அச்சுறுத்தும் நுண் நெகிழி பாதிப்பு…. அயர்ந்த உறக்கம் கலைவது, எப்போது..?
– முனைவர் பா. ராம் மனோகர்
ஜூன் 5 : உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) சிறப்பு கட்டுரை
அன்றோரு நாள், வீட்டுக்கு, காய்கறிவாங்க, ஒரு கடைக்கு சென்றிருந்தேன்!.பொருட்கள் வாங்கிச் செல்ல வருவோர். கையில் “பையுடன்” வரும் வாடிக்கையாளருக்கு, ஒரு எலுமிச்சம் பழம் இலவசம்!என்ற அறிவிப்பு வைக்கப்பட் டிருந்தது. கடைக்காரரை, நான் மகிழ்ந்து பாராட்டினேன். ஆனால், என் மனதில், விழிப்புணர்வு செயல்பாடுகள் நெடுங்காலமாக நம் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டு இருப்பினும், இன்னமும், மக்கள் “பிளாஸ்டிக் ஆபத்துக்கள்” பற்றி அலட்சியமாக இருக்கும் நிலை எண்ணி மனம், சற்று வலித்தது! பிளாஸ்டிக் அழிவதில்லை, கழிவு நீர் செல்லும் கால்வாய் தடை, என்ற சாதாரண திடக்கழிவு பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க “நுண் நெகிழி”(Microplastics) என்ற கண்ணுக்கு புலப்படாத அரக்கன், மனித குலம், இயற்கை வாழிடங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் தகவல்கள் அறியும் பொழுது, பிளாஸ்டிக் பிரச்சனை, பற்றிய நம் அயர்ந்த உறக்கம் எப்போது கலையப் போகிறது, என்ற கவலை எந்தன் உள்ளத்தில் எழுவதும் உண்மையே!. ஆம், இந்த கவலை, வருத்தம் எனக்கு மட்டும் அல்ல.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் அமைப்பு UNEP மற்றும் அனைத்து உலக நாடுகளிலும், பிளாஸ்டிக் என்ற நெகிழி பிரச்சினை அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர், மாதத்தில் தென் கொரிய நாட்டில் உள்ள புசன் நகரில் நடைபெற்ற உலக அளவில் பிளாஸ்டிக் (நெகிழி) குறைப்பு பற்றிய, 5ஆம் மாநாட்டில் எவ்வித நேர்மறை ஒருங்கிணைப்பு நாடுகளின் இடையில் ஏற்படவில்லை.முக்கிய பிரச்சனை தொடர்பாக மீண்டும் 2025 ஆம் ஆண்டில் மாநாடு கூடுவதற்கு, முடிவு எடுத்தனர்.
இதில் குறிப்பாக, மிக முக்கியமான நுண் நெகிழி தானாக பெரிய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து வெளியேறும் வகை, மற்றொன்று சில நுண் நெகிழிகள், அழகு சாதன பொருட்கள் உருவாக்க தயாரிப்பு மூலம் ஏற்படுவது ஆகும் ஐந்தாம் மாநாட்டில் நுண் நெகிழி பற்றிய பொருள் வடிவமைப்பு, சுழற்சி, மேலாண்மை மற்றும் மாசு ஏற்படுதல் பற்றிய பேச்சு வார்த்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை குறைக்க ஒரு புறம் முயற்சி மற்றும் ஆய்வு தொடர்ந்து உலகெங்கும் நடை பெற்று வருவதும் உண்மை. எனினும் 430 மில்லியன் டன் அளவில் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் உற்பத்தி ஆகி வரும் நிலை கவலை தருகிறது!

குறிப்பாக நுண் நெகிழி கோளங்கள் மனித தோல், அழகு மெருக்கேற்று திரவம், பசை ஆகியவற்றில் கலக்கப்படுவது அறியப்பட்டுள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக் என்ற இந்த நுண் நெகிழி உலகில் எதையும் விட்டு வைக்காமல் பரவியிருக்கிறது. மண், காற்று, உணவு, நீர் நிலைகள், மனித உடல் உறுப்புகளில் மூளை, நுரையீரல், சிறு நீரகம், தாய்-சேய் இணைப்பு திசு, இனபெருக்க உறுப்புகள் ஆகியவற்றிலும் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2024 ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் அறிக்கையின் படி (மெக்ஸிக்கோ பல்கலைக்கழகம்) மனித உடல் உள்ளுறுப்புகள் (2016-24) மூளை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பெற்றிருப்பதை விட 30 மடங்கு அதிக அடர்வு நுண் நெகிழிகள் படர்ந்து இருக்கிறது.
2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி ஆக்ஸி கரண அழுத்தம், மூளை எப்பித்தீலியல் செல் பாதிப்பு, நோய் தடுப்பாற்றல் குறைவு, செல் நச்சு, வளர் சிதை மாற்ற செயல் குறைவாதல், இன பெருக்க செயல் குறைபாடு ஆகிய பிரச்சினைகள் தோன்றுகின்றன. சீரண உறுப்புகளில் கொழுப்பு உணவு செரித்தல் தடை, எண்ணெய் துளி கொழுப்பு உணவு செரித்தல் தடை ஏற்படுகின்றன. மேலும் இந்த நுண் நெகிழி நம் உடலில் சுவாசித்தல் மூலம் உள்ளே செல்கிறது.
குறிப்பாக, தொழிற்சாலை காற்று கழிவு, கட்டுமான தூசு, நகர தூசு, ஆடை தயாரிப்பில் உருவாகும் நுண் நெகிழி, டயர் தேய் மான அரிப்புஆகியவற்றால் நுண் நெகிழி மாசு படுதல் ஏற்படுகிறது. 2024 மார்ச் மாதம் “NEW ENGLAND JOURNAL OF MEDICINE” இதழில், 304 ஆய்வு செய்யப்பட்ட நோயாளிகளில், அனைவருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் நுண் நெகிழி இதயத்திற்கு செல்லும் தமனி ரத்த குழாய்களில், பரவி கொழுப்பு அடர்வு அதில் கடினமாக இருந்துள்ளது. மேலும் 34 மாதங்கள் தொடர்ந்து மருத்துவ ஆய்வு செய்ய ப்பட்ட 257 நோயாளிகளுக்கு, மாரடைப்பு இதய தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் வளி மண்டலத்தில், பல நாடுகளில் நுண் நெகிழி அதிகம் பரவியுள்ளது. சீனா நாட்டின் டோங்குவான் நகரத்தில் 36 /ச. மீ என்ற அளவிலும், பாரீஸ் மாநகரத்தில் 110/ச. மீ, லண்டன்- 575-1000/ச. மீ, பிரான்ஸ் நாடு மற்றும் ஸ்பெயின் எல்லையில் உள்ள பயரெனீஸ் மலை பகுதியில் 365/ச. மீ என்ற அளவீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற பகுதிகளை விட, வீடுகளில் உட்புற பகுதிகளில் ஒரு நாளைக்கு 1600-11000/ச. மீ என்ற எண்ணிக்கை அதிர்ச்சி தருகிறது.

2020 ஆம் ஆண்டு ENVIRONMENT INTERNATIONAL என்ற சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் 12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் பாலி எத்திலீன் டெட்ராப்த்தாலேட் என்ற வேதி பொருளாலான மைக்ரோ பிளாஸ்டிக் 38 முதல் 1,20000 நானோ கிராம் வீடுகளின் உட்புறத்தில் படிந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும் இவை வளர்ந்த பெரியவர்களை விட இளம் குழந்தைகள் அதிகம் அவர்கள் அறியாமல் உட்கொள்வதாக தெரிகிறது.
குறிப்பாக,ஒரு நாளில் 4000-1,50000 நானோ கிராம் அவர்கள் உடலுக்குள் சென்றுகொண்டுள்ளது. சரிங்க!நுண் நெகிழியால், மண்புழு, மெல்லுடலிகள், க்ரஸ் டெசியன் என்ற நண்டு கணுக்காலிகள், என்ற நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோழி குஞ்சு கழிவுகளிலும் இவை காணப்பட்டது. அதிலும் சிப்பி, கடல் வாழ் மெல்லுடலிகளில் மிக அதிகம் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது. மனித கழிவுகளில் சராசரியாக, 16000 இருப்பதாக இங்கிலாந்து நாட்டில் 2000 நபர்கள் ஆய்வு செய்யப்பட்டு தெரிகிறது. மனித தலை முடியில் 7000, உமிழ் நீர் 600 என்றும் தோராயமாக அளவீடு செய்யப்பட்டு இதன் தாக்கம் அறியப்பட்டுள்ளது! ஆண்கள், பெண்களைவிட அதிகம் பாதிப்பு அடையும் நிலையையும்நாம் உணர முடிகிறது.
ஆனால், இந்த நுண் நெகிழி எந்த அளவுக்கு நம் உடலை பாதிப்பில்லாமல் தாங்க இயலும்,குறிப்பிட்ட சராசரி அளவீடு நிலை பற்றி இதுவரை உலக அளவில் நிர்ணயிக்கப்படவில்லை. கடல் பாறை உப்பு, மற்றும் தேனீர் பைகள், கோப்பை தேநீர் போன்றவை, முறையே,1674/கிலோ, 11.6பில்லியன், 3.1 பில்லியன், என்ற அளவீடு மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கொண்டுள்ள நிலை வேதனை அளிக்கிறது. இவ்வாறு வளி மண்டலம், காற்று,மண், உயிரினங்கள், நீர், கடல்,தாவரங்கள், மனித உடல் உறுப்புகள் போன்ற அனைத்தையும் பாதிக்கும் நுண் நெகிழி என்றமைக்ரோ பிளாஸ்டிக்,அமைதியான தொற்று நச்சு பற்றிய பல உண்மைகள் இன்னமும் புரியாத நிலை அறிவியல் உலகத்தின் சவாலாக இருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாடு மைக்ரோ பிளாஸ்டிக் கோளங்களை தடை செய்துள்ளது. ஐரோப்பிய யூனியன் 2019 ஆம் ஆண்டில், பல்வேறு பிளாஸ்டிக் ஒழுங்கு முறை சட்டங்கள் இயற்றியுள்ளது. நம் நாட்டிலும், பிளாஸ்டிக் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் நுண் நெகிழி என்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள் பற்றிய தரமான, அறிவியல் ஆய்வு முறை, குறிப்பாக, அவற்றின் நிலை அறிந்து, கண்காணிப்பு முறை, ஆபத்து நிலை ஆகியன முழுமையாக அறிவதற்கு உரிய முயற்சிகளை இந்த 2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அளவிலான பிளாஸ்டிக் தடை ஒப்பந்த மாநாடு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அரசுகள், தொழிற்சாலை நிர்வாகங்கள், மக்கள் சமூகம் மூவரும் ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டும் மைக்ரோ பிளாஸ்டிக் என்ற நுண் நெகிழி பாதிப்புகளிலிருந்து, மனித உடல் ஆரோக்கியம், மற்றும் சுற்றுசூழல் அமைப்புகள் முழுவதும் பாதிக்காமல் இருக்க இயலும். பிளாஸ்டிக் கழிவு தீமைகள் விழிப்புணர்வு அதிகம் நம் நாட்டில் இருந்தாலும், கடந்த 2018-19,2022-23 ஆம் ஆண்டு காலத்தில், தமிழ்நாடு, தெலுங்கானா, டெல்லி, மத்திய பிரதேசம், ஹரியானா உள்பட 15மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் 50% விட அதிகரித்துள்ளது. அதே காலத்தில்,13 மாநிலங்களில், (குஜராத்,மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா, பீகார், ஒரிசா உள்பட) பிளாஸ்டிக் கழிவு குறைந்து போன நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டில் 4.14 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு அதிகம் இருந்த நிலை அதிர்ச்சியாக உள்ளது. சட்ட பூர்வ நடவடிக்கைகள் அரசு துறை மூலம் அவ்வப்போது எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள், மேலும் விழிப்புணர்வு பெறவேண்டும். நம் தமிழ் நாடு அரசு, மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுசூழல், வன பருவ கால மாற்றம் துறைகள் தேசிய பசுமை படை போன்றவை மஞ்சப்பை விழிப்புணர்வு என்ற துணிப்பை, நெகிழி மாற்று நுகர்வு பொருட்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுச் சூழல் தினம் (05.06.25) மைய கருத்து “பிளாஸ்டிக் மாசு எதிர்த்து போராடுவோம்” என்பது ஆகும். நாம் அனைவரும் அதன் பிரச்சினை புரிந்து பிளாஸ்டிக் நுண் நெகிழி மாசு பாதிப்புகளிலிருந்து விடுபட முயற்சி செய்வோம். நம் இயற்கை, உயிரினங்கள், மனித உடல் ஆரோக்கியம் காப்போம்..
எழுதியவர் :

முனைவர் பா. ராம் மனோகர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

