ஆட்டம்
——-

இளமைதனில் ஆடிடுவார் இன்னல்கள் அறியாமல்
__இன்பங்கள் தேடியோடி இசைந்திங்குத் துய்த்திடுவார்..!
வளமைமிகு வாழ்விற்காய் வசந்தங்கள் தொலைத்திடுவார்
__வறுமைதனை நீக்குதற்கு ஓடியாடி உழைத்திடுவார்
களவென்றும் பாராமல் கற்றதனை மறந்திடுவார்,
__கயமைமிகு வழியினிலே காததூரஞ் சென்றிடுவார்…!
உளமார நம்புவோர்க்கு உறுதுணையாய் நில்லாமல்
__உதாசீனஞ் செய்தவாறு உயரவழி தேடிடுவார்…!

வறுமையிலே உறவோர்கள் வாழ்கின்ற நிலைமாற்ற
__வழியேதும் நாடாமல் வசதிதேடிச் சென்றிடுவார்…!
சறுக்குகிற பாதையிலே சங்கடங்கள் உணராமல்
__சரியாக யோசியாது சம்பாதிக்க எண்ணிடுவார்…!
சிறுமையென்றும் எண்ணாது சிங்கார வழியினிலே
__சித்தத்தை மாற்றுமாறு சிந்திடுவார் அறிவுரைகள்…!
நறுமணத்தைப் பரப்புகிற நல்லதொரு நிலைமறந்து
__நடந்திடுவார் இளமைதரும் நயமிக்க ஆட்டத்தால்…!

வேரென்று எண்ணுவது வினையாக முடிந்தாலும்
__வேதத்தின் வழியினிலே வேண்டியது கிடைத்திடுமே..!
பாரெங்கும் புகழ்பெற்று பலபதவி வகித்தாலும்
__பாராளும் மன்னனுக்கும் பண்படுதல் அவசியமாம்…!
ஊரெங்கும் பேசுமாறு உனதுபுகழ் இருந்தாலும்
__உள்ளுக்குள் அடக்கத்தை உணர்தலிங்கு தேவையன்றோ…!
யாரெங்கு சென்றாலும் யாரிங்கு வந்தாலும்
__யாக்கினையின் பலனொன்று யாவருந்தான் அடைந்திடுவார்..!

நிந்தைதனைக் குளிர்வித்து நிகருனக்கு இல்லையென
__நியாயமாகச் செயலாற்றி நின்றிடுவாய் நல்வழியில்..!
வெந்துயரைத் தீர்க்கின்ற வெண்மையான மனத்தோடு
__வெகுமதிகள் பெற்றிங்கு வெளிச்சத்தைக் காட்டிடுவாய்…!
சிந்துகிற வியர்வையினால் சிரிக்கவைப்பாய்ச் சிறியோரை
__சீரான நடைநடந்து சிகரத்தைத் தொட்டிடுவாய்…!
அந்தமில்லா ஆட்டத்தை அடியோடு விட்டொழித்து
அன்பான முறையினிலே அகிலத்தை வென்றிடுவாய்..!

எழுத்தாக்கம்
ஜோதிபாஸ் முனியப்பன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *