ஜான் மேனார்ட் கீன்ஸ் (Jhon Maynard Keynes) ஜூன் 5, 1883இல் பிரித்தானிய நாட்டில் பிறந்து ஏப்ரல் 21, 1946இல் மறைந்த உலக புகழ்பெற்ற பேரியல் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் கீனீஸியன் பொருளாதாரத்தின் நிறுவனர் மற்றும் நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை ஆவார். கேம்பிரிட்ஜில், அவர் புகழ் பெற்ற பொருளாதார அறிஞரான ஆல்ஃபிரட் மார்ஷலால் ஈர்க்கப்பட்டார். பிரித்தானிய இந்தியாவின் உயர் அலுவலர், கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், அமெரிக்க நாட்டின் பொருளாதார ஆலோசகர், இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான ஆலோசகர் எனப் பன்முகத் தன்மையுடையவர் கீன்ஸ். அவரது முதல் குறிப்பிடத்தக்கப் படைப்பு 1913இல் வெளியிடப்பட்ட Indian Currency and Finance (இந்திய நாணயம் மற்றும் நிதி) என்பதாகும், இது முதலாம் உலகப் போருக்கு முந்தைய இந்தியாவின் நிதி மற்றும் செலாவணி பற்றிய திடமான ஆய்வு நூலாகும்.
1936ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட The General Theory of Employment, Interest and Money (வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணத்தின் பொதுக் கோட்பாடு) என்று அழைக்கப்படும் பொதுக் கோட்பாடு, மிகவும் செல்வாக்கு மிக்க பொருளாதார புத்தகங்களில் ஒன்றாகும். தொன்மைப் பொருளாதார அறிஞர்களின் கருத்துகளுக்கு கீன்ஸ் தீவிரமாக எதிர்வினையாற்றினார். இயல்பாகவே சமுதாயம் வேலையின்மையை கொண்டிருக்கும் என்கிறார். தொழிலாளர்களின் ஊதிய விகிதங்களைக் குறைப்பது என்பது வேலையின்மையைக் குறைக்காது என்றும்; அதற்கு மாற்றாக, வேலையின்மையைக் குறைப்பதற்கான திறவுகோல் அரசாங்க செலவினங்களை அதிகரிப்பதும் வரவு–செலவு திட்டத்தில் (நிதிநிலை) பற்றாக்குறையை நடைமுறைப்படுத்துவதும் ஆகும் என்று அவர் பரிந்துரைத்தார்.
வேலையின்மையைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்யவும் அரசாங்கத் தலையீட்டை அவர் ஆதரிக்கத் தொடங்கினார். அதிக வேலையின்மைக்குக் காரணங்களை கீன்ஸ் குறிப்பிட்டதைப் பொருளாதார வல்லுநர்கள் தற்போதும் விவாதிக்கின்றனர். கீனிஸியன் பொருளாதாரத்தின் மிக அடிப்படையான கொள்கை என்னவென்றால், அளிப்பினைவிடத் தேவையே ஒரு பொருளாதாரத்தினை முன்னெடுக்கும் உந்து சக்தியாகும் என்பதாகும். நுகர்வு செலவு பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது என்று அவர் நம்பினார். தேவையை உருவாக்க அரசாங்கம் கடனிலிருந்தாலும் செலவுகளைச் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் நுகர்வு அதிகரித்து தேவையை, உற்பத்தியைத் தூண்டும் இதன் தொடர்ச்சியாக முழு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நிலைக்கு முன்னெடுக்கும் என்றார். இந்த நிலையினை அவர் விளைவுள்ள தேவை என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான வழி விலை நிலையை நிலைப்படுத்துவதாகும், மேலும் அதைச் செய்ய, விலைகள் உயரும் போது அரசாங்கத்தின் மைய வங்கியின் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும், விலைகள் குறையும் போது அவற்றை உயர்த்த வேண்டும் என்பது அவரது முக்கிய பணக் கொள்கைக் கண்ணோட்டமாகும். கீன்ஸ், தடையற்ற சந்தைகளின் ஒப்பீட்டளவில் வலுவான ஆதரவாளராக இருந்தார். நிதிக் கொள்கை நடவடிக்கைகளால் முழு வேலைவாய்ப்பு அடையப்பட்டவுடன், சந்தை வழிமுறை சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்று கீன்ஸ் நம்பினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதாரத்தினை வடிவமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கீன்ஸ் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தார். 1944ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த பிரிட்டன் வூட்ஸ் மாநாட்டிற்குப் பிரிட்டிஷ் குழுவை அவர் வழிநடத்தினார். மாநாட்டில் உலக வங்கி மற்றும் பன்னாட்டுப் பண நிதியத்தின் திட்டமிடலில் அவர் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தார். சிறந்த எழுத்தாளர், ஆசிரியர், கொள்கை வடிவமைப்பாளர், மந்தகாலத்திலிருந்து பொருளாதாரத்தினை மீட்ச்சிக்காகன பாதையினை உருவாக்கித் தந்தவர், கல்வியாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் கீன்ஸ், அவர் 1946 ஏப்ரல் 21இல் மறைந்தார்.
2007–2009ஆம் ஆண்டுகளின் பெரும் மந்தநிலைக்குப் பதிலளிக்கும் விதமாக, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கீன்ஸியன் பொருளாதாரக் கோட்பாட்டின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பல தொழில்கள் கடனில் மூழ்கியிருந்த நிறுவனங்களை அமெரிக்க அரசு மீட்டெடுத்தது. 2009ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஒபாமா அமெரிக்க மீட்பு மற்றும் மறு முதலீட்டுச் சட்டத்தில் கையெழுத்திட்டார், இது ஏற்கனவே உள்ள வேலைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கவும் வடிவமைக்கப்பட $831 பில்லியன் தொகுப்பு நிதியானது அரசாங்கம் தூண்டுதலுக்காகச் செலவிடப்பட்டது. இதில் வரி குறைப்புக்கள் மற்றும் கடன்கள், குடும்பங்களுக்கான வேலையின்மை சலுகைகள் ஆகியவை அடங்கும்; இது சுகாதாரப் பராமரிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான செலவினங்களையும் ஒதுக்கியது.
கோவிட்-19 தூண்டுதல் சோதனைகள்
சமீபத்திய கோவிட்-19 பெருந் தொற்றுநோய் காலத்தில், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் வேலைவாய்ப்பை உருவாக்க கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படையில் நிவாரணத் தொகுப்பினைப் பின்பற்றின. ` கீன்ஸ் மறைந்து 80 ஆண்டுகள் ஆகின்றது, ஆனாலும் அவருடைய கோட்பாடுகள் கல்விசார் நிலையிலும், பொருளாதார சிக்கல்களைத் தாண்டி வருவதற்கும் இன்றும் உயிர்ப்புடன் காணப்படுகிறது.
ஆதாரம்
www.imf.org; www.britannica.com; www.econlib.org; www.inomics.com; www.bbc.co.uk
**********************************************
ஆடம் ஸ்மித் (Adam Smith) ஜூன் 5, 1723இல் பிறந்த ஜூலை 17, 1790இல் மறைந்த ஸ்காட்டிஷ் சமூக தத்துவஞானி மற்றும் அரசியல் பொருளாதார நிபுணர் ஆவார், அவர் பாரம்பரிய (தொன்மையான) தாராளமயத்தின் எழுச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார். தொழிலாளர் பகுப்பு, தடையற்ற வாணிபம், பரிமாற்ற சுயவிருப்பம், வரையறுக்கப்பட்ட அரசாங்க தலையீட்டு, விலை மற்றும் சந்தையின் பொதுவான அமைப்பு பற்றிய அவரது கருத்துகள் அனைத்தும் பொருளாதாரம் “நவீன” நிலைக்கு மாறும் தருணத்தைக் குறிக்கின்றன. அவரது முதல் புத்தகமான The Theory of Morl Sentiments, ஒழுக்கத்தை நிர்வகிக்கும் இயற்கைக் கொள்கைகளையும் மனிதர்கள் அவற்றை எவ்வாறு அறிந்துகொள்கிறார்கள் என்பதையும் விவரிக்க முயன்றது. ஆடம் ஸ்மித் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை மற்றும் நவீன முதலாளித்துவத்தின் தந்தை எனவும் கருதப்படுகிறார்.
பொருளாதார சிந்தனை வரலாற்றில் ஆடம் ஸ்மித் ஒரு தலைசிறந்த அறிஞர். 1776இல் வெளியிடப்பட்ட An Inquiry into the Nature and Causes of The Wealth of Nations என்ற அவருடைய புத்தகம் தற்போதுவரை மிகவும் புகழ்பெற்றது, இந்த புத்தகத்தை “நாடுகளின் செல்வம்“, என்று அழைக்கப்படுகிறது. இப் புத்தகமானது அரசியல் அறிவியல், வரலாறு, பொருளாதாரம், மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வெளியீடாகும். தடையற்ற சந்தை, தலையிடா அமைப்பு போன்றவை இதன் முக்கிய பகுதியாக உள்ளது, இதில் மனித தொடர்பு மற்றும் சமூக வரலாற்றின் கோட்பாட்டின் இரண்டு கூறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
ஸ்மித்தின் பகுப்பாய்வானது, சந்தையைத் தன்னிச்சையாக சுயமாக–சரிசெய்தல் முறையில் இருக்கும் என்று குறிப்பிடுகிறார். நியாயமற்ற போட்டியின் சூழ்நிலையைத் தடுக்க அரசு பொருளாதார சந்தைகளில் தலையிட வேண்டும் என்று ஸ்மித் நம்பினார். உலகளாவிய “இயற்கை விதிகளின்” படி செயல்படும் கட்டுப்பாடற்ற போட்டியின் சூழலில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகச் செயலாக்கம் பெறுகிறது என்று ஸ்மித் நம்பினார். அவ்வாறு செயல்படும்போது, செல்வத்தை அதிகரிக்கும் என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில், வணிகவாதத்தை – வர்த்தக உபரியைச் செயற்கையாகப் பராமரிக்கும் நடைமுறையை – ஸ்மித் கடுமையாக எதிர்த்தார். இன்று, ஒரு தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தில் பகுத்தறிவு சுயநலம் எவ்வாறு பொருளாதார நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது என்பதற்கான அவரது விளக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்
www.thedecisionlab.com; www.study.com; www.econlib.org; www.plutuseducation.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

