“நிழல் நீங்கிய நிலா” – சிறுகதை
. அன்றைய விடியல் மல்லிகாவிற்கு வழக்கமானதாக இல்லை.12 ஆம் வகுப்பு படிக்கும் அந்த 16 வயதுச் சிறுமியின் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு வித கலக்கம் அன்று மரணபயமாக மாறி இருந்தது. வகுப்பறையின் கடைசி பெஞ்சில் சுவரோடு சுவராக ஒண்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.ஜூன் மாதத்துக் காலை வெயில் அறையினுள் விழுந்ததும் அவளுக்குள் ஒரு நடுக்கம் உறைந்து போயிருந்தது.
. கணித ஆசிரியை சுமதி கரும்பலகையில் கணக்கினை எழுதி அதற்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். மல்லிகாவின் கவனம் அங்கில்லை. அவளது கைகள் வயிற்றை இறுகப்பற்றிக் கொண்டிருந்தன…. கடந்த இரண்டு மாதங்களாக அவளது உலகம் தலைகீழாக மாறி இருந்தது.
. ” மல்லிகா! இங்கே கவனி “.
எழுந்து இந்த கணக்கிற்கு விடை சொல்.சுமதியின் குரல் வகுப்பறையை உலுக்கியது.
. மல்லிகா திடுக்கிட்டு எழுந்தாள். ஆனால் அவளால் பேச முடியவில்லை. தலைசுற்றலும் குமட்டலும் அவளை நிலைகுலையச்செய்தன. வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்தாள்.
. சுமதி டீச்சர் பதற்றத்துடன் ஓடி வந்து மல்லிகாவை தாங்கினார். மல்லிகாவின் உடல் சுட்டெரித்ததது.”என்னம்மா பண்ணுது?காலையில சாப்பிடலையா?” என்று கேட்டபடி அவளது முகத்தில் தண்ணீர் தெளித்தார்.மல்லிகா கண்கள் கலங்க
“ஒன்னும் இல்ல டீச்சர்.சும்மா தலை சுற்றல்….என்று சொல்லிவிட்டு மீண்டும் குமட்டினாள்.
. ஒரு பெண்ணாக ஆசிரியராக சுமதியின் நெஞ்சில் ஏதோ ஒரு அபாய மணி அடித்தது. அவளது உடலமைப்பில் தெரிந்த சிறிய மாற்றம் சுமதியின் அனுபவக் கண்களுக்கு ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்தியது.
. மல்லிகாவை தலைமை ஆசிரியை அறையின் பின்புறம் இருந்த ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார் சுமதி.அங்கிருந்த பெஞ்சில் அவளை அமர வைத்து கைகளைப் பற்றிக் கொண்டார்.
. மல்லிகா என்கிட்ட மறைக்காம சொல்லுமா….உடம்புக்கு என்ன செய்யிது? கடைசியாக எப்போ மாதவிடாய் வந்துடுச்சு? சுமதி மென்மையான குரலில் கேட்டார்.
. ஆசிரியையின் அந்தக் கேள்வி மல்லிகாவின் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்தது. அவள் கைகளை பிசைந்து கொண்டு அழத்தொடங்கினாள்.அவளது அழுகை சாதாரணமானதாக இல்லை. அது ஒரு பெரும் துயரத்தின் கதறல்.
. சொல்லுமா… நாங்க இருக்கோம்.உனக்கு என்ன பயம்? தலைமை ஆசிரியை மீனாட்சியும் அங்கு வந்து சேர்ந்தார்.
. மல்லிகா விம்மி விம்மி அழுதாள்.
டீச்சர்….எனக்கு….எனக்கு பயமா இருக்கு. அப்பா… அப்பா ராத்திரியானா……. அதற்கு மேல் அவளால் வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை.
. சுமதி டீச்சரும் மீனாட்சி மேடமும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
” என்ன சொல்ற மல்லிகா? உங்க அப்பா……
. ஆமா டீச்சர் அம்மா இறந்ததிலிருந்து அவர் குடிக்க ஆரம்பிச்சாரு.ராத்திரியானா கதவை சாத்திட்டு என்னை… அவள் தன் முகத்தை பொத்திக் கொண்டு கதறினாள். யார்கிட்டயாவது சொன்னா கொன்னுடுவேன்னு மிரட்டுறாரு. எனக்கு உடம்புக்கு முடியல டீச்சர். வயிறு வலிக்குது டீச்சர்.
. சுமதியின் கண்கள் சிவந்தன. பெற்ற மகளையே சிதைக்கும் ஒரு மிருகத்துடன் ஒரு குழந்தை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை நினைத்தபோது சுமதியின் ரத்தம் கொதித்தது. உடனடியாக மல்லிகாவை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அழைத்துச் சென்றனர்.
. மருத்துவமனையின் பரிசோதனை அறைக்குவெளியே சுமதியும் மீனாட்சியும் பதற்றத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். பெண் மருத்துவர் கவிதா வெளியே வந்த போது அவரது முகத்தில் வேதனையும் ஆத்திரமும் கலந்திருந்தது.
. “டீச்சர்… அந்தப் பொண்ணு மூணு மாசம் கர்ப்பமா இருக்கா. ஒரு 16 வயசுப் பொண்ணுக்கு இந்த நிலைமையா? யார் இதற்கு காரணம்? உடனே போலீசுக்குத் தகவல் சொல்லணும்” என்றார் டாக்டர் கவிதா.
. சுமதி டீச்சர் மருத்துவரின் கைகளை பற்றிக்கொண்டு” டாக்டர் அவளோட பெத்த தகப்பனே தான் இந்த மிருகத்தனம் பண்ணியிருக்கான். தயவு செய்து சட்டப்படி என்ன செய்யணுமோ செய்யுங்க. அந்த புள்ளையை நாங்க காப்பாத்தனும். ”
. சமூகத்தின் ஆகச் சிறந்த நச்சு புனிதமாக கருதப்படும் குடும்ப அமைப்புக்குள்ளேயே ஒளிந்திருப்பதை அவர்கள் உணர்ந்த தருணம் அது. பெற்ற தாயை இழந்த குழந்தைக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டிய தந்தையே வேட்டையாடும் வேடனாய் மாறிய கொடூரம் அவர்களை நிலைகுலையச் செய்தது.
. தலைமை ஆசிரியை மீனாட்சி கொடுத்த புகாரின் மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் காவல்துறை உடனடியாக செயல்பட்டது.மல்லிகாவின் தந்தை வடிவேலு கூலி வேலை முடித்து மாலையில் குடி போதையில் வீட்டுக்கு வந்தபோது போலீஸ் வண்டி அவரின் வீட்டின் முன் நின்றது.
. ” வடிவேலு……உன்னை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்கிறோம்.” காவல்துறை ஆய்வாளர் கர்ஜித்தார்.
. வடிவேலு குடிபோதையில் என் பொண்ணை நான் என்ன வேணும்னாலும் செய்வேன். உங்களுக்கு என்ன?என்று திமிராகப் பேசினான்.
. அவனது வார்த்தைகள் அங்கிருந்த காவலர்களையே முகம் சுளிக்க வைத்தன. லத்தியின் அடிகள் அவனது போதையையும் திமிரையும் இறக்கின.
. இவனுக்கெல்லாம் சட்டப்படி தண்டனை வாங்கித் தரக்கூடாது சார்.என்கவுண்டரில் போட்டு போயிக்கிட்டே இருக்கணும். பெண் காவலர் ஒருவரின் கோபக்கனல்.
. கிராம மக்கள் கூடினர். விசயம் காட்டுதீ போல பரவியது. பெத்த மகளை இப்படியா பண்ணுவான் சண்டாளன்?என்று உறைந்து போய் பேசினர்.ஆனால் அதே சமயம் இனி அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும்?அவள் முகத்தில் யார் முழிப்பார்?என்ற பச்சாதாபப் பார்வைகளும் பழிச் சொற்களும் மல்லிகாவை நோக்கி நகரத் தொடங்கின.
. வடிவேலுவின் கைகளில் விலங்கிடப்பட்டு போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டான். ஆனால் மல்லிகாவின் மனதில் விழுந்த வடுவிற்கு யார் மருந்திடப் போகிறார்கள் என்ற கேள்வி அந்த ஊர்காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது..
. நாட்கள் உருண்டோடின. சட்டம் தன் கடமையைச் செய்தது. வடிவேலுக்கு பிணையில் வெளிவர முடியாத சிறை தண்டனை கிடைத்தது. மல்லிகாவின் கர்ப்பம் அவளது உடல்நிலை மற்றும் சட்ட விதிகளின்படி கலைக்கப்பட்டது. ஆனால் சமூகத்தின் கண்கள் அவளை வாழ விடவில்லை.
. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு சிறிய ஓட்டு வீட்டில் மல்லிகா தன் வயதான பாட்டியுடன் தனிமைப்படுத்தப்பட்டாள்.
. தெருவில் நடந்தால் பெண்கள் அவளை பார்த்து முணுமுணுத்தனர் ஆண்கள் அவளை ஒரு காட்சிப் பொருளாக பார்த்தனர்.பாவம் செய்தவன் சிறையில் இருக்கிறான். ஆனால் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தது அந்த பாதிப்புக்கு உள்ளான அப்பாவிச் சிறுமி மல்லிகாதான்.
. அதே ஊரைச்சேர்ந்த இளைஞன் கதிரவன். பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஊரில் இயற்கை விவசாயமும் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய இளைஞர் நற்பணி மன்றம் நடத்தி வந்த 24 வயது இளைஞன்.அவன் இந்த சமூகத்தின் நாடகத்தனத்தை கவனித்துக் கொண்டே இருந்தான்.
. தப்பு பண்ணுனவன் ஜெயிலுக்கு போயிட்டான்.ஆனால் எந்த தப்பும் பண்ணாத அந்த பொண்ணை ஏன் எல்லோரும் குற்றவாளி போல் பார்க்கிறார்கள்? என்று தன் நண்பர்களிடம் வாதிட்டான் கதிரவன்.
. ” டேய் கதிர்! இது உலக வழக்கம்டா. அந்த பொண்ணோட வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இனி அவளை யார் கட்டுவார்?அவள் ஒரு கறைபடிஞ்சவ”என்றான் நண்பன் ஒருவன்.
. நீ எல்லாம் படிச்சவனாடா? என்று தன் நண்பனை பார்த்து கேட்டான் கதிர்.
. கதிரவன் நெஞ்சில் அந்த ‘கறை’ என்ற வார்த்தை சுட்டது.கறை அவ மேல இல்லடா அவளை அப்படி பார்க்கிற அந்த கண்ணில் தான்டா இருக்கு என்று கோபமாக கூறினான்.
. கதிரவன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். வெறும் பேச்சோடு நிற்பவன் மனிதன் அல்ல. செயலில் காட்டுவதே அறம் என்று நம்பினான்.ஒரு நாள் மல்லிகாவின் வீட்டிற்கு சென்றான்.
. அங்கே மல்லிகா வாசலில் அமர்ந்து வானத்தையே வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். கதிர்வனை கண்டதும் பயந்து உள்ளே செல்லமுயன்றாள்.
. மல்லிகா நில்லுமா…. நான் உன்னை மிரட்ட வரல. கதிர்வனின் குரலில் ஒரு அன்பும் ஒரு தோழனுக்குரிய நிதானமும் கனிவும் இருந்தது.
. மல்லிகாவின் பாட்டி தள்ளாடியபடி வெளியே வந்தார். “தம்பி நாங்க யாரும் இல்லாத அனாதைகே” எங்களை விட்டுருங்க என்று கைகூப்பி அழுதாள்.
. பாட்டி!நான் மல்லிகாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.அவளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறது என்னோட கடமையா நினைக்கிறேன் என்றான் கதிரவன் நேரடியாக.
. மல்லிகா அதிர்ச்சியில் உறைந்தாள். பாட்டியின் கண்களில் கண்ணீர் பெருகியது. தம்பி என்ன சொல்றே? ஊர் உலகம் என்ன பேசும்னு தெரியாதா? என் பேத்தி பட்டுப்போன மரம் தம்பி……
. மரம் பட்டு போகல பாட்டி. புயல்ல கொஞ்சம் சாய்ந்து இருக்கு. அவ்வளவுதான். தண்ணி ஊத்துனா அது திரும்பவும் தளிர்க்கும்.மல்லிகா சம்மதிச்சா நான் அவளை என் கண்ணு போல பாத்துக்குறேன் என்றான் கதிரவன் மல்லிகாவை பார்த்தபடி.
. மல்லிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. இத்தனை நாட்களாக அவளைப் பார்த்த அசிங்கமான பரிதாபமான பார்வைகளுக்கு மத்தியில் கதிரவனின் கண்கள் அவளுக்கு ஒரு புதிய விடியலைக் காட்டின.
கதிரவனின் முடிவுக்கு அவனது வீட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
“ஊர்ல வேற பொண்ணே உனக்கு கிடைக்கலையா? அந்தப் பொண்ணுக்காக இவ்வளவு ஏன்?” என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது கதிரவன் அமைதியாகச் சொன்னான்.
“மல்லிகா இப்போ ஒரு குழந்தை. அவளுக்கு இப்போ தேவையானது திருமணம் இல்லை. பாதுகாப்பு, படிப்பு, தன்னம்பிக்கைதான். அவள் முதலில் தன் வாழ்க்கையை மீட்டெடுக்கணும். அதுக்கு நான் ஒரு நண்பனா, ஒரு சகோதரனா, ஒரு மனிதனா துணையாக இருப்பேன்.”
சுமதி ஆசிரியரும், தலைமை ஆசிரியர் மீனாட்சியும், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் மல்லிகாவுக்கு உறுதுணையாக நின்றனர். அவர்கள் சட்டப்படி அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
மல்லிகா மெதுவாக தனது பயத்திலிருந்து வெளியே வர ஆரம்பித்தாள். உளவியல் ஆலோசனை, ஆசிரியர்களின் அன்பு, பாட்டியின் பாசம், கதிரவனின் மனிதநேயம்—இவை அனைத்தும் அவளுக்கு புதிய வாழ்வின் அடித்தளமாக அமைந்தன.
பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த மல்லிகா, கல்லூரியில் சேர்ந்தாள். தனது வாழ்க்கையை யாருடைய பரிதாபத்தாலும் அல்ல, தனது தன்னம்பிக்கையால் கட்டியெழுப்ப வேண்டும் என்று உறுதி கொண்டாள்.
இரண்டு ஆண்டுகள் கடந்தன.
இப்போது மல்லிகாவுக்கு பதினெட்டு வயது நிறைவடைந்திருந்தது. படிப்பிலும் சிறந்து விளங்கிய அவள், பெண்களின் உரிமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பேசத் தொடங்கினாள்.
ஒரு நாள் கதிரவன் அவளைப் பார்த்து அமைதியாகக் கேட்டான்.
“மல்லிகா… இப்போ உன் வாழ்க்கையைப் பற்றிய முடிவை நீதான் எடுக்கணும். எந்த அழுத்தமும் இல்லை. உன் விருப்பம் என்ன?”
மல்லிகா புன்னகைத்தாள்.
“என்னை ஒரு பாதிக்கப்பட்டவளாக இல்லாமல், ஒரு மனிதராகப் பார்த்த முதல் கண்கள் உங்களுடையது. என் வாழ்க்கைப் பயணத்தை உங்களோடு தொடர நான் சம்மதிக்கிறேன்.”
இரு குடும்பங்களின் சம்மதத்துடனும், ஆசிரியர்கள் சுமதி மற்றும் மீனாட்சி முன்னிலையிலும், எளிமையான முறையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.
கதிரவன் மல்லிகாவின் கழுத்தில் தாலி கட்டிய அந்தக் கணத்தில், அது ஒரு பெண்ணின் வாழ்க்கையை மீட்டெடுத்த வெற்றியின் அடையாளமாக மாறியது.
சில மாதங்களுக்குப் பிறகு, அதே ஊரின் தெருக்களில் கதிரவனும் மல்லிகாவும் கைகோர்த்து நடந்தனர்.
இந்த முறை யாரும் அவளைப் பரிதாபத்துடன் பார்க்கவில்லை.
அவளது தன்னம்பிக்கையையும், கதிரவனின் மனிதநேயத்தையும் பார்த்து பலர் தலைகுனிந்தனர்.
மல்லிகா தன் கல்வியைத் தொடர்ந்தாள். பின்னர் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதலும் வழிகாட்டுதலும் வழங்கும் சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்தாள்.
இருள் எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், ஒரு சிறு ஒளிக்கீற்று அதை வென்றுவிடும்.
மல்லிகாவின் வாழ்க்கை அந்த ஒளிக்கீற்றாக மாறியது.
தன் மீதான நிழலை நீக்கிக்கொண்ட நிலவைப் போல, அவளும் இனி முழு வெளிச்சத்துடன் வாழ ஆரம்பித்தாள்.
📚 எழுதியவர்:

✍️ – கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப் புது தெரு
சக்கம்பட்டி –625512
ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

