எங்கெல்லாம் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கிறார்களோ
எங்கெல்லாம் விடுதலை வேட்கை
உடையவர்கள் இருக்கிறார்களோ……”

அங்கெல்லாம் ஜே.பால்பாஸ்கர்
எழுதிய ….
புகழ்மிக்க விசாரணைகள்
நூல் படிக்கப்படும்

– நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்.

இந்திய விடுதலைக்கு அடிக்கல் நாட்டியவர்கள் இன்று அரசு அதிகாரத்தின் கதாநாயகர்களாக அகம்பாவத்துடன் வலம் வரும் பிரமுகர்கள் அல்ல. போரடி தோற்றுப்போய் கடைசியாக சுதந்திரத்தை வென்ற பெருந்தகைகள் இவர்கள் அல்ல. அவர்கள் வேறு இவர்கள் வேறு. இந்தியாவின் கோடான கோடி மக்களாகிய நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோமெனில் அதற்குக் காரணமானவர்கள் தங்களின் வாழ்வையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்து தேசம் விடுதலை பெற பாடுபட்ட தேசபக்தர்களே.

தலைமுறைகள் உருண்டோடி விட்டன. அடக்குமுறைக்கு எதிராக வீரமிகு எதிர்ப்பை காட்டிய அவர்களின் வீரக்கதைகள் மறதிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. இத்தகைய வீரஞ்செறிந்த வித்துக்கு சொந்தக்கார்களான அவர்களை தேசபக்தியுடன் நினைவு கூர்வது நாம் அவர்களுக்கு செலுத்தும் ஆழ்ந்த நன்றி கூறும் அஞ்சலியாகும். அவர்களின் பங்களிப்பு புரட்சிகரமானது.

அவர்கள் இல்லையேல் நாம் இன்னும் ஏகாதிபத்தியத்தின் பலிகடாக்களாக இருந்திருப்போம்.

அவர்களின் தீரச் செயல்களை முழுமையாக நினைவு கூற எண்ணற்ற புத்தகத் தொகுப்புகள் தேவைப்படுகின்றன. எனவே நம்மை கவர்ந்திழுக்கும், வளரும் தலைமுறைகள் நினைவில் வைத்து போற்றக் கூடிய சில காவியங்களை உயிர்கொடுத்து வைப்பது நமது கடமையாகும். அபூர்வமான எழுத்துத் திறனை இயல்பாகவே பெற்றவரான பால்பாஸ்கர் மாபெரும் வீரர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட வீரகாவியங்களை ஏற்கனவே ஓர் ஆங்கில ஏட்டில் வெளியானவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழில் அளித்திருக்கிறார். தனது வாசகர்களுக்கு தெரிவித்து உணர்ச்சியூட்ட இந்த அபூர்வமான திறன்படைத்த எழுத்தாளர், இம்பீரியல் டிரிப்யூனல் முன் குற்றவாளிகளாக நின்ற “மகாத்மாகாந்தி, எம்.என். ராய் போன்ற மாபெரும் தலைவர்கள் மீதான விசாரணைக் காட்சிகளை அற்புதமாக விவரிக்கிறார். இந்த டிரிப்யூனல்கள் அரசின் சட்டப்போர்வை போர்த்திய்ய அதிகாரப் பூர்வமான பிரதிநிதி தான் தவிர வேறல்ல.



சார்லஸ் சம்னர் கடுமையான வார்த்தைகளில் கூறினார்:

“நீதிபதிகள் வெறும் மனிதர்கள் தான். எல்ல காலங்களிலேயும் பலவீனத்தின் கூறுகள் அவர்களிடம் காணப்பட்டிருக்கின்றன. ஐயகோ! ஐயகோ! வரலாற்றின் மோசமான குற்றங்களுக்கு, தேசபக்தர்கள், தியாகிகள் ரத்தம் சிந்துதலுக்கு அவர்கள் கொல்லப்படுதலுக்கு அவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்தடிப்பதற்கு இந்த நீதிபதியின் அனுமதி அளித்திருக்கிறார்கள்.“

எப்போதுமே நீதியின் பெயரால் அடக்குமுறைச் சட்டங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் ஆட்சியின் ஒரு கருவியே நீதிமன்றம். ஆனால் சட்டங்கள் எப்படிப்பட்டவை? அச்சட்டங்களை உருவாக்கும் அரசு நல்லரசாக இருந்தால் அச்சட்டம் நல்லதாக இருக்கும். அரசு தீய அரசாக இருந்தால் அது உருவாக்கும் சட்டங்களும் தீயதாகத்தான் இருக்கும். அநீதியோடு ஒன்று சேர்ந்துவிட்ட சட்ட அமைப்பின் பிரதான நடிகர்களான நீதிபதிகள் வெறும் பொறியாளர்களாக அல்லாமல் வேறு விதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனமாகும். இது நீதித்துறையின் மீதான குற்றச்சாட்டு அல்ல. நீதித்துறையை கருவியாகப் பயன்படுத்தும் சமூக அமைப்பையே குற்றம் சொல்ல வேண்டும்.

பால்பாஸ்கர் பல்வேறு இடங்களிலிருந்து திரட்டி தன்னுடைய வாசகர்களுக்காக எளிமையான தமிழ் நடையில் 14 பெரும் வீரர்களின் விசாரணையை அளித்திருக்கிறார். அவை தேசியம், மனித்தத்துவம் மிளிரும் அற்பதமான படைப்புகளாக இருக்கும் என்று நம்புகிறேன். பெரும்பான்மையான விசாரணைகள் இந்திய விடுதலை வீரர்கள் குறித்ததாக இருப்பினும் அவற்றில் இரண்டு இந்தியர் அல்லாதவர் பற்றியவை. நெல்சன் மாண்டிடலாவின் விசாரணை, டிமிட்ரோவின் விசாரணை போன்றவை இந்த புத்தகத்தை உலகம் தழுவியதாக ஆக்கியிருக்கிறது.

முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வரலாறு ஒரு கேள்வி எழுப்புகிறது. யார் குற்றவாளி? குற்றம் சாட்டியவரா? சாட்டப்பட்டிருப்பரா? ஒரு கொடுங்கோன்மையான அரசால் தேச துரோக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவராக நின்ற போது பிடல் காஸ்டிரோ பாய்ந்து சென்று தாக்கினார். அவரது எதிர்வாதத்தின் தலைப்பே “நான் குற்றஞ்சாட்டுகிறேன்“ என்பதே. காஸ்டிரோவின் விசாரணை இப்புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை எனினும் இப்புத்தகம் ஏற்படுத்தும் ஒட்டு மொத்தமான தாக்கம் அரசு தரப்பே குற்றவாளிக் கூண்டிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனித குலத்தின் உயரிய மேன்மைக்காக வாதம் புரிபவர்களாகவும் இருப்பது தான்.

தேசப்பிதா மகாத்மா காந்தி இம்பீரியல் சட்டத்தின் பார்வையில் ஒரு குற்றவாளி, ஒரு கிரிமினல். ஆனால் அவரது முழுமையான சத்திய வேட்கை, இந்திய மக்களுக்கு விமோசனம் அளிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், சட்டப் பூர்வமான அரசு தரப்பு வன்முறையை அஹிம்சையின் மூலம் வெற்றி கொண்ட-சுயராஜ்யமே எங்களின் பிறப்புரிமை என்ற மக்களின் ஆசையை அடையும்வரை வெல்ல முடியாத மனஉறுதி போன்றவை தான் அவரது விசாரணையை மாற்ற முடியாத அனுபவமாக ஆக்கியிருக்கிறது. அவர் தண்டிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் வரலாறே இறுதி தீர்ப்பை அளித்தது.



அதன் மூலம் பேரரசே குற்றவாளியானது. காந்தியே பேரரசை குற்றம் சாட்டினார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களின் வெற்றியே இறுதித் தீர்ப்பானது. மகாத்மாவின்மீது சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையும், மூர்க்கத்தனமுள்ள ஒர் மோசமான அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் காந்திஜியின் எதிர்வாதமும் காதி உடுத்தும் தேசியவாதிகளின் எண்ணற்ற சொற்பொழிவுகளைக் கேட்பதைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. விசாரணையின் போதே இடையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. யார் குற்றவாளி என்பதைத் தீர்மானக்கும் இதிகாச சம்பவம் அது. சட்ட போர்வை போர்த்திய இம்பீரியல் நீதிமன்றத்தின் முன்நிற்கும் காந்திஜியா அல்லது மனித குல சபையின் முன் பேரரசா என்று தீர்மானிக்கும் திருப்பம் அது. அடக்குபவரின் அற்ப அளவிலான சட்டமா மனித விடுதலைக்கான உயர்ந்த நீதியா என்பதே கேள்வியின் சாரம். புகழ்மிக்க இந்த நீதிமன்ற விசாரணையின் கம்பீரம் இந்த புத்தகத்தில் வாசிக்கும் போது கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சங்களில் அழியாத முத்திரையைப் பதிக்கும். அவர்களை சுயராஜ்ய பாரம்பரியத்தை அறியச் செய்யும்.

சாவர்க்கரின் விசாரணை அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் நீதியின் அத்துமீறலுக்கம் காலனியாட்சியின் இரக்கமற்ற தன்மைக்கும் உதாரணமாக இவ்விசாரணை இருக்கிறது. பிரிட்டிஷாரை எதிர்த்து வாழ்வையே பணயம் வைத்து போராடிய எண்ணற்ற பேர்களில் சாவர்க்கர் தனித்து விளங்கினார். சாவர்க்கர் விசாரணை விவரிக்கப்பட்டிருப்பதும் அதில் எழுதப்படும் பிரச்சனைகளும் இந்தியர்களுக்கு மட்டுமின்றி விடுதலையை விரும்பும் எவருக்கும் ஒரு சிறந்த கல்வியாகும். உண்மையில் அபூர்வமான தைரியத்தையும் தாய் நாட்டின் மீது மாறாத அன்பையும் கொண்டிருந்த ஒரு மனிதனின் மீதான இவ்விசாரணை உண்மையில் மறக்க முடியாத ஒன்றாகும். பிரிட்டிஷ் அரசு இவ்வழக்கு குறித்த பரபரப்பான செய்திகளைக் கண்டு அஞ்சியது. இதன் காரணமாக சாவர்க்கர் மீதான இருதீர்ப்புகளுமே எந்த சட்ட அறிக்கை ஏட்டிலும் பிரசுரம் செய்யப்படவில்லை. உண்மையின் பேரொளியை ஏகாதிபத்தியத்தால் மறைக்க முடியவில்லை. இச்சானத்தை குறுகிய காலம் தான் மறைக்கும் அதிகாரம் ஏகாதிபத்திடம் இருந்தது. வரலாற்றில் உரிய இடத்தை பெற்று விட்டது சாவர்க்கரின் விசாரணை.

நன்கு சிவப்பாக கொழுந்துவிட்டு எரிந்தது எம்.என். ராயின் விசாரணை. ஏனெனில் இவ்விசாரணையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் இந்திய தொழிற்சங்க இயக்கத்தையும் அடக்கிவிட பிரிட்டிஷார் முயன்றனர். இந்த புரட்சியாளரின் வாழ்க்கை பல கோணங்களிலும் தனித்தன்மை வாய்ந்தது. தன் வாழ்நாள் காலத்தின் மாபெரும் மனிதாபிமானழிக்கவராகவும், தன் வயதை ஒத்தவர்களிடையே அபூர்வமான புரட்சியாளராகவும், இந்த நூற்றாண்டின் அற்புதமான புத்திசாலியாகவும் திகழ்ந்தவர் எம்.என். ராய். அவர் ஒரு போர் குணமிக்க ஆன்மா. அவரது ஒவ்வொரு உயிரணுவும் மனித அடிமைத்தனத்தை எதிர்த்து கிளர்ந்தெழுந்தது. அவர் மீதான விசாரணை புரட்சியின் மீது அடக்குமுறை நடத்திய விசாரணை ஆகும். ஆளும் அதிகாரத்தின் நியாய தத்துவத்தை இரக்கங்காட்டாமல் அம்பலப்படுத்தினர் அவர். அவரது சட்ட நீதி சாஸ்திரமானது. அடக்கப்படும், சுரண்டப்படும் இந்திய மக்கள் அடக்குமுறை அதிகார சக்திகளை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் உரிமை பெற்றவர்கள் என்று சுட்டிக் காட்டியது. ஏகாதிபத்திய அரசினை எதிர்த்து புரட்சிகரமான போராட்டம் நடத்தி விடுதலை பெறுவது மக்களின் கம்பீரமான உரிமை என்பது காலாவதியான, மரபு சார்ந்த சட்ட அரசியல் கோட்பாடுகளை மிஞ்சிவிட்டது. அவரது எதிர்வாதம் மனித விடுதலை குறித்த அரசியல் விஞ்ஞான கல்வி என்றே கூறலாம். அவரது வார்த்தைகளில்:

“அடக்கப்பட்ட, சுரண்டப்பட்ட இந்திய மக்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு சட்டம் தான் உண்டு. அது கிளர்ச்சி செய்யும் சட்டம். விடுதலைக்கான புரட்சிக்கரப் போரட்டம் குறித்த கம்பீரமான சட்டம். இந்தியாவை ஆள்கின்ற ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இச்சட்டங்களை நாள்தோறும் மீறுகிறார்கள். இச்சட்ட மீறல்களை இந்திய மக்கள் கவனிக்க இயலும். நான் கைது செய்யப்பட்டதும் விசாரிக்கப்படுவதும் நமது சட்டத்தை மீறிய செய்கையாகும். இதற்கு மேலும் என் மீது குற்றம் சுமத்துவது என்பவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். நான் இங்கே நிற்பது என்மீது சுமத்தப்பட்டுள்ள அபத்தமான குற்றப் பத்திரிக்கைக்கும் அகம்பாவம் பிடித்த பழி சுமத்தலுக்கும் பதில் சொல்வதற்காக அல்ல. நான் இங்கே நிற்பதெல்லாம் இந்திய பிரிட்டிஷ் அரசை நாகரீக உலகின் விசாரணை மன்றத்தில் நிறுத்தி மனித குலத்தின் ஐந்தில் ஒரு பங்கினரான இந்தியர்கள் மீது வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு நடத்தி, எங்களின் நிலங்களைப் பறித்து, ஒவ்வொரு வகையிலும் எங்களின் முன்னேற்றத்தைத் தடை செய்து வருவதைப் பட்டியல் போட்டுக் காட்டவே.“



மீரட் சதி வழக்கு கம்யூனிஸ்ட்கள் மீது பிரிட்டிஷார் தொடுத்த வரலாற்று சிறப்புமிக்க மற்றுமொரு தாக்குதல். வரலாற்றை கிட்டப்பார்வை கொண்டு நோக்கிய இந்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் புரட்சிகரமான இயக்கங்களை துடைத்தெடுத்து விடலாம் என்று எண்ணினர். ஆனால் உலக வரலாறு வேறு விதமாகத் தான் இருந்திருக்கிறது. புரட்சி வலுவான ஒன்றால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதனின் விடுதலை வேட்கையால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது மென்மையானதல்ல என்று உலக வரலாறு சுட்டிக் காட்டுகிறது. மிகக்கொடிய தீர்ப்புகள் கூட புரட்சியின் வேகத்தை அணைக்க இயலாதவை. மீரட் அதைத் தான் நிரூபிக்கிறது.

மற்றொரு மாபெரும் இந்தியரான பாலகங்காதர திலகர் மீதான விசாரணையும் தீர்ப்பும் அதைத் தொடர்ந்த கொந்தளிப்பும் எத்தகையது எனில் லெனின் கூட அது பற்றி குறிப்பிடும் அளவிற்கு பிரசித்தி பெற்றதாகும். திலகர் மீதான விசாரணை அதன் முழுமையான அம்சங்களில் விவரிக்கப்படவில்லை எனில் இந்திய விடுதலையின் கதை முழுமையானதாக இராது. அவரது எழுத்துக்கள் பகையுண்டாக்கக் கூடியவை தான். ஆனால் ஆத்ம உணர்வுகளைத் தூண்டக் கூடியவை ஆவேசம் கொள்ளத் தூண்டுபவை. அவர்தான் சுயராஜ்யமே எங்களின் பிறப்புரிமை என்ற முழக்கத்தைக் கொடுத்தவர். அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை இந்தியர்களை மட்டும் அதிர்ச்சிக்குள்ளாக்க வில்லை. லெனினம் ஐரோப்பியத் தொழிலாளர்களும் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது பாரம்பரியத்திற்கு நாம் தகுதியுடையவர்கள் தானா?

பாரதத்தின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரதி நிதித்துவம் செய்த போர் குணமிக்க ஆன்மாவின் சொந்தக் காரனான பகத்சிங்கின் கதை இரத்தத்தை உறையச் செய்யும். இந்திய விடுதலை எழுதப்படும் போதெல்லாம், சொல்லப்படும் போதெல்லாம் பகத்சிங்கின் பெயர் நினைவு கூறப்படும். பகத்சிங்கின் வரலாறு ஒரு காவியம். தேசம் மீது பக்தி கொண்ட குற்றத்தை செய்த பகத்சிங் காட்டுமிரண்டித் தனமாக தூக்கிலிடப்பட்டது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக் கட்டத்தை விரைந்து காண்பித்தது. மாபெரும் இந்தியரான லாலா லஜபதிராய் பிரிட்டிஷ் வன்முறையால் தாக்கப்பட்டார். மனக்காயங்கள், உடல் காயங்களின் காரணமாக இறந்து போனார். அதற்கு வஞ்சம் தீர்க்கப்பட்டாமல் இருந்திருந்தால் அவரது மரணம் ஒரு தேசீய அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் கேவலமாகவும் இருந்திருக்கும். பகத்சிங் இந்த தேசபக்தி மிகுந்த பணியினை முன்வந்து நிறைவேற்றினான். தேசீய எதிர்ப்புக்குரலின் அடையாளமாக சாண்டர்ஸைக் கொன்றான். சாண்டர்ஸ் தான் லாலாலஜபதியை கொன்ற போலீஸ் அதிகாரி. இந்திய வரலாற்றின் நிகரற்ற கதாநாயகனான பகத்சிங் தைரியத்துடனும் தியாக நெஞ்சுடனும் அளவிலா தேசபக்தியுடனும் தூக்கு கயிற்றை முத்தமிட்டான். அம்மாவீரனின் அச்சமற்ற நினைவுகளை நாம் பெற்றிருப்போமெனில் நாம் தைரியமான தேசீய மனோபாவத்தைப் பெற்றிருப்போம். இன்று நாம் சந்திக்கிற மூலபிரச்சனைக் குறைத்திருக்க முடியும்.

மற்றொரு காவியம் சுபாஸ்சந்திரபோஸின் அற்பதமான, மயிர்க்கூச்செரியும் கதையாகும். அவர் அபூர்வமான பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். சாகசம் நிறைந்த செய்கையாக தென்பட்ட போதிலும் ஆயுதம் தரித்து தேச விடுதலையைப் பெற முயன்றது தனித்தன்மை வாய்ந்தது. இந்திய தேசீய ராணுவம் தோல்வியுற்ற போதிலும் அபூர்வமானது. தனித்தன்மை கொண்டது. அது செயலூக்கம் நிறைந்த அரசியல் தலைவரான சுபாஸ்சந்திரபோஸின் தலைமையைப் பெற்றிருந்தது. இரண்டாம் உலகப்போர் பிரிட்டிஷாருக்கு சாதகமாக முடிவடைந்தபோது ஜப்பான் சரணடைந்தது. இந்திய தேசீய ராணுவம் தைரியத்துடன் தோற்றது. அதன் விளைவு-இந்திய தேசீய ராணுவ விசாரணை. இந்த தேசபக்த ராணுவ வழக்கில் வீரர்கள் சார்பில் வாதாடிய புலாபாய் தேசாய் தேச துரோக குற்றத்தை தேச பக்தி மிகுந்த செயலாக உயர்த்தினார். இந்திய தேசீய ராணுவ விசரணையின் அதிமுக்கியமான விஷயம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முடிவாக என்னவாயிற்று என்பதல்ல. தேசீய விடுதலையின் ஆயுதமே எதிர்வாதம் கிளப்பிய பொறி தான் என்பதே. இவ்விசாரணயின் விளைவுகளை விரிவாக விவாதிக்க இந்த முன்னுரையில் அதிக இடமில்லை. ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான சுயநிர்ணய உரிமையை நிறுவ கிளர்ச்சி செய்யும் நாடு எத்தகைய எல்லைக்குச் செல்லலாம் என்பதை உணர்த்தும் இந்த விசாரணையை கவனத்துடன் படிக்கும்படி சிபாரிசு செய்கிறேன். சாதரணமாகவே சட்டம் பிற்போக்கானது என்ற நிலையில் புகழ்மிக்க சட்ட அறிஞர்கள் நீதிபரிபாலனத்தை புரட்சிகர கருவியாக மாற்றும் சந்தர்பங்கள் வரலாற்றின் இடம் பெறத்தக்கவை.



புகழ்மிக்க விசாரணை நூல் எதிலுமே அவசியம் குறிப்பிட்ட வேண்டிய வழக்கு லாகூர் சதி வழக்கு. இதிலும் புகழ் பெற்ற விடுதலை வீரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர். நமது முந்திய தலைமுறையினரான தீரமிகு தேசபக்தர்களின் புரட்சிகர எண்ணங்களையும் தீமையே உருவான பேரரசை துரத்தி சுதந்திர பூமியை உருவாக்க முயன்ற வீரவரலாற்றையும் அறிவது நமக்கு பெருமை மிகுந்த செயல் அல்லவா?

பாஸ்கரால் விவரிக்கப்பட்டிருக்கும் வேறு மூன்று வழக்குகளும் சிறப்பான அர்த்தம் கொண்டவை. இந்திய தேசீய ராணுவ வீரர்களைப் போலவே பகதூர் ஷா ஷாபரும் டெல்லி செங்கோட்டையில் விசாரிக்கப்பட்டார். தைமூர் வம்சத்தின் கடைசி அரசன் பகதூர்ஷா. இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷாருக்கு அடிபணிய மறுத்து திடமான போர் நடத்தியவர் பகதூர்ஷா. இவ்விசாரணையில் சர்வதேச சட்டம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தன. பிரிட்டிஷ் அரசு அவற்றை அசட்டை செய்தது. வயதான, மனநிலை சரியில்லாத, பரிதாப நிலையிலிருந்த இந்த அரசர் குற்றவாளியாக நின்றார். வழக்கை எதிர்கொள்ளும் நிலையில் அவர் இல்லை. சட்டம் அறிந்த எவரும் இந்த வீழ்த்தப்பட்ட அரசனுக்கு உதவ முன்வரவுமில்லை. இது நியாயமற்ற விசாரணை. இது நியாயமற்ற தீர்ப்பு. அதிகாரப் பூர்வமாக உறுதி செய்யப்பட்ட அநீதி இது.

விடுதலை பிரிக்க இயலாதது, உலகம் தழுவியது என்பதை உணர வெளிநாடுகளுக்கு பயணமாவோம். போராளியான டிமிட்ரோவ் உலக கம்யூனிச வரலாற்றில் சுடர்விடும் கம்யூனிஸ்ட் ஆவார். அவர் ஒரு ஜனநாயகத்தின் படைவீரர். பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தியவர். நாசிகள் ஜார்ஜ் டிமிட்ரோவையம் பிறரையும் கைது செய்து பயங்கரவாதி, அராஜகவாதி என குற்றஞ்சாட்டினர். அவர்மீது எல்லாவிதமான குற்றங்களும் சுமத்தப்பட்டன. ஆனால் இந்த குற்றவாளி சமூக அமைப்பை குற்றங்கூறி எதிர்வாத்தை தயாரித்திருந்தார். தொழிலாளர் வர்க்க கோட்பாட்டை காத்து எதிர்வாதம் செய்த டிமிட்ரோவ் பயங்கரவாத குற்றச்சாட்டிற்கு இவ்வாறு பதிலளித்தார்.

“கம்யூனிஸ்ட் என்ற வகையிலும், பல்கெரிய கம்யூனிஸ்ட் கட்சி-கம்யூனிஸ்ட் அகிலம் இவற்றின் உறுப்பினர் என்ற வகையிலும் தனிநபர் பயங்கரவாத்தை, அர்த்தமற்ற கலவரம் போன்றவற்றை கொள்கைகளின் அடிப்படையில் எதிர்க்கிறேன். ஏனெனில் இந்த செயல்கள் கம்யூனிச கொள்கைகளுக்கும் மக்கள் பணி முறைகளுக்கும் இணக்கமானவை அல்ல.

லெனினிச போதனைகளுக்கும், முடிவுகளுக்கும். கம்யூனிஸ்ட் அகிலத்தின் கட்டுப்பாடுகளுக்கும் ஏற்ப, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அதனை ஈடு இணையற்ற சட்டம் என்று ஏற்றுக்கொள்கிற நானும் தனிநபர் பயங்கரவாதத்தையும் சூழ்ச்சியான சதி நடவடிக்கைகளையும் எதிர்க்கிறேன்.“

கார்ல்மார்க்கின் வார்த்தைகளை எதிரொலிக்கிற விதமாக “நீதிபதிகளே மற்றொரு நீதிபதியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த மற்றொரு நீதிபதி பொது மக்கள் கருத்து.“ நிறைய நெளிவு சுழிவுகளைக் கொண்ட இந்த விசாரணை டிமிட்ரோவை விடுதலை செய்தது. வரலாற்றை திருப்பிப் பார்ப்போமேயானால் அவரை குற்றஞ்சாட்டியவர்கள் உலகின் போர் எதிரிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டதைப் பார்க்கிறோம். எங்கெல்ஸ் சொல்வதைப்போல வரலாறு என்பது எல்லா தேவதைகளிலுமே மிகவும் கொடூரமானது தான். ஜார்ஜ் டிமிட்ரோவ் உலகளவில் மிளிரும் சுடராக அல்லவா திகழ்கிறார்.

கடைசியாக, சமீபத்திய நடப்பை விளக்கும் கட்டுரையாக நெல்சன் மாண்டெலாவின் விசாரணையை சேர்த்திருக்கிறார் பால்பாஸ்கர். தென்னாப்பிரிக்க பாசிச அரசை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை நடத்தி வரும் மாண்டெலா நமது இதயத்தில் வசிப்பவர். நமது தேசத்தில் அனைவரையும் கவர்ந்திழுத்தவர். நிறவெறி பிடித்த அடக்குமுறை அரசை குற்றஞ்சாட்டினார். அவர், பெரும்பான்மையான மக்களை ஒதுக்கிவைத்து அடிமைகளாக நடத்தும் சிறுபான்மையினரான வெள்ளை எஜமானர்கள் ஆடம்பரத்திலும் அதிகாரத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். அதுதானே நிறவெறிக் கொள்கை. “குற்றம் செய்தவர்களே நீதிபதிகளாக அமர்ந்து குற்றஞ்சாட்டியவர்களை விசாரிக்கும் விசித்திரமான நீதி“ என சாடினார் மாண்டெலா. அவரது எதிர்வாதம் மனித உணர்வைத் தட்டியெழுப்பும் மனித உரிமைக் கல்வியாகும்.



பால்பாஸ்கர் இத்தொகுதியில் சேர்ந்திருக்கும் மேலும் இரு விசாரணைகள் நமது ஆழ்ந்த சுயஉணர்வை தட்டியெழுப்பக் கூடியவை. வாஞ்சிநாதன் மீதான திருநெல்வேலி சதிவழக்கும், வ.உ.சிதம்பரனாரின் தூத்துக்குடி சதிவழக்குமே அவை. நம் தேசபக்த பெருமையை அவை தூண்டுகின்றன. அந்நிய ஆட்சியை எதிர்த்து துணிவுடன் அவர்கள் நின்றனர். நம்தேசம் அவர்கள் குறித்து பெருமிதம் கொள்ளும். ஏனெனில் அவர்களின் தியாகங்கள் விடுதலைக்கு வித்திட்டன.

இந்தியாவை உருவாக்கியவர்கள், மனித உரிமைகளை பாதுகாப்பவர்கள், என்று கூறி அதிகாரத்தில் அமர்ந்து உலகெங்கும் சுற்றித்திரிந்து மின்னும் ஆடம்பர பேச்சாளர்கள் அல்ல. இவர்கள் மனித குலத்தை மேம்படுத்தும் புரட்சிகரமான மாற்றங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள். ஆனால், உண்மையில், புதிய உலக மனித அமைப்பை கட்டியெழுப்புபவர்கள் அந்த உயரிய ஆத்மாக்களே. அவர்களின் வைரம் பாய்ந்த நெஞ்சுறுதியே வலிமைக்கு எதிராக சரியானதைக்கொண்டு சவால் விட்டவர்கள். அதன் மூலம் உலகை நீதியானதாக ஆக்கும் அமைப்பை நோக்கிய பாதையை உருவாக்கியவர்கள். அத்தகைய அமைப்பில் தான் ஒவ்வொரு மனிதனும் தமது கண்ணியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முழுவதும் நேரான ஆளுமையை பிறப்புரிமையாகப் பெற முடியும்.

பால்பாஸ்கர் பிறரது எழுத்துக்களிலிருந்து பெற்று படைப்பாற்றலுடனும் தாராள நடையுடனும் தமிழாக்கி இந்த நூலை எழுதி நம்மையெல்லாம் ஆழ்ந்த கடனாளி ஆக்கிவிட்டார். சமூகத்தின் கடமை என்னவென்றால் இந்நூலை வாசித்து தன்னை வளமாக்கிக் கொள்வதே. சுயஅரசாங்கம் என்பது அதன் எல்லா பரிமாணங்களிலும் மனித குலத்தினால் ஆளப்படுகிற ஆட்சி என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் ஏற்படும் வரை சுயராயஜ்யத்தை நாம் வென்றாதக் கூற முடியாது.

“எங்கெல்லாம் தமிழ் தெரிந்தவர் இருக்கிறார்களோ
எங்கெல்லாம் விடுதலை வேட்கை உடையவர்கள் இருக்கிறார்களோ……!
அங்கெல்லாம் பால்பாஸ்கர் எழுதிய புகழ் மிக்க விசாரணைகள் படிக்கட்டும்
-நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்
கொச்சி 27-10-1987
ஜே. பால்பாஸ்கர் 1987ல் எழுதிய புகழ் மிக்க விசாரணைகள் நூலுக்கான அணிந்துறையில்………..

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *