கே. என். பணிக்கர் (K. N. Panikkar): இந்தியச் சவால்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி..! | என்.குணசேகரன் எழுதிய அரசியல் கட்டுரை - www.bookday.in

கே. என். பணிக்கர்: இந்தியச் சவால்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி! – என். குணசேகரன்

இந்திய வரலாற்றியலுக்கு மகத்தான பங்களிப்பு அளித்தவர் மறைந்த பேராசிரியர் கே. என். பணிக்கர். அவர் அறிவியல்பூர்வமான தரவுகளைக் கொண்டு வரலாறுகளைப் படைத்தது மட்டுமல்லாது, சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக வரலாற்றைப் பயன்படுத்திய பெருமைக்குரியவர் பேராசிரியர் பணிக்கர்.மார்க்சிய வரலாற்றாய்வு முறையை பண்பாட்டுத் தளங்களுக்கு விரிவுபடுத்தியது அவரது சிறப்பு .

அவரது வாழ்க்கைப் பணிகளில் பிரிக்க முடியாத ஒரு பணியாக வகுப்புவாத எதிர்ப்பு அமைந்தது.இந்திய நாட்டில் கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து வளர்ந்து வந்துள்ள வகுப்புவாதத்தை முழுமையாக ஆய்வு செய்து அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பேராசிரியர் பணிக்கர் உருவாக்கினார். இந்தப் பங்களிப்பிற்காக இந்தியாவின் மதச்சார்பற்ற,ஜனநாயக சக்திகள் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கின்றன.

பணிக்கர் பார்வையில் வகுப்புவாத வளர்ச்சி

“உலகமயமாக்கலும் வகுப்புவாதமும் ஒரே நோக்கங்களைப் பகிர்ந்து, ஒன்று மற்றொன்றை ஊட்டி வளர்க்கும் போக்குகள்” என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியவர் பணிக்கர். இந்த நிர்ணயிப்பு அவர் பரிந்துரைத்த மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கான துவக்கப் புள்ளி .

சந்தைப் பொருளாதாரம்,பொருள் மீதான ஆசைகளை வளர்க்கும் நுகர்வுக் கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அத்தகு ஆசைகள் நிறைவேறாத சூழலில் ஏற்படுகிற ஏக்கம், தவிப்பு ஆகியவற்றின் விளைவாக மத உணர்வுகளும் ,வகுப்புவாதமும் மேலும் வலுப்பெறுகின்றன. தனிநபர் நலன் குறித்த பிரச்சினைகளுக்கு ஆன்மீகத்தில் விடை காண முயலும் முயற்சிகள் அதிகரிக்கின்றன.

இவ்வாறு அந்நியப்பட்டு நிற்கிற தனிநபர் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி கூட்டான செயல்பாட்டிற்கு கொண்டு வருவது கலாச்சார நடவடிக்கைகள்.அவை வெறும் கருத்துப் பிரச்சாரம் மட்டுமல்ல;அவை சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு ,ஆக்கபூர்வமான நடைமுறை செயல்களின் வழியாக மக்களை மதச்சார்பற்றப் பாதையில் ஒன்றுபடுத்துகிறது.

கலாச்சாரம் சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பரவி நிற்கிறது.சமூக அதிகாரம் செலுத்தப்படும் தளமாகவும் அதிகாரத்தை எதிர்க்கும் தளமாகவும் அது விளங்குகிறது. மேலாதிக்கத்தை செலுத்தவும், மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்குமான கருவியாகயும் கலாச்சாரம் உள்ளது என்பது பணிக்கரின் கருத்து.

மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் பண்பாடு முக்கிய அங்கமாக உள்ளது.பண்பாட்டு வடிவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்படுவது போதுமானதல்ல; மக்கள் கவனத்தை தொடர்ச்சியாக ஈர்க்கும் வகையில் அவற்றை முன்னெடுக்க வேண்டும். இதற்கு மக்களோடு நெருக்கமான பிணைப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ள உள்ளூர் மட்ட முன்முயற்சிகள் முக்கியமானவை.

தீக்கதிர் - பேரா.கே.என்.பணிக்கர்: இந்தியச் சவால்களுக்கு மிகச்சிறந்த  வழிகாட்டி! - என்.குணசேகரன்

உள்ளூர்த் தலையீடுகள்

உள்ளூர் மட்டத்தில் பிரச்சனைக்காக ஒன்றுபடுதலும், போராட்ட செயல்பாடுகளும் உள்ளூர் சமூகங்களை உருவாக்கிடும்.இது கலாச்சார நடவடிக்கையின் ஒரு முக்கியமான விளைவு.எடுத்துக்காட்டாக, உள்ளூரில் சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்து பிரச்சார நடவடிக்கைகளும்,மக்கள் திரட்டலும் உள்ளூர் சமூகத்தை உருவாக்கிடும்.

உள்ளூர் சமூகம் என்கிற போது அது ஒரு அமைப்பு அல்ல. அது மக்களின் கூட்டு செயல்பாடு. உள்ளூர் மட்டத்தில் அந்த செயல்பாடு அமைந்திடும். ஆனால் உள்ளூர் சமூகமாக இருந்தாலும் அது தேசியத் தன்மை கொண்டதாக இருக்கும். ஏனெனில் எந்த ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனையும் ஒன்றிய ஆளும் வர்க்க கொள்கைகளோடு இணைந்ததாக உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும்,ஊர்களிலும் எண்ணற்றப் பிரச்சனைகளை முன்வைத்து உள்ளூர் திரட்டல் மேற்கொள்ள வேண்டும். வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்காக உள்ளூர் ஒற்றுமையை ஏற்படுத்துவது வகுப்புவாத மத ரீதியான பிரச்னைகளுக்கான அணிதிரட்டலைத் தடுக்கும் அரணாக அமையும்.

ஒரு பிரச்சனையை கையிலெடுப்பது,ஒருநாள் இயக்கமாக நடத்திய பிறகு அதனைக் கைவிட்டு வேறு பிரச்சனைக்குத் தாவிவிடுவது போன்ற செயல்பாடு வலுவான உள்ளூர் சமூகத்தை கட்டியமைக்கப் பொருத்தமானது அல்ல.தொடர்ச்சியான நீடித்த செயல்பாடாக அமைய வேண்டும். மக்கள் சிந்தனையில் வலுவான மதச்சார்பற்றக் கண்ணோட்டம் வேரூன்றும் வகையில் இந்த செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்

இந்துத்துவ சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்றால் அது வெறும் அரசியல் செயல்பாட்டினால் மட்டுமல்ல; சமூக கலாச்சாரத் தளங்களில் அவர்கள் மேற்கொண்ட தளராத தொடர்ச்சியான செயல்பாட்டினால்தான்.சிறுபான்மையினர் இந்து மத விரோதிகள் என்ற பொய்மையை மையமாக வைத்து மதம் சார்ந்த உணர்வுகளையும் ஆன்மிகத்தையும் மக்கள் உணர்வாக மாற்றும் வேலையை கல்வி,கலாச்சாரம் என பன்முக தளத்தில் பன்னெடுங்காலம் அவர்கள் செய்து வந்தனர்.

அவ்வப்போது,வகுப்புவாதத்தை எதிர்த்த மறுப்பும்,எதிர்ப்பும்,எதிர்வினைகளும் தேவையானதுதான்.ஆனால் அவை வகுப்புவாதத்தை வீழ்த்தப் போதுமானவை அல்ல; உலகமயமாக்கலும், வகுப்புவாதமும் உருவாக்கி சேகரித்து வைத்துள்ள சித்தாந்த,கருத்து நிலைகளை அகற்றிட பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தேவை. நமக்கே உரிய கலாச்சார, பாரம்பரிய மூலங்களை ஆதாரமாகக் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப அவற்றை பயன்படுத்த வேண்டும்;ஆனால் பிற்போக்குப் பெருமிதவாதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.

பணிக்கர் குறிப்பிடுகிற கீழ்க்கண்ட கருத்து இன்றும் பொருத்தமானது;’அன்றாட வாழ்வில் தலையிடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக உணர்வு நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவது கலாச்சார நடவடிக்கை. இது பல கலை வடிவங்களைக் கொண்டு நடத்தப்படும் கலை விழாக்கள் அல்ல; இப்படிக் கூறுவதால் கலை விழாக்கள் கருத்துப் பரிமாற்ற கருவிகளாக பயன்படுத்தலாம் என்பதை மறுக்கவில்லை. இதற்கும் மேலாக அன்றாட வாழ்வில் உள்ளடங்கிய கலாச்சாரத்தை தட்டி எழுப்பக்கூடிய தொடர்ந்து செயலாற்றும் சமூக நடவடிக்கையாகவே கலாச்சார நடவடிக்கையை நாம் பார்க்கிறோம். மக்கள் சமூகத்தில் முற்போக்கு விழுமியங்களை தீவிரப்படுத்த பயன்படும் குறுக்கீடுகள்தான் கலாச்சார நடவடிக்கை.’

வகுப்புவாத எதிர்ப்பு மேற்கொள்கிற மதச்சார்பற்ற சக்திகளின் செயல்பாடுகள் குறித்து விமர்சன ரீதியான பார்வை தேவைப்படுகிறது என்று பணிக்கர் கருதினார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் அமைப்பு ரீதியாக உள்ள ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்வதும்,மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருப்பதும் பொருத்தமானது அல்ல. ஒரு நாள் விவகாரமாக இல்லாமல்,மக்களையும் ஈடுபடுத்தி தொடர்ந்து நீடித்த செயல்பாடாக உள்ளூர் சமூகக் கலாச்சார நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று பணிக்கர் அறிவுறுத்தினார்.

இந்துத்துவ சக்திகள் வகுப்புவாதத் திரட்டலுக்கு எவ்வாறு பல உத்திகளை கடைபிடித்தனர் என்பதை விரிவாக ஆய்வு செய்வதற்கு பணிக்கர், அந்தோனியோ கிராம்சியின் கோட்பாடுகளை ஆய்வுக் கருவிகளாக பயன்படுத்தினார். கிராம்சியின் ‘பொது புத்தி’ கோட்பாடு விமர்சனமற்ற பார்வையுடன் உணர்வைத் தூண்டி சில கருத்துக்களை ஏற்கச் செய்வது; ராமர் கோயில் தகர்க்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது என்கிற வரலாற்றில் ஆதாரம் ஏதும் இல்லாத ஒரு தகவலை பொது புத்தியில் வகுப்புவாத சக்திகள் ஏற்றியது ஒரு எடுத்துக்காட்டு.

அதேபோன்று கிராம்சியின் ‘மேலாதிக்கம்’ என்ற கோட்பாடு.ஆளும் வர்க்கம் கட்டாயப்படுத்தி அல்லது வன்முறையைப் பயன்படுத்தி மட்டுமல்லாது, மக்களின் சம்மதத்தைப் (Consent) பெற்று மேலாதிக்கம் செய்கிறது.எனவே,வகுப்புவாதம் அவ்வாறு மேலாதிக்கத்தை உருவாக்கும்போது, அதை உடைக்க ஒரு ‘மாற்று மேலாதிக்கம்’ தேவை என்று கிராம்சியின் கண்ணோட்டதில் பணிக்கர் வழிகாட்டினார்.

தமிழ்நாட்டிற்கு பணிக்கரின் வழிகாட்டுதல்

தமிழ்நாட்டில் வகுப்புவாத எதிர்ப்பு,கலாச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பணிக்கர் வழிகாட்டினார். 2002ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு விரிவான பயிலரங்கம் நடைபெற்றது. அதில் முழுமையாகக் கலந்து கொண்ட பணிக்கர் வகுப்புவாத வளர்ச்சி ,அதன் வரலாறு,அது செயல்படும் தனமை, மதச்சார்பற்ற சக்திகளின் குறைபாடுகள், மதச்சார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிற வழிமுறைகள் என விரிவான அளவில் அற்புதமான கருத்துரை நிகழ்த்தினார்.

பல விவாதங்கள் நடைபெற்று அவை தொகுக்கப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி செயல்திட்டக் குறிப்பினை உருவாக்கியது. 2006 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அவரோடு சந்திப்பு நடந்தது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தினை மேலும் முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் அளித்தார். இது அல்லாமல் பல சந்தர்ப்பங்களில் கட்டுரைகள், உரைகள் என பல வகைகளில் அவர் பங்கேற்பு இருந்தது.இவ்வாறு தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் அறிவுப்பூர்வமான உதவிகள் செய்தார்.

மதச்சார்பற்ற நடவடிக்கைகள் பற்றிய அவரது வழிகாட்டுதல்கள் இன்றைக்கும் பொருத்தமானவை. மாறியுள்ள சூழலில் அவற்றைப் பொருத்தமாக முன்னெடுப்பது அவருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலியாக அமையும்.

========================================================.

எழுதியவர்:

– என்.குணசேகரன்
மத்தியக்குழு உறுப்பினர் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *