K.R.A. Narasaiah's Endhaiyum Thaayum Book Review By Writer Pavannan. Book Day is Branch of Bharathi Puthakalayam.



சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த இந்தி பிரச்சார சபையின் வெள்ளி விழாவுக்காகவும், தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், பழனி முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவதற்காகவும் 22.01.1946 அன்று காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்தார். சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் மதுரைக்கும், பழனிக்கும் சென்றார். அவர் சென்னைக்குத் திரும்பும் பயணம் 04.02.1946 அன்று தொடங்கியது. வழியில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அவரைக் காண்பதற்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். சில நிலையங்களில் அவர் பொதுமக்களைப் பார்த்து ஒரு சில நிமிடங்கள் உரையாற்றினார். சில நிலையங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் பெட்டியைவிட்டு வெளியே வந்து நின்று கைகுவித்து வணங்கியபடி நின்றுவிட்டுச் சென்றார்.

காந்தியடிகள் பயணம் செய்யும் ரயில் அரியலூர் வழியாக செல்லவிருக்கும் செய்தி எப்படியோ பொதுமக்களிடையில் பரவிவிட்டது. குறிப்பிட்ட நாளில் அரியலூருக்கு அருகிலுள்ள பல கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அந்த நிலையத்தின் முன் திரண்டுவிட்டனர். அப்போது அரியலூர் போர்ட் ஹைஸ்கூலில் தலைமையாசிரியராக இருந்தவருக்கு தம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் காந்தியடிகளைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். மாணவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்தார். அவர் அனைவரையும் ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அழைத்துச் சென்று நிலையத்துக்கு வெளியே இருந்த நிலப்பரப்பில் வரிசையில் அமரவைத்தார்.



ரயில் வரும் சத்தம் கேட்டதுமே, அனைவரும் எழுந்து நின்று வந்தே மாதரம் என்றும் காந்தியடிகள் வாழ்க என்றும் முழக்கமிட்டனர். காந்திஜி ஸ்பெஷல் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ரயில் எஞ்சினின் முன்புறத்தில் காந்தியடிகள் வணங்கியபடி நிற்கும் படம் ஒட்டிய தட்டி கட்டிவைக்கப்பட்டிருந்தது. ரயில் வந்து நின்றதும் மூன்றாம் வகுப்புப் பெட்டியொன்றின் கதவு திறந்தது. முதலில் சில தொண்டர்கள் வெளிப்பட்டு கீழே இறங்கி நின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து காந்தியடிகள் கதவின் கைப்பிடிக்கருகில் கைகுவித்து வணங்கிய கோலத்தில் நின்றார். அங்கிருந்த பொதுமக்களில் பலர் மண்ணில் விழுந்து அத்தெய்வத்தை வணங்கினர். காந்தியடிகள் சில நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்றுக்கொண்டு பெட்டிக்குள் சென்றுவிட்டார்.

அன்று அரியலூர் போர்ட் ஹைஸ்கூல் மாணவர்களில் ஒருவராக ரயில் நிலையத்துக்குச் சென்று காந்தியடிகளை முதன்முதலாகப் பார்த்தவர் கடலோடி நரசய்யா. இன்று அவர் தொண்ணூறு வயதைத் தொட்டுவிட்டவர். அதை காந்தி தரிசனம் என்று குறிப்பிடுகிறார் நரசய்யா. அவர் ஒரிசாவில் பிறந்தவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருடைய தந்தையார் கல்வித்துறையில் ஆய்வாளராக பணியாற்றிய நேர்மையான அதிகாரி. பணியின் காரணமாக ஒரிசா, ஆந்திரம், தமிழகம் என பல இடங்களுக்கு அவர் செல்லவேண்டியிருந்தது. ஆங்கில அரசின் ஊழியர் என்றபோதும் அவர் மனத்துக்குள் தாய்நாட்டை நேசித்தவர். தாய்நாட்டின் விடுதலைக்காக போராடுகிறவர்கள் மீது மதிப்பைக் கொண்டிருந்தவர். பணியின் பொருட்டு அவர் அரியலூரில் தங்கியிருந்த போதுதான் அனைவருக்கும் காந்தியடிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரயில் நிலையத்தில் காந்தியடிகளையும் அவரைக் காண்பதற்காக திரண்டுவந்து நிலையத்தின் முன்னால் நின்றிருந்த மக்கள் கூட்டத்தையும் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுவனான நரசய்யாவின் பிஞ்சு மனத்தில் காந்தியடிகளைப் பற்றிய பல கேள்விகள் எழுந்தன. அன்று இரவு உணவுக்குப் பிறகு தன் அப்பாவிடம் அக்கேள்விகளை முன்வைத்தார். மகனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் அவர் விரிவாகவே பதில் சொன்னார். அடுத்தடுத்த நாள்களில் நரசய்யாவின் மனத்தில் புதுப்புது கேள்விகள் மூண்டெழுந்தன. அவை அனைத்துக்கும் சலிப்பில்லாமல் பதில் சொன்னார் நரசய்யாவின் தந்தையார்.



ஒவ்வொரு நாளும் சிறுவன் நரசய்யாவின் கேள்விப்பட்டியல் வளர்ந்துகொண்டே சென்றது. காந்தியடிகளைப் பற்றி முதன்முதலாக சொல்லத் தொடங்கிய அவருடைய அப்பா நாளடைவில் அவருக்கு இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றையே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லத் தொடங்கினார். அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் நரசய்யாவின் கேள்விகளுக்கு அவருடைய அம்மா பதில் சொன்னார். ஒவ்வொரு நாளும் அப்பாவும் அம்மாவும் சொன்ன விளக்கங்கள் வழியாகவே அவர் நாட்டு நடப்புகள் ஒவ்வொன்றையும் தெரிந்துகொண்டார். வளர்ந்து, இளைஞனான பிறகு தேடித்தேடிப் படித்ததன் வழியாக அவர் மேலும் சில விஷயங்களைத் தெளிவுடன் புரிந்துகொண்டார். செவிவழியாகவும் நூல்களின் வழியாகவும் நேர் அனுபவங்கள் வழியாகவும் தமக்குத் தெரிய வந்த சுதந்திரப் போராட்ட வரலாற்றை அவர் அனுபவக்கட்டுரைகளாக இணைய இதழில் தொடர்ந்து எழுத, அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு இப்போது எந்தையும் தாயும் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

காலவரிசைப்படி சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வதற்காக நரசய்யா இந்த நினைவுக்குறிப்புகளை எழுதவில்லை. மாறாக, சுதந்திரப்போராட்ட காலத்தில் புரிந்துகொள்ள முடியாமலிருந்த சில புதிரான நிகழ்ச்சிகளையொட்டி தன் தந்தையார் அளித்த விளக்கங்களை மட்டுமே தொகுத்து முன்வைத்துள்ளார். மேலும், தன் சொந்த வாசிப்பின் அடிப்படையில் தெரிந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில் அந்த விளக்கத்துக்கு இன்னும் விரிவான வகையில் மறுவிளக்கமளிக்கவும் முயற்சி செய்துள்ளார். அரிய தகவல்களைக் கொண்ட இந்த அம்சங்களே இந்தப் புத்தகத்தை முக்கியத்துவம் நிறைந்ததாக நிலைநிறுத்துகின்றன.

ஒரு தகவல். நிர்வாக வசதிக்காக 1905இல் ஆங்கிலேய அரசு வங்க மாகாணத்தை இரண்டாகப் பிரிக்க முனைந்ததென்றும் அதையொட்டி எழுந்த கடுமையான எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, அது நிறைவேற்றப்பட்டது என்று மட்டுமே நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்தப் புத்தகத்தில் நரசய்யா கூடுதலாக சில தகவல்களைச் சேகரித்து முன்வைத்துள்ளார். அந்தக் காலத்தில் வங்க மாகாணம் ஏறத்தாழ 190000 சதுர மைல்கள் பரப்பைக் கொண்டிருந்தது. பீகாரின் ஒரு பகுதியும் ஒரிசாவின் வடபகுதியும் அசாமின் பெரும்பகுதியும் இணைந்த வங்கப் பகுதியே அந்தக் காலத்தில் வங்க மாகாணம் என அழைக்கப்பட்டது. இப்பகுதிகளில் காங்கிரஸ் நன்றாக வேரூன்றியிருந்தது. அந்தக் கட்சிக்குப் பெருகிவந்த ஆதரவை உடைக்கும்பொருட்டு அப்போது வைசிராயாக இருந்த கர்சன் மனத்தில் உதித்த திட்டமே வங்கப்பிரிவினை. அதற்கு நிர்வாக வசதி என்னும் நிறம் பூசப்பட்டது.



மத அடிப்படையில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனி பகுதிகளை உருவாக்குவதன் வழியே மக்களிடையில் நிலவும் காங்கிரஸ் ஆதரவுப்போக்கை குறைக்க முடியுமென்று வைசிராய் திட்டமிட்டார். பன்மைத்தன்மையை சிதைப்பதன் வழியே இருபிரிவினரிடையேயும் கொஞ்சம் கொஞ்மாக கசப்பை விதைத்து வளர்க்கவும் அவர் விரும்பினார். அதனால், மக்கள் எதிர்ப்பை மீறி 16.10.1905 அன்று அந்த மாகாணத்தை அவருடைய அரசு பிரித்துவிட்டது. ஆயினும் மக்களிடையில் உருவான எதிர்ப்பின் தீவிரத்தை அரசால் தடுக்கமுடியவில்லை. இறக்குமதிப் பொருட்களைப் புறக்கணித்து சுதேசிப் பொருட்களை மட்டுமே ஆதரிக்கவேண்டும் என்ற முடிவை நோக்கி இயக்கம் நகர்ந்தது. பெரும்பாலான மக்களுடைய ஆதரவு இந்த எதிர்ப்பியக்கத்துக்குக் கிடைத்தது. சுதேசிப்பொருள் பயன்பாடு என்னும் கருத்தாக்கம் அக்கணத்தில்தான் உருவானது. இறக்குமதி செய்யப்பட்ட இங்கிலாந்து துணிகளெல்லாம் தெருக்களில் வீசியெறியப்பட்டு தீக்கிரையாகின. ரவீந்திரநாத் தாகூர் ‘அமார்சோனர் பங்களா’ (எமது தங்கமான வங்கம்) என்ற பாட்டொன்றை எழுதி வெளியிட்டார். வங்கப் பிரிவினை நாளன்று மாகாணம் முழுக்க அந்தப் பாடல் முழங்கியது.

இன்னொரு தகவல். தமிழகத்தில் தொடக்க கால சுதந்திரப் போராட்ட முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். நாட்டுப்பற்றின் காரணமாக 20.09.1878 அன்று ஆங்கில மொழியில் இந்து நாளிதழை தொடங்கிய ஆறு பேர்களில் அவரும் ஒருவர். தேசபக்தியை ஊட்டும் வகையில் தமிழில் ஒரு நாளிதழைத் தொடங்கவேண்டும் என்னும் கனவு அவருக்குள் இருந்தது. அப்போது லாலா லஜபதி ராய் இந்தி மொழியில் கேசரி என்னும் பத்திரிகையை நடத்திவந்தார். அதுதான் இந்தியாவில் தோன்றிய முதல் இந்திய மொழிப் பத்திரிகை. அதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு ஐயர் 1881இல் சுதேசமித்திரன் என்னும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் வரும் செய்திகளை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்து சுதேசமித்திரனில் வெளியிடுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். தகுதியான மொழிபெயர்ப்பாளர் அமையாமல் பல ஆண்டுகளாக அவர் சிரமப்பட்டார்.

1904இல் விவேகபானு பத்திரிகை ஆசிரியர் வழியாக அறிமுகமான பாரதியார் அந்தப் பொறுப்பில் அமர்ந்த பிறகே அவருடைய வேலைச்சுமை குறைந்தது. பாரதியாரின் கட்டுரைகளால் சுதேசமித்திரனின் மதிப்பும் உயர்ந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்தப் பத்திரிகையில் வேலை செய்தார் பாரதியார். பிறகு இந்தியா பத்திரிகைக்குச் சென்றுவிட்டார். 1908இல் அரசுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட குற்றத்துக்காக ஐயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் தொழுநோயால் துன்பத்துக்கு ஆளானார். அந்த நிலையிலும் விதவையான தன் மகளுக்கு அவர் மறுமணம் செய்துவைத்தார். 1915இல் சென்னைக்கு காந்தியடிகள் வருகை தந்தபோது ஐயரை நேரில் சென்று சந்தித்து உரையாடினார். அவர் உடலிலிருந்த தொழுநோய்ப்புண்ணிலிருந்து வடிந்த நீரை தன் கையாலேயே சுத்தப்படுத்தி துடைத்துவிட்டு கட்டு கட்டிவிட்டார் காந்தியடிகள்.



மற்றொரு தகவல். 1919இல் மார்ச் மாதத்தில் ஆங்கில அரசு ரெளலட் சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின்படி சந்தேகத்தின் அடிப்படையில் எவரை வேண்டுமானாலும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அதை எதிர்த்து யாரும் அப்பீல் செய்யமுடியாது. அதை எதிர்த்து ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்தும் முயற்சியில் காந்தியடிகள் ஈடுபட்டிருந்தார். தற்செயலாக அச்சமயத்தில் 11.04.1919 அன்று மார்செல்லா ஷெர்வுட் என்னும் ஆங்கிலப் பெண்மணியை வழிமறித்த சில தீவிரவாதிகள் தாக்கத் தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த இடத்தின் பக்கமாக வந்த வேறு சில இளைஞர்கள் அத்தீவிரவாதிகளை விரட்டிவிட்டு, அந்தப் பெண்மணியைக் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசு, அச்சம்பவத்தை முன்வைத்து கடுமையாக எதிர்வினை புரிய நினைத்தது. பொதுமக்களை அச்சுறுத்த அந்நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தது. அந்தப் பெண்மணியைத் தாக்கிய தெருவைக் கடந்து செல்லும் இந்தியர்கள் அனைவரும் தரையில் முட்டி போட்டு முழங்கைகளை ஊன்றி தவழ்ந்து செல்லவேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவில் கையெழுத்திட்டவர் ஜெனரல் டயர். அந்த இடத்தின் சுற்றுவட்டாரத்தில் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. மக்கள் அதற்குக் கட்டுப்பட்டனர். அப்போதும் ஜெனரலின் சீற்றம் அடங்கவில்லை.

இரு தினங்களுக்குப் பிறகு பைசாகி எனப்படும் புத்தாண்டு விழா அப்பகுதியெங்கும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி ஜாலியன்வாலாபாக் என்னுமிடத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அந்தச் சந்திப்பை இந்தியர்களின் சதித்திட்ட முயற்சி என தவறாகப் புரிந்துகொண்ட ஜெனரல் விசாரணை எதுவுமின்றி கூட்டத்தினரை நோக்கி சுடுமாறு இராணுவத்துக்கு கட்டளையிட்டார். ஏறத்தாழ பத்து நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டயர் செய்த அநியாயத்தைவிட, அந்த நடவடிக்கையைப் பாராட்டும் விதமாக நடந்துகொண்ட ஆங்கிலேயர்களின் செயல்கள் பொதுமக்களிடையில் அதிருப்தியை தோற்றுவித்தது. சர்ச்சில் அவரைக் காப்பாற்றுவதில் முனைப்பு காட்டினார். பேருக்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு டயருக்குச் சாதகமான முடிவையே எடுத்தது. முசோரியில் ஒரு ஆங்கில மாதர் சங்கம் ஒரு வீரவாளையும் ஏறத்தாழ இருபதாயிரம் ரூபாயைத் திரட்டி அன்பளிப்புப் பணமுடிப்பாகவும் டயருக்கு அளித்துப் பாராட்டி மகிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசைப் பற்றிய கசப்புணர்வையே வளர்த்தன.

மற்றொரு தகவல். தண்டி கடற்கரையில் உப்பெடுத்த காந்தியடிகள் “ஒரு சத்தியாகிரகியின் கையில் இருக்கிற உப்பு இந்தத் தேசத்தின் கெளரவம். நம் உயிரே போனாலும் நம் கை தாழ்ந்துவிடக் கூடாது” என்று அறிவித்தார். நாடெங்கும் அவருக்கு ஆதரவு பெருகியது. அப்போராட்டத்தைப்பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்காக உலகத்தின் பல பகுதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் அங்கே குவிந்திருந்தனர். சில நாட்களுக்குப் பிறகு காந்தியடிகள் தாரசான உப்பு நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை அறிவித்தார். அவர் தாரசானாவை நோக்கி தன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். ஆனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தியாப்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்தக் குழுவினர் காவலர்களின் தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்தனர்.



அதையடுத்து கஸ்தூர்பாவின் தலைமையில் ஒரு குழு முன்னோக்கிச் சென்றது. அவர்களும் தாக்கப்பட்டு விழுந்தனர். மறுகணமே சரோஜினி நாயுடுவின் தலைமையில் ஒரு குழு சென்றது. அவர்களும் தாக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவொரு குழுவாக முன்னேறி வருவதும் அடிபட்டு விழுவதும் தொடர்ந்தபடி இருந்தது. அமைதியான முறையில் நிகழ்ந்த அப்போராட்டம் சுற்றி நின்றிருந்தவர்களின் மனசாட்சியை அசைத்தது. போராட்ட நிகழ்ச்சிகளை சிறிது தொலைவில் நின்றபடி கவனித்த வெப் மில்லர் என்னும் அமெரிக்கப் பத்திரிகையாளர் நம்பமுடியாமல் அச்சம்பவத்தைப் பார்த்தார். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அடிபட்டு சாய்ந்தார்கள்.

ஆனால் ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட எவரும் வெளிப்படுத்தவில்லை. முற்றிலும் அகிம்சை வழியில் அப்போராட்டம் நடைபெற்றது. உணர்ச்சிவசப்பட்ட அந்தப் பத்திரிகையாளர் அங்கு நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் நீளமான கட்டுரையாக எழுதி தந்தி வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தார். அகிம்சைப் போராட்டம் பற்றிய மிகச்சிறந்த ஆவணமாக இன்றளவும் அக்கட்டுரை கருதப்படுகிறது.

நாம் அறியாத பல தகவல்களையும் அரைகுறையாகத் தெரிந்துவைத்திருக்கும் பல தகவல்களின் உண்மைத் தன்மையையும் நரசய்யா விரிவாகவே தன் அனுபவக் கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார். சம்பாரண் அவுரி விவசாயிகள் போராட்ட்த்திலும், அகமதாபாத் நெசவாளர்கள் போராட்டத்திலும் காந்தியடிகளின் பங்களிப்பப்பற்றிய உண்மைகளை சில கட்டுரைகள் விரிவாகவே முன்வைக்கின்றன. மேலும் நேதாஜியின் போர்த்தந்திரம், கப்பற்படைப்புரட்சி, நாட்டை இரண்டாகப் பிரிப்பதில் நிகழும் குழப்பங்கள், நாடெங்கும் நிகழும் மதக்கலவரங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காஷ்மீர் பிரச்சினை, சமஸ்தானங்களின் பிணக்குப் போக்கு, அவர்கள் அனைவரையும் இணங்கவைக்க அரசு எடுக்கும் முயற்சிகள் என ஒவ்வொரு கட்டுரையிலும் புதிதுபுதிதாக பல தகவல்களை நரசய்யா பதிவு செய்துள்ளார்.

இந்தப் புத்தகத்தின் மிகச்சிறந்த அம்சமே நூல் முழுதும் ஒரு தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நிகழும் உரையாடல்களே. கூர்மையான கேள்விகளால் தன் சந்தேகத்தை முன்வைக்கும் பிள்ளைகளும் தெளிவை நோக்கி அப்பிள்ளைகளை அழைத்துச்செல்லும் தந்தையும் நூல் முழுக்க காட்சியளிக்கிறார்கள். அவர்களிடையில் நிகழும் உரையாடல்களாக புத்தகம் தொடங்கினாலும், மெல்ல மெல்ல ஏதோ ஒரு தருணத்தில் நம்மை நோக்கி நிகழும் உரையாடல்களாக அவை மாறிவிடுகின்றன. மானசிகமாக நாமும் ஒரு பாத்திரமாக அவர்களிடையில் அமர்ந்துவிடுகிறோம். அப்போது நிகழும் ரசவாதத்தால் நம்மையறியாமலேயே நமக்குள் ஒரு கடமையுணர்ச்சி உருவாவதை நம்மால் உணரமுடிகிறது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் அர்ப்பணிப்புணர்வைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது முதல் கடமை. அவ்வுண்மைகளை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது இரண்டாவது கடமை.

(எந்தையும் தாயும் – நரசய்யா. பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 14. விலை. ரூ.230 )

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



4 thoughts on “இரண்டு கடமைகள் – பாவண்ணன்”
  1. இது ஒரு வித்தியாசமான புத்தகத்தகம்தான்.
    வரலாற்றில் இணைய புதிய தகவல்கள். வாழ்த்துக்கள்!

  2. நூலும், நூற்கண்டும் (விமர்சனம்) அருமையாக அமர்ந்துள்ளன. திரு. நரசய்யா அவர்கள் கூறிய நிகழ்வுகளுக்கு, நானும் வெவ்வேரு இடங்களில் பாத்திரமானேன். நாங்கள் இருவரும் சமவயது நண்பர்கள். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பின் அவருடன் உரையாடும் தருணம் நாடுவேன். எனக்கு முதலில் அறிவிக்கப்பட்ட தேசபக்தர் விட்டல் பாய் படேல். 1942 ஆகஸ்ட்டில் நானும் மஹாத்மாவுடன் ரிமோட் உண்ணாவிரதம் இருந்த்து நினைவுக்கு வருகிறது, இதை படித்தபின்.
    இன்னம்பூரான்

  3. I am Narasiah. It was very satisfying to read this review. My thanks to the reviewer who I do not know personally.

  4. மிகச் சிறப்பான மதிப்புரை. மிகச் சிறந்த பண்பாளரும், ஆகச்சிறந்த அறிஞருமான நரசய்யா ஐயா இத்துணை பேறுக்கும் தகுதியுடையவர் என்பதை எம் போன்று அவரிடம் பழகும் வாய்ப்பு பெற்ற அனைவரும் அறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *