“கியூபாவின் புரட்சிப் பெண்கள்” – போர்க்களத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் நின்ற வரலாறு
சிந்தன் புக்ஸ் வெளியீடாக வந்துள்ள, எழுத்தாளர் க. சு. சமந்தா எழுதிய “கியூபாவின் புரட்சிப் பெண்கள்” நூல், ஒரு நாட்டின் அரசியல் விடுதலையில் பெண்களின் பங்கு எவ்வளவு வீரியமானது என்பதற்கான ஒரு வரலாற்று ஆவணம்.
கியூபப் புரட்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகியோரின் முகங்கள்தான். ஆனால், அந்தப் புரட்சியின் வேர்களாகவும், துப்பாக்கி ஏந்திய வீரர்களாகவும், அறிவார்ந்த திட்டமிடுபவர்களாகவும் இருந்த பெண்கள் பலரை வரலாறு பெரும்பாலும் கவனிக்கத் தவறிவிடுகிறது. இந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியே எழுத்தாளர் க. சு. சமந்தாவின் இந்த நூல். கியூபப் புரட்சியில் முன்னின்ற முக்கியப் பெண் ஆளுமைகளின் வாழ்வையும், போராட்டத்தையும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
நூலில் இடம்பெற்றுள்ள முக்கிய ஆளுமைகள்:
சீலியா சஞ்சசெஸ்: புரட்சியின் இதயமாகச் செயல்பட்டவர்.
வில்மா எஸ்பின்: பெண்களின் உரிமைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் போராடியவர்.
ஹைடி சாந்தமரியா: மொன்கடா தாக்குதலில் பங்கேற்ற தீரம் மிக்கவர்.
மெல்பா ஹெர்னாண்டஸ்: சட்ட வல்லுநராகவும் போராளியாகவும் திகழ்ந்தவர்.
இவர்கள் போன்ற 14 பெண் போராளிகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த நூல்.
கியூபா மற்றும் இந்தியாவில் பாலின சமத்துவம் நிலை குறித்து மிகவும் விரிவாக அலசுகிறது இந்த நூல். புரட்சியின் மூலம் கியூபா பெண்கள் சம உரிமைகள், சம வாய்ப்புகள் பெற்று பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள். பாலின அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளும், ஆணாதிக்க போக்கும் இன்னும் முற்றிலும் களையப்படவில்லை. ஆனாலும் பல வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பாலின சமத்துவத்தில் கியூபா முன்னிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
உலக அளவில் இந்தியாவில்தான் வரதட்சணை கொடுமையால் ஏற்படும் இறப்புகள் அதிகமாக உள்ளன. வரதட்சணை சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் இது தொடர்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும். அது போன்று பெண்கள் கல்வி பெறுவதில் பெரும் பின்னடைவு இந்தியாவில் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இந்தியாவில் சாதி மத பாகுபாடுகளைக் கடந்து செய்யப்படும் கலப்பு திருமணங்களும் காதல் திருமணங்களும் சமூகத்தால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை பல இடங்களில் ஆவணக் கொலைகள் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் தங்களுக்கு சௌகரியமான துணிமணிகளை அணியும் சுதந்திரம் கூட இல்லை என்பதே உண்மை.
பெண்களின் அரசியல் பங்கேற்பு உலக தரவரிசையில் 192 நாடுகளில் கியூபா இரண்டாம் இடத்தைப் பெற்று உள்ளது இந்தியா 149 வது இடத்தில் உள்ளது.
கியூபாவுடன் ஒப்பிடும்போது இந்தியா பாலின சமத்துவமின்மையும் பாலின பாகுபாடும் மிகுந்த நாடாகவே உள்ளது. இந்தியாவில் பெண் விடுதலையும் பாலின சமத்துவமும் நெருங்க முடியாத கனவுகளாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமையல், வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு என இன்னும் பல பாரங்களை முதுகில் இந்திய பெண்கள் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய எந்த சுமையும் இல்லாமலேயே இன்றைய ஆண் சமூகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட சமூக அநீதியை எல்லோரும் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா?
ஆண்கள் ஒரு நாளில் உழைப்பில் ஈடுபடும் நேரம் என்பது 11 மணி நேரமாகவும், பெண்கள் உழைப்பில் ஈடுபடும் நேரம் 14 மணி நேரமாகவும் உள்ளது. குறிப்பாக பெண்கள் ஊதியமற்ற வேலை செய்வதே அதிகம். இதன் மூலம் பெண்கள் பொருளாதார தற்சார்பு இல்லாமல் ஆண்களை சார்ந்து வாழும் நிலை உள்ளது என்பதை பல்வேறு வரலாற்று தகவல்களோடு இந் நூலில் நூலாசிரியர் மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.
இந்த நூல் வெறும் ‘வாழ்க்கை வரலாறு’ அல்ல; மாறாக, ஒரு ஆணாதிக்கச் சமூகம் எப்படிப் புரட்சியின் மூலம் பெண்களை அங்கீகரிக்கும் சமூகமாக மாறியது என்பதை விளக்குகிறது. போர்க்களத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் நின்ற விதத்தை ஆசிரியர் மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளார்.
எழுத்தாளர் க. சு. சமந்தா எழுத்து நடை மிக எளிமையாகவும், வாசிப்பவரை அந்தப் போராட்டக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் விதத்திலும் உள்ளது. குறிப்பாக, மொன்கடா சிறையில் பெண்கள் சந்தித்த சித்திரவதைகளை விவரிக்கும் இடங்கள் மனதை உலுக்கக்கூடியவை.
புரட்சியின் போது இருந்த அரசியல் சூழல், பாடிஸ்டாவின் சர்வாதிகாரம் மற்றும் புரட்சிக்குப் பிந்தைய கியூபாவில் பெண்களின் நிலை ஆகியவற்றைத் தரவுகளுடன் ஆசிரியர் விளக்கியிருப்பது நூலின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
“கியூபாவின் புரட்சிப் பெண்கள்” நூல் இன்றைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமான ஒன்று. “பெண்கள் மென்மையானவர்கள்” என்ற பொதுப்புத்தியை உடைத்து, துப்பாக்கி ஏந்தி காடுகளில் மறைந்து வாழ்ந்து ஒரு வல்லரசுக்கு எதிராகப் போரிட்ட அந்தப் பெண்களின் கதைகள், இன்றைய தலைமுறைப் பெண்களுக்குப் பெரும் ஊக்கம் அளிப்பவை.
சிந்தன் புக்ஸ் இத்தகைய உலகளாவிய போராட்ட வரலாறுகளைத் தமிழில் கொண்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரியது.
அரசியல் ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மற்றும் உலக வரலாறு குறித்து அறியத் துடிக்கும் மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “கியூபாவின் புரட்சிப் பெண்கள்” |
| ஆசிரியர்: | க.சு.சமந்தா |
| வெளியீடு: | சிந்தன் புக்ஸ் சென்னை – 600014 9445123164 |
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 MJ. பிரபாகர் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

