க.சிவசங்கர் எழுதிய "பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்" புத்தகம் | K. Sivasankar's Podhuvudamai Kaadum Poradum Kakkaikalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

க.சிவசங்கர் எழுதிய “பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்” – நூல் அறிமுகம்

“பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்” – ஒரு சிறு அறிமுகம்.

இந்த நூலினைத் தன்னுடைய முதல் புத்தகமாக இளம் எழுத்தாளர் தோழர்.சிவசங்கர் எழுதியுள்ளார். “கதை வடிவில் மார்க்சியம்” என்ற அடைமொழியுடன் மார்க்சியத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவில் எழுதி இருப்பது இப்புத்தகத்தின் சிறப்பாக இருக்கிறது.

காக்கை, நரி, மான், கரடி, முயல் என்று பொதுவுடைமைக்காட்டில் இருந்து கதை துவங்குகிறது. காட்டில் அனைத்து மிருகங்களும் வாழ்ந்து வந்தாலும் உண்பதற்கு இரைகளை இணைந்து தேடின. காக்கைதான் முதன் முதலில் காடுகளில் நெருப்பை உருவாக்கி உற்பத்திமுறையை உருவாக்குகிறது. பின்பு பாட்டியுடன் வடைகள் சுடுவதற்கு உதவியாக சென்று காக்கைகள் மரக்குச்சிகளை கொண்டு வந்தது, அதற்கு பாட்டி வடைகளைப் பகிர்ந்து கொடுத்து பொதுவுடைமை காடு இயங்குகிறது.

அடுத்ததாக நரியின் வருகை வந்ததும், அதிகமான உற்பத்தி ஏற்பட்டு உபரி உருவாகிறது. பின்பு பாட்டியின் ஆதிக்கம் காடுகள் முழுவதும் நிரம்பியது. பொதுவுடமை சமூகம், அடிமை வர்க்கமாக, அடிமை – உடைமை வர்க்கமாக மாறியது. காடுகள் முழுவதும் பாட்டியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. முயல்கள் வேகமாக செல்லும் திறமைகள் இருப்பதால் வடைகளை தூரமாக கொண்டு சென்று விற்க பாட்டி வேலைக்கு தேர்ந்தெடுக்கிறாள். வடைகளின் உபரி உற்பத்தி மூலம் பாட்டி தன் இலாபத்தை அதிகரித்துக் கொள்கிறாள். பொதுவுடைமை சமூகத்தில் இருந்து தனியுடைமை சமூகத்திற்கு காடு மெல்ல மெல்ல மாறியது. ஒரு நாள் முயலுக்கு ஏற்பட்ட பாதிப்பை பார்த்துக் கொண்டிருந்த லெனி என்னும் காக்கை, காட்டில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் அனைவரையும் அமைப்பாக திரட்ட முடிவு செய்து தொழிற்சங்கத்தை உருவாக்கி போராடவும் துவங்கியது.

காட்டில் பெரும்பான்மையான இடங்கள் பாட்டி கைகளில் இருப்பதாலும், மாற்றங்களின் காரணமாக குச்சிகளின் தேவைகளும் நாளுக்கு நாள் குறைந்தே இருந்தது. புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் காடுகளில் குறைந்த கூலிக்கு வேலைக்கு காக்கைகள் வரத் தொடங்கியது. ஒரு பக்கம் நிறைய இலாபத்தை ஈட்டும் பாட்டியும், மறுபக்கம் வேலையை இழக்கும் காக்கைகள் என்று மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அழகாக எழுத்தாளர் இந்நூலில் எடுத்துரைக்கிறார்.

புரட்சிப்படையின் தலைவனாக லெனி என்னும் காக்கை உருவாகிறது. அதேபோல உழைப்புக்கும், உழைப்பும் சக்திக்கும் உள்ள வித்தியாசம், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி கருவிகளின் உருவாக்கமும், வளர்ச்சியும் போன்ற முக்கிய மார்க்சிய கூறுகள் குறித்து கரடி மற்றும் நரியின் கேள்விகளுக்கு லெனி காக்கையின் வடிவில் விளக்கம் கொடுத்து வாசகர்களுக்கு கடத்தி விடுகிறார் ஆசிரியர். காடுகளில் எப்படி வடைகள் உருவாகின? பின்பு எப்படி அவை இலாப நோக்கில் பாட்டியால் கொண்டு செல்லப்பட்டன? மனிதர்கள் வாங்கும் திறன் குறைந்ததால் தொழிற்சாலைகள் மூடும் சூழல் உருவானது, கடைசியாக தொழிலாளி வர்க்கம் ஒன்றுசேர்ந்து புரட்சிப்படை உருவாக்கி பாட்டியை வீழ்த்துகிறது என்பதாக கதையின் ஓட்டத்தில் எழுத்தாளர் இந்நூலில் குறிப்பிடுகிறார்.

க.சிவசங்கர் எழுதிய "பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்" புத்தகம் | K. Sivasankar's Podhuvudamai Kaadum Poradum Kakkaikalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

அதே போல உழைப்பிற்கும் வேலைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஜோ என்ற முயலிடம் கூறும் இடத்தில், “ஒரு புதியப் பொருளை உற்பத்தி செய்வதுதான் உழைப்பு. எல்லா வேலைகளும் உழைப்பில்லை. ஆனால் எல்லா உழைப்புகளும் வேலைகள் தான்” என்று லெனி காக்கை கூறுகிற இடம் சிறப்பு. காடுகளில் ஆலையின் சீரமைப்பு குறித்து லெனி பேசும்போது உயிருள்ள உழைப்பு, உயிரற்ற உழைப்பு இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி, முதலாளித்துவ சுரண்டல் முறை விளக்கப்படுகிறது.

மிகவும் எளிதான முறையில் கச்சாப் பொருட்கள், துணைப்பொருட்கள், கூலி இவற்றை இணைத்து வடைகளோடு ஒப்பிட்டு முதலாளித்துவத்தில் இலாபம் எங்கு செல்கிறது?.., அதே சமயம் சோசலிச அமைப்பில் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்திற்கு அந்த இலாபம் எப்படி செல்கிறது என்று லெனி கூறுவது போல் எழுத்தாளர் புத்தகத்தில் விளக்குகிறார். உற்பத்தியில் கிடைக்கும் உபரிமதிப்பே இலாபம் ஆகிறது. அந்த உற்பத்தியின் பலன் உழைப்பவருக்கே சென்றடைய வேண்டும் என்று இந்நூல் சொல்கிறது. கடவுளின் பிறந்த கதையை பேசும் லெனி, எல்லா கடவுள்களையும், உணர்வுகளையும் மதிக்க கற்றுக்கொடுத்து, அதில் இருந்து எப்படி விலகிச் செல்ல வேண்டும் என்ற கருத்தையும் அழுத்தமாக பேசியிருக்கிறது.

காட்டின் வடை தொழிற்சாலை பாட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்டு பாட்டாளிகளின் தலைமையில் துவங்கப்பட்டு உற்பத்தியும் துவங்குகிறது. அங்கு சமூக நிதிக்காக உழைப்பின் ஒரு பங்கினை அனைவரும் வழங்க சம்மதம் தெரிவித்து வழங்குகிறார்கள். தன் உழைப்பின் ஒரு பங்கினை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாட்டாளி வர்க்கம் பங்களிப்பு செய்ததாக இந்நூல் குறிப்பிடுகிறது.

புத்தகத்தில் நிறைய இடங்களில் லெனி என்னும் காக்கையும், ஜோ என்ற முயலும் பேசிக்கொண்டே சென்று, மார்க்சியம் குறித்த சொற்களுடன் இணைந்து பயணம் செய்கிறது. பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம், இயக்கவியல், உயிர் உருவான கதைகள், சுழலேனி வகை மேல்நோக்கிய வளர்ச்சி, முரண்பாடுகள் தான் மாற்றத்தின் காரணம், நிலை மறுப்பின் நிலை மறுப்பு, மிகை உழைப்பு நலம் மறுப்பே, அளவு மாற்றம், பண்பு மாற்றம் என்ற மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படையாகக் கொண்டு கரடியாரிடம், நரியாரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் கருத்துகளும் புத்தகத்தில் உள்ளது. புதிய தொழில்நுட்பத்தை காடுகளில் லெனி அறிமுகப்படுத்திய போது ஏற்படும் பிரச்சனைகள், அதை தீர்ப்பது எவ்வாறு என்ற கருத்துகளை லெனி முன் வைக்கிறது. புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை முதாளித்துவ சமூக அமைப்பு எவ்வாறு அணுகும், அதையே சோசலிச சமூக அமைப்பு எப்படி பார்க்கும் என்ற கேள்விக்கு பதிலும் இங்கு கிடைக்கிறது.

ஒரு கட்டத்தில் லெனி காக்கைக்குப் பிறகு ஜோ என்ற முயல் பொதுவுடைமைக் காடுகளை வழிநடத்துகிறது. பணம் உருவான கதைகள் குறித்து பேசும்போது பண்டமாற்றுமுறை, தங்கம் எப்படி பரிவர்த்தனைக்கான பொருளாக மாறியது? ஓய்வும், உறக்கமும் ஒன்றா?.. என்ற கேள்விக்கான பதில்களாக ஜோவும் நிறைய மார்க்சியம் குறித்து பேசுவதாக இருக்கிறது.

சோசலிச சமூகத்தில் இருந்து கம்யூனிச சமூக உருவாக்கம் எவ்வாறு தொடங்கும் என்ற கேள்விக்கு பதிலாக பொதுவுடைமைக் காடுகளில் கம்யூனிச சமூகத்தின் நடைமுறைகளை காட்சிப்படுத்தி கடைசியாக அதை ஜோ சொல்வதுபோல் எழுத்தாளர் முடித்திருக்கிறார். மொத்தத்தில் அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது என்று ஜோ அடுத்தடுத்த பொதுவுடைமைக் காடுகளுக்கு பயணங்கள் செல்வதுபோல் இந்நூல் முடிகிறது.

மார்க்சியம் மூலதனம் குறித்த சில நூல்களை நான் படித்திருக்கிறேன். அது மிகவும் கடுமையான வார்த்தைகள் நிறைந்து இருக்கும். படிப்பதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் இந்நூல் மார்க்சிய கருத்துகளோடு உரையாடி, அதற்கு உதாரணமாக எளிதாக விலங்குகளோடும், காடுகளோடும் ஒப்பிட்டு கதை வடிவில் எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவில் எழுதி இருப்பதுதான் எழுத்தாளர் தோழர்.சிவசங்கரின் அருமையான முயற்சியாக நான் பார்க்கிறேன்.

கடைசியாக லெனி என்ற காக்கை லெனினாகவும், ஜோ என்ற முயல் ஸ்டாலினாகவும், படிக்கும்போது கதையை சொல்வது காரல் மார்க்ஸாகவும் என் மனதில் தோன்றியதாக நான் நினைக்கிறேன். எல்லோரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகமாக இருக்கிறது. மார்க்சியம் குறித்த எளிய வரலாறாக அமைகிறது.

தோழர்.சிவசங்கருக்கு அன்பும் நன்றியும்.

*சோசலிசம் பரவட்டும், கம்யூனிசம் மலரட்டும்*

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்
ஆசிரியர்: க.சிவசங்கர்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை: ₹.110
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 சு.வினோத்குமார்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *