இளவயதில் வெளியூர்ப் பயணம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்த நாட்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அவ்வளவு ஏன், குழந்தைப் பருவத்தில் தெருவில் ஹார்ன் அடித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வண்டி ஓட்டாத இளமைப் பருவம் உண்டா என்ன… பேருந்துகளின் மோட்டார் உறுமும் ஓசையைச் சிறுவர்களின் உதடுகள் எழுப்பும் காலத்தின் இனிமை விவரிக்க முடியுமா!
எனது இளமைக் காலத்தில் ஓட்டுநர் அருகே அமர்ந்துபோவதையே விரும்பி அப்படியான இருக்கை கிடைக்காத சமயங்களில் ஏமாற்றத்தோடே இருந்திருக்கிறேன். வாகன ஓட்டுநர்கள் மீதான காதல், ரஜினி படங்களைப் பார்ப்பதற்குமுன்பே பார்த்து ரசித்த சிலரது ஸ்டைலில் இருந்தே என்று தோன்றுகிறது. பயணிகள் எல்லாம் பேருந்துகளின் இரு வாசல் படிக்கட்டுகள் நம்பியே பேருந்தில் ஏறி இறங்கும்போது, ஓட்டுனர்கள் மட்டும் தங்களது இருக்கையருகே இருக்கும் கதவை வெளிப்புறத்தில் இருந்து திறந்து, டயர் மீது ஒயிலாக கால் வைத்து அசாத்திய தாவுதலில் ஏறியமர்ந்து காலரையொட்டிய கைக்குட்டையை சரி செய்துகொண்டு முன்புறம் பக்கவாட்டுக் கண்ணாடியும் எதிர்ப்புறக் கண்ணாடியும் பார்த்தபடியே பேருந்தில் பின்புறம் இருக்கும் பயணிகளுக்கு பத்திரமும் பாதுகாப்பும் சொல்லிக்கொண்டிருக்கும் அதிசயத்தை அப்படி ரசித்துப் பார்த்த காலங்கள். பேருந்தை எப்போது அவர் விசையை அழுத்திப் புறப்படவைப்பார், கியரை எப்படி மாற்றுவார், வேகத்தை எப்படிக் கூட்டுவார், அந்தப் பெருவட்ட ஸ்டியரிங் சக்கரத்தை எப்படித் தனது சொல்பேச்சுக்குக் கொண்டுவந்துவிடுவார், எப்போது அடுத்த ஹார்ன் ஒலிப்பார் என்றே லயித்து மேற்கொண்ட இளவயதுப் பயணங்கள்.
ஆனால், சென்னை மாநகராட்சி மந்தைவெளி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, மாணவர்களுக்குத் திரையிடப்பட்ட ஒரு செய்திப்படத்தில் வந்த காட்சிகள் அதிர்ச்சியளித்தது. கார் ஓட்டுநராக வந்த கண்ணன் என்பவர் முகம் இன்னும் கூட மனத்திரையில் ஒட்டியபடி அப்படியே இருக்கிறது. ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து வாகனம் ஓட்டிவிட்டுக் களைத்தபடி வந்து நிற்கும் கண்ணனை, முதல் நாள் இரவு கூட ஓய்வின்றி வந்தேன் என்று அவர் சொல்லியும் கேட்காமல், லாபத்திற்கு ஆசைப்பட்டு வாகன முதலாளி அடுத்த சவாரிக்குப் போ என்று வற்புறுத்தி அனுப்பி வைக்கிறார். அடுத்த காட்சியில் உறக்கமும் களைப்பும் ஆட்டிப்படைக்கும் நிலையில் வாகனக் கட்டுப்பாட்டைத் தன்வசமிருந்து இழக்கும் கண்ணன் பெருவிபத்தை எதிர்கொண்டு உருளும் வாகனத்தில் தனது இன்னுயிரை இழக்கிறார்.
ஓட்டுநர் தொழில் ஆபத்துகளும் நிறைந்தது, அவரது பாதுகாப்பு சமூகப் பொறுப்பு என்பதை அந்த வயதிலேயே ஏன் எங்களுக்குப் போட்டுக் காட்டினர் என்பது தெரியாது. ஆனால், காசு காசு என்றலையும் பொருளாதார அமைப்பு, பாதுகாப்பைப் பின்னுக்குத் தள்ளி உழைப்பை மிரட்டி வாங்கிக் கொள்ளவே துடிக்கிறது. ஓட்டுநர்களுக்கு உரிய பயிற்சியும், எச்சரிக்கைகளும், உடல் நலப் பாதுகாப்பு குறித்த அக்கறையும், சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யவேண்டியது அரசின் பொறுப்பும் முக்கியமான கடமையுமாகும்.
ஆட்டோ அல்லது டாக்சி ஓட்டுநராக இருக்கலாம், அரசுத் துறை வாகனங்களை இயக்குபவராக இருக்கலாம். வெவ்வேறு அளவிலான சரக்கு வாகனங்கள் ஓட்டுபவராக இருக்கலாம், பெரிய லாரிகள், எண்ணெய் பால் போன்றவற்றை ஏந்திச் செல்லும் டேங்கர் வாகனங்கள் என எத்தனையோ வகை வாகனங்களை இயக்கும் ஓட்டுநராக இருக்கலாம். தங்களது பணியைச் சிறப்பாகச் செய்யும் ஆர்வத்தோடே அவர்கள் சாவியைக் கையில் பெற்றுக் கொள்கின்றனர். அரசு, தனியார், தனிப்பட்ட முதலாளிகள் யாருக்காக இயங்கினாலும் தான் ஓட்டும் வாகனத்தின்பால் அளவிடற்கரிய நேசமும், உறவும் கொண்டாடும் தன்மை இயல்பிலேயே ஓட்டுநர்களுக்கு வாய்த்துவிடுகிறது. தங்களது வாகனத்தைத் தூய்மையாக வைத்திருக்க அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை அசத்தலானது. வாகனத்தின் இயங்குதன்மை அவர்களது கை விரல்களுக்குத் தெரிந்திருக்கும். ஓட்டுநர்களது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வைப்பது சமூகத்தின் பொறுப்பல்லவா!
ஆண்டு தோறும் அடிக்கடி சில செய்திகளை வாசிக்கிறோம். பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போதே நெஞ்சுவலி ஏற்பட்டு அந்த மாரடைப்பின் அடுத்த கட்டம் சட்டென்று ஊகித்துத் தான் தனியானவர் அல்ல, தன்னை நம்பி மொத்தப் பயணிகளும் நிம்மதியாக வந்து கொண்டிருக்கின்றனர் என்ற உணர்தலோடு வாகனத்தை சாலை நெரிசலில் அபாயகரமாக எங்கும் நிறுத்திவிடாமல், பக்குவமாக சாலையோரமாகக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் நிறுத்தியபிறகே ஸ்டீயரிங் சக்கரத்தின் மேல் கவிழ்ந்து தன்னுயிரை இழக்கும் தருணங்கள் நம்மை உறையவைத்து அவர்களை வணங்க வைப்பவை. அண்மையில் கூட மேற்கு வங்கத்திலிருந்து ஒரிஸ்ஸா கோயிலை நோக்கி வந்த பயணத்தில் 43 வயது ஓட்டுநர் ஷேக் அக்தர் தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை மீறியும் 70 பயணிகள் உயிரைக் காப்பாற்றிய நிலையிலேயே மரித்த செய்தி வந்திருந்தது. 2019இல் மத்திய பிரதேசத்தில் சந்தோஷ் ஹரோடே என்ற ஓட்டுநர், கேரளத்தில் சாஜு மேத்யூ, 2022இல் ஆந்திர பிரதேசத்தில் ரவி, 2018இல் கேரளத்தில் வினோத், பள்ளிக்கூடக் குழந்தைகள் 40 பேர் உயிரைக் காத்த குர்ரால ஏடுகொண்டலு…..என்று அது ஒரு நீண்ட பட்டியல். தியாகிகளின் கதை அது.
இன்னொரு புறம் விபத்துகள். விபத்துகளின் முக்கிய காரணிகளில் ஒன்று மோசமான சாலைகள். குண்டும் குழியுமான பராமரிப்பு மறுக்கப்பட்ட சாலைகள். மோசமான சாலைகளே ஆண்டு தோறும் லட்சக் கணக்கில் மனிதர்கள் விபத்தில் மரணமடையும் கொடுமைக்கு முக்கிய காரணம். வேகம் விவேகமல்ல என்பதை வலியுறுத்தி வற்புறுத்தி உறுதி செய்ய வேண்டுவதும் அவசியம். சாலை விபத்துகளில் அலட்சியமான முறையில் வாகன ஓட்டுதல் முக்கிய காரணியாகும். ஓட்டுநர்கள் பாதுகாப்பு அரசின் முன்னுரிமையை இருக்க வேண்டிய அம்சமாகும்.
நகரங்களிலும் மாநகரங்களில் பள்ளிப்பிள்ளைகள் ஆட்டோ, வேன் இவற்றையே பெரிதும் சார்ந்துள்ளனர். அவர்களை பத்திரம் காத்து அன்றாடம் வீடுகளிலிருந்து அழைத்துச் சென்று மாலை பத்திரமாகக் கொண்டுவிட்டுச் செல்லும் வரை ஓட்டுநர்களது பங்கு முக்கியமானது. ஓட்டுநர்கள் ஆகப்பெரும்பாலானோர் தங்களது சொந்த பந்தங்களது இல்லத் திருமணங்கள், நல்லது கெட்டதுகள் என்பார்களே அப்படியான ஒரு முக்கிய அலுவலுக்கும் போய்த் தலைகாட்டி விட்டு வர இயலாது. வீட்டு நிர்வாகம், குழந்தைகள் படிப்பு இவற்றைத் தாங்கள் நேரடியாக அருகிருந்து கவனிக்க வேண்டுமெனில் அந்த நேரத்திற்குரிய வருமானத்தை இழந்தே அது சாத்தியப்படும். ஒரு பரந்துவிரிந்த சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத வரையில் அவர்கள் சமூக மனிதர்களாக இயங்குவதே போராட்டமாக இருக்கும். அதன் உளவியல் பாதிப்பு அவர்களது தொழிலில் குறுக்கிடும்போது விபத்துகள் தவிர்க்க முடியாது போகும்.
நேர்மைக்காகப் பாராட்டப்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய செய்திகளை எப்போதும் விரும்பி வாசிப்பதுண்டு. சென்னையில் அமெரிக்க தூதரக அதிகாரி சமந்தா ஜேக்சன் எனும் பெண்மணி மிக முக்கியமான கோப்புகள், வேறு சில உடமைகளை ஆட்டோவில் மறந்துவிட்டுப் போனதை உடனே கொண்டுபோய் உரியவிதத்தில் சேர்ப்பித்து சீனிவாசன் முதற்கொண்டு மகள் திருமணத்திற்கான 20 லட்ச ரூபாய் நகையை மறந்து பையோடு விட்டுப்போன மனிதரிடம் கையோடு கொண்டு சேர்த்த சரவணன் வரை எத்தனை எத்தனை உற்சாக செய்திகள்.
மலைப்பாதைகளில், மழை நேரங்களில், கலவர அபாய நேரங்களில், விழாக் கால நெரிசல்களில், வேக வைக்கும் கோடை வெயிலில் எத்தனை விதமான அபாயங்களை எதிர்கொண்டு வாகனங்களை இயக்குகின்றனர் ஓட்டுநர்கள். எத்தனை பேருக்குப் பதில் சொல்லவேண்டிய தருணங்களைக் கடக்க வேண்டி வருகிறது அவர்கள் வாழ்க்கையில். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணிகள் மிகுந்த பொறுப்பும் மதிப்பும் மிக்கவை.
நெடுந்தொலைவுப் பயணத்தில் செல்லும் ஓட்டுநர்கள் தங்களது பாதுகாப்பு விட்டும் நெடுந்தொலைவு போய்விடும் வேதனை மிக்க அம்சங்களையும் காண்கிறோம். சாலை வாகன ஓட்டுநர்களை ஆரோக்கியமான பாதையில் செலுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உண்டு. அவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம், முதுமையில் சமூக பாதுகாப்பு, பணியில் உரிய ஓய்வு, பாதுகாப்பான பயணத்திற்கான உத்தரவாதம் இவையே நம்மை அழைத்துச் செல்லும் ஓட்டுநர்களை நாம் உரியமுறையில் சிறப்பிக்க வேண்டிய விஷயமாகும்.
கோவையில் 1979-80 தண்ணீர்ப் பஞ்ச காலத்தில் இராப்பகலாகத் தண்ணீர் டேங்கர் வரும் நள்ளிரவு நேரங்களில் வயதான ஓட்டுநரோடு அன்பாகப் பேசிய நாட்கள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது. ஒரு கட்டு பீடி போதும் அய்யா நமக்கு என்று சிரிப்பார்…நான் அவரோடு வாதாடுவேன். ஓட்டுநர்களது பாதுகாப்பும், பணியுறுதியும், முதுமையில் சமூக பாதுகாப்பும் கேட்டு, இந்த ஓட்டுநர் நாளில் பயணிகளும் சேர்ந்து குரலெழுப்புவோம்.
எழுதியவர்
எஸ் வி வேணுகோபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆஹா ஆஹா ஒட்டுநரை பாராட்டுவதும் பெரிய விஷயம். அதுவும் அவர்வண்டியில்ஏறி அமர்வதை எவ்வளவு லாவகமாக சொல்லியதற்கு பாராட்டாமல் இருக்க முடியாது
இந்நாளில் ஓட்டுநர் பணியின் சிறப்பினையும், சமூக அக்கறையும் பற்றி சிறப்பாக தனது கட்டுரையில், தன் பாணியில், எழுதிய ஆசிரியர் எஸ்.வி. வி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மனிதாபிமானத்துடன், மனிதநேயத்துடன், சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட படைப்பு இது. பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸை சரியான இடத்தில் டிரைவர் நிறுத்த மாட்டார் என்று குறைகூறுவோமே தவிர, அவருடைய கஷ்டங்களை இவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் யோசிப்போமா என்பது சந்தேகம்தான்.
இன்னும்பரிதாபத்துக்குடையவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவை deliver செய்யவேண்டிய கட்டாயத்துடன் டூவீலரை ஓட்டும் ஸ்விக்கி ஊழியர்கள்.
மருத்துவப்பணி போன்றதே ஓட்டுநர் வேலையும். அவர் ஒரு உயிரை காப்பாற்ற முயலுகிறார். இவர் பல உயிர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கிறார். ஓட்டுநர் குழப்பமில்லா மனநிலையோடு வண்டியில் ஏற ஒத்துழைக்கணும்.