ஒரு நூலை வாசிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஏனென்றால் எந்தவிதமான காலச் சூழலுக்குள்ளும் வாசிக்க நினைக்கும் மனதை சிதறவிடாமல் அந்த நூலுக்குள்ளேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நூலின் ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கிறார், என்ன சொல்ல முயல்கிறார் போன்றவற்றை தெரிந்து, உணர்ந்து கொள்ள இயலும்.
ஒருசில எழுத்தாளர்களை மட்டுமே போற்றி, பாராட்டி, உயர்த்திக் கொண்டிருக்கும் இன்றைய தவிர்க்க இயலாத மாபெரும் இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பு நூல்களின் அணிவரிசை சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.
அவ்வகையில் அமெரிக்காவின் பொருளாதாரப் பெருவீழ்ச்சி காலத்தின் விவசாயத்தைப் பற்றியும், பிழைப்பிற்காக குடிபெயர்ந்த பூர்வக்குடிகள் பற்றியும் அமெரிக்க எழுத்தாளர் “ஜான் ஸ்டீன்பெக்” அவர்கள் எழுதி, பல விருதுகளைப் பெற்று, நூலாசிரியருக்கு நொபல் பரிசு கிடைக்கக் காரணமாயிருந்தது “The Grapes of Wrath” என்ற ஆங்கில நூலாகும்.
இந்த நூலை கோபத்தின் கனிகள் என்ற தலைப்பிட்டு, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கி. ரமேஷ் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். இந்த நூலை நான் வாசிக்கத் தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் ஆயிற்று. இந்த கால கட்டங்களில் கிராம்சி புரண்டு படுக்கிறார், என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது, குமரி, ஒலிப்பும் பிறப்பும், குறும்பா, வீட்டுப் பல்லி, தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு, மகளின் மகள், பூ தீயாய் பூத்திருக்கு போன்ற வேறு சில நூல்களை வாசித்திருந்தாலும், இந்த கோபத்தின் கனிகள் நூலை சென்ற வாரம்தான் முழுமையாக வாசித்து முடித்தேன்.
இந்த நூலை முழுமையாகப் படித்த பிறகு நூல் விமர்சனம் எழுதுகிறேன் என்று அவருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். கொடுத்த வாக்கை இதோ நிறைவேற்றுகிறேன்.
சில வகையான நூல்கள் நமது சிந்தைக்குள் புகுந்து எப்படி வாசிக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லி விடும். சில நூல்கள் நம்மை அதன் வழியிலேயே அழைத்துச் செல்லும், சில நூல்கள் நம்மை உலுக்கி எடுக்கும், சில நூல்கள் நம்மை கட்டிப் போடும், சில நூல்கள் நம்மை தட்டிக் கொடுக்கும்.
ஆனால் மொழிபெயர்ப்பாளர் கி. ரமேஷ் அவர்களின் இந்த நூலை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இன்னொரு நூலாக போடலாம். ஆம் அவ்வளவு விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தது இந்த கோபத்தின் கனிகள்.
சில நூல்களை படிக்கத் திறந்தால் கொஞ்ச நேரத்திலேயே தூக்கம்தான் வந்திடும். ஆனால் இந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கியவுடன் எனக்கு பல தரப்பட்ட வாழ்வியல் சிந்தனைகள் வந்து சென்றன. வாழுகின்ற ஒவ்வொரு மனிதரின் வாழ்வியலையும் அலசி ஆராய்ந்து, அதற்காக உருவாகிய, உருவாக்கிய சூழலை ஆராய்ந்து, ஏழை பணக்காரர், உழைப்பாளி, தொழிலாளி யார் யார் என்பதை கட்டமைத்து, அடிப்படையில் எதிரி யார், யாரை நன்பனாக கொள்ள வேண்டும், யாரை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டில் பொருளாதாரத்தை எப்படி, யாரால் நிர்ணயிக்கப்பட வேண்டும், அது யாரால் வளர்க்கப்பட வேண்டும், வளர்ப்பவர்கள் யார்? என்ற சூழலியல்களை மிகவும் தெளிவாக எடுத்தியம்பியிருக்கிறது இந்த நூல். மொழிபெயர்ப்பாளரின் ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பாலேயே இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் சிறந்த இலக்கியமாக உருவெடுத்திருக்கிறது.
இலக்கியம் என்பது செடியின் அசைவிற்கு சாதாரணமாகத் தலையாட்டி மலரும் சிறிய பூவல்ல, ஆதவனின் தலையசைப்பிற்கும், செல்லும் பயணத்திசைக்கேற்ப தன்னையே மாற்றிக் கொண்டு மலரும் ஆகப்பெரிய சூரியகாந்தியாகும். அப்படி ஒரு சிறப்பான பணியை மொழி பெயர்ப்பில் கொண்டு வந்து, நூலின் வேர்களையும், விழுதுகளையும் அதன் அடி ஆழம் வரைச் சென்று அலசி ஆராய்ந்து மிகச் சிறப்பான மொழியாக்கத்தை செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். நூல் வாசிக்க முனையும் வாசகர்களுக்கு ஒரு ஆகச் சிறந்த வரமாக வந்துள்ளது இந்த கோபத்தின் கனிகள்.
ஒரு நூலை தமிழுக்கு மொழி பெயர்க்கும் போது, அதன் உள்ளே இருக்கும் கரு, சொல்ல வரும் கருத்துக்கள், களத்தில் இருக்கும் காரணிகள், எதிர் கொள்ளும் கருவிகள், போன்றவற்றை எல்லாம் மிகச் சிறப்பாக கையாளப்பட வேண்டும், அதுமட்டுமல்லாது, மொத்த நூலிலும் இருக்கும் ஒட்டு மொத்த உணர்வுகளையும் கொஞ்சமும் பிசகாது, அப்படியே எழுத்தில் கொண்டு வருவதென்பது சாதாரண விஷயமல்ல. அப்படிப்பட்ட அனைத்து விஷயங்களையும் மிகச் சிறப்பாக கையாண்டு, மிக நேர்த்தியான, தெளிவான விளக்கத்துடன் தமிழில் திறம்பட கொண்டு வந்து, அற்புதமாக மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் கி.ரமேஷ் அவர்கள். அவரை எவ்வளவு வாழ்த்தினாலும், பாராட்டினாலும் தகும் தகும்.
இந்த நூலின் மொழிபெயர்ப்பாளருக்கும், வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்திற்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துகள், இன்றே வாங்கி வாசியுங்கள்.
நூலின் விவரங்கள்:
நூல் : கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)
ஆசிரியர் : ஜான் ஸ்டீன்பெக், தமிழில்: கி. ரமேஷ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 628
விலை : ₹.595
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர்:
✍🏻 – ஆர்க்காடு ராஜா முகம்மது
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
