புத்தகம் : கோபத்தின் கனிகள்
ஆசிரியர் : ஜான் ஸ்டீன்பெக், தமிழில் : கி. ரமேஷ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 628
விலை : ரூ. 595
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
– சுரேஷ் இசக்கிபாண்டி
அமெரிக்க இலக்கியத்தின் பொற்கால எழுத்தாளர்களில் ஒருவர் எனக் கூறப்படும் ஜான் ஸ்டீன்பெக் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை தமிழில் கி. ரமேஷ், அதன் வளமை குறையா வண்ணம் அருமையாக மொழிபெயர்த்துள்ளார். ஜான் ஸ்டீன்பெக்-க்கு 1962ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றுதான் ‘Grapes of Wrath’ என்னும் இந்த ‘கோபத்தின் கனிகள்’. இப்புத்தகம் தேசியப் புத்தகப் பரிசு, புலிட்சர் பரிசு என பல ஆளுமை செலுத்தக்கூடிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பல பரிசுகளைப் பெற்றதுள்ளது.
முதல் உலகப்போர் நிகழ்ந்து முடிந்து சரியாக பத்தாண்டுகளுக்கு பிறகு, ஏப்ரல் 14, 1939ஆம் ஆண்டு வெளிவந்த நாளிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு வரையில் மட்டுமே சுமார் 14 மில்லியன் (இந்திய மதிப்பில் 1 கோடியே 40 லட்சம்) பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளது. அதில் 1940ஆம் ஆண்டு மட்டும் 4,30,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. அதற்கு காரணம், 1940ஆம் ஆண்டு ஜான் போர்ட் இயக்கத்திலும், அப்போது ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நட்சத்திர நடிகர் ஹென்ட்ரி ஃபோண்டா நடிப்பிலும் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்காவின் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுவொரு இலக்கிய பாட நூல்.
இப்புத்தகம் எந்த அளவிற்கு புகழை ஈட்டி உள்ளதோ அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது. 1939இல், இந்த புத்தகம் கன்சாஸ் சிட்டி, மிசோரி மற்றும் கலிபோர்னியாவின் கெர்ன் கவுண்டியில் தடை செய்யப்பட்டது. இது கிழக்கு செயின்ட் லூயிஸ், இல்லினாய்ஸ் பொது நூலகத்தால் எரிக்கப்பட்டது மற்றும் பஃபலோ, நியூயார்க் பொது நூலகத்தில் இருந்து தடை செய்யப்பட்டது. 1953இல், புத்தகம் அயர்லாந்தில் தடை செய்யப்பட்டது.
1973இல், எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘For Whom the Bell Tolls’ என்ற புத்தகத்துடன் சேர்ந்து, துருக்கியில் மேலும் சர்ச்சையை எதிர்கொண்டது. ஏனெனில் அந்த புத்தகத்தில் ‘அரசுக்கு எதிரான பிரச்சாரம்’ இருப்பதாக கூறி அதே ஆண்டு பிப்ரவரி 21 அன்று, பதினோரு துருக்கிய புத்தக வெளியீட்டாளர்களும், எட்டு புத்தக விற்பனையாளர்களும் இஸ்தான்புல் இராணுவச் சட்ட ஆணையத்தின் உத்தரவை மீறி புத்தகங்களை வெளியீட்டல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இஸ்தான்புல் இராணுவச் சட்ட நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவர்களிடம் இருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இப்புத்தகத்தின் சர்ச்சைக்குரிய நிலை 1980களில் தொடர்ந்தது. 1986ஆம் ஆண்டில், இந்த புத்தகம் வட கரோலினாவின் பர்லிங்டனில் உள்ள கம்மிங்ஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒரு விருப்ப வாசிப்பு நூலாக மாணவர்களிடம் வழங்கப்பட்டது. இப்புத்தகத்தில் கடவுள் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகவும், அவரை கொச்சைப்படுத்தும் நோக்கில் உள்ளது. ஆகையால் அது கண்டிப்பாக கிறித்துவ முறைப்படி வளரும் எங்கள் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் எனக்கூறி பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கூட்டத்தில் விமர்சனம் செய்தனர். அதற்கு காரணம் புத்தகத்தின் மொழி நடையில் கடவுள் மற்றும் இயேசுவின் பெயரை இழிவான முறையில் பயன்படுத்தியது, அத்துடன் பாலியல் தொடர்பான வசனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்த பின்னரே மேற்கண்ட தகவல்களை நான் விக்கிப்பீடியா மூலம் தெரிந்துகொண்டேன்.
இப்போது புத்தகத்திற்குள் வருவோம். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் வறுமையை, வலியை, பிரிவை, எதிர்கொண்ட பல குடும்பங்களில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதையைத்தான் தழுவிச் செல்கிறது.
புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கு முன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
முதல் உலகப் போரின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை எனும் கொடூர அரக்கன் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இதன் காரணமாக இப்போது வல்லாதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கப் பேரரசின் அனைத்து பங்குச் சந்தைகளும் 1929ஆம் ஆண்டு மூடு விழா கண்டது. அதுவே பேரிடியாய் தாக்கி இதுவரை வறட்சியை, பசியை கண்டிராத மக்களை கண்ணீர் மழைக்கு அழைத்துச் செல்ல காரணமாய் ஆனது.
அங்கு பணம் எடுக்க முடியாத வகையில் ஏராளமான வங்கிகள் திவாலாகி இழுத்து மூடப்பட்டன. அந்தக் கடும் நெருக்கடியிலும் ஊசலாடிக் கொண்டு மீதமிருந்த வங்கிகள் விவசாய குத்தகைதாரர்களை நிலத்திலிருந்து தூரத்தி விட்டு அந்த நிலங்களை அபகரித்து பெரும் முதலாளிகளிடம் விற்க துவங்கியது. இதனால் அங்கு பெரும் வேலை இழப்பும், வறுமையும் பேயாட்டம் ஆடியது. சுமார் 2 மில்லியன் குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு குடிப்பெயர்ந்தனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவின் பூர்வக் குடி மக்களான ஓக்கிஸ் என்ற மக்கள்தான்.
டென்னஸி, ஓக்லஹோமா போன்ற நகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாய் வேலையின்றி, உணவின்றி தவித்து பின்னர் அவர்களிடம் இருப்பதையெல்லாம் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களது குழந்தைகளின் முகத்தில், பசியினால் ஏற்பட்ட பெரும் சோகம், உயிர் பிழைப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் ஆகியவை அவர்களை இயற்கை, செல்வவளம் மிக்க கலிபோர்னியா மாகாணத்திற்கு அழைத்துச்செல்ல, அங்கே அவர்கள் மிகக்குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத பெரும் துயரமான இடப்பெயர்வு நிகழத் துவங்கியது.
நாவல் பற்றி இப்போது பேச ஆரம்பிப்போம் வாருங்கள் தோழர்களே…
வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்ட நிலப்பரப்பின் அகோரமான முகம் நமது கண் முன் வந்து செல்கிறது. இந்த நாவல் களத்தின் காட்சி படிமம், கடந்த ஆண்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி ஒன்றிய ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட கொரோனா ஊரடங்கு இடப்பெயர்வு காட்சி நமது கண்முன் அப்படியே விரியும். அதுதான் இந்த நாவலின் சிறப்பு என்பதில் ஐயமில்லை.
துரதிஷ்டவசமாக ஒரு கொலை குற்றத்தில் தண்டனையான நமது நாயகன் டாம் ஜோடு மூன்று ஆண்டுகள் சிறைவாச வாழ்க்கைக்கு பின் பரோலில் தன் குடும்பத்தைக் காண சொந்த ஊருக்கு வருகிறான். அப்போது வருகிற வழியில் அவனுக்கு சிறு வயதில் ஞானஸ்நானம் செய்த போதகர் ஜிம் கேசியை சந்திக்கிறான். அவர் தற்போது நான் போதகராக இல்லை என்கிறார். இந்த கடும் வறட்சியில் கடவுள் வந்து அப்பாவி மக்களை காப்பாற்றவில்லை; ஆகையால் யாரும் எனது போதனையை கேட்க தயாராக இல்லை என சொல்ல, மேலும் அவர்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்திலுள்ள முட்டாள்தனமான போதனைகளை, மூட நம்பிக்கைகளை நக்கல் செய்து பேசிக் கொள்கின்றனர். இரக்க குணம் இல்லாத முதலாளித்துவ வறட்சியின் பிடியில் சிக்கிய ஜோடின் குடும்பம் சிறிதளவு நிலத்தை குத்தகை எடுத்து அதில் பருத்தி பயிர் செய்து வந்தது. அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் வங்கி கிராமத்தில் வசித்த அனைத்து குத்தகைதாரர்களின் நிலத்தை பிடிங்கிக்கொண்டு அவர்களை விரட்டுகிறது. அவர்கள் வீடுகளை இடிக்க ராட்சச எந்திரத்துடன் காத்திருக்கிறது.
“வங்கி என்னும் ராட்சசனுக்கு இப்போது லாபம் தேவை. அதனால் பொறுத்திருக்க முடியாது. இல்லை என்றால் அது செத்து விடும். இல்லையெனில் மக்கள் மீதான வரிகள் தொடரும். ராட்சசன் வளர்வதை நிறுத்திவிட்டால் செத்து விடுவான். அவன் ஒரே அளவில் நிற்க முடியாது.”
அப்போது அவனை சந்தித்த பால்ய நண்பன் முலேவின் அப்பா அதை தடுக்க துப்பாக்கியை எடுத்து இடிக்க காத்திருக்கும் வாகன ஓட்டுநரை நோக்கி நீட்டுகிறார், உடனே இடிக்கும் வாகனத்தை ஓட்டும் அவரது சொந்த கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபன் எனக்கு எனது குடும்பத்தின் பசியைப் போக்க வேறு வழியில்லை, எனக்கு அவர்கள் மூன்று டாலர் ஊதியம் தருவதாக கூறி அனுப்பி இருக்கிறார்கள். நான் அவர்களின் பணியாள் என்கிறான்.
உடனே அவர் அப்படியென்றால் நான் உனது வங்கி மேலாளரை கொல்லப் போகிறேன் என்கிறார். இல்லை, அவருக்கு இயக்குநர் குழுவிடமிருந்து உத்தரவு வருகிறது. இயக்குநர் குழுவிற்கு கிழக்கிலிருந்து (அதிகாரம் படைத்த செல்வந்தர்கள் இடமிருந்து) உத்தரவு வருகிறது. இப்போது நீ யாரை கொல்வாய்…? என்கிறான் இடிப்பவன். தூப்பாக்கி கீழே இறங்கியதும், வீடு தரைமட்டமாகிறது.
தன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆவலோடு வந்த டாம், அவர்களுக்கு வீடு இடிக்கப்பட்டு கிடந்த அந்த வெறுமையான இடத்தை கண்டு திகைத்ததோடு சோகமும் அடைகிறான். பின் மெல்ல அருகிலுள்ள கிராமத்தில் தன் குடும்பம் வாழும் செய்தியை, அந்த இடத்தை காலி செய்ய மறுத்து அங்கேயே வாழும் முலேவிடம் அறிந்து, பாதிரியார் ஜிம் கேசியுடன் அங்கு செல்கிறான்.
டாமைக் கண்டு மகிழ்ந்த குடும்பம், விரைவாக கலிபோர்னியா பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அவன், பாதிரியார் ஜிம் கேசியையும், அழைத்துச்செல்ல நிபந்தனையை சொல்லுகிறான். முதலில் தயங்கி, யோசித்து பின்னர் உடன்பட்டு அழைத்துச் செல்ல ஆயத்தமான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கின்றனர். அவளது அம்மா அவரது வீட்டில் கடைசியாக இருந்த பன்றிக் கறியை உப்புக்கண்டம் போட்டு தயார் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உதவ வந்த பாதிரியாரிடம் “இது பெண்கள் வேலை” என்கிறார். அதற்கு பாதிரியார், “எல்லாமே வேலைதான். அத ஆம்பளைங்க வேலை பொம்பளைங்க வேலைன்னும் பிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து பன்றிக்கறியை தயார் செய்ததோடு கைவசம் உள்ள அத்தியாவசிய பொருள்களையும், மிகப் பழமையான ஹட்சன் ட்ரெக்கில் ஏற்றிக் கொண்டு அக்குடும்பம் பயணமாகிறது. அப்பயணத்தில், “நான் வாழ்ந்தாலும் செத்தாலும் அங்கேதான் இருப்பேன்” என பயணப்பட மறுத்த டாம் ஜோடின் தாத்தா வலுக்கட்டாயத்துடனும், டாமின் பாட்டி, அம்மா, அப்பா, டாமின் அண்ணன் நோவா ஜொடு, அவன் இளைய சகோதரன் இளைஞன் அல் ஜோடு, கர்ப்பிணியான அவன் பெரிய தங்கை ஷாரன், அவளது கணவன் கோனி, வீட்டின் கடைக்குட்டிகள் ருத்தி ஜொடு, வின்ஃபில்டு ஜொடு, மாமா ஜான், பாதிரியார் ஜிம் கேசி மற்றும் அவர்களது செல்ல நாய் என அனைவரும் ஒரே குடும்பமாக பெரும் நம்பிக்கையோடு புதிய வாழ்வாதாரத்தை நோக்கி நகர்கிறார்கள்.
மேற்கு மார்க்கமாக செல்லும் ரூட் நம்பர் 66 சாலையில் இவர்களைப் போல பல ஏழ்மையான குடும்பங்கள் தங்களது உடைமைகளை மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, தங்களது கையில் உள்ள இருப்பு பணத்தை வைத்து வாங்கிய பழைய வாகனத்துடன் பயணப்பட ஆரம்பிக்கின்றனர். இப்போது புத்தகத்தின் 14வது பகுதியிலிருந்து ஒரு சில வரிகள் “இந்த டிராக்டருக்கும், பீரங்கிக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது. இந்த இரண்டாளும் மக்கள் விரட்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள், துன்பமடைகிறார்கள்.” எனினும் அவர்களது பயணம் சாலையில் உயிர்ப்போடு பல இன்னல்களை கடந்தும், தடைபடாமல் நீண்டு செல்கிறது.
ஆனால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பயணமான பல குடும்பங்கள் அந்த சாலையிலே தங்களது உயிர்களை உறவுகளை இழக்கின்றனர். பயணம் நாட்கணக்கில் நீளும் போது குடும்பத்தினர் முகத்தில் ஏற்பட்டுள்ள சோகத்தின் பசி, பட்டினியின் வடுக்கள் அவர்களை புதைகுழியில் சிக்கிய மான் குட்டியைப் போல் ஆக்குகிறது. அவர்கள் கடந்து வரும் வழி எங்கும் எதிர்கொண்ட பிரச்சனைகள், வலிகள், வேதனைகள், அனுபவங்கள், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள், மனப்போராட்டங்கள் நிறைந்த அனைத்து சொல்லாடலும் நன்மை மௌனத்தின் சாட்சியாக நிற்கவைத்து திக்குமுக்காட செய்துவிடும். மிகச் சாதாரணமான சொல்லாடல்கள் மூலம் நம்மை கனத்த இதயத்தோடு வார்த்தைகளற்ற பொம்மையாய் நிற்க வைத்துள்ளார். அதுவே ஒரு நாவலாசிரியரின் வெற்றியாகும்.
பயணத்தின் ஊடாகவே நிகழும் அடுத்தடுத்த மரணங்கள், குடும்பத்தில் அனைவரையும் சோகத்தில் தள்ளுகிறது. அவர்கள் கலிபோர்னியா மாகாண எல்லையை நெருங்கி சென்று கொண்டிருக்கும் போது டாமின் மூத்த சகோதரன் நோவா ஆற்றங்கரையோரம் இறங்கி ஒரு சுயநலவாதியாய் சாமியாரை போல் குடும்பத்திலிருத்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். நமது குடும்பம் உடையக் கூடாது என எண்ணி பயணத்தைத் துவங்கிய அவரது குடும்பத்தில் ஒவ்வொருவரும் இறப்பதும், வெளியேறுவதும் அவனது அம்மாவுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவே குடும்பத்தின் ஆணி வேராக இருந்து, அனைவரையும் வழி நடத்தி செல்கின்றாள்.
அவர்களது குடும்பம் கடந்து செல்லும் வழியில் அனுபவிக்கிற பிரிவு, துன்பம், நட்பு, அரவணைப்பு, காதல் என அனைத்துமே நம்மை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தும். பயணம் எப்போதும் அவர்களுக்கு அமைதியை தந்தது இல்லை. அவர்கள், தாங்கள் அனைவரும் எப்படியாவது கலிபோர்னியா திராட்சை தோட்டத்தில் வேலை வாங்கிக் கொள்ளலாம். அங்கு நமக்கென்று ஒரு வீடு வாங்கி குடியேறி நாம் நல்லபடியாக வாழலாம் என்கிற கனவு மட்டுமே அவர்களுக்கு ஆறுதலைத் தந்தது. திராட்சை தோட்டத்தை கடக்கும் போது பாட்டி உயிர் பிரிந்து விடுகிறது. வேலையும் கிடைக்கவில்லை.
கான்சாசிலும், அர்கன்சாசிலும், ஓக்லஹாமாவிலும், டெக்சாசிலும், நியூ மெக்சிகோவிலும் இருந்து பட்டினியால் பயணப்பட்டு வந்து குவிந்த குடும்பங்கள் கலிபோர்னியா மக்களுக்கு பெரும் பீதியை தந்தது. பீதிக்கு பீதியாக அடிமைமுறையும், அடக்குமுறையும் நிராகரிப்பும் அங்கே அதிகமாய் வேர் விட ஆரம்பித்தது.
சாலைகள் முழுவதும் அன்று 3,000 பேர்கள் வெறிகொண்டு சுமை இழுக்கவும், தூக்கவும் காத்துக்கொண்டு இருந்தனர். ஆகவே அவர்களால் மிரட்டி அவர்களை நிறுத்த முடியவில்லை. அவர்களது சுருங்கிய வயிற்றில் மட்டுமல்ல அவர்களது குழந்தைகளின் பாழாய்ப்போன வயிற்றிலும் இருக்கக்கூடிய பசியில் ஒரு மனிதனை எப்படி மிரட்ட முடியும். அடக்குமுறை என்பது ஒடுக்கப்பட்டவர்களை வலுப்படுத்தவும் ஒன்றுபடுத்தவுமே வேலை செய்யும். ஆனால் கலிபோர்னியா தோட்ட முதலாளிகள் அவர்கள் குறைந்த கூலிக்கு அடித்துக்கொண்டு வேலை செய்வதை விரும்பி நோட்டீஸ் அடித்து பல்வேறு பகுதிகளுக்கு விளம்பரமாக செய்துள்ளனர். அதனால் அங்கு ஒரு நபருக்கான வேலைக்கு ஐந்து நபர்கள் ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அங்கே குறைந்த கூலியில் அதிக நேரங்கள் வேலையை செய்ய வேண்டி வந்தது. அந்த பயணத்தில் அவர்களை துரத்துவதற்கு நிறைய கைகள் இருந்தன. ஆனால் அவர்கள் இதுவரையில் ஆழ்ந்த துக்கத்தில், களைப்பில், பசியில், கோவத்தில் இருந்தாலும் அதனை அவர்கள் அருகில் உள்ளவரிடம் காட்டிக் கொண்டதே இல்லை. அதனை ஒருபோதும் அவர்கள் பயன்படுத்தியதுமில்லை. மாறாக அது அனைத்தையும் எதிரில் உள்ளோரிடமிருந்து எடுத்துக் கொள்கின்றனர்.
நாவலின் கடைசிப் பக்கம் நம் அனைவரையும் உருக வைத்து கண்களை குளமாக்கிவிடும் என்பது உறுதி. அதை நான் சொல்லப்போவதில்லை.
மனித நேயத்தை, முதலாளித்துவ கொடூர கட்டமைப்பை, அது வழிநடத்தி செல்லும் இரக்கமற்ற வாழ்வை அறிய அனைவரும் இந்நாவலை வாங்கி வாசித்து உணர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
– சுரேஷ் இசக்கிபாண்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான அறிமுகம். வாசிக்க தூண்டும் பதிவு. வாசிக்க முயல்வோம். சிறப்பு.
Thanks For Your Complements Comrade