‘மந்தைப்பிஞ்சை’ சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
காலமாற்றத்தைப் பிரதிபலிக்கும் சமூக யதார்த்தக் கதைகள்!
கரிசல் நிலத்தின் மண்மணத்தையும் மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் ஊனும் உயிருமாய்ப் பதிவு செய்துகொண்டிருக்கும் சமகாலப் படைப்பாளி கா. சி. தமிழ்க்குமரன். அவரின் சமீபத்திய படைப்பு “மந்தைப் பிஞ்சை.” 20 கதைகளின் தொகுப்பு இது. வாழ்ந்துகெட்ட மனிதர்களும் வாழத் துடிக்கும் ஏழைகளும் கதைகளெங்கும் பரவி விரவி நிற்கின்றனர். தமது உழைப்பின்மூலமாக வாழ்தலின் அர்த்தத்தைப் பதிவு செய்தபடி இயங்குகின்றனர். யாருக்காகவும் எதற்காகவும் நில்லாது ஓடும் நதிபோல அவர்கள் உழைத்துக்கொண்டும் உரையாடிக் கொண்டும் உன்னதத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டும் இருக்கின்றனர். உன்னதம் கைகூடும் என்ற நம்பிக்கை கதைமாந்தரின் ஒவ்வொரு அசைவிலும் பதியமாகி நிற்கிறது. வரட்சி நாளிலும் வளங்கொழிக்கும் தருணங்களிலும் தமது நம்பிக்கையைக் கைவிடாமல் உலக அச்சை ஒரு புள்ளியில் நிலைநிறுத்துகின்றனர்.
கதை என்பது வாழ்க்கைச் சம்பவங்களை மட்டும் சொல்லிச் செல்வதல்ல; காலப் பயணத்தின் எல்லைகளைக் கணித்துக் கூறுவதும் ஆகும். இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் முகத்தையும் அகத்தையும் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி.
இன்றைய நிலையில் உற்பத்தி என்ற பொருளியல் இயக்கத்தை உயர்நிலைக்குக் கொண்டுசெல்பவர்கள் உழுகுடி மக்கள். “ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்” என்ற வாழ்வியலின் அடிப்படை சமத்துவத்தை உரம்பெறச் செய்பவர்கள் அவர்கள். அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது எனப்புரிந்து, இனி எப்படி எதைநோக்கிச் செல்லப் போகிறது என அனுமானிக்கும் அறிவியல் பார்வையைப் பதிவு செய்யவேண்டியது எழுத்தாளனின் மிக முக்கியக் கடமை. பல கதைகளில் தமிழ்க்குமரன் அதைச் செய்திருக்கிறார்.
பல குறுக்கம் உழுது பயிர் விதைத்து விளைவித்து பெரிய நில உடமையாளராக உயர்வடைந்தவர் கதை நாயகன் “முதலாளி”. கரிசல் பூமியில் கசகசப்பில்லாமல் உயர்வாழ்க்கை வாழ்பவர் அவர். ஒருமுறை சோள அறுவடை நடந்தால் சோளத்தட்டைகளை இருபதடி உயரத்துக்குப் படப்புப் போடுவார். படப்புப்போடும் தொழிலாளிகள் பத்துநாள் பணிசெய்து அந்தப் படப்புகளை உருவாக்குவார்கள். அப்பேர்ப்பட்ட செல்வ சீமான் அவர்.
நிலத்தில் இறங்கி வேலைசெய்யும் களப் பணியாளர்கள், கொத்தனார் என்று சொல்லப்படுகிற ஊருக்கு ஒரு கங்காணிகள், காவலர்கள் என்று பெரிய பட்டாளமே உழுதொழில் செய்து அவரை மேன்மைப் படுத்தினர். இல்லையென்று வருபவர்க்கு இல்லையென்று சொல்லாத தயாள குணம் படைத்தவர். நிலம் வழங்கும் செல்வத்தை ஊர்த்தொழில் செய்யும் அனைவருக்கும் தாராளமாய் வழங்குவார்.
அவர் மகன் தலையெடுத்தபோது உழுதொழில் லாபகரமானதாய் இல்லை என உணர்கிறான். தந்தையிடமிருந்து அடாதுடியாய் நிலங்களைப் பறித்து சூரிய மின் உற்பத்திக்காக வாடகைக்கு விடுகிறான். செல்வம் பெருகி வணிகம் சிறப்படைகிறது. ஆனால் “முதலாளி”யின் ஆன்மா சிதைந்து சின்னாபின்னமாகிறது. உழுதொழில் என்பது ஜீவித வளர்ச்சியின் அடிப்படை; வணிகமோ உழவுக்கும் உதவி செய்யக் கூடிய யந்திரக் கட்டுமானம்; ஆனால் உழவு நிலமே புதிய தொழில்நுட்பத்துக்கான அடிநிலமாக மாறும்போது ஜீவித வளர்ச்சியின் தடம் உடைபடுகிறது. வணிகம் தொழில்வளர்ச்சியின் அறிகுறி; உழவு உயிர்வளர்ச்சியின் அடிக்கோடு.
உழவுமுறை வாழ்க்கை வணிகமுறை வாழ்க்கையாக மாறும் சூழலை, எதிர்கால நோக்கிலான யதார்த்தத்தோடு சித்தரிக்கிறது ”மந்தைப்பிஞ்சை” என்னும் இந்தைக் கதை..
தன் நிலத்தில் கூலிவேலை செய்த செல்லதுரை தன்னைப் பார்க்க வந்தபோது “முதலாளி” எல்லாமிழந்த வெற்றுமனிதராய்த் துவண்டு கிடக்கிறார். அத்தனை பரந்த செல்வத்துக்குச் சொந்தக்காரரான அவர் ஒரு இணுக்கு வெற்றிலைக்காக அவனிடம் கையேந்துகிறார்.
காலநிலை மாற்றம், சமூகமாற்றம், தொழில்நிலைமாற்றம் என்ற வாழ்நிலை மாற்றங்களை அறிவியல் பார்வையோடு சித்தரிக்கும் இந்தக் கதை தொகுப்பின் முத்தாய்ப்பான படைப்பு. சமூகமாற்றம் தானாக உருவாவதில்லை; உழுதொழில் வீழ்ச்சியும் வணிகத் தாட்டியத்தின் எழுச்சியும்தான் சாத்தியப் படுத்துகின்றன. உழுதொழில் வணிகத் தொழிலாக மாறும் அந்த முச்சந்தியில் மனிதநேயம் சிதைவதையும் பழைய வாழ்க்கை முறை தெம்பிழந்து வீழ்வதையும் அருமையாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.
வாழ்வியல் வளர்ச்சிப் போக்கில் சகல கூறுகளும் மாறுகின்றன என்று சொல்கிறோம். “மாற்றம் ஒன்றே மாறாதது என்று மார்தட்டுகி|றோம். ஆனால் மாறாத ஒன்று இன்றளவும் இந்திய மண்ணில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது என்றால் அது சனாதனம்; சனாதான வழிப்பட்ட சாதீயம்.
வசிஷ்டரும் விசுவாமித்திரரும் கடவுளைக் கண்டுபிடித்தார்கள். மக்களை வசியப்படுத்தவும் அவர்கள் தங்கள் வறுமைநிலைக்குக் காரணம் தேடாமல் இருக்கவும் “கடவுள்” என்ற கற்பனைத் தத்துவத்தை வடிவமைத்தார்கள். சிலகாலம் அது மக்களிடம் வீச்சுப் பெற்றது. ஒரு கட்டத்தில் மக்களின் சில கேள்விகளால் அது வலுவிழந்தது. “அனைவருக்குமானவர் கடவுள் என்றால் ஒருவர் வறுமைப் பட்டுவாழவும் இன்னொருவர் சுகபோகங்களை அனுபவிக்கவும் நேர்வது ஏன்? இந்தக் கேள்விக்கு கடவுள் சிந்தனையாளர்களால் விடைகூற முடியவில்லை. கடவுள் என்ற ஆன்மீகத் தத்துவத்துக்கு ஆபத்து நேர்ந்த போது இன்னொரு வேத வித்தகரான பிரவாஹன் கடவுளின் இருப்பைத் தக்கவைக்கவும் மனிதர்களின் கேள்விக்கு விடையிறுக்கவுமான தத்துவம் ஒன்றைக் கண்டறிந்தார். அதுதான் “பிரம்மம்.” அதாவது மறுபிறவி என்ற கோட்பாடு. “முன்பிறவியில் நீ செய்த நல்லது கெட்டதுகளுக்குத் தகுந்து இப்பிறவியில் உனக்குப் பலன் கிடைக்கும். இந்த பிரம்ம சூத்திரம்தான் சனாதனம். (வால்காவிலிருந்து கங்கைவரை; ராகுல்ஜி.)
சுந்தரம் என்பவன் வண்ணார் குடியில் பிறந்தவன். அவன் அப்பனும் ஆத்தாளும் ஊர்க்கஞ்சி யாசித்து மகனையும் குடும்பத்தையும் வளர்க்கின்றனர். (ஊர்க்கஞ்சி யாசிக்கும் கொத்தடிமை வாழ்க்கை சதையும் ரத்தமுமாக ”ஊர்ச்சேவை” கதையில் சித்தரிக்கப் படுகிறாது..)
பழைய வெள்ளாவிமுறை, நாள்முழுக்க ஆற்றில் நின்று துவைக்கும் உடலுழைப்புத் தன்மை, அனைத்தும் அருமையாய்க் காட்சிப் படுத்தப் படுகின்றன. புதிய தலைமுறை இளைஞர்களுக்கு இது புதிய தரிசனம். எதிர்கால ஆய்வாளர்களுக்கு இது ஒரு கச்சாப் பொருள்.
கிராமங்களில் கொத்தடிமைகளாக இருக்கும் சலவைத் தொழிலாளிகள் நகர்ப்புறங்களில் குடியேறிக் கொஞ்சம் இளைப்பாறும் வகையில் தொழிலை மாற்றி அமைக்கின்றனர். கரட்டுக்காட்டுக்குப் போய் முள் செடிகளைக் கவட்டைக் கொம்பில் கோர்த்து, மேனியெல்லாம் ரத்தம் வடிய சுமந்து வரத் தேவையில்லை; அந்த முள் செடிகளைக் கொண்டு வெள்ளாவி வைத்து அழுக்கு நீக்க வேண்டியதில்லை; சௌக்காரம் போட்டு ஆற்றுநீரிலோ குளத்து நீரிலோ கால்கடுக்க மேனி துவள நின்று துவைக்க வேண்டியதில்லை; ஆம்! காலமாற்றத்தின் அல்லது சமூகமாற்றத்தின் விளைவாக வாழ்க்கைநிலை மாறியிருக்கிறது. மக்கள் துவைத்துத் தரும் உடுப்புகளைத் தேய்ப்புப் பெட்டியால் தேய்த்துத் தரும் பணி மேற் கொள்ளப்படுகிறது. உருப்படிக்கு இவ்வளவு என்று கூலி நிர்ணயித்து காசு வாங்கி கௌரவமாய்ப் பிழைப்பு நடத்துகின்றனர்.. வண்ணார்களின் நகர்மயப் போக்கு அவர்களுக்கு ஓர் அந்தஸ்தைத் தருகிறது.
சுந்தரமும் அப்படித்தான் பக்கத்து நகரில் பெண்பார்த்துக் கல்யாணம் செய்துகொண்டு தேய்ப்புத் தொழில்மூலம் விருத்தியடைகிறான். கஞ்சிப்பாட்டுக்கும் வாடகைக்கும் அவனால் சம்பாதிக்க முடிகிறது. கிராமத்தில் போல ஊர்க்கஞ்சி எடுக்கும் அவலத்தில் இருந்து மீண்டுவிட்ட நிம்மதி உண்டாகிறது.
வாழ்க்கைநிலை உயர்வடைந்துகொண்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று ஊரையும் நாட்டையும் அலைக்கழிக்கிறது. எழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொடுந்தொற்றால் அவதிப்ப்டுகின்றனர். வருமானமின்றி சுந்தரம் வறுமைப்படுகிறான். அப்பனாத்தாவிடம் கேட்கலாம் என்ற எண்ணத்தோடு, அந்த கிராமத்தின் பழைய நண்பன் பாண்டிக்கு போன் செய்கிறான். கிராமத்துக்குரிய மரியாதையோடு பேசினால் அவனும் பேசுவான்; அதனால் சுந்தரம் நகர மரியாதையிலிருந்து கீழிறங்கி ஊர் மரியாதைச் சொல்லாகிய “அப்புச்சி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். “அம்மாட்ட பேசணும்” என்கிறான். நாலெட்டு நடந்தால் அந்த வீட்டுக்குப் போய்விடலாம்; ஆனால் “யாரிட்டயாவது சொல்லிக் கூட்டியாறச் சொல்றேங்; கொஞ்சநேரம் கழிச்சுப் போன் போடு” என்கிறான் பாண்டி.
நாலு எட்டு தூரத்தில் இருக்கும் இடத்துக்குச் செல்ல பாண்டியின் மனம் விரும்பவில்லை. அவனை எது தடுக்கிறது., அதுதான் தீட்டு அல்லது சனாதனம்.
உலகம் எவ்வளவு மாறினாலும் சாதியும் தீட்டும் மாறவில்லை எனக் கவலைப் படுகிறது கதை.
“மந்தைப் பிஞ்சை”யில் உழவு சமுதாயம் மாறி வணிக சமுதாயம் உருவாகிறது. அது ஒரு வாழ்வியல் மாற்றம் என்று கொள்ளலாம். ஆனால் ஊர்ச்சேவகம் கதையில் தொழில்நிலை மாறினாலும் மாறாமல் இருப்பது சாதியைப் பிரதிபலிக்கும் சனாதனம்; மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வரலாற்று யதார்த்தம் இங்கு சிதைந்துவிடுகிறது என்பதை கதையில் அறிவியல் பார்வையோடு விவரிக்கிறார் ஆசிரியர். காலமாற்றம் என்பது இன்றைய சமூக அமைப்பில் ஏழைகளுக்குச் சிலபல நன்மைகளை வழங்கியிருந்தாலும் செல்வக் குவியலின் அடிவாரத்தில் அமுங்கிக் கிடக்கும் வாழ்க்கையே அவர்களுக்கு வாய்க்கிறது.
“வனாந்திரம்” இன்னொரு முக்கியக் கதை. மூணுசீட்டு விளையாடும் அடிநிலை சூதாட்டக் காரர்கள் ஒருபக்கம் என்றால் பெரிய அளவிலான சூதாட்டம் இன்னொரு நிலை. தமிழகத்தின் பல நகரங்களில் சிலகாலம் முன்வரை நடந்தது. ஆயிரம் ரூபா தந்தால் பத்துநாள் கழித்து மூவாயிரம் பெருமான பீரோ தரப்படும். இந்த வார்த்தைக்கு மயங்கி ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஏமாந்து பணத்தை இழக்கும் தான்தோன்றித் தனமான சூழலை விவரிக்கிறது கதை
அன்னிய விதைகள் இந்திய உழவு நிலத்திற்குள் புகுந்ததால் புதிய நோய்கள் உண்டாகி விவசாயம் அழிவதை “முறிமுக்கால்” கதையிலும்,
ஊதாரித்தனத்தால் தன் பெற்றோர் சேமித்த சொத்துகளை இழந்து வாழ்வாதாரம் தேடிக் கூலிக்காரனாய்க் கீழ்நிலையில் வீழும் நிலையை ”வாழ்ந்தவர்கள்” கதையிலும் உயிரோட்டத்தோடு சித்தரிக்கிறார் ஆசிரியர்.
இதுபோல் இருபது கதைகளும் இன்றைய வாழ்வியல் மேடுபள்ளங்களை உள்ளடக்கமாகக் கொண்டு இயங்குகின்றன. மேட்டை வெட்டிப் பள்ளத்திலிட்டு சமப்படுத்த வேண்டிய கடமையை ஒவ்வொரு வாசகனுக்கும் நினைவூட்டும் படைப்புகள் கா. சி. தமிழ்க்குமரனுடையவை.
செழுமையான நிலப்பரப்பு விதைக்கப் படும்போதும் அறுவடை செய்யப் படும்போதும்தான் பயன் கிட்டும். தமிழ்க்குமரன் அவர்களின் படைப்புகள் அனைவராலும் வாசிக்கப் படும்ப்போதுதான் சமூக அறுவடைக்கான பக்குவம் கிடைக்கும்; அதாவது வாசிப்புத்தான் இலக்கியச் செழுமையின் அடித்தளம். வாங்கி வாசிக்கவும் பாதுகாக்கவுமான படைப்புகள் கா. சி. தமிழ்க்குமரனுடையவை.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ‘மந்தைப்பிஞ்சை’ சிறுகதைத் தொகுப்பு |
| ஆசிரியர்: | கா.சி.தமிழ்க்குமரன் |
| வெளியீடு: | பவித்திராப் பதிப்பகம் |
| விலை: | ₹.180 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 தேனி சீருடையான் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

