கு.மணி எழுதிய "அறுப்புக்கொடி" சிறுகதை | K. Mani "Aruppukkodi" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “அறுப்புக்கொடி” சிறுகதை

கு.மணி எழுதிய “அறுப்புக்கொடி” சிறுகதை

கொல்லைப்புறத்து மாமரத்தின் அடிவாரத்தில், சுசீலா அதிகாலையில் காய்ச்சி வைத்திருந்த சுக்குக் காப்பியின் ஆவி மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. ஆனால், மாணிக்கத்தின் உடலின் சூடு அதற்கு முன்பே முற்றிலும் குளிர்ந்து போயிருந்தது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முப்பத்தைந்து ஆண்டுகள் ஓயாது உழைத்து, அறுபது வயதில் ஓய்வுபெற்ற மாணிக்கம், இன்று அதிகாலை ஒரு நைலான் கயிற்றின் முடிச்சில் தன் வாழ்வின் தீராத கணக்குகளை முடித்துக் கொண்டிருந்தான்.

​. சுசீலாவுக்கு ஐம்பத்தாறு வயது. தளர்ந்த தேகமும், முப்பத்தைந்து ஆண்டுகால குடும்ப பாரத்தை ஒற்றை ஆளாய் முதுகில் சுமந்து வளைந்த தண்டுவடமும் கொண்டவள். புழக்கடையில் மாணிக்கம் அசைவற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு அவள் எழுப்பிய அலறல், ஊரைக் கூட்டுவதற்கு முன் அவளது ஆன்மாவையே சுக்குநூறாக உடைத்தெறிந்திருந்தது.

​. ஊர் தலைவர் மூலம் தகவல் அறிந்து காவல் துறையின் ஜீப் வாசலில் வந்து நின்றது. இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தனர். தற்கொலைக்கான வழக்கு, பிரேதப் பரிசோதனை, அரசு நடைமுறைகள் என்று அவர்கள் பேசத் தொடங்கிய அடுத்த கணமே, திண்டுக்கல்லிருந்து வாடகைக் காரில் வந்து இறங்கினான் மூத்த மகன் பிரகாஷ். அவனோடு தங்கை கவிதாவும் முகத்தில் செயற்கையான பதற்றத்தோடு வந்திறங்கினாள்.

​. அப்பாவின் உடலைப் பார்த்து அவர்கள் சிந்திய கண்ணீரை விட, ஊருக்குள் தங்களுக்கு வரவிருக்கும் அவப்பெயரைப் பற்றிய பயமும், கௌரவப்போலித்தனமுமே அவர்களிடம் மேலோங்கி நின்றது. பிரகாஷ் இன்ஸ்பெக்டரைத் தனியாக வீட்டின் கொல்லைப்புறத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே சில நிமிடக் கள்ளப் பேரம் நடந்தது. தன் பர்சிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகளை எடுத்து இன்ஸ்பெக்டரின் கைகளில் லாவகமாகத் திணித்தான். சார் நாங்க எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்கிறோம் ஊர் நாட்டாமையின் பேச்சு.

. ​”சார்… குடும்பத்து மானம் மரியாதை எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடும். அப்பாவுக்கு ரொம்ப நாளா தீராத வயிற்று வலி இருந்ததுன்னு எழுதிக்கங்க… கேஸை இதோட முடிச்சிடுங்க. போஸ்ட்மார்ட்டம் எல்லாம் வேணாம் சார்,” என்று பேசி முடித்தான்.

​அப்பாவின் மரணத்தின் நிஜமான வலியோ, முப்பத்தைந்து ஆண்டு உழைப்பை உறிஞ்சிவிட்டு அவரை வீதியில் நிறுத்திய தங்களின் சுயநலமோ அவர்களுக்குத் துளியும் உறுத்தவில்லை. பணம் கைமாறியது; மாணிக்கத்தின் மரணம் “தீராத வயிற்று வலியால் ஏற்பட்ட தற்கொலை” என்று காகிதத்தில் பதிவாகி, அதிகாரத்தின் பார்வையில் ஒரு முடிவுக்கு வந்தது.

​. காவல்துறை வெளியேறியதும், வீட்டின் கதவுகள் சடாரென மூடப்பட்டன. இப்போது விசாரணை கூண்டில் சுசீலா நிறுத்தப்பட்டாள். மகன் பிரகாஷ் தன் தாயை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்தான். “ஏய்… சொல்லு! என்ன வார்த்தை பேசின அவர்கிட்ட? பென்ஷன் பணத்துல மிச்சமிருந்த நாலு லட்சத்தை என் பிளாட் அட்வான்ஸுக்குத் தரச் சொல்லி நான் கேட்டப்ப, ‘அம்மா ஒத்துக்க மாட்டேங்குது’ன்னு அப்பா சொன்னாரு. பண ஆசை பிடிச்சவளே… அந்த மனுஷனை நிம்மதியா தூங்க விட்டீயா? உன் நச்சரிப்பு தாங்காமத்தான் அவரு தூக்குல தொங்கிருக்காரு!” என்று கூச்சலிட்டான்.

. ​மகள் கவிதா தன் பங்கிற்குத் தாயின் சேலையைப் பிடித்து உலுக்கினாள். “நல்லா வாழ்ந்த மனுஷனை நடுத்தெருவுல பிணமாக்கிட்டியே! அப்பாவுக்கு என்ன குறைச்சல் வெச்சோம்? நீ வெச்சதுதானே இந்த வீட்டுல சட்டம்? உன்னோட அடாவடித்தனமும் அதிகாரமும்தான் அப்பாவைக் கயித்துக்குப் பலி கொடுத்திருக்கு. அப்பா சாகலடி… நீதான் அவரைக் கொன்னுட்ட!” என்று நஞ்சைக் கக்கினாள்.

​சுசீலா நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தாள். கண்கள் குளமாகின. “தம்பி… கவிதா… என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க? அவரு சர்வீஸ்ல இருந்தப்ப வாங்கின கடனை எல்லாம் அடைக்க முடியாம, உங்க ரெண்டு பேரோட படிப்பு, கல்யாணச் செலவை நினைச்சு ராப்பகலா புலம்பினப்ப, நான் தானே கூட இருந்து தேத்தினேன்? நீங்க ரெண்டு பேரும் பெத்த கடமையைக் கூட மறந்து கைவிரிச்சப்பவும் நான் தானே ராப் பகலா கூலி வேலை பார்த்து அவருக்குக் கஞ்சி ஊத்தினேன்… என்னையா கொலையாளின்னு சொல்றீங்க?” என்று அவள் கைகூப்பி அழுதாள்.

​ஆனால், சுற்றிலும் நின்ற உறவினர்கள் கூட்டம் அவளது நியாயமான கண்ணீரை ஏளனமாகப் பார்த்தது. “ஆமாம்பா… இவ கொஞ்சம் கறாரான பொம்பளைதான். புருஷனை அடக்கி ஆளப் பார்த்தா குடும்பம் இப்படித்தான் நாசமாப் போகும்,” என்று ஆளுக்கொரு தீர்ப்பை மிக எளிதாக எழுதி முடித்தனர்.

​. மதியம் உடலை எடுப்பதற்கான நேரம் வந்தது. ஆனால், அது ஒரு கண்ணியமான இறுதிப் பயணமாக இல்லை. தற்கொலை செய்து கொண்ட பிணம் என்பதால் எந்த மேள தாளமும் அடிக்கப்படவில்லை; பட்டாசு வெடிக்கப்படவில்லை; உடலின் மீது பூ மாலைகள் சூட்டப்படவில்லை. சடங்குகளோ, சம்பிரதாயங்களோ இன்றி ஒரு தீண்டத்தகாத உடலைப் போல மாணிக்கத்தின் உடலைத் தூக்கிச் செல்ல முடிவானது.

​அப்போது, கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு மூத்த கிழவி கத்தினாள்: “உடம்பைத் தூக்குறதுக்கு முன்னாடி அறுப்புக்கொடி சடங்கை முடிங்கடி! பிணத்துக்கு முன்னாடி இந்த பொம்பளையோட அலங்காரத்தை எல்லாம் அறுத்தெறியுங்க!”

வெள்ளைப் புடவை அணிந்த விதவைப் பெண்கள் கூட்டம் சுசீலாவை ஒரு வேட்டையாடும் ஓநாய்களைப் போல சூழ்ந்தது. அவளது இரண்டு கைகளையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து வந்து, மாணிக்கத்தின் உடலுக்கு அருகில் தரையில் வீசினார்கள். “வேண்டாம்… என்னை விட்ருங்க… ஐம்பத்தாறு வயசாயிடுச்சு… என் புருஷன் என்னை விட்டுப் போயிட்டாருங்கிற துக்கமே என்னை சாகடிக்குது… என்னை விட்டுடுங்க,” என்று சுசீலா கதறினாள். ஆனால், அவளது அழுகை அந்தச் சடங்கு வெறியர்களின் செவிகளில் விழவில்லை.

​ஒருத்தி சுசீலாவின் தலையில் ஒரு பூவை வைத்து, அடுத்த கணமே வெடுக்கெனப் பிடுங்கி எறிந்தாள்; அவளது நரைத்த முடிகள் சில வேரோடு அறுந்து வந்து சுசீலாவின் தலையில் ரத்தம் கசிந்தது. இன்னொருத்தி தன் கரடுமுரடான விரல்களால் சுசீலாவின் நெற்றி குங்குமத்தை அழுத்தித் துடைத்தாள்; நெற்றித் தோல் உரிந்து சிவந்து ரத்தம் கசிந்தது. அவளது இரு கைகளிலும் இருந்த கண்ணாடி வளையல்களை ஒரு பாறாங்கல்லால் நசுக்கி உடைத்தார்கள். உடைந்த வளையல் சில்லுகள் சுசீலாவின் முதிய மணிக்கட்டுகளில் ஆழமாகக் கிழித்து, ரத்தம் சொட்டுச் சொட்டாகத் தரையில் வழிந்தது.

​. அடுத்ததாக, ஒருத்தி கையில் கூரிய கத்தரிக்கோலுடன் வந்தாள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் ஏற்றிய திருமாங்கல்யம், கத்தரிக்கோலின் ஒற்றை வெட்டில் துண்டிக்கப்பட்டது. சுசீலா தன் மார்பில் அடித்துக்கொண்டு அலறினாள். அறுக்கப்பட்ட தாலியில் இருந்த தங்கத்தை சுசீலாவின் மகள் கவிதா அவசர அவசரமாகப் பிடுங்கித் தன் முந்தானையில் முடிந்து கொண்டாள். அந்த மஞ்சள் கயிறை ஒரு காய்ந்த வெற்றிலையில் வைத்து, மாணிக்கத்தின் வெற்று மார்பின் மீது வீசினாள்.

​. சுசீலாவின் புடவை உருவப்பட்டு, மைத்துனன் வீசிய வெள்ளை முரட்டுச் சேலை அவள் மீது எறியப்பட்டது. அவளது கழுத்தில் எவ்வித உயிர்ப்பும் அற்ற, சமுதாயத்தின் அடிமைச் சின்னமான கறுப்பு நூல் அறுப்புக்கொடியைக் கட்ட ஒருத்தி கையை உயர்த்தினாள்.

​கழுத்தில் விழவிருந்த அந்தக் கறுப்புக் கயிற்றைக் கண்ட கணம், சுசீலாவின் உடலுக்குள் ஒரு மின்னல் பாய்ந்தது. அவளது உடைந்த மணிக்கட்டுகளில் வழிந்த ரத்தம் அவளுக்குத் தன்மானத்தின் தீயை மூட்டியது! திடீரென சுசீலா அந்தப் பெண்ணின் கையை ஓங்கித் தட்டிவிட்டாள்! அவளது கண்களில் இதுவரை இருந்த அச்சமும் கண்ணீரும் மறைந்து, கனன்று எரியும் சுயமரியாதையின் வெளிச்சம் பிரகாசித்தது. தரையிலிருந்து ஒரு சிங்கமென நிமிர்ந்து நின்றாள்.

​”நிறுத்துங்க எல்லாரும்!”சுசீலாவின் குரல் அந்த வீட்டின் கூரையை அதிரச் செய்தது. கூடியிருந்த கூட்டம் ஒரு கணம் அதிர்ந்து பின்வாங்கியது.

​”யாரைப் பார்த்து என்ன சடங்கு செய்றீங்க? என் புருஷன் உழைச்ச காலத்துல அவரோட வியர்வையை உறிஞ்சிக் குடிச்ச நீங்க… அவர் ஓய்வுபெற்றதும் ஒருவாய் சோறு போட மனசில்லாம வீட்டை விட்டு விரட்டின நீங்க… இன்னைக்கு என்னை விதவையாக்கி நடுத்தெருவுல நிப்பாட்டி வேடிக்கை பாக்குறீங்களா?”

​. அவள் தன் மகன் பிரகாஷையும் மகள் கவிதாவையும் நேருக்கு நேர் பார்த்தாள். “தம்பி பிரகாஷ்! அப்பா சாகும்போது உன் கௌரவத்தைக் காப்பாத்திக்க போலீசுக்கு லஞ்சம் கொடுத்தியே… அவர் உசுரோட இருந்தப்ப அந்த நாலு லட்சம் பணத்துக்காக அவரைத் தினம் தினம் கொன்னியே… அதுக்கு என்ன தண்டனை இந்த ஊர் தரப்போகுது? கவிதா! அம்மாவோட தாலியில இருந்த தங்கத்தை வெட்கமில்லாம உருவி முடிஞ்சுகிட்டியே… இந்தத் தங்கத்துக்காகவா முப்பத்தைந்து வருஷம் நான் உங்க அப்பாவோடகுடும்பம் நடத்துனேன்?”

​. கூட்டம் அமைதியில் உறைந்து நின்றது. சுசீலா தன் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் தன் முந்தானையால் துடைத்துக் கொண்டு கம்பீரமாகப் பேசினாள்:

​. “புருஷன் செத்துட்டா பொம்பளையோட வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிற இந்த அசிங்கமான மூடநம்பிக்கையை நான் இன்னைக்கே இந்த இடத்துல சுட்டெரிக்கிறேன்! பூவும் பொட்டும் வளையலும் என் உடம்போட அலங்காரம் இல்ல… அது என் சுயமரியாதை! கணவன் இறந்தா மனைவி பிணமாகணும்னு சொல்ற எந்தச் சாஸ்திரத்தையும் இந்த சுசீலா ஏத்துக்க மாட்டா!”

