“பாதை” கட்டுரைத் தொகுப்பு – இது ஒரு மாணவப் பெட்டகம்.
இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு
தெள்ளியராதலும் வேறு.
என்பார் வள்ளுவர். வர்க்க முரண்பாட்டின் ஆதிவடிவம் இது என்று சொல்லலாம். சுரண்டுனம் வர்க்கம்; சுரண்டப்படும் வர்க்கம் என்ற மார்க்சியப் பார்வை உருவாவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான தமிழிய வர்க்கப் பார்வை இது. செல்வச் செழிப்பும் அறிவாற்றலும் முட்டிமோதிப் போராடிக்கொண்டே இருந்திருக்கின்றது. அதாவது செல்வந்தனாய் இருப்பதும் சமூகப் புரிதலுடைய சிந்தனையாளனாய் இருப்பதும் சமூக அடுக்கின் வெவ்வே|று பரிமாணங்க்ள். இரண்டின் போராட்ட வடிவம்தான் ஊழ் என்ற வாழ்வியல் முரண்பாட்டை வடிவமைக்கிறது. ஊழ் என்பது விரக்திவழிப்பட்ட புராணக் கோட்பாடு அல்ல. அது சமூக இயங்குநிலையின் வாழ்வியல் முரண்பாடு. அப்படி எடுத்துக் கொண்டால் செல்வம் இருக்கும் இடத்தில் சிந்தனாப்பூர்வமான மானுட அறம் வலுவிழந்து விடுகிறது. அறம் கோலோச்சும் இடத்தில் செல்வச் செருக்கு ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணுகிறது. இதுதான் அன்றைய வர்க்க முரண்பாடு எனலாம்.
இது ஓர் இலக்கியம் சார்ந்த புரிதலுக்கானது மட்டுமல்ல; புராண உருவாக்கப் படைப்பாக்கம் எப்படித் தொடங்குகிறது என்பதற்கான ஆய்வுநோக்கும் ஆகும். நல்லாசிரியர் தோழர் கு. மணி அவர்கள் எழுதியிருக்கும் “பாதை” என்ற இந்த நூலும் அத்தகைய ஆய்வுநிலைக் கோட்பாட்டை உள்ளடக்கியிருக்கிறது.
கடந்த 03-01-2026 அன்று உலக வரைபடத்தின் மேலாதிக்க நாயகன் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அடாவடித்தனமாக சுதந்திர தேசமாகிய வெனிசுலாவுக்குள் நுழைந்து, அந்நாட்டின் குடியரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்து விலங்கிட்டு அமெரிக்காவுக்கு இழுத்துச் சென்றார். ஆம்! அழைத்துச் செல்லவில்லை; இழுத்துச் சென்றார் என்பதுதான் உண்மை. அதற்கு உலகறிந்த உண்மைக் காரணம் வெனிசுலா அதிக எண்ணைவளம் உள்ள நாடு; அது குறைந்த விலைக்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்பனை செய்து தனது பொருளாதார வளத்தை நிலைநிறுத்தி, லத்தீன் அமெரிக்க நிலப் பரப்பில் செல்வச் சீர்மைவாய்ந்த நாடாகத் திகழ்கிறது. அமெரிக்கா எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும் எண்ணை தர மறுத்துவிட்டது சின்னஞ்சிறிய வெனிசுலா. இதை மனதில் வைத்துத்தான் அந்நாட்டின்மேல் படையெடுத்து ரௌடியிசம் செய்திருக்கிறது அமெரிக்கா.
எண்ணை தரமறுத்ததால் போர் தொடுத்தோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் வேறொரு குற்றச்சாட்டைச் சொல்கிறார் ட்ரம்ப். “வெனிசுலா எங்கள் நாட்டுக்குள் போதைப் பொருளைப் பெருமளவில் கடத்தியது” என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை சீனா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
சரி; விஷயத்துக்கு வருகிறேன். போதைப் பொருள் என்பது இன்று உலகளாவிய கார்ப்பரேட் பண்டமாய் மாறியிருக்கிறது. தொழில் செய்து பிழைப்பதை விடவும் போதைப் பொருளை உற்பத்தி செய்து இளைஞர்களிடம் விநியோகித்தால் கிடைக்கும் வருவாய் அதிகம். பெரும் மாபியாக் கும்பல் உலகெங்கும் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து இந்த மயக்கநிலைப் பண்டத்தை விற்பனை செய்கிறது. (தமிழ்நாட்டில் இன்று போதைப் பொருள் அதிகரித்திருப்பதற்குப் பின்னால் இந்த மாபியாக் கும்பலின் அடாவடி நடவடிக்கை புகுந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.)
இந்தநிலையில் திரு கு. மணி எழுதியிருக்கும் “எங்கே செல்கிறது இந்தப் பா(போ)தை” என்னும் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுணர்வும் தன்னுணர்ச்சியும் இருக்கிறது. ஒரு குற்றம் சமூகமயமாகும்போது அதை எதிர்த்துப் போரிடுகிற ஆற்றலை ஆறாம் அறிவு என்கிற பகுத்தறிவு தந்திருக்கிறது. (இதை ஐம்புலன்களைத் தாண்டிய மனம் என விளக்கம் தருகிறார் வள்ளுவர்.) அந்த ஆறாம் அறிவைப் பயன்படுத்தித் தன்னடக்கம் என்ற தகுதிநிலையை தனிமனிதர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். அது சாத்தியமாகும் என்றால் போதை மாபியா பொலபொலவென உதிர்ந்து உலர்ந்துவிடும். ஆக, சமூகமயமாக்கப் பட்ட தீமைகளைத் தனிமனித வீரியத்தாலும் கூட்டு முயற்சியாலும் தோற்கடிக்க முடியும் என்பதுதான் நூலாசிரியரின் முடிபு; அதனால்தான் போதை ஆசாமிகளையும் குறிப்பாக மாணவர்களையும் எச்சரிக்கிறார். “நீங்கள் திருந்துங்கள்; சமுதாயம் திருந்தும்” என்பது இக்கட்டுரையின் சாரம்.
இளைஞர்களும் மாணவர்களும் தாமாகத் திருந்த வேண்டும் என்பது மட்டும் போதுமா? மற்ற ஊடகங்களின் பங்களிப்போடுதான் அதை சாத்தியமாக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
அரசியலுக்கு வந்து முதல்மந்திரியாகத் துடிக்கும் பாப்புலர் நடிகர்கள் முதலில் தாங்கள் நடிக்கும் படங்களில் போதையைப் பயன்படுத்துவதையும் வன்முறைக் காட்சிகளையும் நிறுத்த வேண்டும். அதனால் வரும் தீமைகளை எடுத்துரைக்கும்படியான காட்சிகளை வடிவமைக்க வேண்டும். இது போதை ஒழிப்பின் முதல் படி. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகங்களில் முக்கியமானவை அரசு யந்திரமும் பள்ளிக் கூடங்களும். விடாப்பிடியான முறையில் இதைச் செய்தால் நாளைய மன்னர்களாகிய இன்றைய இளைஞர்களை வழிக்குக் கொண்டுவர முடியும் என்று வழிகாட்டுகிறார் ஆசிரியர். போதைக் கலாச்சாரம் வர்க்க முரண்பாட்டைப் பெரிதாக்கிப் போராட்டக் குணத்தை மழுங்கடிப்பதோடு நுகர்வுக் கலாச்சாரத்துக்குப் புது வலிமையைத் தருகிறாது. உலகின் மிக முஇக்கியமான பேசுபொருளைப் பிரதிபலிக்கிறது இக்கட்டுரை.
தமிழ்ப்பாடத்தில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் வாங்கும் பகுதி என்றால் அது இலக்கணம். நூலாசிரியர் இலக்கணப் புரிதலில் நேர்த்தியான ஞானத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை “திரையிசைப் பாடல்களில் அணியிலக்கணம்” என்ற கட்டுரை பதிவிடுகி|றது. எழுத்துக்கும் சொல்லுக்கும் யாப்புக்கும் மட்டுமில்லாமல் வாழ்வதற்கும் இலக்கணம் சொல்கிறது தமிழ் இலக்கண மரபு. அதிலும் குறிப்பாக “அணியிலக்கணம்” பற்றி மணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் பதிவிடுகிறார்.
தொல்காப்பிய இலக்கணப்படி 35 அணிவகைகள் இருக்கின்றன. அவற்றில் தற்குறிப்பேற்றணி, வஞ்சப்புகழ்ச்சியணி, உவமையணி, வேற்றுமையணி, ஐய அணி, முரண் அணி சொற்பின் வருநிலையணி ஆகியவற்றை மட்டும் பதிவிட்டுஅதன் உள்ளோட்டத்தை எளிமையாக விவரிக்கிறார்.. தமிழ் இலக்கணத்தை இத்தனை எளிதாகச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் அரிது. அரிதான ஆசிரியர்களில் கு. மணியும் ஒருவர்.
சங்க இலக்கியப் பனுவல்கள் பாண்டித்தியப் புலவர்களால் ஏட்டுச் சுவடிகளில் பதியப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் பட்டவை. ஆனால் உழைப்பாளி மக்களின் உழைப்புக் களத்தில் உருவான நாட்டுப்புறப் பாடல்கள் சங்க இலக்கியத்துக்கு இணையாகவும் அதைத் தாண்டியும் வலிமையான வாழ்வியல் உள்ளடக்கத்தைப் பெற்று எளிய சொல்லாடலோடு இன்றுவரை உழைப்பாளிகளிடம் புழங்குகின்றன. இலக்கண வகைமைக்குள் கட்டுப்படாத மக்கள் இலக்கியப் பதிவுகள் அவை. அவற்றின் அழகியலும் கூட அணி இலக்கணத்தைத் தாண்டிய அழகுடையவை.
“மூங்கில் இலைமேலே
தேங்கும் பனிநீரே,
கோவை இலைமேலே
கொஞ்சும் பனிநீரே,
பாவை இலைமேலே
படரும் பனிநீரே,
வாழை இலைமேலே
வளரும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே!
இந்தப் பாடலைக்கேட்டு கம்பனும் மயங்கினான் என்றொரு கதையாடல் உண்டு. பனிப்படலத்தின் கோரமான தாக்குதலை தனது சொந்தக் கற்பனை வளத்துடன் கூடிய குரலிசையால் முறியடித்தபடி ஏற்றம் இறாஇக்கும் உழவனின் பாடல் இது. சொற்களின் எளிமையே அழகியலாய் ஊற்றெடுக்கிறது. எந்தப் பாண்டித்தியப் புலவனாலும் இலக்கணம் வகுக்க முடியாத உழைப்பாளியின் இசைவரிகள்.
இப்படியாக சங்ககால விளையாட்டுகள், தாலாட்டு இலக்கியங்கள், சங்ககால ஆடைமுறைகள், பிரபஞ்ச வெளியில் பரந்து கிடக்கும் கோள்கள் என்று பல்வேறுபட்ட செய்திகளை எளிய முறையில் எடுத்துரைக்கிற வரலாற்றுப் பெட்டகமாய் ஒளிவீசுகிறது “பாதை.” அனைத்துக் கட்டுரைகளும் பள்ளி மாணவர்கலுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் உதவக்கூடிய தரவுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த நூலைக் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இணைத்தால் மாணவர்கள் ஆர்வத்தோடு கல்வி கற்க வாய்ப்புக் கிட்டும். தமிழ்நாடு அரசு உயர்கல்வி இயக்குநருக்கு இந்நூலைப் பரிந்துரைப்பது நல்லது.
“இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்கிறது பிங்கல நிகண்டு. அப்படியான மொழித்தாக்கத்தையும் வரலாற்றுத் தாக்கத்தையும் உட்கொண்டிருக்கிறது “பாதை”. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “பாதை” கட்டுரைத் தொகுப்பு (2025) |
| ஆசிரியர்: | நல்லாசிரியர் கு.மணி |
| வெளியீடு: |
உமா நாராயணன் பதிப்பகம், ஆண்டிபட்டி
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 தேனி சீருடையான் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

