ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "ஜோஸ் சரமாகோ (José Saramago): மரணத்தை கட்டுப்படுத்தும் மந்திர ஆய்வுகூடத்தின் சிவப்பு சூனியக்காரன்" கட்டுரை - | José Saramago Tamil Article| www.bookday.in

ஜோஸ் சரமாகோ: மரணத்தை கட்டுப்படுத்தும் மந்திர ஆய்வுகூடத்தின் சிவப்பு சூனியக்காரன்…! – ஆயிஷா இரா.நடராசன்

ஜோஸ் சரமாகோ (José Saramago): மரணத்தை கட்டுப்படுத்தும் மந்திர ஆய்வுகூடத்தின் சிவப்பு சூனியக்காரன்…!

– ஆயிஷா இரா.நடராசன்

நினைத்து பாருங்கள்.. வெளி மாநிலம் ஒன்றில் இறந்து போன உறவினர் வீட்டுக்கு சென்று நீங்கள் இரவு நேர ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்.. நடுநிசி இருக்கும். இன்னும் கொஞ்சம் நேரம்..  உங்கள் ஊர் வந்துவிடும். ரயில் திடீரென்று தண்ணீரில் ஓடுவதை பார்க்கிறீர்கள் உங்களை சுற்றிலும் வெள்ளம். ஒலிபெருக்கி அறிவிக்கிறது… (தமிழ்நாடு என்கிற) நிலப்பிரதேசம் நீங்கள் வாழும்  பிரதேசம்.. இந்திய தீபகற்பத்திலிருந்து முற்றிலும் விலகி இந்துமா சமுத்திரத்தில் நடுக்கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.. என்கிறது அறிவிப்பு.. ஐயோ நீங்கள் என்ன செய்வீர்கள்?!

நீங்கள் மன ஆய்வுகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… மனசே ரிசர்ச் பிளீஸ்.. என்று நான் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரையில் அதனை இலக்கியத்தில் பரிசோதித்து பார்த்து என் தூக்கத்தை கெடுத்து என்னை அழஅழ அடித்த பிசாசு என்றால் அது ஜோஸ் சரமாகோதான். சென்ற ஆண்டு கோடை காலத்தில் என் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் நடந்தன.. கோடைக்காலம் முழுவதும் நான் ஜோஸ் சரமாகோ என்கிற விஞ்ஞான கற்பனாவாத சமூக விஞ்ஞானியோடு வாழ நேர்ந்தது. அந்த காலகட்டங்களில் நான் செத்து செத்து பிழைத்தேன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ஏப்ரல் மாதத்தில் சரமாகோ பற்றிய ஒரு சர்வதேச ஆய்வரங்கத்தில் ஆன்லைனில் நான் கலந்து கொண்டேன்.. ஏப்ரல் மே ஜூன்.. நான் ஜோஸ் சரமாகோ எழுதிய அடுத்தடுத்த மூன்று நாவல்களை வாசித்தேன்..

என் தூக்கத்தை கெடுத்து வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத் தக்க ரத்தம் கொட்டும் கொடூரமான காயங்களை என் மூளைக்குள் திணித்து.. நான் துடித்த அந்த நாட்களை இதுவரை யாரிடமும் சொன்னதில்லை.. இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும்பொழுது அய்யோ இதை ஏன் வாசித்தோம் என்று நீங்களும் கலங்கக்கூடும்.. இப்போதே ஒரு எச்சரிக்கையாக  தெரிவித்து விடுகிறேன்…. சமூகத்திற்குள் புகுந்து அறிவு விஷத்தை பரப்பி அனைவருக்கும் அந்த நோய்த்தொற்றை உருவாக்கும்.. சொற்களால் கடித்து குதறும் வெறிநாய் என்று சரமாகோ விமர்சிக்கப்பட்டான். நாள் முழுவதும் யாரோ உங்கள்  மூளையில் உட்கார்ந்துகொண்டு வண்டி மாடு போல உங்கள் மூக்கணாங்கயிறை இழுத்து இழுத்து உங்களை வழி நடத்துவது தான் வாழ்க்கை.. என்று நீங்கள் உணரும் பொழுது.. மேய்ப்பர் யார் என்றும் கண்டுபிடித்த பிறகு திருப்பி அடிப்பீர்களா.. அல்லது வண்டியை தொடர்ந்து கதறியபடி அடிவாங்கி இழுப்பீர்களா.. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அறிவியலிலும் அறிவியல் கேடுகெட்ட.. பின் எதார்த்தவாத  சமூக அறிவியல் சரமாகோ உடையது.. அவன் செய்த சோதனைகள்.. அதற்குள் சிக்கிக் கொண்டு ஏறக்குறைய ஆய்வுகூடத்தின் எலிகளைப் போல நான் பட்ட பாடு.. ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு முன் த கார்டியன் இதழில் சரமாகோவின் கடைசி நேர்காணலை நான் வாசித்தேன். அவர் உயிரோடு இருந்த இறுதியாண்டு. போர்ச்சுகல் ஒரு மூழ்கும் கப்பல் என்று அந்த நேர்காணல் தொடங்கியது. மிகவும் பலவீனமாக இருந்த ஒரு நோயாளியின் சொற்கள் போலவே அது இல்லை. லிஸ்பனில் உள்ள தனது சிரிய போருக்குப் பிந்திய வீட்டில் ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். புகைப்பிடிக்கும் மரக்கட்டை போல் அவருடைய விரல்கள். நெருப்பு குமுட்டிக்கு அருகில் நகரத்தின் அட்லாண்டிக் தூரலில் இருந்து லேசாக குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.. கடந்த குளிர்காலத்தில் காசநோயால் மருத்துவமனைக்கு வந்ததை அவர் நினைவு கூர்ந்தார். ‘நான் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவர்கள் என்னை அழைத்துச் செல்ல தயங்கினர்’ சிரித்துக் கொண்டே அவர் மேலும் கூறுகிறார் ஜோஸ் சரமாகோ இங்கே தான் இறந்து போனான் என்று அறிவிக்கும் மருத்துவமனையாக இருக்க அவர்கள் விரும்பவில்லை.. அவருடைய நாவல்களைப் போலவே முற்றுப்புள்ளியோ தொடர் புள்ளியோ எதுவுமே இல்லாத ஒற்றை வாக்கியமாக அவருடைய வாழ்க்கையும் இருந்தது.. அறிந்து நான் துடித்துப்போனேன். ஒரே வாக்கியமாக ஒரு நாவலை ஒருவர் எப்படி எழுத முடியும். சோதனைகளுக்கு ஒரு அளவு இல்லையா.. ஆனால் எழுதத்தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சரமாகோ ஆங்கிலம் பேசும் உலகிற்கு அறிமுகமானார்.

நான் வாசித்தது முதல் சிறுகதை. ஆனால் இன்று வரையில் அதில் இருந்து என்னால் மீள முடியவில்லை.. நீங்கள் அலுவலகம் முடிந்து சோர்வோடு வீட்டுக்கு திரும்புகிறீர்கள்.. ஒரு பிரமாண்ட அதிர்ச்சி உங்களுக்கு காத்திருக்கிறது. கதவை திறக்க யாரும் வரவில்லை. ஆனால் ஜன்னல் வழியே பார்த்தால் அசப்பில் உங்களை போலவே இருக்கும் ஒருவன் ஏற்கனவே வீட்டிற்கு வந்துவிட்டான். அவனோடு கொஞ்சி குலாவி உங்கள் மனைவி பேசிக் கொண்டிருக்கிறார்.. குளோனிங் நடைமுறைக்கு வந்து விட்டதா என்ன நீங்கள் குழம்பிப் போகிறீர்கள்.. கதறி துடித்து ஏதோ சொல்ல வருகிறீர்கள் உங்களை போலவே வீட்டிற்கு வந்தவன் வாங்கி கொடுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு உங்கள் சொந்த மகள் வாழைப்பழ தோலியை.. ஜன்னல் வழியே உங்கள் முகத்திற்கு தூக்கி வீசுகிறாள்..

அதன் பிறகு ஒரு துரோகிப் பாதிரியார் பற்றிய கதை ஊனமுற்ற சிப்பாய்க்கும் ஒரு இளம் ஞானிக்கும் இடையிலான காதலையும் கூடவே சொல்லிக் கொண்டிருக்கும் அந்த கதை ஒரு விமான பயணத்தின்.. ஒரு குழந்தையின் கனவில் வரும் அந்த விமானம் பைலட் ஆக உங்களை கொண்டுள்ளது.. கனவு காண்பதை குழந்தை நிறுத்தினால் விமானம் விழுந்து நொறுங்கி விடும்.. துரோகிப் பாதிரியார் துப்பாக்கியை நீட்டி மண்டியிடச் சொல்லி உங்களை வற்புறுத்துகிறார்.. பரிசுத்த வேதாகமம் தேவைதான் ஆனால் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுந்தால் விமானம் நொறுங்கிவிடும்.. என்று நீங்கள் எவ்வளவோ கெஞ்சுகிறீர்கள்.. இப்படிப் போகிறது அந்தக் கதை.. எல்லாவற்றிலும் நாம் தான் நாயகன்.  நான் ஏன் பைலட் ஆனேன்.. என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய புத்தகத்தை அந்த விமானத்தில் யாரோ பல முழக்கங்களுக்கு நடுவே கொளுத்துகிறார்கள்..

முதலிலேயே ஒன்றை சொல்லி விடுகிறேன்.. வடிவத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்து சரமாகோ இலக்கியமென்பது அறிவியல் சமூக அலட்சியத்தை அளிப்பதாக உள்ளது. தி சேர்..(நாற்காலி) என்கிற அவர் கதையில் வருவது என்ன.. சர்வாதிகாரி நாற்காலி சரிந்து விழுந்ததில் மண்டையில் பலத்த காயங்களோடு கோமா நிலைக்கு சென்று விடுகிறான். ஆனால் மக்களுக்கு அது தெரியவில்லை.. அவன் எதையும் பேசுவதில்லை. யாரையும் பார்த்ததில்லை.. இருந்தாலும் எத்தனையோ ஆண்டுகளுக்கு அவன் தான் ஆட்சி.. செலுத்துகிறான். இது என்ன.. இப்படிப்பட்ட விஷயங்கள் அறிவியலின் குணாதிசயத்துடன் சமூக பொருளாதார கோமாளித்தனமாக திணிக்கப்படும் பொழுது அனோபியம் என்கிற வகை இலக்கியமாக மாறுகிறது..

ஆனால் அவரை முழுமையாக புரிந்து கொள்ள நீங்கள் நாவல்களை வாசிக்க வேண்டும்.. அரசியல குறியீடு என்பது அறிவியலின் ஆக தீவிரமான அர்த்தமின்மையாக மாற்றப்படுகிறது.. தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் செய்யத் தக்க ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வைத்து மக்களை தாங்கள் ஏதோ அறிவார்த்தமான அரசினுடைய அறிவியல் வேலையில் பங்குபெற்றவர்கள் போல உணரவைத்து அடிமையாக வாழவைக்க அரசியல் குறியீட்டு பரிமாணமாக  எழுத்துகளை அவரால் மாற்ற முடிகிறது

சரமாகோ என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் முள்ளங்கி பிடுங்குகிறவன் என்று அர்த்தம்.. அதுதான் அவர் பிறந்த கிராமத்தில் அவரது குடும்பத்திற்கு அந்த கிராம மக்கள் வைத்த பெயர். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று அசின்ஹா எனும் கிராமத்தில் அவர் பிறந்தார் அவரது குடும்பம் அவருக்கு வைத்த பெயர் ஜோஸ் டி சோசா.. ஆனால் பிறப்பு பதிவிடும் கிராமத்து அதிகாரி ஏனோ சரமாகோ என்கிற பேரையும் அவர் பெயரோடு சேர்த்து விட்டார்.. இப்படி தான் ஜோஸ் சரமாகோ ஆனார் அவர்.

மிகக் கடுமையான வறுமை பாதிக்க தகுந்த இளமை பருவத்தை அவர் கடந்தார். அவரால் உயர் கல்வி பெற முடியவில்லை. சுத்தமாக பணம் இல்லை. எனவே அதற்கு பதிலாக அவர் மெக்கானிக் பயிற்சி பெற்றார். பல இடங்களில் அலுவலக அடித்தள ஊழியராக வேலை பார்த்தார். பிறகு ஒரு பதிப்பகத்தில் வேலை கிடைத்தது.. ஒரு அளவுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்ததால் போர்ச்சுக்கீசிய ஆங்கில மொழிபெயர்ப்பாளராக ரயில் நிலையங்களில் காலத்தை கழித்தார்.. உள்ளூரில் இருந்த நூலகங்களே அவருடைய பல்கலைக்கழகங்கள்.. அந்த நாட்களில் போர்ச்சுக்கலில் அன்டோனியோ ஜலசார் எனும் சர்வாதிகாரியின் பாசிச ஆட்சி நடந்து கொண்டிருந்தது.. சரமாகோ இடது சாரி சிந்தனையாளர் போர்ச்சுக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியில் பிறகு இணைந்தார்.. ஒரு பத்திரிகையாளராக வேலை கிடைத்த நாட்களில் அதிகாரத்தை விமர்சனம் செய்தும் மதம் உட்பட அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தியும் அவர் எழுதத் தொடங்கினார்…

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "ஜோஸ் சரமாகோ (José Saramago): மரணத்தை கட்டுப்படுத்தும் மந்திர ஆய்வுகூடத்தின் சிவப்பு சூனியக்காரன்" கட்டுரை - | José Saramago Tamil Article| www.bookday.in
ஜோஸ் சரமாகோ (José Saramago)

ஆனால் ஒரு எழுத்தாளராக மிக தாமதமாகவே அவர் அறிய வந்தார் பல ஆண்டுகள் மிக அமைதியாக அவர் இருந்தார்..1947 ஆம் ஆண்டு அவருடைய முதல் நாவல் வெளிவந்தது.. ஆனால் எந்த கவனமும் பெறவில்லை.. காரணம் அவருடைய எழுத்துக்களில் இருந்த அதீத முரட்டு பகடிகளே என்று சொல்லப்படுகிறது.. எல்லாரும் ஸீரோ டிகிரியில் யோசித்தால்.. அவர் 360 டிகிரிக்கு யோசிக்கிறார் என்று இப்போதும்  சொல்கிறார்கள்.1991 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் மொழியில் வெளிவந்த இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி என்கிற நாவலோடு நாம் தொடங்கலாம் இயேசு கிறிஸ்துவினுடைய கதையை ஒரு அறிவியல் பாண்டசியாக.. அதன் தீவிர அரசியல் வாதத்தை பகடி செய்து இந்த நாவலை அவர் முன்வைக்கிறார்.. ஆனால் இது அவரைப் பொறுத்தவரையில் நான் வாசித்த முதல் நாவல் அல்ல அதற்கு முன்னரே நான் இரண்டு நாவல்கள் வாசித்திருந்தாலும் இந்த புத்தகம் தான் மிக முக்கியமான அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்பதில்சந்தேகமில்லை.

குற்ற உணர்ச்சியில் குமைந்து போய் இருக்கும் இயேசுவின் தந்தையான ஜோசப் என்பவரை அந்த நாவலில் நாம் சந்திக்கிறோம்.. கடவுள் ஆஷர் என்கிற முறையில் உள்ளூர் மன்னன் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் கொலைசெய்ய உத்தரவிட்டு விட்டான் என்கிற செய்தியை தன் குழந்தையை மட்டும் காப்பாற்றிவிட்டு அந்த ஊரில் உள்ள மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் விட்டதை நினைத்து நினைத்து அவர் வருந்துகிறார்.. இப்படி ஒரு மனம் மனிதனுக்கு ஏன் ஏற்படுகிறது குற்றவுணர்ச்சி என்றால் என்ன இந்த குற்றம் புரிந்த நெஞ்சு  வலியில் துடிக்கும் குமைந்து போகும் என்பதன் பின்னணியில் இருக்கும் மனித மனோநிலை அறிவியல் என்ன.. என்பதை வரிக்கு வரி விளக்குகின்ற ஒருவகை எதிர் நாவலாக இதைப் பார்க்கிறோம் தந்திரமான பழைய போர்ச்சுக்கீசிய விவசாயிகள் இடையே பிறந்திருந்தால் இந்த இயேசு கிறிஸ்து என்ன ஆகியிருப்பார்.. புத்திசாலியாகும் அதே சமயத்தில் அறியாமை கொண்டவர் ஆகும் இரண்டையும் கொண்டவராக ஒரு சாதாரண மனிதராக இந்த நாவலில் இயேசு வருகிறார்.. தன் கண்ணெதிரே இயேசுவின் தந்தை சிலுவையில் அறையப் படுகின்ற ஒரு காட்சி மிக அற்புதமானது.. தந்தை சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவர் பிரசங்கம் செய்திருப்பாரா மதத்தை கை விட்டு இருப்பாரா என்கிற அருமையான விமர்சனம்.. நவீன அறிவியல் மனிதனாக இயேசு இந்த பிரச்சனையை அணுகுகிறார் என்கிற இடங்களில் நாவல் சாத்தியமற்ற சொல்லாடல்களால் நிரம்பி வழிகிறது.. இறுதியில் கடவுள் இயேசுவை கெஞ்சுகிறார்.. சிலுவையில் அறையப்படும் பொழுது கடைசியாக இயேசு பேசும் மிக முக்கியமான அந்த வாசகத்தை நாவல் பயன்படுத்துகிறது ஆனால் மனிதர்களைப் பார்த்து இயேசு சொல்லுகின்றார் ‘மனிதர்களே அவரை(கடவுளை) மன்னித்து விடுங்கள் ஏனெனில் தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறியவில்லை’.. பிறகு உலகில் லட்சக்கணக்கான மக்களை மதத்தின் பெயரால் பலி வாங்கிய ஒரு மதத்தின் பிறப்பை அறிவிக்கிறான் நாவலாசிரியன்.

போர்ச்சுக்கீசிய அரசு இந்த நாவலை உடனடியாக தடை செய்தது அவர் நாடு கடத்தப்பட்டார். ஸ்பைன் தீவில் லஞ்சரேட் என்ன ஊருக்கு அவரை நாடு கடத்தியது.. அங்கே அற்புதமான தன்னுடைய மீதி நாவல்களை அவரால் எழுத முடிந்தது. சமூக எதிர் கலாச்சார அறிவியலின் வெவ்வேறு.. பரிணாமங்களை தோலுரித்துக் காட்டும் மூன்று நாவல்களை இங்கே நாம் குறிப்பிட வேண்டும்.. அறிவியல் நாவல்கள் என்றால் ஏதோ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு இருக்கின்ற ஒரு கற்பனாவாத சமூகத்தை பற்றி பக்கம் பக்கமாக எந்த உணர்ச்சியும் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு குப்பை மேடு என்று நினைத்துவிடாதீர்கள்.. முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமாக மனிதனை குர்பானி நேரத்தில் ஆடுகளை தோலுரிப்பது போல உரித்து தலைகீழாக தொங்க விடுகின்ற ஒரு எழுத்தை சரமாகோ அறிவியல் புனைவுக்குள் நுழைத்து உலகையே திக்குமுக்காட வைத்து இருக்கிறான்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "ஜோஸ் சரமாகோ (José Saramago): மரணத்தை கட்டுப்படுத்தும் மந்திர ஆய்வுகூடத்தின் சிவப்பு சூனியக்காரன்" கட்டுரை - | José Saramago Tamil Article| www.bookday.in

முதலாவதாக குருட்டுத்தனம் (BLINDNESS) .. இந்த நாவலில் ஒரு நாட்டில் திடீரென்று அனைவருக்குமே கண்பார்வை போய்விடுகிறது அதற்கான மருத்துவ விளக்கம் எதுவுமே இல்லை ஆனால் அது ஒரு தொற்றுநோய் போல பரவுகிறது.. கோவிட் 19 என்கிற ஒரு தொற்று உருவாவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் 1995 ஆம் ஆண்டு இந்த நாவல் வெளிவந்தது. பார்வையின்மை என்பது ஒரு பெயரிடப்படாத நகரத்தில் கிட்டத்தட்ட அனைவரையும் பாதிக்கும் நோய். விவரிக்க முடியாத பெரிய அளவிலான குருட்டுத்தன்மையின் கதை இது. இதைத் தொடர்ந்து வருகின்ற சமூக சீர்குலைவு இந்த நாவலின் அடிப்படை. ஒரு கண் மருத்துவர் இருக்கிறார் அவரது பல நோயாளிகள் மற்றும் பல்வேறு வகையான மனிதர்கள் உட்பட குருட்டுத்தன்மையால் முதலில் பாதிக்கப்பட்டவர்களில் சில பெயரிடப்படாத கதாபாத்திரங்களின் துரதிஷ்டத்தை இந்த நாவல் பின் தொடருகிறது. அவர்கள் தற்செயலாக ஒன்றாக தள்ளப்படுகிறார்கள் மருத்துவரின் மனைவிக்கு குருட்டுத்தன்மைக்கு விவரிக்க முடியாத நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஆனால் மருத்துவருக்கு அது இல்லை.. எப்பேற்பட்ட பகடியை இந்த நாவல் ஆடுகிறது என்பதை நினைத்து பாருங்கள்.. கோவிட் 19 காலத்தில் நடந்ததை போலவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது தான் ஒரே தீர்வாக இந்த நாவல் முடிகிறது. அற்புதமாக வீட்டில் ஒவ்வொருவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது விலாவாரியாக விளக்கப்படுகின்றது இன்றைக்கு இதையடுத்து வாசித்தால் கோவிட் 19 காலத்தின் முழக்கம் எப்படி இவருக்கு 1995 லேயே தெரிந்திருக்கும் என்பதை நினைத்து அசந்து போவீர்கள். உணவு கிடைப்பது குறித்த கவலை விநியோக முறைகேடுகள் ஒற்றுமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்ற கொடூரமான சூழல். விஞ்ஞானமற்ற முறையில் உருவாக்கப்படும் புகைப்படங்கள் ஒருவர் பின் ஒருவராக தொற்றுக்கு ஆளாகும் பொழுது அதிகரித்து வரும் வெறுப்பு உணர்வை வெளிப்படுத்துகின்றன கதாபாத்திரங்கள். அடிப்படை மருந்துகள் வழங்குவதைக் கூட ராணுவம் அனுமதிக்க மறுக்கிறது.. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களோ அனைவருக்கும் பார்வையின்மை வந்துவிட்டால் சகஜ நிலை திரும்பி விடும் என் று நோயை மேலும் பரப்புவதற்கான அறிவியலை கையில் எடுக்கிறார்கள்.. பாவம் அறிவியல் என்ன செய்யும் என்று தொடங்கி அறிவியல் தான் எதையும் செய்ய வேண்டும் என்பதை இந்த நாவல் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "ஜோஸ் சரமாகோ (José Saramago): மரணத்தை கட்டுப்படுத்தும் மந்திர ஆய்வுகூடத்தின் சிவப்பு சூனியக்காரன்" கட்டுரை - | José Saramago Tamil Article| www.bookday.in

அடுத்தது –  கல் படகு (THE STONE RAFT).. இவரது படைப்புகளில் ஜியோணி பெண்டிரோ என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நான் வாசித்த முதல் நாவல். ஐபீரிய தீபகற்பம் ஐரோப்பாவின் கண்டத்தில் இருந்து பிரிந்து அட்லாண்டிக் பெருங்கடலில் சுதந்திரமாக மிதந்து செல்லத் தொடங்குவதுதான் இந்த நாவலின் அடிப்படை.. உலகெங்கிலும் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சிகரமான விளைவுகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அதே நேரத்தில் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் முழுவதிலுமிருந்து ஐந்து சாகசக்காரர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இழுக்கப்பட்டு நிலப்பரப்பு தானே பயணித்து கொண்டிருக்கும் அந்த தீபகற்பத்திற்குள் ஒரு பயணத்தை தொடங்குகிறார்கள்.. என்ன ஒரு கொடுமை அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும்.. தண்ணீரிலேயே தத்தளிக்க வேண்டியது தான்.. ஒருபோதும் மிதக்கும் தீவைச் சென்று யாராலும் அடைய முடிவதே இல்லை. அது நகர்ந்து கொண்டே செல்கிறது.. பலவிதங்களில் இறங்குவதற்கு மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் வானத்தில் இருந்து விமானத்தில் கயிறு கட்டி அவர்கள் இறங்க முயற்சி செய்யும் இடம் மிகவும் நகைப்புக்குரியதாக சித்தரிக்கப்படுகிறது.. சமூக அறிவியலின் எதார்த்த வித்தகர் அவலங்களின் ஒட்டுமொத்த குரலை பதிவு செய்யும் சரமாகோ இந்த நாவல் வழியாக சொல்ல வருவது என்ன.. இயற்கை மனிதர்களை மட்டும் புறக்கணிகின்ற ஒரு தீவை தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கிறது.. என்பது மிகை எதார்த்தம் மட்டுமல்ல மிகை அறிவியல் புனைவும் கூட. கண்டங்கள் பிரிவின் உவமை.. அரசியல் டெக்டோனிக் மாற்றங்களில் சமூகத்தின் அவலம்.. சரமாகோ காட்டும் இயற்கைக்கு சாதிய பொருளாதார வேற்றுமைகள் மட்டுமல்ல தேசிய அடையாளம் கூட இல்லை..

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "ஜோஸ் சரமாகோ (José Saramago): மரணத்தை கட்டுப்படுத்தும் மந்திர ஆய்வுகூடத்தின் சிவப்பு சூனியக்காரன்" கட்டுரை - | José Saramago Tamil Article| www.bookday.in

மூன்றாவது நாவல் குறுக்கீடு செய்யப்பட்ட மரணங்கள் ( DEATH WITH INTERRUPTIONS) . ..2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இந்த நாவல் மரணத்தை ஒரு நிகழ்வாகவும் ஒரு மானுட மயமாக்கப்பட்ட கதாபாத்திரமாகவும் சித்தரிக்கிறது.. குறிப்பிடப்படாத கடந்த காலத்தின் ஒருகட்டத்தில் பெயரிடப்படாத நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் மரணம் என்பது முடிவுக்கு வருகிறது.. ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவில் அதனை யாரோ அமல்படுத்துவது போல அது நடக்குறது.. பிறகு யாருமே அந்த ஊரில் மரணத்தை  அனுபவிப்பதில்லை.. ஆரம்பத்தில் இந்த நாட்டு மக்கள் மனித குலத்தின் நீண்ட கால எதிரியின் மீது தங்களது வெளிப்படையான வெற்றியை கொண்டாடுகிறார்கள் இனி மரணமில்லை எப்பேற்பட்டவரம். வாழ்க்கை மற்றும் இறப்பு போன்ற விஷயங்களில் வழிகாட்டுதலுக்கான பாரம்பரிய ஆதாரங்கள் மக்கள் மரணிப்பதை ஏன் நிறுத்தி விட்டார்கள் என்பதை கண்டறிய முயற்சித்தாலும் மத வாதிகளும் அதிகாரிகளும் தத்துவ ஞானிகளும் அறிவியல் அறிஞர்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும் யாருக்கும் பதில் கிடைக்கவில்லை. மரணத்தின் கோட்பாடு அதன் அடிப்படை அடித்தளங்களில் ஒன்றான முன்னோர்களை வழிபடுதல் அல்லது மரணத்தில் இருந்து உயிர்த்தெழுதல் போன்றவற்றை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.. இப்போது நீண்ட ஆயுளை.. கொடுங்கள் எனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று எப்போதும் வேண்டி கொள்கின்ற கடவுள் சபைகள் அனைத்தையும் மூட தொடங்குகிறார்கள்.. நீத்தார் சடங்குகள் செய்யும் மனிதர்களுக்கு என்ன வகை புதிய வேலை கொடுப்பது.. சுடுகாடுகளில் புதிய வகை திட்டங்களை அமல்படுத்த சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு அமைச்சரவை கூடுகிறது.. இருப்பினும் மகிழ்ச்சி குறுகிய காலம் மட்டுமே நீடிக்கிறது. மனத்தின் முடிவு தனித்துவமான மக்கள் தொகை மற்றும் நிதி சவால்களை முன்வைக்கிறது இறப்பை முழுமையாக நிறுத்துவது சுகாதார பணியாளர்கள் இடையே அந்த அமைப்பு தன் சொந்த அமைப்பின் கீழ் எப்படி முற்றிலும் தகர்க்கப்படும் என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. பல தலைமுறைகளாக செயலிழந்த ஆனால் இன்னும் உயிரோடிருக்கும் மக்கள்.. அனேகமாக எத்தனை பராமரிப்பு இல்லங்கள் எவ்வகையான இடங்களில் இந்த வயதானவர்கள் குடியேறுவார்கள் என்கிற இடத்தில் இருந்து சமூகம் கொடூரமான தாக்குதலை எதிர்கொள்கிறது.. யாருமே வீட்டில் ஒரு கட்டத்திற்கு பிறகு வயதானவர்களை வைத்து பராமரிக்க விரும்புவதே இல்லை.. இறுதியாக தேவையில்லாதவர்களை கொன்று போடவும் வயதானவர்களை உயிர் திருத்தல் என்கிற நோயில் இருந்து காப்பாற்றுவதற்கும் பல குடும்பங்களை சுமையிலிருந்து விடுவிப்பதற்கும் ஒரு வழிமுறையாக மாஃபியா என்று மட்டுமே அழைக்கப் படும் ஒரு நிலத்தடி குழுவால் தீர்வு முன்வைக்கப்படுகிறது.. எப்படி இவர்களால் மட்டும் மரணத்தை சாத்தியமாக்க முடிகிறது என்கின்ற மர்ம முடிச்சுகளை நோக்கி திகில் மிகுந்த மனதோடு நம்மை.. ‘ஆண்டவரே ஆண்டவரே என்னை கை விடாது இரும்…எப்படியாவது கொன்று விடும்.. மரணத்தை பரிசாக எனக்குத் தாரும்’ என்று கதறுகின்ற திக்கற்ற மனித சமூகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்ற சரமாகோ  சமூக உயிரியலின்.. ஆக சிறந்த மனோவியல் ஆய்வு ஒன்றை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார். மருத்துவ அமைப்பு சிதைவு மதத்தின் பதற்றம் அரசியல் குழப்பம் எல்லாவற்றையும் மீறி மரணம் என்ற ஒரு அச்சம் இல்லை என்றால் சமூக சட்டங்கள் என்ன ஆகும் மனிதனை எப்படி மேய்ப்பது.. என்கிற நிழல் நாவல் முழுவதும் ஒரு அலறல் போல ஒலித்துக்கொண்டிருக்கிறது.

விஞ்ஞானி அல்லாத விஞ்ஞானி இந்த சரமாகோ.. இயற்கை விதிகளில் ஒன்றை அகற்றிவிட்டு.. அப்போது மனிதனுக்கு என்ன ஆகும் என்று பரிசோதனை செய்கின்ற திறந்தவெளி ஆய்வகம் அவருடைய நாவல்கள்.. அபத்த மாற்றங்களை முன்வைத்த காஃப்காவுடனும்.. மாய எதார்த்தவாதத்தை பின்னிப் பிணைந்து சென்ற மார்க்வஸ் உடனும் ஒப்பீட்டு அளவில் கிட்ட இருந்தாலும் சரமாகோவின் பாதை தனித்து விடப்பட்ட பாதை. சரமாகோ ஒரு மார்க்சிய சிந்தனையாளர். அவருடைய அசாத்தியங்கள் என்பவை வெற்று ஆன்மிக மாயங்கள் அல்ல.. சமூக முரண்பாடுகளை வெளிக்கொண்டு வரும் விஞ்ஞான பொருள்முதல்வாதம். நெறி அறிவியல் .. இயற்கை விதி நீக்க இலக்கியம்.. என்பது புதிய வடிவமாக நம் முன் நிற்கிறது..

இயற்கை விதி ஒன்றை நீக்கி சமூகத்தை பரிசோதித்தல் என்கிற இடத்தில் எத்தனை பழமை வாத அல்காரிதம்கள் அலறுகின்றன.. அவருடைய நாவல்களில் இடம்பெறுகின்ற நீண்ட வாக்கியங்கள் உரையாடல் குறியீடுகள் இல்லாத பாணி.. இவை எல்லாமே அவருடைய எதிர் கலாச்சார எழுத்து என்று சொல்லலாம். குளிர்ந்த தத்துவ தோனியோடு மனித சமுதாயத்தையே ஆய்வுக்கூடமாக மாற்றுகின்ற ஒரு தேர்ந்த சமூக அறிவியல்வாதியாக நம் முன்னால் அவர் நிற்கிறார்.

சர்வாதிகார ஆட்சிக்கெதிராக போர்ச்சுக்கல் மக்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 1998 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு சரமாகோவுக்கு அறிவிக்கப்பட்டது கற்பனை இரக்கம் மற்றும் மனித முரண்பாட்டால் நிலை நிறுத்தப்பட்ட உவமைகளை சமூக அறிவியலின் அர்த்தத்தில் கேள்விக்கு உட்படுத்துகின்ற நவீன சந்தேகவாதி என்று நோபல் குழு அவரை வர்ணித்தது.. அப்போது சரமாகோ தனது எழுத்தை இவ்வாறு விவரித்தார் : இலக்கியம் ஒரே நேரத்தில் சாதுரியமான அறிவியல் சிந்தனை மற்றும் சாதூர்யத்தின் வரம்புகள் பற்றிய நுண்ணறிவு அற்பமான மற்றும் துல்லியமான எதார்த்தம் எச்சரிக்கையான பச்சாதாபம் அதை மீறிய விமர்சன கூர்மை அரவணைப்பு மற்றும் முரண் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது…. அந்த விஷயத்தில் மனித நெறி உடைக்கப்படுகின்ற இடங்களில்  ஒரு பாதி மக்களின் பசியும் பிணியும் தம் சொத்தாக அனுபவிக்கும் அதிகார சக்திகளை நோக்கி வீசப்படும் நாற்றமெடுத்த அழுகிய ஏதோ அறிவியல் விதிதான் என்னுடைய எழுத்து.

நன்றி : திசை எட்டும் காலாண்டிதழ்.

📚 எழுதியவர் : 

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *