ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி. ரமேஷ்) எழுதிய "கோபத்தின் கனிகள்" நாவல் | John Steinbeck's Kobathin Kanigal Tamil Book Review | செம்மலர் | www.bookday.in

ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி. ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள்” நாவல் – நூல் அறிமுகம்

கோபத்தின் கனிகள் என்ற இந்த அமெரிக்க நாவலை, ஹெமிங்வே போன்று புகழ்பெற்றவர்களின் வரிசையில் வந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ளார். இந்த நாவல் தேசிய விருது, புலிட்சர் விருது போன்ற விருதுகளை வென்றுள்ளது.

கருப்பின மக்கள் குறித்துப் பேசும் உயிரோட்டமான பல எழுத்துகளைப் போல, இந்நாவல் குடியேறியவர்களின் நாடான அமெரிக்காவின் சாதாரண விவசாய மக்களைப் பற்றிப் பேசுகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்தபோதும், வங்கிகளாலும் நில உரிமையாளர்களாலும் வெளியேற்றப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்களாய் மாறிய லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகளைப் பற்றி இது கூறுகிறது.

1920–30 களில், ஓக்லஹோமா பகுதியில் பருத்தி விளையும் பூமியில் குத்தகை விவசாயம் செய்து வந்த டாம் ஜோடின் குடும்பத்தை மையமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு, பரோலில் வெளிவந்த டாம் ஜோட் தன் வீடு செல்லும் துவக்கக் கதையிலேயே, புழுதிப்புயலும் மழையும் மாறி மாறி வந்து விளைச்சல் நாசமாகும் சூழல் வர்ணிக்கப்படுகிறது. பணப்பயிரான பருத்தி மட்டுமே விளைவிக்கப்பட்டதால் நிலத்தின் தன்மை கெட்டது; சூழலைப் பயன்படுத்தி, நில உரிமையாளர்கள் டாம் ஜோட் மற்றும் அருகாமைக் குடும்பங்களை விரட்டியடித்த கதையும் சொல்லப்படுகிறது.

டாம் ஜோட் தன் குடும்பத்தாரைக் கண்ட வேளையில், கலிபோர்னியாவின் பழத்தோட்டங்களை நோக்கிப் பயணப்பட குடும்பம் தயாராகிறது. நல்ல கூலிக்கு ஆளெடுக்கும் துண்டுப் பிரசுரம் சுண்டியிழுக்க, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, ஆறு குழந்தைகள் கொண்ட டாம் ஜோட்டின் குடும்பம் புலம்பெயரத் தயாராகிறது. பல வகைகளில் உழைத்தும், உழவு கருவிகளையும் தட்டுமுட்டுப் பொருட்களையும் விற்றும் கிடைத்த பணத்தில், பழைய டிரக் வண்டியை வாங்கிப் பயணப்படுகிறது.

இரவில் சாலையோரம் கூடாரம் அமைத்துத் தங்கியும், பகலில் வண்டி மற்றும் தங்களது தேவைகளைக் கவனித்தும் பயணம் நடைபெறுகிறது. வழியில் தாத்தா இறக்க, சாலையில் அடக்கம் நடைபெறுகிறது. கலிபோர்னியா எல்லையில் பாட்டியையும் இழக்கிறது குடும்பம். தாக்குப்பிடிக்க முடியாத மகன் நோவா மற்றும் மருமகன் கோனியைத் தவறவிடுகிறது.

புலம்பெயர்ந்தோர் ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கில் என்பதைக் குடும்பம் அறிகிறது. உள்ளூர் மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பையும் அவர்கள் உணர்ந்தனர். சானிட்டரி வசதியுடன் கூடிய அரசு தங்குமிடத்தில் இடம் கிடைத்தபோதும், வேலை கிடைக்காததால் சில நாட்களுக்கு மேல் தங்கமுடியாமல் வேறு பக்கம் செல்கின்றனர். அங்கு, கூலிக் குறைப்பினால் நடந்த வேலை நிறுத்தத்தை உடைக்கும் நோக்கில், இவர்களுக்கு வேலை கிடைக்கிறது.

கொடுத்து வந்த குறைந்த கூலியையும், வேலையில்லாத் தொழிலாளர்களைக் காரணம் காட்டி மேலும் குறைக்கும் மோசமான பழத்தோட்டக்காரர்கள்; தங்களது வேலையைப் பாதுகாத்துக்கொள்ள இவர்கள் மத்தியில் கலகம் உருவாக்கும் காவலாளிகள்; மோசமான தங்குமிடங்கள்; புலம்பெயர்ந்தோர் மனிதர்களாக உணரும் வாய்ப்புள்ள பாதுகாப்பான, அமைதியான தங்குமிடங்கள் உருவாவதை விரும்பாத முதலாளிகளும் ஆட்சியாளர்களும் — இவை அனைத்தையும் நாவல் சித்தரிக்கிறது.

கிடைக்கும் கூலியில் ஒரு வேளை கூட உருப்படியாக உண்ணமுடியாத நிலையில் தொழிலாளிகள்; அளவுக்குமீறிய உற்பத்தியை ஆற்றில் கொட்டும் முதலாளிகள்; அதை எடுத்து உண்டுவிடக்கூடாது எனும் காவல் கெடுபிடிகள்; ஏற்கனவே இங்கிருந்து திரும்பியவர்கள் கூறிய கசப்பான உண்மைகள் நேரடி அனுபவமாகின்றன.

இந்தச் சூழலில், இவர்களுடன் பயணித்த மனிதநேயரான போதகர், போராளியாக உயிர் பலியாகிறார். அவரைக் காக்கும் முயற்சியில் டாம் ஜோட் மீண்டும் ஒரு கொலைப் பழிக்கு ஆளாகி, போராளியாக மாறித் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்குகிறான். குடும்பம் அங்கிருந்து வெளியேறுகிறது. வேறொரு நிலத்தில் பருத்தி அறுவடை வேலை கிடைக்கிறது. குடும்பத் தலைவரின் ஏற்ற இறக்கமான மனநிலையை உணர்ந்து, அனைத்துச் சூழ்நிலைகளையும் பொறுமையுடன் அம்மா சமாளிக்கிறாள்.

கடும் மழை பொழியும் நேரத்தில், பிரசவம் முடிந்த மகளுடன் தங்குமிடம் தேடி அலையும் அம்மா, கைவிடப்பட்ட ஒரு குடிசைக்குள் நுழைகிறாள். அங்கு கடும் பசியுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு தொழிலாளித் தந்தைக்கு, உயிரமுது அளிக்கிறாள் மகள். கதை முடிகிறது.

நூறாண்டுக்கு முந்தைய அமெரிக்க மக்களின் வாழ்வனுபவம் இது. ஆயினும், இது இன்றைய இந்தியச் சூழலுக்கும் பொருந்துகிறது.

இயற்கையின் சீற்றங்கள் மக்களது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள்; நிச்சயமற்ற வாழ்நிலை கொண்ட விவசாயிகளின் சூழல்; புலம்பெயர்தல் உருவாக்கும் கடும் வேதனைகள்; புலம்பெயர்ந்தோர் மீது உள்ளூர் மக்களுக்கு உருவாகும் வெறுப்புணர்வு; சூழலைப் பயன்படுத்தும் முதலாளிகளின் இரக்கமற்ற மனப்போக்கு; வாழ்வின் போக்கில் கடும் ஏமாற்றங்களைச் சந்திக்கும் இவர்கள், திருடர்களாக, கொள்ளையர்களாக, கொலைகாரர்களாகக் கூட மாற நிர்ப்பந்திக்கும் வாழ்நிலை; இயல்பாகப் போராளிகள் உருவாகும் சூழல்; இத்தனைக்கும் பிறகும் மனிதநேயம் கொண்டவர்களாக நிலைத்திருக்கும் முயற்சிகள் — என உயிரோட்டமான வாழ்வைப் படம்பிடித்திருக்கிறது இந்நாவல்.

ஆங்கில மூலத்தை அதன் தன்மை கெடாமல், அழகிய தமிழில் தோழர் கி. ரமேஷ் மொழிபெயர்த்துள்ளார். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது.

வாங்குவோம்! வாசிப்போம்!

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:கோபத்தின் கனிகள்
தொகுப்பாசிரியர்: ஜான் ஸ்டீன்பெக் ( தமிழில்: கி. ரமேஷ்)
வெளியீடு:
விலை:₹.595 (10% Discount price was: ₹.535
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 செம்மலர்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *