நிகர பூஜ்யம் ஓர் அறிமுகம்
சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் காலநிலை அறிவியல் பற்றிய அறிமுகம் உள்ளவர்களுக்கும் இது பழக்கமான பதம்தான். எனினும் இவர்களைத் தாண்டிய பிரிவினருக்கான அறிமுகமே இது. புவிவெப்பமயமாதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதும் அது ஏற்படுத்தப் போகும் தீவிர நெருக்கடிகள் ஆகியவை எல்லாப் பிரிவினரும் அறிந்த சங்கதிதான்.இது உலகளாவிய பிரச்சனை. எனவே இதற்கு உலகளாவிய தீர்வுதான் இருக்க வேண்டும். புவி வெப்பமடைவதால் நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றத்தில் பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்டு வரும் மாறுதல்களை ஆய்வு செய்வதற்காக கால நிலை மாற்றத்திற்கான சர்வதேச நிபுணர் குழு (IPCC) என்ற அமைப்பு 1988ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டது, மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியல் 1992ம் ஆண்டு பிரேஸில் நான் ரியோ நகரில் புவி மாநாடு கூட்டப்பட்டது. அது காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான செயல் திட்டத்தை வகுப்பதற்காக காலநிலை மாற்றத்திற்கான ஐக்கியநாடுகள் சட்டகம் (UNFCC) என்ற அமைப்பைத் துவக்கியது. இதன் 195 உறுப்புநாடுகளும் ஆண்டுதோறும் கூடி அவ்வப்போது முன்வந்திருக்கும் நிலைமைகளை விவாதத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை தீர்மானிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி உறுப்புநாடுகளின் கூட்டம் (CoP) 1995 துவங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடைசியாக துபாய் நகரில் உறுப்பு நாடுகளின் 28வது மாநாடு (COP28) நடந்து முடிந்திருக்கிறது.
1997ம் ஆண்டு கியூட்டோ நகரில் நடந்த உறுப்பு நாடுகளின் மூன்றாவது மாநாட்டில் (COP3) ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இது 2001 முதல் அமலுக்கு வரும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டின் படி ஒவ்வொரு நாட்டிற்கும் உமிழ்வின் அளவு தீர்மானிக்கப்பட்டு அதைவிட அதிகமாக உமிழ்ந்தால் தண்டத் தொகையும் செலுத்துவதையும் குறைவாக உமிழ்ந்தால் ஊக்கத்தொகை கொடுப்பதையும் சட்டகமாகக் கொண்டது. எனினும் இது கடைசிவரை அமலுக்கு வரவில்லை. இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று ஆகிப்போனபின் 2000ம் ஆண்டுகளின் இறுதியில் முன்னுக்கு வந்ததுதான் நிகர பூஜ்யம் என்ற கோட்பாடு. இதை கால நிலை மாற்றத்திற்காக சட்டகமாக கொள்ள வேண்டும் என்று 2015ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த உறுப்பு நாடுகளின் 21வது மாநாட்டில் (CoP2I) முடிவெடுக்கப்பட்டது.
காலநிலை மாற்றத்தற்கான சர்வதேச நிபுணர் குழுவானது (IPCC) வெவ்வேறு கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக மதிப்பீட்டு அறிக்கைகளை 1990ம் ஆண்டுமுதல் வெளியிட்டு வருகிறது. இதன் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையானது 2023ம் அண்டு வெளியிடப்பட்டது, இதைத் தவிர இரண்டு சிறப்பு மதிப்பீட்டு அறிக்கைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அறிக்கைகளில், தொழில்மயமாக்கப்பட்ட காலத்திலிருந்து புவியின் வெப்பம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதையும் அதை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் நிறுத்த வேண்டுமானால் எவ்வளவு உமிழ்வை செய்யலாம் என்பதையும் 2 டிகிரி செல்ஷியஸ்க்குள் நிறுத்த வேண்டுமானால் எவ்வளவு உமிழ்வை செய்யலாம் என்பதையும் கணக்கிட்டு கூறப்பட்டிருக்கிறது. இதை கார்பன் பட்ஜெட் என்று அழைக்கிறார்கள். தற்போது 1.45 டிகிரி செல்ஷியஸைத் தாண்டி 2 டிகிரி செல்ஷியஸ் உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனிமேல் உமிழ உமிழ உலகம் பேரழிவையும் நெருக்கடியையும் நோக்கி நெருங்கிச் செல்லும் வேகம் அதிகரிக்கும். கியோட்டா மாநாட்டில் எடுத்த உமிழ்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து, இனிமேல் உமிழ முடியாது என்றும் அப்படியே உமிழ்ந்தால், உமிழ்ந்தவர்கள் உமிழ்வை பிடித்து கையாள வேண்டும் எனவும் உமிழ்வை வாயுமண்டலத்தில் விடக்கூடாது என்ற நிலையை எட்டிவிட்டது என்று பாரிஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. உமிழ்பவர்கள், உமிழ்வைப் பிடித்து கையாண்டு ஒட்டுமொத்தமாக பூஜ்ய உமிழ்வை அடைவதையே நிகர பூஜ்யம் என்றழைக்கிறோம்.
அன்றாட வாழ்வை இலகுவாக்க பயன்படும் மின்சார உற்பத்தி, நாடுகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தேவைப்படும் சிமெண்ட், இரும்பு, இதர உலோகங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, உணவு உற்பத்தியை அதிகரிக்க செய்யப்படும் இரசாயன உரங்களின் உற்பத்தி, போக்குவரத்திற்காக எரிக்கப்படும் எரிபொருட்கள் ஆகியவையே உமிழ்விற்கான முக்கிய காரணம், இவற்றின் உற்பத்திகளை நிறுத்தவும் முடியாது. இவற்றைக் குறைத்துக் கொள்ளவும் முடியாது.
அதனால்தான் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் உமிழ்வு குறைப்பதற்கான ஒவ்வொரு ஆலோசனையும் செயலுக்கு வரமுடியாமல் போயிற்று. அதைத்தவிர வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் பின்தங்கிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு நிலவுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் சொகுசு வாழ்க்கையை குறைக்க முன்வரவில்லை அதே நேரத்தில் பின்தங்கிய நாடுகள் குறைந்தபட்ச வாழ்க்கை தரத்தை எட்டுவதற்கு வாழவாதார பாதுகாப்பு, கட்டமைப்பு மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே உமிழ்வை குறைப்பதை விட உமிழ்ந்தவைகளை பிடித்து வேறு பொருளாக மாற்றுவது அல்லது பாதுகாப்பான இடத்தில் அடக்கி வைப்பது என்ற நிலைப்பாட்டை நோக்கி இப்பிரச்சனைக்கான தீர்வு நகரத் துவங்கியது, இதை ஆங்கிலத்தில் Carbondioxide capture, Utilization and Sequestration (CCUS) என்றழைக்கிறார்கள். நாம் இதை கார்பன் பிடிப்பு, பயன்பாடு, அடக்கி வைப்பு என்று குறிப்பிடலாம். இதன் நிலைப்புறுதன்மை (Sustainability) மற்றும் சிக்கணத்தன்மை (Economy) பற்றிய ஒரு புரிதலை உண்டாக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நெருக்கடியை தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட உமிழ்வின் வரம்பு
இப்பிரச்சனைக்குள் செல்வதற்கு முன்பு தற்போதைய நிலையை அளவீட்டு வழியாக காண்போம்.
2022ம் ஆண்டின் ஒட்டுமொத்த உலக உமிழ்வு 41 கிகா டன்
ஒரு கிகா டன் = 1,000,000,000,000 கிலோ கிராம்
ஒரு கிகா டன் என்பதும் ஒரு பில்லியன் டன் என்பதும் ஒன்றே.
இதை மனதில் வைத்து எஞ்சியிருக்கும் கார்பன் பட்ஜெட் எவ்வளவு என்பதை காட்டும் வரைபடம் இது
அடிப்படைத் தேவைகளையும், தரமான வாழ்க்கைக்கான தேவைகளையும் அடைய வேண்டுமென்றால் உமிழ்வு தவிர்க்க முடியாதது. எனவேதான் கடந்த 30 ஆண்டுகளாக இப்பிரச்சனை பற்றி ஆழமாக பேசி வந்தாலும் எந்தவொரு நாட்டின் உமிழ்வும் இறங்குமுகத்தில் இல்லை. இதன் உச்சமாகத்தான் 2022ல் செய்யப்பட்ட உமிழ்வு 41 கிகாடன்.
உமிழ்வைக் குறைக்க செய்யப்படும் ஒவ்வொரு உத்தியை அமல் படுத்த மின்சாரம், இரும்பு, கட்டுமானப் பொருட்கள் தேவைப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் போது உமிழ்வு தவிர்க்க முடியாதது. எனவே ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னனியில் ஒரு குறிப்பிட்ட அளவு உமிழ்வு இருக்கிறது. இதை கார்பன் தடம் (Carbon Footprint) என்று அழைக்கிறோம். 1 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பயன்படும் ஒவ்வொரு எரிபொருளின் கார்பன்தடம் வருமாறு
நிலக்கரி 1000 கிராம் பெட்ரோலிய எரிபொருள் — 800 கிராம்
இயற்கை எரிவாயு ― 500 கிராம்
அணு, நீர் சோலார் மின் நிலையங்கள் ― 50 கிராமிற்கு கீழ்
இப்பொழுது CCUS மூலம் நிகர பூஜ்யத்தை அடைவதில் உள்ள சிக்கல்களைப் பார்ப்போம்.
சூரிய ஒளி மின்உற்பத்தியின் வரம்பெல்லை
பேசாம எல்லாத்தையும சோலார் பவருக்கு மாத்திட்டா பிரச்சனை தீர்ந்துச்சு என்று திருவாளர் பொதுஜனம் பேசுவதை ரயில் பயணங்களில் கேட்டிருக்கிறேன். இதை சற்று ஆழமாகப் பார்ப்போம். முதலில் சூரிய ஒளி மின்சாரத்திற்கும் கார்பன் உமிழ்வு உண்டு என்று புரிந்து கொள்ள வேண்டும். சுரங்கங்களிலிருந்து கனிமங்களை வெட்டியெடுத்து சோலார் மின்தகடு செய்வதற்கு ஆற்றல் செலவிட வேண்டியதிருக்கிறது. அத்துடன் மின்கலம், மின்தகடு நீர்மாணத்திற்கான இரும்பு, மின் உபகரணங்கள் போன்றவற்றிற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. சோலார் பவர் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 41 கிராம் உமிழ்வு என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. எனினும் மின்தகடின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளே. அத்துடன் மின்உற்பத்தி செய்யப்படும் நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம்தான். பாக்கி 16 மணி நேர மின்தேவைக்கு என்ன செய்வது? பகல் நேரத்தில் கூடுதல் உற்பத்தி செய்து அதை சேமித்து வைத்து இரவில் பயன்படுத்த வேண்டியதுதானே என்று சிலர் கூறுவார்கள். மின்சாரத்தை சேமிப்பது அவ்வளவு எளிதல்ல. பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி கடல் நீரை மின்பகுப்பு மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி செய்து இரவு நேரங்களில் ஹைட்ரஜனை எரித்து மின் உற்பத்தி செய்வதே எளிய வழி. இதற்காகும் மின் செலவை கணக்கிடுவோம்.
மின்பகுப்பு மூலம் 1 கிலோ ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய 55 யூனிட் மின்சாரம் தேவை. ஹைட்ரஜனை சேமித்து வைக்கவும் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் கிலோவிற்கு 10 முதல் 15 யூனிட் மின்சாரம் தேவை. ஒரு கிலோ ஹைட்ரஜனை எரித்து மின்உற்பத்தி செய்தால் கிடைப்பது 30 யூனிட் மின்சாரம். ஆக இரவில் 30 யூனிட் மின்சாரம் கிடைக்க வேண்டுமானால் சூரிய ஒளிமூலம் 70 யூனிட் உற்பத்தி செய்தாக வேண்டும் குறைந்தபட்சம் இரு மடங்கு என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு கிலோவாட் பளுவானது 24 மணிநேரமும் மின் இணைப்பில் இருந்தால் செலவிடப்படும் மின்னாற்றல் 24 யூனிட் மின்சாரம். பகல் எட்டு மணிக்கு 8 யூனிட் மற்ற 16 யூனிட் கிடைக்க வேண்டுமானால் 32 யூனிட் பகலில் உற்பத்தி செய்திருக்க வேண்டும் ஆக தேவைப்படுவது 40 யூனிட் இந்த 40 யூனிட்டிற்கு ஆகும் கார்பன்தடம் 1.64 கிலோ கிராம், நீர் மின்னாற்றல் 24 யூனிட் மின்சாரத்திற்கான கார்பன் தடம் 960 கிராம், பாமரர்கள் நினைப்பது போல் சோலார் பவர் மிகசுத்தமான மின்உற்பத்தி கிடையாது. எல்லாம் சோலாருக்குப் போனாலும் நிகர பூஜ்யத்தை அடைய CCUS தவிர்க்க முடியாது. ஆக, மின் உற்பத்தியில் உமிழ்வைக் குறைக்க பல்வேறு எரிபொருட்களையும் அணு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாது.
உமிழ்வைப் பிடிப்பதல் (Carbon Capturing) உள்ள சிக்கல்கள்
மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் மரம் வளர்ப்பு மூலம் உமிழ்வைக் குறைக்கலாம். ஏற்கனவே பசுமைப் போராளிகள் காடு வளர்ப்பே புவி வெப்பத்திற்கு தீர்வு என்று கூறி வருகிறார்கள். அத்துடன் வாட்சப் யுனிவர்சிட்டி மூலம் மரம் வளர்ப்பு பற்றிய பரவச செய்திகளும், வீடியோக்களும் கொட்டப்படுகின்றன. மரம்விரும்பிக் குழுக்கள் முன்னிலும் தீவிரமாக இயங்கி வருகின்றன. சரி கணக்கீடுகளுக்குள் செல்வோம். ஒரு ஹெக்டேர் பரப்பளவு காடுகள் 10 டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்கின்றன. 2022ம் ஆண்டு உமிழப்பட்ட 41 பில்லியன் டன் கார்பன்டைஆக்ஸைடை உட்கொள்ள 4.1 பில்லியன் ஹெக்டேருக்கு நாம் காடு வளர்க்க வேண்டும். புவியின் மொத்த நிலப்பரப்பு 15 பில்லியன் ஹெக்டேர். இதுவரை உமிழ்ந்ததை விட்டுவிட்டு 2022 அளவிலேயே எதிர்கால உமிழ்வு இருக்கும் என்று கணக்கிட்டால் கூட 4 வருட உமிழ்வை பிடிக்க பூமி முழுவதும் காடாக வேண்டும். எனவே உமிழ்வைப் பிடிப்பதில் காடுகளுக்கும் வரம்பெல்லை இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
செயற்கை முறையிலும் உமிழ்வைப் பிடிப்பது சாத்தியம்தான். இதுவரை நான்கு வகை தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகளவு கார்பன்டைஆக்ஸைடு கொண்ட வாயுக் கலவையில் உள்ள கார்பன்டைஆக்ஸைடை பிடிக்க இயல்பு உட்கொள்ளல் (Physical Absorption) முறையும், தாழ்வெப்ப முறையும் (Cryogenic) கையாளப்படுகின்றன. முதலாவது வழியில் கார்பன் டை ஆக்ஸைடை பிடிக்க டன் ஒன்றுக்கு 27.8 அமெரிக்க டாலர் செலவாகும் என்றும் இரண்டாவது வழிக்கு 32.7 அமெரிக்க டாலர் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. குறைந்தளவு கார்பன்டைஆக்ஸைடு கொண்ட வாயுக் கலவையில் உள்ள கார்பன்டைஆக்ஸைடை பிடிக்க ஜவ்வூடு பரவல் (Membrane Diffusion) முறையும், இரசாயன உட்கொள்ளல் (Chemical Absorption) முறையும் கையாளப்படுகின்றன. இரசாயன உட்கொள்ளல் முறையில் டன் ஒன்றுக்கு 13.9 அமெரிக்க டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் செலவு பிடிக்கும் உத்திகள் என்பது மட்டும் நிச்சயம். உதாரணத்திற்கு ரெக்டிசால் (Rectisol) வழிமுறை லூர்கி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறைந்த வெப்பத்தில் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொண்டு அதிக வெப்பத்தில் வெளியிடும் இரசாயன திரவங்கள் மூலம் இது நடை பெறுகிறது, எனினும் அத்தகைய இரசாயன திரவங்கள் இயற்கையில் கிடைப்பதில்லை, இவற்றை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கான செலவும் உமிழ்வு பிடிப்பு செலவில் சேர்க்க வேண்டும். மானோஎத்தனால்அமைன் என்ற இரசாயனம் குறைந்த அழுத்தத்தில், குறைந்தளவே கலக்கப்பட்ட வாயுக்கலவையிலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை மட்டும் உருஞ்சிக் கொள்ளும். எனினும் இதை மறுசுழற்சி செய்ய வேண்டுமானால் அதை சற்று வெப்பப்படுத்த கார்பன்டைஆக்ஸைடை வெறியேற்றி பயன்படுத்தலாம். எனினும் அத்துடன் சேர்ந்து சிறிது மானோஎத்தனால்அமைனும் வெளியேறும். 1 டன் கார்பன் டை ஆக்ஸைடை பிடிப்பதில் 2 கிலோ மானோ எத்தனால் அமைன் வீணாகும். அதே நேரத்தில் ஒரு கிலோ மானோஎத்தனால்அமைன் உற்பத்தி செய்தால் 3 கிலோ கார்பன்டைஆக்ஸைடு
உமிழப்படும்.
உமிழ்வு பிடிப்பு உத்தியானது செலவு பிடிக்கும் உத்தியாக இருப்பதால் அந்தந்த இடத்திற்கு அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போன்ற உத்தியை கண்டுபிடித்து இருப்பதிலேயே குறைந்த செலவில் உமிழ்வை பிடிக்க வேண்டும். உமிழ்வு பிடிப்பில் பயன்படும் ரசாயனம் (மெத்தனால், மானோஎத்தனால்அமைன், கால்சியம் ஹைடிராக்ஸைடு, லித்தியம் ஹைடராக்ஸைடு) சில ஆலைகளின் உபஉற்பத்திப் பொருட்களாக கிடைக்கின்றன. அங்கெல்லாம் இவற்றை பயன்படுத்த மிகக் குறைந்த செலவில் அந்த ஆலைகளில் கார்பன்டைஆக்ஸைடைப் பிடித்துவிடலாம்.
உமிழ்வைப் பயன்படுத்துவதல் (Carbon Utilization) உள்ள சிக்கல்கள்
கார்பன்டை ஆக்ஸைடு என்ற மூலக்கூறில் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் ஒரு கார்பன் அணுவும் உள்ளது. இவைகளுக்கு இடையேயான பிணைப்பானது சகபிணைப்பு (Covalent Bond) என்று வகைப்படுத்தப்படுகிறது. இவற்றை பிரிப்பதற்கு ஆற்றல் தேவை. எனினும் இந்த மூலக்கூறையே இன்னொரு மூலக்கூறுடன் வினைபுரிய வைத்து புதிய மூலக்கூறு உருவாக்கலாம். கார்பன்டை ஆக்ஸைடுடன் ஹைட்ரஜன் மூலக்கூறை இணைத்து எத்தனால், மெத்தனால், அசிட்டிக் அமிலம் போன்றவைகளை உருவாக்க முடியும். வாசனை பொருட்கள், மெழுகு உள்ளிட்ட வேறு சில கரிம இரசாயனப் பொருட்களையும் உருவாக்கலாம். இதற்கான ஆய்வுகள் நிறைய நடைபெற்று வருகிறது. கார்பன்டை ஆக்ஸைடை வைரமாக மாற்றக் கூட முடியும். எனினும், இவற்றிற்கெல்லாம் ஆற்றல் செலவிட வேண்டும். ஆற்றல் செலவு வந்தாலே நாம் கார்பன் தடம் என்ன என்று கணக்கிட வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கிலோ கார்பன்டைஆக்ஸைடை வைரமாக மாற்ற 10 கிலோ கார்பன் தடம் எடுத்தது என்றால் அதைச் செய்ய வேண்டியதில்லை. எனவே கார்பன் டை ஆக்ஸைடை பயன்படுத்துவதில் சிக்கல் இல்லை. ஆனால் அதன் மூலம் மேலும் அதிக கார்பன்டை ஆக்ஸைடு வெளியிட வேண்டியதிருக்கும் என்பதே பிரச்சனை.
தற்போது கார்பன் டை ஆக்ஸைடை மூலப் பொருளாகக் கொண்ட ஆலைகள் நிறைய உள்ளது. சிமெண்ட் உற்பத்தி, செயற்கை எரிபொருட்கள், வேறு சில இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றில் கார்பன்டை ஆக்ஸைடு முலப்பொருட்களாக பயன்படுகின்றன, அத்துடன் இப்பொருட்களின் உற்பத்திக்காக கார்பன்டை ஆக்ஸைடை சேமித்து வைக்க வேண்யதிருக்கிறது. இவற்றை நிலத்தடியில் மறு பயன்பாட்டிற்காக சேமித்து வைத்திருக்க வேண்டியதிருக்கிறது. இதற்கான கட்டமைப்பு செலவையும் நாம் கார்பன் பயன்படுத்துவதில் ஏற்படும் செலவில் சேர்கக வேண்டும்.
உமிழ்வை அடக்கி வைப்பதில் (Carbon Sequestration) உள்ள சிக்கல்கள்
பூமியின் இயல்பான வெப்ப-அழுத்தத்தில் கார்பன்டைஆக்ஸைடு ஒரு வாயுவாகும். எனவே இதை பெரிய கலன்களில் சேமித்து வைப்பது இயலாத காரியம். அதுவும் பில்லியன் டன்களில் இந்த வாயு மனித நடவடிக்கைகளால் உற்பத்தி செய்யப்படும் போது அவ்வளவு பெரிய பெரிய கலன்கள் உற்பத்தி செய்து பிடிக்க வைப்பது சாத்தியமில்லை. பிடிக்கப்பட்ட கார்பன்டை ஆக்ஸைடில் பயன்பாடு போக எஞ்சியவற்றை ஏதேனும் ஒரு வழியில் அடக்கி வைக்க வேண்டும். இதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று கடல் நீரில் கரைப்பது. இன்னொன்று பூமியின் அடியாழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் செலுத்தி அடக்குவது. பூமியின் வெளிப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடலாக இருப்பதால் கடலில் கரைப்பதற்கு இடச் சிக்கல் கிடையாது.எனினும் நீரில் கார்பன்டை ஆக்ஸைடு கரைந்தால் நீரானது அமிலத் தன்மை பெற்றுவிடும். இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான். எனவே கடலில் கரைப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இரண்டாவது வழிமுறையில் உள்ள வரம்பெல்லை என்னவென்றால் பூமியின்அடியாழத்தில் பாறை இடுக்குகளின் மொத்த கொள்ளவு எவ்வளவுவே அவ்வளவிற்குத்தான் கார்பன்டை ஆக்ஸைடை அங்கே அடக்க முடியும். இது நாடுகளுக்கு நாடுகள் மாறுபடும். உதாரணத்தற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜியாலஜிக்கல் சர்வேயானது அந்நாட்டில் 3000 பில்லியன் டன் கார்பன்டை ஆக்ஸைடை அடக்கி வைப்பதற்கான பாறை இடுக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் கணக்கிட்டாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அத்துடன் பாறை இடுக்குகளுக்கு கார்பன்டைஆக்ஸைடை கொண்டு சேர்க்க அதை திட வடிவத்திற்கு மாற்றி உயர் அழுத்தத்தில் செலுத்த வேண்டும். இதுவும் செலவு பிடிக்கும் விஷயமாகும்.
காலநிலை மாற்றம் மானுடத்தின் முன் உள்ள சவால்
இதுவரை கார்பன் பிடிப்பு, பயன்பாடு அடக்குதல் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களையும் வரம்பெல்லைகளையும் சிக்கணத்தன்மையையும் பார்த்தோம். எந்த திசையில் சென்றாலும் ஏதாவதொரு முட்டுக்கட்டையைச் சந்திக்கிறோம். இப்பிரச்சனையை கையாள எல்லாவகை வழிமுறைகளையும் கலந்து, வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தினால்தான் இந்த நெருக்கடியைத் தள்ளிப் போட முடியும். அத்துடன் ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதற்கு வளர்ந்த நாடுகள் முன்வரவேண்டும். தற்போது நடைபெற்றுவரும் அணுப்பிணைவு உலைகள் ஆய்வு துரிதப்படுத்தி அணுப்பிணைவு உலைகள் பெருமளவுக்கு பயன்பாட்டுக்கு வரவேண்டும்.
பூமியின் வளிமண்டலத்தில் அனைவருக்கும் சம பங்கு உண்டு. தொழில்புரட்சி காலத்திலிருந்து 1.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உயர்வதற்கான கார்பன் வெளியை கணக்கிட வேண்டும். தனிநபர் உமிழ்வு அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் பங்கு இதில் என்ன என்று கணக்கிட வேண்டும். கார்பன் பிடிப்பு, பயன்பாடு அடக்குதல் ஆகிவற்றிற்காகும் கூடுதல் செலவை இதுவரை அதிகமாக உமிழ்ந்தவர்கள் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பக்கம் சொகுசு வாழ்க்கை வாழும் மக்களும் மற்றொரு புறம் அல்லல்படும் மக்களும் இருப்பார்கள். நெருக்கடி முற்றி பேரழிவு நிலை வரும் போது அல்லல்படுபவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். நீண்டகால நோக்கில் கார்பன் அல்லாத தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.
(இக்கட்டுரையில் பயன்படுத்தப்பபட்ட புள்ளிவிபரங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் வெகுஜன அறிவியல் சொற்பொழிவுத் தொடரின் 70வது உரையில் பேராசிரியர் ரஜனிஷ்குமார் அவர்கள் உரையிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது)
கட்டுரையாளர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Really Scientific informative content, which will be useful for the students of Higher Education, Youth and Public!Happy to convey my Wishes to Vijayan sir!!!🙏🙏🙏🙏
Thankyou
By DR. B. RAM MANOHAR, DISTRICT NGC COORDINATOR, DEPARTMENT OF ENVIRONMENT, CHENNAI -15
இது போன்று தெள்ளத்தெளிவான நுட்பமான அறிவியல் தகவல்களை மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்ற அறியல் விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும். கட்டுரையாளர் மிகச் சிறப்பாக ஆய்ந்து எழுதியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுகள்.