நூல் அறிமுகம்: ஜான் ஸ்டீபன் பெக்கின் “கோபத்தின் கனிகள்”

நூல் அறிமுகம்: ஜான் ஸ்டீபன் பெக்கின் “கோபத்தின் கனிகள்”

பிடிக்கும். மிக மிக பிடிக்கும். பிடிக்காதென சொல்ல முடியாது. அப்படியென்ன கல் நெஞ்சுக்காரரா நீங்கள். கல்லையும் கரைக்கும் கண்ணீர் கதை இது. கதைக்களம் சொர்க்கபுரி என நம்மீது வலிந்து திணிக்கப்பட்ட அமெரிக்கா. சொர்க்கம் இருந்தால் நரகமும் இருக்கும் தானே?!. வாங்க கதைக்குள் போகலாம்…
டாம் ஒரு நடன நிகழ்சியில் எதிர்பாராத தகறாரில் மாட்டிக் கொண்ட கொலையாளி. நான்காண்டுகளில் நன்னடத்தையால் பரோல் கிடைத்தது. தாய் தந்தையை பார்க்கும் ஆவலோடு ஊருக்கு வந்து இறங்குகிறான். உயர்வேக சாலையைக் கடந்து கிராமத்தை நோக்கி நடக்கிறான்.

சுட்டெரிக்கும் அனல் காற்று.வெறிச்சோடிய சாலை. பொட்டுப் பொட்டாக நிழல் விழுந்த வில்லோ மரத்தின் மீது சாய்ந்து கொண்டு ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். டாம் அவனைப் பாரத்தான். இந்த ரோடு நரகம் போல வெப்பமா இருக்குல்ல என்றான். அவன் கண்ணை சுறுக்கி நீ மூத்த டாம் மகன் இளைய டாம்ஜோட் தானே என்றான். உடலையும், உடையையும் பார்த்து கண்டுபிடிக்க முடியாத டாம் குரலை வைத்து நீங்கள் போதகர் தானே என்றான். அவர் அமைதியாக இருந்தார்.
போதகர் ரெவரெண்ட் ஜிம்கேசி- தீப் பற்ற வைக்கும் நாவன்மை கொண்டவர். ஏசுவின் நாமம் புகழடைய கூச்சலிட்டவர். தன் தவறுக்காக வருந்துபவர்கள் பலருக்கு பாவச் சாக்கடை வைத்திருந்தவர். அதில் பல பேர் மூழ்கிப் போனார்கள். இன்று ஜிம்கேசி என அழைக்க யாருமில்லை. குத்தகை விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டார்கள்.ஊரே இல்லாமல் போய்விட்டது.

The Grapes of Wrath | film by Ford [1940] | Britannica
டாமும் கேசியும் நடந்தார்கள். அந்த மூனாவது மேட்டுல தான் மூத்த டாமோட வீடிருந்தது இல்லையா என்றார் கேசி. ஆமென தலயசைத்தான் டாம். கண்ணுக்கெட்டிய தூரம் பருத்திச் செடி நீட்டிக் கொண்டிருந்தது. தன்னுடைய குடும்பம் எங்கே என மனம் ஓடிக்கொண்டே இருந்தது. தற்போது இது வங்கியோட நிலம் என்றார் கேசி. “என்தாத்தா நிலத்தை எடுத்தார். அதற்கு அவர் இந்தியர்களை கொன்று விரட்ட வேண்டியிருந்தது. அப்பா இங்குதான் பிறந்தார். அவர் விலங்குகளையும் , பாம்புகளையும் கொன்றார். பிறகு மோசமான ஆண்டு வந்தது. வங்கியில் கடன் வாங்கினார்“ என்றான் டாம் வருத்தமாக.
தூரத்தில் பருத்திச் செடிக்குள் ஒரு உருவம் தெரிந்தது. அது இவர்களை நோக்கி வந்தது. தூரத்திலேயே அது மூலா என்பதை டாம் கண்டு கொண்டான். எல்லோரும் வெளியேறினாலும் தான் வாழ்ந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வருபவன். நடந்ததை அவன் சொன்னான்.

“டிராக்டர்கள் சாலைகளிலிருந்து வயலுக்குள் வந்தன. இரும்பு நாற்காலியில் உட்காரந்திருந்த மனிதன் மனிதனைப்போலவே காணப்பட வில்லை. கையுறைகள், கண்ணாடி, மூக்குக்கும் வாய்க்கும் உறை ஆகியவற்றை அணிந்து கொண்டு, அவன் ராட்சத எந்திரத்தின் ஒரு பகுதியாக, அந்த நாற்காலியின் மீது ஒரு எந்திர மனிதனைப் போல உட்கார்ந்திருந்தான். சிலிண்டர்களின் இடிபோன்ற முழக்கம் அவ்விடம் முழுவதும் எதிரொழித்து, காற்று பூமியுடன் ஒன்று கலந்தது. பூமியும் காற்றும் பரிதாபத்துடன் அதிர்ந்தன. உன் தாத்தா துப்பாக்கியால் சுட்டார். டிராக்டரின் லைட் உடைந்தது. உங்கள் வீட்டின் பாதியை டிராக்டர் பிய்த்துக் கொண்டு போனது. டிராக்டர்களுக்கு பின்னால் இருக்கும் பாளங்கள் நிலத்தை வெட்டிச் சென்றன. அது உழவு அல்ல. ஒரு அறுவை சிகிச்சை. காவலர்கள் எல்லோரையும் விரட்டினார்கள். உன் ஜான் மாமா வண்டியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு உன் குடும்பம் போனது” என்றான் மூலா.

இந்த டிராக்டர் இரண்டு விசயங்களை செய்கிறது. இந்த நிலத்தை புரட்டுகிறது. நம்மை இந்த நிலத்தை விட்டு புரட்டி போடுகிறது. இந்த டிராக்டருக்கும் பீரங்கிக்கும் சிறிதளவு வேறுபாடுதான். இந்த இரண்டாலும் மக்கள் விரட்டப் படுகிறார்கள். அச்சுருத்தப் படுகிறார்கள். துன்பமடைகிறார்கள். என்றார்கேசி.
வயல்கள், வேட்டைக்காடுகள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்த காலம் ஒன்று இங்கு இருந்தது. அது கொலம்பஸ் வருகைக்கு முன்பு. அமைதியை விரும்பும் செவ்விந்திய மக்கள் இங்கு வாழ்ந்தனர். முதலாளித்துவம் (தொழில் புரட்சி) வேலையில்லா பட்டாளத்தை உருவாக்கி புதிய கண்டங்களுக்கு விரட்டியது.
பிரிட்டன், ஜெர்மனி, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் என குடியேற்றங்கள் வட அமெரிக்கா முழுவதும் பரவியது. பிரிட்டீஷ் வருகைக்கு முன்பு பத்து லட்சமாக இருந்த செவ்விந்தியர்கள் 1863 கணக்கெடுப்பின்படி 8 லட்சமாக குறைந்தார்கள். இப்படி நிலத்தை பறித்து விவசாயம் செய்தவர்களை முன்னோடி உழவர்கள் (PIONEER FARMER) என்கிறஆர்கள். இது அமெரிக்க வரலாறு. டாம் தாத்தாவும் இவர்களில் ஒருவரே.

The Grapes of Wrath (1940) – American Road Trips

வங்கிதான் இப்போது நிலக்கம்பனி. வங்கி ஒரு மனிதனல்ல. ஐம்பதாயிரம் ஏக்கரை சொந்தமாக கொண்ட ஒரு உரிமையாளனுமல்ல. அது மனிதனைப் போன்றதுமல்ல. அது ஒரு ராட்சத மிருகம். வங்கி மனிதனை விட மேலானது. மனிதன் தான் அதை உருவாக்கினான். ஆனால் அவனால் அதை கட்டுப்படுத்த முடியாது.

மனிதர்கள் காற்றை சுவாசித்து, புற உணவுகளை உண்டு வாழ்வதுபோல் வங்கியால் முடியாது. அது லாபத்தை சுவாசிக்கும். பணத்தின் மீதான வட்டியை உண்ணும். அது இல்லை என்றால் அழிந்துபோகும். எனவே, வங்கிக்கு டிராக்டர்கள் வேண்டும். நிலத்தில் குடும்பங்கள் வேண்டாம். வண்டிமாடு, கலப்பை, விதைவிதைப்பான், கிணத்துப்பம்பு, மண்வெட்டி, கண்ணிக்கயிறு, கழுத்துவார், கொளுவிவார் என பழைய விவசாய உற்பத்திக் கருவிகளோடு புழங்கிய விவசாயிகளும் அதற்கு பயனற்ற பொருட்களே. இது கதை மாந்தர்களின் குரல்.

காலம் காலமாக மண்ணை பண்படுத்தி, வெறும் கால்களால் வயலில் இறங்கி, ஐம்புலன்களாலும் மண்ணோடு ஒட்டி உறவாடிய வயல்-விவசாயி என்கிற அந்த சங்கிலி அறுபட்டுப் போனது. பழைய முறையிலான விவசாய உற்பத்தியை ஒழித்து முதலாளித்துவ முறையிலான விவசாய உற்பத்தியை பெரு நிருவனங்கள் துவங்கி விட்டன.

முதலாளித்துவம் உற்பத்தி முறை உற்பத்திக் கருவிகளை உற்பத்தியாளர்களிடமிருந்து பறித்து விடும். ஒரு சிலரிடம் உற்பத்தி கருவிகளை குவிக்கும். பெறும் பகுதி மக்களை உழைப்புச் சக்தியை விற்பதை தவிர வேறு வழியில்லாத பாட்டாளிகள் படை வரிசையில் தள்ளிக் கொண்டே இருக்கும். இதுவே மூலதனத்தின் பண்பு என்ற காரல் மார்க்ஸ் அவர்களின் தீர்க்க தரிசனத்தை எளிதாக இங்கு உணர முடிகிறது.

டாம் கேசியுடன் மாமா வீட்டிற்கு வந்தான். மகனை பார்த்தவுடன் நிலமிழந்த வேதனையைத் தாண்டி மகிழ்சியில் தவித்தனர் அம்மாவும், அப்பாவும். மகனே நீ ஏதும் தவறு செய்து விடவில்லையே என நடுக்கத்துடன் கேட்டார் அம்மா. இல்லையம்மா நான் நன்னடத்தையால் பரோலில் வந்திருக்கிறேன் என்றான். வழியில் பார்த்து அழைத்து வந்த போதகருக்கும் அம்மாஉணவு பறிமாறினால்.

நிலமெல்லாம் போய்விட்டது. வேலையுமில்லை. இங்கிருந்தால் இனி வாழ முடியாது. குத்தகைதாரர்கள் எல்லாம் போய்விட்டார்கள். நாமும் கலிபோர்னியா போக போகிறோம். உன் அப்பாவிடம் ஒரு மஞ்சள் நோட்டீஸ் இருக்கு நிழலிலேயே வேலை. நல்ல கூலி. பீச்,ஆரஞ்சு, பழங்களை பொருக்குறது. எல்லோரும் வேலை செய்யலாம். பிள்ளைகள நல்லா படிக்க வைக்லாம், ஒரு நிலத்த வாங்கி விவசாயம்பண்னலாம் என்றால் அம்மா.

நான் ரோட்டோரத்தில இருக்கிற திராட்சை கொலையை என் முகத்தில் பிழிந்து விட்டுக்கொள்வேன் என வேடிக்கை காட்டினார் தாத்தா. ஷாரன் ரோஸ் தன் வயிற்றை தடவிக் கொண்டாள். நீ ஆரஞ்சி மரம் இருக்கிற பண்ணையில தான் உன் குழந்தய பெத்துக்க போற என்றார் அப்பா. ஷாரன் ரோஸ் கணவன் கோனிக்கு தான் நினைத்தது போல் நடக்க போகிறதே என்ற சந்தோசம். விற்க முடிந்ததையெல்லாம் விற்றனர். சமயம் பார்த்து ஏமாற்றி வாங்குபவர்களை நினைத்து வயிறு எரிந்தது. போதகரையும் அழைத்துச் செல்லலாம் என்றான் டாம். அவர் ஆண்டவர் நம்மோடிருப்பது நல்லது தானே என்றாள் பாட்டி. கணவுகளோடு புறப்படுகின்றனர். அம்மாவும் ஆமோதித்தாள்.

The Grapes of Wrath: 10 surprising facts about John Steinbeck’s novel

மாமாவின் வண்டியில் போக முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும் வாழ்க்கை யோசிக்க இடம்தரவில்லை. பயணம் புறப்பட்டது. உயர்வேக சாலை 66 ல் மேற்கு நோக்கி.. அல் வண்டி ஓட்டுகிறான். ஓட்டை உடைசலான வாகனங்களை நாள் முழுவதும் மெதுவாக ஓட்டிக் கொண்டும், தண்ணீர் இருக்கும் இடங்களில் இரவில் தங்கியும் பெரிய கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாகனங்களிலும் ஒன்றிரெண்டு குடும்பங்கள் கழித்து போட முடியாத தட்டு முட்டு சாமான்களோடு. டெக்சாஸ், ஒக்லஹாமா, கன்சாஸ், அர்கன்சாஸ், நியூமெக்சிகோ, அரிசோனா என இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் குத்தகை விவசாயிகள் கலிபோர்னியாவை நோக்கி செல்கின்றனர்.

வழி நெடுக ஐம்பதாயிரம் பழைய கார்கள். காயப்பட்டு, புகைவிட்டுக் கொண்டு சாலையோரங்களில் விட்டு விட்டுப்போன உடைசல்கள். அதில் வந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் நடந்து சென்றார்களா? எங்கிருந்து துணிவு வந்தது? எங்கிருந்து நம்பிக்கை வந்தது? இதற்கு ஒரே பதில் தான். இது உயிர் வாழ்தலுக்கான போராட்டம். தற்போது இந்தியாவிலும் அதை பார்க்கிறோம்.

வாகன இயக்கத்தையும், அது பழதடைவதையும், அதை சரி செய்கிற போராட்டத்தையும், உதிரி பாகங்களுக்காக அலைவதையும், வாய்பை பயன்படுத்தி பணம் பறிப்பதையும் புலம் பெயர் மனிதர்கள் வேதனையுடன் எதிர்கொண்டனர்.

துயரத்தை மட்டுமே தன்னுடன் எடுத்துச் செல்லும் இக் கூட்டம் இரவு நேரங்களில் பல கூடாரங்களுக்கிடையில் தங்குகிறது. புதிதாக ஒருவர் வந்தால் அங்கிருப்பவரிடம் அனுமதி கேட்டு தங்குகின்றனர். ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டும், உதவிக் கொண்டும், ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் என்றால் தன்னிடமுள்ள ஒரு பரிசை வழங்கியும் இப் புலம் பெயர் மனிதர்கள் அன்பை பறிமாறிக் கொண்டனர். வாழ்க்கை இம் மக்களுக்கு தாம் ஒரு வர்க்கம் என்கிற உணர்வை இயல்பாகவே உருவாக்கியது. இது அவர்களின் கலாச்சாரம்.

வாழ்ந்த மண்ணை விட்டுப் பிரிய மறுத்த தாத்தாவுக்கு குழந்தைகளின் இருமல் மருந்தை தந்து வண்டியில் ஏற்றினார்கள். அதன் பிறகு தாத்தா கண் விழிக்கவே இல்லை. அரசுக்கு தெரியப்படுத்தினால் புதைப்பதற்கு நாற்பது டாலர் தரவேண்டும். அனைத்து பொருட்களையும் விற்று 150 டாலர் வைத்திருந்த அவர்களால் அதை தந்தால் ஊர்போய் சேரமுடியாது என்று தெரியும். மன வலியோடு சாலையோரத்தில் புதைக்கிறார்கள். வேர் அறுபட்டுப் போனது. கலிபோர்னியாவிற்குள் நுழைந்த போது பாட்டியும் இறந்து போனாள். கலிபோர்னியாவின் கதைகளை கேட்டு நோவா ஆற்றங்கரையோடு போய் விட்டான்.
“ பிரார்த்தனை செய்வதனால் விளக்கொளியில் எண்ணைக் காகிதத்தில் ஒட்டிக் கொள்ளும் ஈயைப் போல எல்லாம் போய்விடும் என நினைத்திருந்தேன். இது வேறாக இருக்கிறது” என்று வெதும்பினார் போதகர் கேசி.

The Grapes of Wrath | Summary, Assessment, & Facts | Britannica

கலிபோர்னியா பள்ளத்தாக்கு, திராட்சைத்தோட்டங்கள், பழத்தோட்டங்கள், பச்சைப் பசேலென வரிசையாக மரங்கள். தங்கத் தோரணம் போல ஆரஞ்சு பழங்கள், பண்ணை வீடுகள் இருந்தன. பசிக் குழந்தைக்காக ஆரஞ்சுகளை பறிக்காதவாறு துப்பாக்கி ஏந்திய காவலர்களும் இருந்தனர்.

ஒரு காலத்தில் கலிபோர்னியா மெக்சிகோவிடம் இருந்தது. நிலப்பசி கொண்ட அமெரிக்கர்களிடம் மெக்சிகர்கள் நிலத்தை இழந்தனர். அவர்கள் திருடிய நிலத்தை துப்பாக்கியால் பாதுகாத்தனர். விவசாயம் ஒரு தொழிலாக ஆனது. அடிமைகளை இறக்குமதி செய்தனர். சீனர்கள், ஜப்பானியர்கள், மெக்சியர்கள், ஃபிலிப்பினோக்கள் செல்வச் செழிப்பை உருவாக்கினர். உரிமையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது.நில அளவு அதிகரித்தது. தானிய நிலங்களின் இடத்தை பழ மரங்கள் எடுத்துக் கொண்டன.

நில உடைமையாளர்கள் காகிதங்களிளேயே விவசாயம் செய்தனர். எதை இலாபமாக பெற்றோம், எதை இழந்தோம் என்பதை மட்டுமே நினைவில் கொண்டனர். பெரிய சொத்துடமையாளர்களும், நிறுவனங்களும் பதப்படுத்தும் கம்பனிகளை வாங்கினர். பீச், பேரிக்காய், திராட்சைகளையும் உற்பத்தி செலவைவிட குறைவான விலைக்கு விற்றனர். இதனால் சிறிய விவசாயிகள் நட்டமடைந்து நிலத்தை விட்டு வெளியேறினர். பெரிய நிறுவனங்கள் விவசாயத்தில் வந்த இழப்பையும் சேர்த்து பழச்சாறு பாட்டிலில் எடுத்தனர். இது தான் மூலதன குவிப்பின் சூட்சுமம்.

தானிய களஞ்சியங்கள் நிரம்பி இருந்தன. ஏழைக் குழந்தைகள் கூனலுடன் வளர்ந்தனர். வறட்டுக் கொப்புளங்கள் சீழ்கொப்புளங்களாக வெடித்தது. பெரும் நிறுவனங்களுக்கு பட்டினிக்கும் கோபத்துக்கும் இடையிலான மெல்லிய கோடு தெரிவதில்லை. கோபம் கொப்பளிக்க துவங்கியது.

“ஹூவர்வில்லே” கந்தல் நகரம் தண்ணீருக்கு அருகில் இருந்தது. கூடாரங்கள் தான் வீடுகளாக இருந்தன. புதர்கள் வேலிகளாக இருந்தன. காகித வீடுகள், பெரிய குப்பைமேடு. இதுதான் புலம் பெயர்ந்தவர்களின் புகலிடம். டாம் குடும்பம் இங்கே கூடாரம் அமைத்தனர் “ எங்களிடம் உடைகள் இல்லை. கிழிசலுடன் அம்மனமாகவே இருக்கிறோம். அடுத்த வீடும் அப்படியே. அதனால் தான் கூச்சமில்லாமல் கூட்டத்தில் நிற்க முடிகிறது என்றார் ஒருவர்.

அம்மா மீந்துபோன பொருட்களை வைத்து சிறிது குழம்பு செய்தார். சின்னஞ்சிறு குழந்தைகள் பதினைஞ்சு பேர் அடுப்பை சுற்றிக் கொண்டது. விபரம் தெரிந்த ஒரு குழந்தை அப்பா வேலை தேடி போயிருக்கார். இரண்டு நாளாச்சி நாங்க சாப்பிட்டு என்றது. குடும்பத்தையும் பட்டினி போட முடியாது. குழந்தைகளையும் விரட்ட முடியாது என கண்கலங்கினார் அம்மா. சிறிது குடும்பத்துக்கும் மற்றதை குழந்தைகளுக்கும் கொடுத்து பெரியவர்கள் சாப்பிடவில்லை. எம் பிள்ளக்கி ஏன் கொளம்பு குடுத்தே. நாளக்கி அவன் கேட்டானா நான் எப்படி குடுக்க முடியும் ஒரு பெண் சண்டை போட்டாள்.

காலையில் வண்டியை எடுத்துக் கொண்டு வேலைதேடி சென்றனர். எல்லா பண்ணைகளிலும் யார் உதவியும் இங்கு தேவையில்லை என அறிவப்பு பலகை மாட்டப்பட்டிருந்தது. வெறுங்கையோடு திரும்பினர். பீச் இரண்டு வாரங்களில் பழுக்கும் அதற்குள் அதை எடுத்துவிட வேண்டும். இவர்களுக்கு மூவாயிரம் பேர் வேண்டுமென்றால் 6000 நோட்டீஸ் அடிப்பார்கள். அதை பார்த்து பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றார் ஒருவர். அவர்கள் குழந்தைகள் இருக்கும் குடும்பமாக பார்த்து வேலை தருவார்கள். அவன் தான் உணவு கிடைத்தால் போதுமென வேலை செய்வான் என்றார் மற்றவர்.

Grapes of Wrath -‘We take a beatin’ all the time.’ – The Seer

பசியிருக்கும் இடங்களில் சிவப்புச் சிந்தனை வந்துவிடும். சிவப்பை தடுக்க ஹூவர்வில்லேவுக்கு காவலர்கள் வருவது வழக்கம். அன்றும் வந்தனர். ஒரு பெண்ணை தாக்கிய போது டாம் தடுத்ததில் ஒரு போலீஸ் காயமடைந்தான். வந்தது ஆபத்து, டாம் நீ மாட்டிக்காதே. நீ போனால் உன் குடும்பம் பாலாயிடும் என்று டாமை தள்ளி விட்டு போதகர் கேசி சரண் அடைந்தார்.

அங்கிருந்து வேறு முகாம் போகிறது டாம் குடும்பம். அந்த முகாமை அன்று இரவு எரிக்கப் போவதாக தகவல் கிடைக்கிறது. அங்கிருந்தும் புறப்படுகின்றனர். மனமுடைந்த கோனி எங்கோ போய் விடுகிறான். கணவன் இல்லாமல் வரமாட்டேன் என ஷாரன் ரோஸ் கண்ணீர் வடிக்கிறாள். பல இடங்களில் தேடி அவன் வந்து விடுவான் என ஆறுதல் கூறி அழைத்துச் செல்கின்றனர்.

அரசாங்க முகாம் என்ற ஒன்று இருக்கிறது. டாம் குடும்பம் அங்கே போய் தங்குகிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை. அங்கே ஒரு கமிட்டி இருக்கிறது. தொழிலாளர்களே அக்கமிட்டியை தேர்வு செய்கின்றனர். காவலர்கள் கூட வாரண்ட் இல்லாமல் உள்ளே நுழையமுடியாது. குளியலரை, துணிதுவைக்க தனி இடம், சுடுதண்ணீர், சுகாதாரமான கழிவரை, டிஷ்யூ பேப்பர் என எல்லா வசதிகளும்உண்டு. ஓய்வு நேரங்களில் பெண்களுக்கு தையல் பயிற்சி உட்பட நடக்கிது.
பல பொருப்புகளை பெண்கள் கமிட்டியே நிர்வகிக்கிறது. பல முகாம்களில் இருந்து வருபவர்களும் பங்கேற்கும் வகையில் இசை,பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நாளில் நடத்தப்படுகிறது. அம்மா இந்த இடம் தங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று கூறி ஆண்டவனை வேண்டிக் கொண்டார். கலவரத்தை உருவாக்கி, துப்பாக்கி சூடு நடத்தி, இந்த இடத்தை இல்லாமல் செய்ய முதலாளிகள் சங்கத்தின் சூழ்ச்சி தொடர்கிறது.

வேலை கிடைக்காத தால் மீண்டும் பயணம். பாதையின் குறுக்கே பெரிய கூட்டம். காவலர்கள் வாகனத்தை மறித்தனர்.வேலை தேடுகிறோம் என்றதும் போலீஸ் அழைத்துச் சென்று ஒரு பெரிய பண்ணைக்குள் விட்டது. புகையும், அழுக்கும், இருளும் அடைந்த 26 ம் எண் கொட்டடியில் அடைபட்டனர். பீச் பழம் பொறுக்க ஒரு பெட்டிக்கு 5 செண்டு. பழத்தில் கீறல் இருந்தால் பணம் கிடையாது. குழந்தைகள் உட்பட அனைவரும் பொறுக்கினர். ஒரு நாளைக்கு 20 பெட்டி, பல பெட்டிகள் கணக்கில் சேர்க்க வில்லை. இனி முடியாது என சோர்ந்து போன பின் அவர்கள் சம்பாதித்தது ஓரு டாலர். கூலியை பணமாக தராமல் சீட்டு எழுதி கொடுத்து அவர்கள் நடத்தும் கடையில் பொருள் வாங்கிட சொன்னார்கள். அநியாய விலை.

வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கே இவர்களுக்கு வேலை தந்துள்ளார்கள். அடுத்த நாள் ஒரு பெட்டிக் கூலி இரண்டரை செண்ட் ஆனது. அங்கு போதகர் கேசியை பார்த்து ஆச்சரியமடைந்தான் டாம். போராட்டத்திற்கு தொழிலாளியை தூண்டியதாக போதகர் கேசியை சிவப்பு என சொல்லி கொலை செய்தனர். டாம் சாவிலிருந்து தப்பித்தான். தொழிலாளிக்காக ஏதாவது செய்ய வேண்டுமென போதகர் சென்ற சிவப்பு பாதையில் செல்வதாக அம்மாவிடம் சொன்னான். அம்மா மறுப்பேதும் சொல்லவில்லை. நமக்கு நிலம் என்ற ஒன்று இருந்த காலத்தில் குடும்பம் இருந்தது. இன்று அது இல்லாமல் போய்விட்டதே என கலங்கினார் அம்மா.
புயல் மழை. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வரிசையாய் நிறுத்தப் பட்டிருக்கின்ற வாகனங்களில் தங்கும் குடும்பங்கள் தண்ணீரில் மிதக்கிறது. மகளுக்கு பிரசவ வலி. மற்றவர்கள் தப்பித்து போகாமல் உதவுகின்றனர். ஆண்கள் அனைவரும் வாகனங்கள் மூழ்காதவாறு மண்னை வெட்டி தடுப்பு அமைக்கின்றனர். பெண்கள் பிரசவத்திற்கு போராடுகின்றனர். இறந்து பிறக்கிறது குழந்தை. புதைப்பதற்கு இடமில்லை. வேறு வழியின்றி அட்டை பெட்டியில் போட்டு வெள்ளத்தில் விடுகின்றனர்.

கோபத்தின் கனிகள் | ஜான் ஸ்டீன்பெக் ...

மழை நின்றாலும் சுற்றியுள்ள மலைகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. வாகனங்கள் மூழ்கும் நிலை. அம்மாவும்,அப்பாவும் மகளைக் காப்பாற்ற கைத்தாங்களாக சாலையில் மேட்டை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். மீண்டும் ஒரு பெரிய காற்று மழையுடன், ஒதுங்குவதற்கு இடம் தேடி அருகில் தெரிந்த ஒரு ஓட்டைக் குடிசைக்குள் ஓடுகின்றனர். அங்கு ஒரு மூலையில் ஒரு வயதான மனிதனும் ஒரு சிறுவனும் இருக்கின்றனர். சிறுவனிடம் மகளுக்காக ஏதாவது துணி இருக்கிறதா நனைந்த உடையை மாற்ற வேண்டுமென கேட்கிறாள் அம்மா.

அவன் அழுகடைந்த போர்வையை தருகிறான். போர்வைக்குள் மகளை வைத்து உடையை காயவைக்கிறாள். சிறுவன் அம்மாவிடம் அவர் என் அப்பா. ஆறு நாளாக பட்டினி. நேற்று அவருக்காக ஒரு ரொட்டி திருடி வந்து கொடுத்தேன். வாந்தி எடுத்து விட்டார். சாகும் நிலையில் இருக்கிறார். சாப்பிட ஏதாவது கொடுங்கள் என கெஞ்சுகிறான். அம்மா தலையசைக்கிறாள். பிறகு மகளின் காதோடு பேசுகிறாள். அனைவரும் குடிசைக்கு வெளியே வருகின்றனர். மகள் அந்த பெரியவருக்கு மார்பு அமுதை ஊட்டி உயிரை மீட்கிறாள். ஈன்ற குழந்தையை இழந்த வலியிலும் இன்னொரு உயிரை காத்த இரண்டு தாய்கள். எவ்வளவு இடர் வரினும் புசிக்க கனி தரும் மரம் போல இவர்கள் கோபத்தின் கனிகள்…

மூலதனத்தின் ஈவு இரக்கமற்ற சுரண்டலும், லாப வெறியும், உழைக்கும் மக்களின் அன்புச் சுனையும் புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. சிறந்த நிர்வாகம், உண்மையான ஜனநாயகம், கவுரவமான வாழ்க்கை, பாலினச் சமத்துவம் கிடைக்க தொழிலாளர்களிடம் அதிகாரம் தேவை. அதற்கு சிவப்பு தேவை என்கிறது இப்புத்தகம். புலம் பெயர் மக்களின் ஆழ்மனப் பதிவுகளை அழகாக படம்பிடித்திருக்கிறது. சிறிய வாக்கியங்கள், எளிய நடை, அழுத்தமான பதிவு. இந்த உள்ளடக்கம் தான் தேசிய புத்தக விருது, புலிட்சர் விருது, இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைதேடித் தந்திருக்கிறது. ஜான் ஸ்டீபன்பெக் எழுதிய GRAPES OF WRATH கோபத்தின் கனிகள் புத்தகம். மொழிபெயர்ப்புச் சுவடே தெரியாமல் தமிழில் தந்த கி. ரமேஷ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது பாரதி புத்தகாலயம் வெளியீடு. வாங்கி படிக்கவும் பரிசளிக்கவும் தரமான புத்தகம். யாம் பெற்ற இன்பம் வையகம் பெற அனைவருக்கும் பகிர்வோம்….

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kobathin-kanigal_stein-bek_-ramesh/

-நன்றி திருவேட்டை ஃபேஸ்புக் பதிவு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *