“இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள்” – நூல் அணிந்துரை
சமகாலத்தைப் பேசும் கட்டுரைகள்
தோழர் கே.ஜி.பாஸ்கரனின் இந்தப் பதினெட்டு கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நாம் வாழும் சமகால உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம் முன் விரிக்கிறது. சில கட்டுரைகள் சமகால நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாக எழுதப்பட்டவை. இரண்டு கட்டுரைகளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் சங்கூதியாகத்திகழ்ந்த பழைய தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி எழுத வைத்துள்ளார்.
முதல் கட்டுரையே வள்ளலாரை ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தைக் காக்க வந்த உச்சத் தலைவர் என்று பேசியதை மறுத்து எழுதப்பட்ட கட்டுரைதான். சுத்த சமரச சன்மார்க்க சங்கம் என்று இயக்கம் துவக்கி சாதி சமயச் சழக்குகளை வேரோடு வெறுத்தொதுக்கிய வள்ளலார் குறித்து எழுதப்பட்ட அறிவியல்பூர்வமான நூல்கள் சிலவற்றை ஆதாரமாகக்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுளது சிறப்பு. “நால்வருணம், ஆசிரம், ஆசாரம் முதலான நவின்ற கலை சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே” என்று உரத்துப்பேசிய வள்ளலாரை சனாதனச் சகதிக்குள் தள்ள முயன்ற ஆ.என்.ரவிக்குச் சரியான பதிலடியாக அமைந்த இக்கட்டுரை கார்ல்மார்க்ஸ், கால்டுவெல்.ஜி.யு.போப் ஆகியோரைப்பற்றியும் ஆர்.என்.ரவி உதிர்த்த குப்பைக் கருத்துகளுக்கும் சரியான முறையில் பதில் சொல்கிறது.
ஐந்தாவது கட்டுரையான “நவீன இந்தியா என்னும் கருத்தாக்கம்” என்கிற கட்டுரையும் ஆர்.என்.ரவி உளறிய “மார்க்சியம் இந்தியாவைச் சிதைத்துவிட்டது” என்கிற கருத்துக்கு பொறுப்புடன் மறுப்புச் சொல்கிறது. இந்தியாவைப்பற்றி மார்க்ஸ் சொன்ன கருத்துகளில் ஆரம்பித்து கம்யூனிஸ்ட்டுகள் நவீன இந்தியாவைச் செதுக்கி வளர்த்ததில் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை எடுத்துரைக்கும் முக்கியமான கட்டுரையாக இது விரிகிறது.
உலகம் முழுதும் பார்த்திருக்க பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் கொடுங்கோலர்களால் கொல்லப்பட்டும் பட்டினிக்குள் தள்ளப்பட்டுச் சாவுக்குழிகளுக்கு அனுப்பப்படுவதைப்பற்றியும் புள்ளி விவரங்களோடு மட்டுமின்றி வாசிக்கும் மனங்கள் துடிக்கும் வண்ணம் உணர்ச்சிகரமாகவும் எழுதப்பட்டுள்ள கட்டுரை “மனித வதைகளின் உச்சம்: பாலஸ்தீனம்”. சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க் முன்னெடுத்த கப்பல் பயணம் பற்றியும் நேமிசந்திரா எழுதிய “யாத்வஷேம்” நாவல் முன் வைக்கும் கண்ணோட்டம் குறித்தும் இக்கட்டுரை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2023 இல் நாஜிகளால் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவுநாளில் ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் ஆற்றிய உரையை முன் வைத்து அமெரிக்கவிலும் இந்தியாவிலும் பரவிவரும் வெறுப்புப் பேச்சு, வெறுப்பு மனநிலை உண்டாக்க இருக்கும் உலகளாவிய அபாயம் குறித்த எச்சரிக்கை மணியாக “வெறுப்பரசியலின் அபாயச்சங்கொலி” கட்டுரை அமைகிறது.
குஜராத் படுகொலைகளும் நீதிமன்றங்களும் பற்றிய “இப்போது இல்லையெனில்..” இன்னொரு மனம் பதறவைக்கும் கட்டுரை. நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.பி.ஸ்ரீகுமார் போன்றவர்கள் உண்மையைப் பேசியதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள் என்பதற்காகவும் குஜராத் அரசால் வேட்டையாடப்பட்ட கதையை விவரிக்கும் இக்கட்டுரை, எல்லாக்கொடுமைகளையும் கண்டும் காணாதது போல கள்ள மௌனம் சாதிக்கும் சிவில் சமூகத்தின் மீது விரல் நீட்டிக் குற்றம் சாட்டுகிறது. பேச வேண்டிய நேரத்தில் பேசாவிட்டால் பின் எப்போதும் யாரும் பேச முடியாமல் போய்விடும் என்கிற எச்சரிக்கை மணியை இக்கட்டுரை அடிக்கிறது.
பல் போனால் சொல் போகும் கட்டுரை நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக இருந்த பல்பீர்சிங் 2022இல் விசாரணைக் கைதி ஒருவரின் பற்களை வன்முறையாகப் பிடுங்கியும் உடைத்தும் செய்த அத்துமீறலை முன் வைத்து எழுதப்பட்டது. 2023 டிசம்பரில் நெல்லையைச் சூழ்ந்த பெருவெள்ளம் குறித்த கட்டுரையும் வரலாற்றுப்பூர்வமாகப் பேசுகிறது.
காதல் ஜோடிக்குப் பாதுகாப்பு அளித்ததால் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சாதிக்குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஆதலினால் காதல் செய்வீர் கட்டுரை விவரிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட சமரசமற்ற போராளி தோழர் அசோக், மார்க்சிய ஆசான் தோழர் சு.பாலவிநாயகம், தோழர் நாறும்பூநாதன் பற்றிய கட்டுரைகள் அந்த ஆளுமை மிக்க தோழர்களைப் பற்றிய கச்சிதமான அறிமுகங்களாக அமைகின்றன.
விஜய்காந்தின் அரசியல் பற்றிய கட்டுரை ஒரு முக்கியமான முயற்சி. அதிகம் அறியப்படாத மார்க்சின் இளைய மகள் எலினார் மார்க்ஸ் பற்றிய தோழர் வி.பொன்ராஜின் நூல் அறிமுகக்கட்டுரை உண்மையில் எலினார் மார்க்ஸ் குறித்த அறிமுகமாகவே அமைந்திருப்பது சிறப்பு.
1864 இல் மூழ்கிப்போன ஆதிலட்சுமி கப்பல் பற்றிய அறியப்படாத கதையையும் இலங்கைத்தமிழர் பிரச்சனை பற்றியும் பேசும் கட்டுரை தோழர் ஜெயசிங்கையும் அறிமுகப்படுத்துகிறது. கண்ணீரில் மிதக்கும் மீனவர்கள் பற்றிய கட்டுரையும் நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிறித்துவ மக்களின் நிலப்பறிப்பு பற்றிய கட்டுரையும் சமகால எரியும் பிரச்னைகள்.
இந்தப் பதினெட்டு கட்டுரைகளுமே இயக்கவியல் பொருள்முதல்வாதப்பார்வையுடன் அதனதன் வரலாற்றுப் பின்புலத்துடன் வைக்கப்பட்டிருப்பதுதான் இக்கட்டுரைகளின் பலமாகவும் அடித்தளமாகவும் அமைகின்றது.
சிறுகதை எழுத்தாளரான பாஸ்கரன் கட்டுரைகளிலும் தன் எழுத்து வன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். காலத்தின் தேவை அறிந்து எழுதப்பட்ட இக்கட்டுரைகள் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய கட்டுரைகள்.
வாழ்த்துகள் தோழர் பாஸ்கர்.
தோழமையுடன்,
ச.தமிழ்ச்செல்வன்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள் |
| நூல் ஆசிரியர்: | கே. ஜி. பாஸ்கரன் |
| வெளியீடு: | |
| விலை: | (10% discount price was: ₹.117) |
| எழுதியவர்: |
புத்தகம் வாங்க: www.thamizhbooks.com
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

