“கைபிடிப்பாசம்” – சிறுகதை
அவ்வை முதியோர் இல்லம் வழக்கம் போல அமைதியாக இருந்தது. அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றும் ஒரு கதையை சுமந்து கொண்டிருந்தன. ஆனால் 70 வயதான சேதுராமனின் அறை மட்டும் ஒரு விதமான மௌனத்தை ஒளித்து வைத்திருந்தது.
சேதுராமன் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். தன் வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு” குடும்ப விழுமியங்கள் “பற்றி பாடம் எடுத்தவர். ஒவ்வொரு நாள் இறைவணக்கக் கூட்டத்திலும் ஏதாவது சமூக நீதி குடும்ப உறவுகள் பற்றி ஐந்து நிமிடமாவது பேசுவார். இப்படி பாடம் எடுத்தவர் இன்று அவரே ஒரு பாடமாக முதியோர் இல்லத்தில் அமர்ந்திருக்கிறார்.
அவ்வை முதியோர் இல்லத்தின் வராண்டாவில் சேதுராமனும் அவரது நண்பர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மாணிக்கமும் அமர்ந்திருந்தனர். மாலை நேரத்து வெயில் மெல்ல மறைந்து கொண்டிருந்தது.
என்ன சேதுராமன் சார் இன்னைக்கும் அதே போனைத் தான் முறைச்சு பார்த்துகிட்டு இருக்கீங்க. லண்டனில் இருந்து உங்கள் பையன் பேசினானா?
இல்லை மாணிக்கம் என் பையன் கார்த்திக்கு அங்கு நிறைய வேலைப்பளு. ஐ. டி.ஃபீல்டு தெரியும் தானே. ஒரு நிமிடம் கூட தலை நிமிர முடியாதுன்னு சொல்லுவான். பேரன் கதிருக்கு இப்ப எக்ஸாம் டைம் வேற.
நீங்க அவங்களை விட்டுக் கொடுக்க மாட்டீங்க. அது சரி பெத்தவங்க கிட்ட பேச ஒரு அஞ்சு நிமிடம் ஒதுக்க முடியாத அளவுக்கு என்ன அப்படி வேலை? இந்த ஆறு மாசத்துல அவன் எத்தனை தடவை உங்களை வந்து பார்த்திருப்பான்?
சேதுராமன் வாய்மூடி மெளனியாக இருந்தார். மனதிற்குள் அழும் ஓசை யார் அறிவார் இருந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு
மாணிக்கம் சார் அவன் அங்கிருந்து எப்படி வர முடியும்? பாவம் எனக்குத்தான் இங்கு எல்லா வசதியும் பண்ணி கொடுத்திருக்கான். மாசம் 5ஆம் தேதியானால் என் அக்கவுண்ட்லே டான்னு பணம் வந்ததுடுது. இப்பக் கூட போன் பண்ணி அப்பா உங்களுக்கு தேவை எதுவானாலும் வாங்கிக்கோங்கன்னு சொன்னான்
மாணிக்கம் மெல்ல நகைத்தார். பணம் பாசத்துக்கு ஈடாகாது சார். என் பொண்ணு அமெரிக்காவில் இருக்கா. தினமும் வீடியோ கால் பண்ணி பேசிடவா. ஆனா நேர்லே பார்க்கிற அந்த நிம்மதி இந்த போன் திரையில் கிடைக்காது சேதுராமன் சார் .
சேதுராமன் பதில் பேச முடியாமல் தன் பழைய நோக்கியா போனையை பார்த்துக் கொண்டிருந்தார்.அதில் கார்த்தி கடைசியாக அனுப்பிய மெசேஜ்” டாட் பிஸி வித் மீட்டிங் டேக் கேர் ‘ அந்த மெசேஜை பார்த்தபடியே மாணிக்கம் சார் ஒரே உடம்பு வலியா இருக்கு நான் போய் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கிறேன் குட் நைட் சார்..
குட் நைட் சேதுராமன் சார்.
சேதுராமன் தன் அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார்.என்னதான் இங்கு வசதி இருந்தாலும் மகன் மருமகள் பேரப் பிள்ளையுடன் இருந்தால் எப்படி இருக்கும்?
மகன் வேலை முடித்துவிட்டு வரும்போது ஏண்டா லேட் இவ்வளவு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறாய் என்ற அதட்டல். மருமகளிடம் கொஞ்சம் காபி போட்டுக் கொண்டு வாமா என்ற உரிமை.பேரப்பிள்ளையுடன் கொஞ்சி விளையாடுவது இந்த நிகழ்வுகள் எதுவுமே இல்லாத மயானமாய் மாறிப்போனது அவ்வை இல்லம் சேதராமனுக்கு.
மறுநாள் காலை இல்லத்தின் மேலாளர் ரவி உற்சாகமாக சேதுராமனின் அறைக்குள் நுழைந்தார்.
சேதுராம் சார்! உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.உங்க பையன் கார்த்திக் இப்பதான் போன் பண்ணினார் அவர் இந்தியா வர்றாராம்.
இருக்கையில் இருந்து பதறி எழுந்த சேதுராமன் “நிஜமாவா ரவி? போன் பண்ணினானா? எப்ப வாரான்?லண்டனில் இருந்து வருவதற்கு லீவு கிடைக்காதுன்னு சொன்னானே!
அடுத்த வாரம் வர்றாராம் சார். அது மட்டும் இல்லை உங்களை இங்கிருந்து அழைத்துக்கொண்டு போகப் போறாராம். உங்களை எங்கேயோ ஒரு பெரிய இடத்துக்கு கூட்டிட்டு போகணும்னு ரொம்ப ஆர்வமா பேசினாரு.
சேதுராமனின் கண்களில்ஆனந்தக் கண்ணீர்பெருக்கெடுத்தது.
எனக்குத் தெரியும் ரவி.அவன் என் பிள்ளை என்னை தவிக்க விடமாட்டான்.மாணிக்கம் சார் கிட்ட சொல்லணும் என் வளர்ப்பு தப்பானதுன்னு சொன்னாரு.இப்ப பார்த்தீங்களான்னு கேட்கணும்?
அடுத்த ஏழு நாட்கள் சேதுராமனுக்கு யுகங்களாக தெரிந்தது.
அவ்வைஇல்லத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் தன் மகன் தன்னை வந்து லண்டன் அழைத்துச் செல்லப் போகிறான் என்று தன் மகனின் பெருமை பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
லண்டன் சென்றால் மிகவும் குளிரும் என்று புலம்பிக்கொண்டே அவர் தன் பழைய தலைமை ஆசிரியர் கோட்டை தூசு தட்டி எடுத்து வைத்தார். தன் பெட்டியை மூன்று முறை அடுக்கி வைத்திருப்பார்.
குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை ஒரு கருப்பு நிற சொகுசு கார் அவ்வைஇல்லத்தின் வாசலில் வந்து நின்றது.கார்த்திக் மிக மிடுக்காக கோட் சூட் அணிந்து ஒரு கார்ப்பரேட் மேதாவியாக தன்னை காட்டிக் கொண்டு வந்து இறங்கினான்.
அவ்வை இல்லமே அவன் வருகைக்காக காத்திருந்தது. சேதுராமனாவது இந்த வயதான காலத்தில் தன் குடும்பத்தின் அரவணைப்பில் வாழட்டும் என்று அனைவரும் மனதிற்குள் ஆசீர்வதித்தனர்.
சேதுராமன் ஓடிச் சென்று கார்த்திகை மழை காணாப் பயிர் போல ஆரதத் தழுவிக் கொண்டார். கார்த்தி எப்படிப்பா இருக்கே? ரொம்ப இளைச்சுட்ட மாதிரி இருக்கு. மருமகள் தேன்மொழி எப்படி இருக்கா? கதிர் எங்கே?
கண்ணீர் விட்டு அழுதார் சேதுராமன்.
சேதுராமனின் அன்பு கலந்த அந்த தழுவலை தவிர்த்து விட்டு கைக்கடிகாரத்தை பார்த்தபடி என்னப்பா இது எல்லோரும் நல்லா இருக்காங்கப்பா. தேன்மொழி கதிருக்கு இங்க வர பிடிக்கலே. டைம் ஆகுது சீக்கிரம் பெட்டியை எடுத்துக்கிட்டு வாங்க. நமக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.
மீட்டிங்கா! என்னை லண்டனுக்குத்தானே கூட்டிட்டு போறே!
போகலாம்பா….அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பங்சன். என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் வராங்க கிளம்புங்க.
சேதுராமனுக்கு இது ஏதோ ஏமாற்றமாக தெரிந்தாலும் சரி மகனுக்கு உதவியாக இருப்போம் என்ற எண்ணத்தில் காரில் ஏறினார்
ஒரு மணி நேரம் கடந்தது கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசல் வந்தடைந்தது. அங்கே பெரிய டிஜிட்டல் திரையில் கார்த்திக்கின் முகம் மின்னியது. அதன் கீழே ” குளோபல் சோசியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி அவார்ட் செர்மோனி ” என்று எழுதப்பட்டிருந்தது
உள்ளே நுழைந்ததும் கார்த்திக் சேதுராமனை ஒரு சோபாவில் அமர வைத்தான். அங்கேபலகேமராக்களும் பத்திரிகையாளர்களும் இன்னும் பலரும் இருந்தனர்.
” அப்பா இதுநான் ஆரம்பிச்ச சீனியர்கேர் பவுண்டேஷனோட லான்ச். இப்ப நான் மேடைக்கு போறேன். நான் உங்களைக் கூப்பிடும்போது மட்டும் மேடைக்கு வாங்க. நான் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டினால் போதும்.
இதெல்லாம் எதுக்குப்பா!எனக்கு இதுல என்ன வேலை?
ப்ளீஸ் அப்பா என்னை ஏதாவது கேள்வி கேட்டு தர்ம சங்கடப்படுத்திடாதீங்க.இது என்னோட பிசினஸ் இமேஜ்க்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.
மேடையில் ஏறிய கார்த்திக் பேசத் தொடங்கினார் அவனது ஆங்கிலமப் பேச்சு மிகத் துல்லியமாக இருந்தது.
லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் சமூகம் இன்னைக்கு முதியோர்களை ஒரு பாரமா பார்க்குது.ஆனால் நான் என் தந்தையை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து இருக்கேன்.ஏன்னா அங்கே அவருக்கு தேவையான மெடிக்கல் கேர் கம்யூனிட்டி எல்லாமே கிடைக்குது.இதோ என் தந்தை அவர் அங்கே எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கார்னு அவரே சொல்லுவார்
சேதுராமன்மேடைக்குஅழைக்கப்பட்டார். அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. கார்த்திக் முதியோர் இல்லத்தை ஒரு லைப் ஸ்டைல்போல சித்தரித்துக் கொண்டிருந்தான். அவன் பேச்சு அவருக்கு மிகுந்த மன வலியைத் தந்தது.
மெல்ல மெல்ல மேடை ஏறிய சேதுராமனிடம் மைக் கொடுக்கப்பட்டது கார்த்திக் அவர் காதுகளுக்கு பின்னால் ரகசியமாக சொன்னான் அப்பா! “அங்கே நல்லா பார்த்துக்கிடுறாங்கன்னு என்று மட்டும் சொல்லுங்கள். ”
சேதுராமன் கூட்டத்தைப் பார்த்தார்.அங்கே பல பணக்கார இளைஞர்கள் அமர்ந்திருந்தனர் அவர்கள் தங்கள் பெற்றோரை எங்கே விடலாம் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.
என் மகன் சொன்னான் அங்கு எனக்கு மெடிக்கல் கேர் கிடைக்குதுன்னு அது உண்மைதான்.என் மனைவி இறந்து இரண்டு வருடம் ஆகிறது. அவள் போன பின்பு என்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. எனக்கு ரத்த அழுத்தம் அதிகமானா மாத்திரை கொடுக்க அங்கே நர்ஸ் இருக்காங்க.ஆனா எனக்கு ரத்த அழுத்தம் ஏன் அதிகமாச்சுனு கேட்க அங்க யாருமே இல்லை. உடம்புக்கு முடியலன்னா ஊசி போடுவாங்க அருகில் இருந்து பார்த்துக் கொள்ள என்று சொல்லியவாரே கண்ணீர் சிந்தினார் சேதராமன்.
அரங்கில் ஒரு நிசப்தம் பரவியது கார்த்திக்கின் முகம் மாறத் தொடங்கியது.
“சமூக அக்கறை அப்படினா என்னனு தெரியுமா?பெத்த அப்பா அம்மாவுக்கு நட்சத்திர ஹோட்டலில் அல்லது ஒரு ஹோமில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறது இல்லை. அவங்க பிரச்சனைகளை அவங்க சொல்ல வர்ற பழைய கதைகளை எத்தனை தடவை சொன்னாலும் காது கொடுத்துக் கேட்கிறது வயதான காலத்தில் உடனிருந்து பத்திரமா ஒரு குழந்தையை போல பார்த்துக்கிறது இதுதான் சமூக அக்கறை.’
கார்த்திக் இடையில் குறிக்கிட்டு அப்பா இதெல்லாம் இப்போ தேவை இல்லை!
இல்லை கார்த்திக்!”இதுதான் சரியான நேரம் நீங்க எல்லாரும் கார் பங்களா பதவி அப்படின்னு வேர்களை விட்டுட்டு கிளைகளை அலங்கரிக்க ஆசைப்படுறீங்க.ஒரு சின்னக் குழந்தை கீழே விழுந்தா அதை தூக்கி விட ஓடுகிறோம் இல்லையா? அதே மாதிரி தான் வயதானவர்களும். அவர்களுக்கு பணத்தைவிட ஒரு கைப்பிடி பாசம் போதும்.”
கார்த்திக் நீ என்னை இந்த மேடைக்குஒருபொம்மையாகத்தான் கூட்டிட்டு வந்தே! உன்னோட பிசினஸ் வளர உன் அப்பாவே உனக்கு ஒரு மார்க்கெட்டிங் டூல் ஆகிவிட்டான் பார்த்தாயா?இதுதான் நீ கத்துக்கிட்ட கல்வியா?
அப்பா எல்லோரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க என் மானம் போகுது. இனிமே பணம் ஏதும் அனுப்ப மாட்டேன்.
உன் பணம் எனக்கு எதுக்குடா?என் பென்சனை வைத்து நான் வாழ்ந்து விட்டுப் போகிறேன். அவ்வைஇல்லத்தில் இருப்பவர்களை என் உண்மையான உறவு என்று எண்ணிக் கொள்கிறேன் . ஏதோ மானம் என்று சொன்னாயே! மானங்கிறது மத்தவங்க பாராட்டுதலில் இல்லை கார்த்திக். உன் மனசாட்சிக்கு நீ சரியா இருக்குறதுல இருக்கு.உனக்கு நான் ஒரு சோசியல் ரெஸ்பான்ஸ்சிபிலிட்டிதான். ஆனா எனக்கு நீ என் உயிர் என்று கண்ணீர் சிந்தியவாறு மேடையில் இருந்து இறங்கி ஹோட்டலுக்கு வெளியே வந்து அங்கிருந்து ஆட்டோவில் ஏறினார் சேதுராமன்.
சார் எங்கே போகணும்?
அவ்வை முதியோர் இல்லத்துக்கு.
ஆட்டோ நகரத் தொடங்கியது சமுதாயம் இன்னும் ஒரு வெற்றிகரமான மகனை பார்த்து கைதட்டிக் கொண்டிருந்தது. ஒரு தந்தையின் இதயம் உடைந்து போய் இருப்பதை அறியாமல். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவ்வைஇல்லம் வந்தடைந்தார் சேதுராமன்.
என்ன சேதுராமன் லண்டன் போறதா சொல்லிட்டு போனீங்க! இப்ப இங்கேயே திரும்பி வந்துட்டீங்க?
எனக்கு இந்த இல்லமே போதும் இங்கேதான் நான் தலைமை ஆசிரியர் சேதுராமனா இருக்க முடியும். என் மகனுக்கு நான் ஒரு விளம்பரப் பொருளாக இருக்க விரும்பவில்லை.மாணிக்கத்திற்கு எல்லாம் புரிந்து விட்டது.
இருவரும் மெதுவாக உள்ளே நடந்தனர். சூரியன் முழுவதுமாக மறைந்தது. இல்லத்தின் விளக்குகள் எரியத் தொடங்கின. அந்த பெரிய கட்டிடத்தில் பல நூறு முதியவர்களின் கதைகள் மௌனமாக அலைந்து கொண்டிருந்தன. சமுதாயம் இன்னும் முன்னேற்றத்தின் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. தன் பின்னால் விட்டுச் சென்ற இதயங்களைத் திரும்பிப் பார்க்காமல்.
📚 எழுதியவர்:

✍️ – கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப் புது தெரு
சக்கம்பட்டி –625512
ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