​. அவள் மைத்துனன் எறிந்த வெள்ளைப் புடவையைத் தன் காலால் மிதித்துத் தள்ளிவிட்டு, கழுத்தில் கட்ட முயன்ற கறுப்பு அறுப்புக்கொடியை வெடுக்கெனப் பிடுங்கி எறிந்தாள். பின்னர், பிணத்தைத் தூக்கத் தயங்கி நின்ற கூட்டத்தை உதறிவிட்டு, மயானத்தை நோக்கி நகரத் தொடங்கினாள்.

​. ஊர்ப் பஞ்சாயத்தின் மூடக் கட்டுப்பாடுகளால் தற்கொலை செய்துகொண்ட பிணத்துக்கு இறுதிச் சடங்குகள் ஏதுமின்றி, சுடுகாட்டில் ஒதுக்கப்பட்ட ஒரு மூலையில் மாணிக்கத்தின் உடலை அனாதையாகக் கிடத்திவிட்டு உறவினர்களும் மகனும் தூர விலகி நின்றனர். அங்கே சுடுகாட்டுப் பணியாளர்களான வெட்டியான்கள் இருவர் மட்டுமே விறகுக் கட்டைகளை அடுக்கி உடலைத் தகனம் செய்யத் தயாராக நின்றிருந்தனர்.

​. அழுது புலம்பி மூலையில் முடங்காமல், நேராக மயானத்தின் நடுவே வந்திறங்கினாள் சுசீலா. சுற்றிலும் நின்றவர்கள் “பொம்பளை மயானத்துக்குள்ள வரலாமா?” என்று முணுமுணுத்தனர். ஆனால், சுசீலா எதையும் காதில் வாங்கவில்லை. அவள் நேராக வெட்டியான்களை நோக்கி நடந்தாள்.

​”அண்ணே… முப்பத்தைந்து வருஷம் எந்தத் தப்பும் செய்யாம நேர்மையா வாழ்ந்துட்டு, கஷ்டம் தாங்காம தூக்குல தொங்கின என் புருஷனை அனாதையா எரிக்க விட மாட்டேன். அவருக்கு இறுதி மரியாதை செய்ய இந்த உலகத்துல யாருக்கும் துப்பில்லை… பெத்த பிள்ளைகளும் கைவிட்டுட்டாங்க. நீங்க எனக்குத் துணையா நின்னு உதவுங்கண்ணே… என் புருஷனுக்கு நானே கையால நெருப்பு மூட்டி தகனம் பண்றேன்!”

​. அந்த வெட்டியான்கள் ஒரு கணம் திகைத்துப் போயினர். பின்னர் அவளது கண்களில் தெரிந்த தன்மானத்தையும் நியாயமான துணிச்சலையும் கண்டு, “அம்மா… நீங்க தான் தாயி நிஜமான தெய்வம்… வாங்க, நாங்க உங்களுக்குத் துணையா நிக்கிறோம்,” என்று சொல்லி விறகுகளை ஒழுங்குபடுத்தி, தீப்பந்தத்தை அவளது கைகளில் ஏந்திக் கொடுத்தனர்.

​சுசீலா நடுங்காத கைகளோடு அந்தத் தீப்பந்தத்தை வாங்கினாள்.

. வெட்டியான்களின் துணையோடு, மாணிக்கத்தின் உடலைச் சுற்றி வலம் வந்து, சிதையில் அந்தத் தீயை வைத்தாள். கொழுந்துவிட்டு எரிந்த தீ நாக்குகள் மாணிக்கத்தின் உடலைத் தழுவிய போது, அங்கே கூடி நின்ற ஊர்ப் பெரியவர்களின் மூடநம்பிக்கைகளும், பிள்ளைகளின் சுயநலமும், கௌரவப் போலித்தனங்களும் கூடவே சாம்பலாகிக் கருகின.

​. சுடுகாட்டின் சுட்டெரிக்கும் தீயின் வெளிச்சத்தில், கண்ணீரைத் தன்மானமாக மாற்றி, மூடநம்பிக்கைகளின் விலங்குகளை உடைத்து நின்ற சுசீலாவின் கம்பீரம், அந்த ஊருக்கு மட்டுமல்ல… பெண்ணடிமைத்தனத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இந்த ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் பாடமாக நிமிர்ந்து நின்றது!

📚 எழுதியவர்:

✍️ – கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப் புது தெரு
சக்கம்பட்டி –625512
ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *