ஏப்ரல் 2021இல் வெளியிடப்பட்ட மலையாளத் திரைப்படம். சியாம் புஷ்கரன் எழுதி திலீஷ் போத்தன் இயக்கியுள்ளார். 1985ஆம் ஆண்டு கே.ஜி. ஜார்ஜ் எழுதிய ‘இறக்கல்’ சிறுகதை, ஷேக்ஸ்பியரின் மேக்பத் மற்றும் கூடதாயி சையனைட் கொலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாம். பகத் பாசில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரப்பர் தோட்டம்,வியாபாரம், பெரிய வீடு ஆகியவை கொண்ட வசதியான கிறித்துவ குடும்பத்தின் தலைவர் பனச்சல் குட்டப்பன். மனைவியை இழந்தவர். மூன்று மகன்கள். பெரியவன் ஜோமன் விவாகரத்து ஆனவர். அதிகக் குடிப்பழக்கம் உடையவர். இவர்தான் ரப்பர் தோட்டங்களைக் கவனித்துக் கொள்கிறார். அவருக்கு ஒரு மகன் பாப்பி. குட்டப்பனின் இரண்டாவது மகன் ஜெய்சன்; இவர் குடும்பத்தின் பிசினஸைக் கவனித்துக் கொள்கிறார். அவரது மனைவி பின்சி. மூன்றாவது மகன் ஜோஜி பொறியியல் படிப்பை பாதியில் விட்டவர். அவர் செய்யும் எல்லா தொழிலும் தோல்வியடைகிறது. மெலிந்த உடல்வாகு கொண்டவர்.
குட்டப்பன் 70வயதுக்கு மேலானாலும் உடற்பயிற்சி செய்து நல்ல உடல் கட்டுடன் இருப்பவர். மொத்த நிர்வாகத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஜோஜியின் மெலிந்த உடல் வாகு, திருட்டுத்தனம், கோழைத்தனம், சாமர்த்தியமின்மை ஆகியவற்றால் குட்டப்பன் அவனை வெறுக்கிறார்.
குட்டப்பனுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் தாக்குகிறது. அவர் எப்பொழுது இறப்பார் என்று குடும்பத்தினர் மனதிற்குள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மூத்த மகன் ஜோமன் மட்டும் அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார். சிகிச்சைக்குப் பின் குட்டப்பன் உடல்நலம் தேறி சக்கர நாற்காலியில் இயங்குகிறார். ஒரு கைதான் செயல்படுகிறது. எனவே செக்கில் கையெழுத்திடும் அனுமதியை இரண்டாவது மகன் ஜெய்சன் கேட்கிறார். மேலும் நகரத்தில் அவர்களுடைய வணிக அலுவலகத்திற்கு அருகில் தனியாக வீடு கட்ட பணமும் கேட்கிறார். இரண்டையும் குட்டப்பன் மறுத்துவிடுகிறார். தன்னால் தெளிவாகக் கையெழுத்து இடமுடியும் என்று காட்டுகிறார். மூன்றாவது மகன் ஜோஜி வெளிப்படையாகவே தாங்கள் அவரை நன்றாகக் கவனித்துக் கொள்வோம்; தங்களை நம்பி வரவு செலவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறான். ஒரு கையாலேயே அவன் கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோஜி குட்டப்பனின் மாத்திரைகளுக்குப் பதிலாக போலி மருந்துகளை அவர் எடுத்துக் கொள்ளும்படி செய்கிறான். இதை பின்சி பார்த்துவிடுகிறாள். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. குட்டப்பன் இறந்துவிடுகிறார். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பிரேதப் பரிசோதனை செய்யாதது ஏன் என்றும் ஊர் மக்கள் பேசுகிறார்கள். இதனால் கலவரமடைந்த ஜோஜியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஜோமன் அவனை விசாரிக்கிறார். ஆத்திரத்தில் ஜோஜி அவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுகிறான்.
பின்சி நடந்தவைகளை தன் கணவன் ஜெய்சனிடம் கூறிவிடுகிறாள். ஜெய்சனையும் ஜோஜி மிரட்டுகிறான். ஆனால் ஜெய்சன் உயிரே போனாலும் உண்மையை சொல்லப்போவதாக் கூறிவிடுகிறான். காவல்துறை விசாரணைக்கு வரும்போது ஜோஜி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு விடுகிறான். ஆனாலும் உயிர் போகவில்லை. இயக்கங்களின்றி படுக்கையில் முடங்கவேண்டி வருகிறது. காவல்துறையின் கேள்விகளுக்கு ஜோஜி பதில் சொல்ல மறுப்பதுடன் படம் முடிவடைகிறது.
மேக்பத் நாடகத்தின் தொடக்கத்தில் மேக்பத் தன்னுடைய உறவினரான அரசரைக் கொன்று அரியணை ஏறும் திட்டத்தில் சற்று பயந்தவனாகவும் உறுதி இல்லாதவனாகவும் காட்டப்படுவான். ஆனால் அவனுடைய மனைவி அரசரைக் கொலை செய்வதில் உறுதியாக இருந்து அவனை தூண்டுவாள். மேக்பத்தும் கொலை செய்துவிடுவான். பிறகு மேக்பத் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் உறுதியானவனாகவும் எதற்கும் அஞ்சாதவனாகவும் மாறிவிடுவான். அவனுடைய மனைவியோ மன நோயாளியாக மாறிவிடுவாள். திரைப்படத்தில் ஜோஜியின் பாத்திரம் மேக்பத்தோடு பொருந்துகிறது. மனைவிக்குப் பதிலாக அண்ணியின் பாத்திரம் உள்ளது. இரண்டாவது மகன் ஜெய்சன் கூட பேங்கோ எனும் பாத்திரத்தோடு ஒப்பிடலாம். பேங்கோ முதலில் மேக்பத்தோடு சதித்திட்டத்தில் பங்கெடுக்கிறான். ஆனால் கடைசி நேரத்தில் மனம் மாறி எதிர் தரப்பிற்குப் போய்விடுவான்.
இந்தப் படத்தில் பல விஷயங்கள் பூடகமாக சொல்லப்படுகின்றன;அல்லது நம் கற்பனைக்கு விடப்படுகின்றன; நுட்பமாகவும் காட்டப்படுகின்றன என்று ஒரு விமர்சகர் கூறுகிறார். அது உண்மைதான். ஜோமனின் மகன் பாப்பி அவனுடன் ஒட்டி உறவாடுவதில்லை. என்ன காரணம் என்று சொல்லப்படுவதில்லை. தந்தையும் தாயும் விவாகரத்து ஆகி பிரிந்திருப்பதனாலா அல்லது ஜோமன் அதிகம் குடிப்பதாலா என்பதெல்லாம் நாமே ஊகித்துக் கொள்ளவேண்டியதுதான். இன்னொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம். கூட்டுக் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் சற்று இள வயது மாமன்கள், சிற்றப்பன்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். அந்த விதத்திலும் சரி தாத்தாவின் கணக்கிலிருந்து பணத்தை திருடுவதிலும் சரி பாப்பியும் ஜோஜியும் நெருக்கமாக இருக்கிறார்கள். பின்சியும் ஜெய்சனும் கணவன் மனைவி என்பதற்கு திரைப்படத்தின் பாதி வரை எந்தக் காட்சியும் இல்லை. தனியாக வீடு கட்டுவதற்கு குட்டப்பன் பணம் தர மறுத்தவுடன், ஜெய்சன் பின்சியிடம் ‘உன் பேச்சைக் கேட்டு அவரிடம் பணம் கேட்டேன்.இப்பொழுது பெரும் அவமானமாகப் போய்விட்டது’ என்று சொல்லும்போதுதான் அவர்கள் கணவன் மனைவி என்பது தெளிவாக்கப்படுகிறது.
குட்டப்பன் உயிரோடு இருக்கும்போது பின்சி தன்னந்தனியாக சமையல் வேலைகளை செய்கிறாள். கேஸ் சிலிண்டரைக்கூட தனியாக தூக்கி வைக்கிறாள். பின் ஒரு காட்சியில் ஜோஜி அவளுடன் சிலிண்டரை தூக்கி வைக்கிறான். இதுவும் இன்னும் சில காட்சிகளும் அவர்களுக்கிடையில் உள்ள உணர்வுபூர்வ ஒற்றுமையை காட்டுகிறது. குட்டப்பனின் இறப்பிற்குப் பிறகு ஒரு சமையல் பணிப்பெண் அமர்த்தப்படுவது எந்த அளவிற்கு அந்தக் குடும்பத்தில் எல்லோரும் குட்டப்பனின் அதிகாரத்தின் கீழ் புழுங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை விளக்குகிறது.
செல்வ வசதி படைத்த தந்தை வழி குடும்பங்களையும் அவை நவீன மாற்றங்களுடன் மோதி நொறுங்குவதையும் இந்த படம் காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். தாத்தாவின் கணக்கிலிருந்து பணத்தை திருடி இளம் வயது பாப்பி துப்பாக்கி வாங்குவது, மகனின் இயலாமையை தந்தையே இகழ்வது, பணத்திற்காக தந்தையையும் சகோதரனையும் கொல்வது, தவறு நடப்பது தெரிந்தும் அது தனக்கு அனுகூலம் என்பதால் அதற்கு மவுனமாக உடந்தையாக இருப்பது போன்ற சீரழிவுகள் அரங்கேறுகின்றன. தங்கள் மத சம்பிரதாயதிற்குப் புறம்பாக, இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்தது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்று பாதிரியார் கூறும்போது ஜோமன் அவரிடம் ‘நீங்கள் இந்த சர்ச்சிற்குப் புதிது. இந்த சர்ச்சே எங்கள் அப்பாதான் கட்டினார்’ என்று சொல்லும்போது மதமும் பண செல்வாக்கும் மோதுவதைப் பார்க்க முடிகிறது.
பகத் பாசிலின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. கண்களிலேயே ஒருவித அச்சத்தையும் கோழைத்தனத்தையும் காட்டுகிறார். வில்லத்தனம் என்பது அட்டகாசமான சிரிப்பில் இல்லை; மவுனமான வஞ்சக செயல்களில் இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவை பாராட்டியே ஆகவேண்டும். முதல் காட்சியில் கிடுகிடு பள்ளத்தில் ஆறு வளைந்து நெளிந்து செல்கிறது. மேலே சாலையும் அதேபோல் செல்கிறது. அதற்கும் மேலே மலைத் தாழ்வாரங்களில் அன்னாசி செடிகள் வரிசை வரிசையாக விரிகின்றன. ரப்பர் தோட்டங்களும் அன்னாசி செடிகளும் நிறைந்த நிலப்பரப்பை காமிரா அழகாக படம் பிடித்திருக்கிறது. ஆனால் இந்த அழகெல்லாம் உழைப்பாளிகளின் வியர்வையில் விளைந்தவை. அவை ஒரு குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கிறது எனும் நினைவு வருகிறது. பணியாட்கள் குட்டப்பனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதுகூட நிலப்பிரபுத்துவ காவியங்களில் பார்க்கும் இராமாயண குகன், சுக்ரீவன்,அனுமன், இளவரசியைக் காப்பதற்காக தன் குழந்தையை பலி கொடுக்கும் நர்ஸ் பன்னா, பாகுபலி கட்டப்பா போன்றவற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.