம் 10இலட்சம் ஏக்கர் நிலம் உள்ளது என்றால்; பல ஆயிரம் ஏக்கர் நிலம் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றால் பிறகு எப்படி மக்களிடம் நிலம் இருக்கும்?

அப்படி துரத்தியடிக்கப்பட்டவர்கள் வேலை தேடி, நகரங்களில் ஓடும் சாக்கடை பகுதிகளிலும், மேம்பாலத்தின் கீழும், கூடாரம், புதர்செடிகளின் கீழும், அட்டைகள் கொண்டு கட்டிய கதவில்லா வீடுகளுடனும், நாற்றத்துடனும், பல நாட்கள் பட்டினியுடனும், எந்நேரமும் பெரும் விவசாயிகளின் கையாட்களாக இருக்கும் காக்கி உடைக்காரர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகிக் கொண்டும், அப்படி பலியானவர்கள் மறுநாள் ‘பசியோடிருந்த நாடோடியின் உடல் கண்டெடுக்கப்பட்டது’ என்ற செய்தியோடு நாளிதழ் அடையாளப்படுத்திவிட்டுச் செல்லும் அவலத்தோடும் தொடரும் புலம்பெயர்ந்தோர் வாழ்வு!

‘எல்லோரும் புறப்படுங்கள் விரைவாக கிளம்ப வேண்டும் பீச் பழத்தோட்டத்தில், பருத்திக்காட்டில் வேலை இருக்கிறது உடனடியாக சென்றால்தான் வேலை கிடைக்கும்’ என்று ஒவ்வொரு நாளும் கூடாரத்தை களைத்து இரவோடு இரவாக, அதிகாலை என தூக்கம் இல்லாமலும், பாதுகாப்பு இன்றியும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

நீங்கள் நமது இந்திய நகரங்களில் ஓடும் பெரும் சாக்கடை ஆறுகளின் ஓரங்களில் வாழும் மக்களைக் கேட்டுப்பாருங்கள் அவர்களின் புலம்பெயர்வு துயர வாழ்வு நம்மை மிரட்டும்படி இருக்கும்.

சென்னை கூவம் நதிக்கரை ஓரம் இரயிலில் செல்லும்போது கொஞ்சம் கவனியுங்களேன். அவர்கள் விவசாயிகளாக, விவசாயத் தொழிலாளியாக, வாழ்வு தேடி நகரத்திற்கு வந்தவர்கள் என வகை வகையாக இருப்பர். காவல்துறையினரின் பூட்ஸ் கால்களின் சத்தம் அங்கெல்லாம் அடிக்கடி கேட்கும்.

தற்போது இந்தியாவில் விவசாயிகளிடம் ஒரு புது முறை புகுத்தப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஒரு விவசாயி பயிர் வைக்கும்போதே அந்தப் பயிறுக்கு விலை நிர்ணயம் செய்து பெரும் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலை உருவாகியுள்ளது. அந்த விவசாயிக்கு ஆரம்பத்திலே பணம் கிடைத்தால் சந்தோஷம் தானே. அங்குதான் நிறுவனங்களின் சூழ்ச்சி ஆரம்பிக்கிறது. காலச்சூழலால் மகசூல் எடுக்கமுடியாமல் போனால் முன்னரே தொகை கொடுத்த நிறுவனத்திற்கு அறுவடை பயிர் வழங்கமுடியாது. வேறு வழியின்றி நிலத்தை இழக்கும் சூழல் உருவாகும். ஒரு விவசாயி, இரண்டு விவசாயி அல்ல ஒட்டுமொத்த சிறு குறு விவசாயிகளை திட்டமிட்டு நிலத்தை விட்டு வெளியேற்றும் ஏற்பாடு இங்குதான் ஆரம்பிக்கிறது. இது ஆபத்தான போக்கு.

சுதந்திரமான விவசாயம், உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணய உரிமை, இடுபொருள், உரம் போன்றவற்றிற்கு மானியம் போன்றவை அரசால் விவசாயிகளுக்கு கொடுக்க முடியாமல் போவதால் ஏற்படும் கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலை என இந்தியாவின் விவசாயத்திற்கு வரும் நெருக்கடியை இந்நாவலில் நாம் பொருத்திப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் பெரு விவசாயிகள், வங்கிகள் வைப்பதே சட்டம். 20, 30 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு நெருக்கடிதான்.

‘இதோ பாருங்க நேற்று 1மணி நேரத்திற்கு 30செண்ட் கூலி கொடுத்தேன். இன்றைக்கு 25செண்ட்தான் கொடுக்கச் சொல்லுது வங்கி. அப்படி இல்லனா அடுத்த வருடம் கடன் கொடுக்கமாட்டேன் என்கிறது வங்கி. நான் என்ன செய்வது?’ என புலம்பெயர் தொழிலாளர்களைப் பார்த்து சிறுவிவசாயி கூலி விவரத்தைச் சொல்கிறார். தினம் தினம் கூலி மாறும். 10 செண்ட் என குறைந்த கூலியும் வரும். தொழிலாளர்கள் அன்றாடம் கால் வயிற்றோடு மட்டுமே சாப்பிட வேண்டும். ‘மிச்சம் இருந்தால் அவர்களை சிந்திக்க வைத்துவிடும். வசதிகளை தேடும்’ என்கிற கொடூர எண்ணங்கள் அழகிய கலிஃபோர்னிய அழுகிய சிந்தனைகள் பெரும் நாற்றமெடுக்கும்.

‘கூலி குறைவாக இருக்கிறது எங்களால் சாப்பிட முடியவில்லை’ என ஒருவர் குரலை உயர்த்தினாலும் அவன் ‘சிகப்புக்காரன்’ என்கிற முத்திரைக் குத்தப்பட்டு மறுநாள் சாக்கடை ஓரங்களில் நாடோடிப் பிணமாக கிடப்பான். இரவு நேரங்களில் அவர்கள் தங்கியிருக்கும் கூடாரங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். மறுநாள் செய்தித்தாளில் ‘உள்ளூர் மக்களிடம் சண்டையிட்ட நாடோடி வன்முறையாளர்களின் கூடாரங்களை அவர்கள் எரித்தனர்’ என செய்தி வரும். இவையனைத்தும் முன்னிரவில் ‘எவ்வளவு கூலி கொடுப்பீர்கள்’ என்று தொழிலாளர்களில் ஒருவர் துணிச்சலாக கேட்டதின் விளைவாக கூலி காண்ட்ராக்டரால் நடத்தப்பட்ட கொடூரமாக முடியும்.

ஆனால் இப்போது பெரும் பணக்காரர்கள் பயப்பட ஆரம்பித்துள்ளனர். ஏனெனில் எதுவுமில்லாதவர்கள் பசியால் மடியும் நிலை வருகிறதே என்கிற கோபம் பெருந்திரளாக நாடெங்கும் கொப்பளிக்க ஆரம்பித்துள்ளது. எப்போது சொத்துக்கள் பறிபோகுமோ என்கிற கவலையில் அவர்கள் உழல ஆரம்பித்துள்ளனர். ஏனெனில் புலம்பெயர்ந்தவர்கள் நகரங்களை பெரிதும் ஆக்கிரமித்துள்ளனர். எப்போது கலகம் (நிலம் உழுபவனுக்கே என்னும்) வெடிக்குமோ என்கிற சூழல். ஆங்காங்கே கூட்டங்கள் கூடுவது, சங்கம் அமைப்பது என ஒரு பெரும் கோபத்தின் கனிகள் பழுக்க ஆரம்பித்துள்ளது. இச்சூழலில் துப்பாக்கி ஏந்திய காக்கிச்சட்டைகளின் நியமனம் அதிகரிக்கிறது. அதைவிட பசி அதிகரிக்கிறது. இயேசுவின் போதகர் உட்பட புலம்பெயர்வில் வருவார். ஏனெனில் மக்கள் கிராமங்களில் இருந்தால்தானே அவருக்கு நற்செய்தி சொல்லும் வேலை இருக்கும். அப்படியான ஒரு போதகர் சங்கம் அமைத்து துப்பாக்கிக்கு பலியானார். மதம் பாவப்பட்ட மக்களுக்கு போதைதானே. அந்தப் போதை இங்கு காணாமல் போகிறது. மதம் ஒரு மனிதனின் ஞாயமான கோபத்தைக் கட்டுப்படுத்த வந்த தூண்டில் கயிறு எனில் மிகையல்ல.

எல்லாவற்றிற்கும் மேலாக நெருக்கடி காலத்தில் பெண்களின் வீரம், சிந்தனை, செயல்பாடு அனைத்தும் சிறப்பாக அமைவதை பார்க்கலாம். கிராமத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பத் தலைவனான ஆண்தான் எல்லாமும். ஆனால் நெருக்கடி வரும்போது மட்டும் பெண் முன்னுக்கு வருகிறார். நீங்கள் குடும்பத்திலும் இந்நிலையை உற்றுக்கவனியுங்கள் தெரியும்.

ஒருவருக்கு துன்பம் என்றால் துன்பத்திலிருக்கும் இன்னொரு ஏழைதான் உதவிக்கு வருவார். இந்நாவலில் அதுபோல் நிறைய உதவும் ஏழைகளை காணலாம்.

சீசன் காலங்களில் ஆரஞ்சு, பீச், திராட்சை, ஆப்பிள் என விளைந்த கிளைகள் தாங்க முடியாமல் குச்சிகளின் முட்டுகளில் தாங்கி நிற்கும் பழக் கிளைகள். எங்கும் மனம் பரப்பும். ஒரு ஆரஞ்சுப் பழத்தை குணிந்து எடுத்தாலும் அங்கே நிற்கும் காக்கித் துப்பாக்கி சுடும். விலை அதிகம் போகாத காலங்களில் பழங்கள் பள்ளம் தோண்டி புதைக்கப்படும். ஆரஞ்சுப் பழங்களின் மீது மண்ணெண்ணெய் பீச்சி அடிக்கப்படும். பழங்கள் துற்நாற்றத்துடன் அழுகிய சாறு ஓடும். உருளைக்கிழங்குகள் ஆற்றில் மிதக்க விடப்படும். அவற்றை பட்டினி வயிறு வலைபோட்டு பிடித்தால் சிறை அல்லது மரணம் கிடைக்கும். பன்றிகளின் இறைச்சிகள் வெட்டப்பட்டு குழிகளில் மூடப்படும்.

மழைக்காலத்தில் அல்லது வேலை இல்லாத காலத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிலை கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதலாம். பல நாட்கள் பட்டினியோடுதான் வாழமுடியும். உணவுப் பொருள் திருடுதல் தொடங்கி, அவலம் பல கிடைக்கும்.

‘ஏரில் கட்டி உழுவதற்காகக் குதிரைகளை வைத்திருக்கும் ஒருவர் அவற்றுக்கு வேலையில்லாத போது அவற்றைப் பட்டினி போடமாட்டார். காரணம் அவை குதிரைகள் -நாம் மனிதர்கள்’ வேலையில்லா காலத்தில் குதிரைக்கு கிடைக்கும் உணவு புலம்பெயர் தொழிலாளிக்கு கிடைக்கவில்லை என அவர்கள் புலம்புவது நம் காதுகளில் விழும்.

அப்படி இந்நாவலில் ஜோடு, அம்மா , கர்ப்பிணி மகள் இடையில் ஓடிப்போன கர்ப்பிணியின் கணவன், மகன் ஜோடு, ட்ரக் ஓட்டும் அல், குழந்தைகள் இருவர், வயதான தாத்தா பாட்டி, போதகர் கேஸி என குடும்பமாக பல துயரங்களை சந்தித்து 3200 கிமீ கடந்து, குடும்ப உறுப்பினர்களை வழியில் இழந்து இறுதியில் கலிஃபோர்னிய மழைக்காலத்தில் ஆறு ஓரத்தில் கார் அட்டைப்பெட்டியில் தங்கியிருந்த போது வெள்ளம் பெருக்கெடுத்தபோது கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை இறந்து பிறக்க, அந்த சடலத்தை இந்த ‘உலகம் வெட்கத்துடன் பார்க்கட்டும்’ என்று ஆற்றில் பழப்பெட்டியில் வைத்து அனுப்பிய சோகத்துடன் இரண்டு மூன்று நாள் நனைந்தபடியே இருந்த குடும்பம் எங்கேயாவது மேட்டுப் பகுதியில் சற்று ஒதுங்கலாம் என்று ஓடை நீரில் கடந்து மேட்டில் இருந்த ஒரு தகர விவசாய கருவிகள் வைக்கப்பட்ட இடத்தில் வந்து ஒண்டுகிறார்கள். அங்கே இரண்டு உருவம் இருக்க, அம்மா அவர்களை யாரென்று விசாரிக்க, அப்பாவும் மகனும் என்று தெரியவருகிறது. அவர் ஏன் படுத்திருக்கிறார் என அம்மா விசாரிக்க, ‘என் அப்பா ஆறு நாளா சாப்பிடல, வேலை இல்லை மழை பெய்ததால் எல்லாமும் முடிஞ்சது. நான் அவர் பசி போக்க ரொட்டி திருடி வந்து கொடுத்தேன். அவர் வாந்தி எடுத்திட்டார்’ என அந்தப் பையன் கூற அம்மா அப்போதுதான் குழந்தை பெற்றெடுத்த தன் மகளை பார்த்தாள். அம்மா கூறினாள் எல்லோரும் கொஞ்சம் வெளியே இருங்க என்று சொல்லிவிட்டு குழந்தை பெற்றெடுத்த தன் மகளை பார்த்தாள். தன் மகள் அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டு, சாப்பிடாமல் மயக்கத்தில் படுத்திருந்த அந்த 50 வயது பசி மனிதனின் பக்கத்தில் வந்து அவரின் ஆறு நாள் பசியை போக்குவதற்காக படுத்து தன் உதடுகளை மெல்ல கடித்துக்கொண்டு அன்னார்ந்து பார்ப்பாள். இவ்வாறு நாவல் முடிவடையும்.

ஏழைகள் தங்களின் உதவும் உள்ளங்களால், சோம்பேறி பெரும் பணக்காரர்களின், முதலாளித்துவ வாதிகளின் முகத்தில் காரி உமிழ்வது போல் உள்ளது.

முடிவாக….

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் இலாபம் …. இலாபம் ,…இலாபம். இலாபம்.

கடனாக, நெருக்கடியாக, பொருளாதார வீழ்ச்சியாக இறுதியில் உழைக்கும் வர்க்கத்தினரின் ஒருங்கிணைந்த பணிகளால் அவர்களின் கைகளில் உலகம் தவழும். இதுதான் பிரஞ்சுப் புரட்சி, சோவியத் புரட்சி, கியூப புரட்சி என உலகம் புரட்சியை நோக்கி செல்வதை,…

நாம் நம் இந்தியாவிலும் விரைவில் காணலாம். ஏனெனில் இந்தியாவில் நெருக்கடிகள் அதிகம் தலை தூக்குவதை வரலாறு பதிந்து வருகிறது.

கோபத்தின் கனிகள் என்னும் இந்நாவல் பல இரவுகள் தூங்காமல் செய்துவிடும். இந்நாவலை யொட்டி புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஹென்றி ஃபோண்டா நடித்து, ஜான் ஃபோர்டு இயக்கத்தில் 1940ல் GRAPES OF WRATH என்னும் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாம் youtupeல் 4டாலர் செலுத்தி பார்க்கலாம். எப்படி இருப்பினும் ஒருமுறை நாவலை படித்துவிட்டு பின்பு திரைப்படமாக பார்ப்பது சிறப்பாக இருக்கும்.

பார்வையிட்டவர்களுக்கு நன்றி! நாவலில் சந்திப்போம்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்
தோழர்களே!!

 

நூலின் தகவல்கள்:

நூல் : கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)

ஆசிரியர் : ஜான் ஸ்டீன்பெக், தமிழில்: கி. ரமேஷ்

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 628

விலை : ₹.595

 

நூலறிமுகம் எழுதியவர்: 

இரா. சண்முகசாமி
புதுச்சேரி.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *