சிறுகதை: ஆரா – க. வீரமணிஆரா என்கிற ஆராவதி அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரின் சென்டர் ஆப் அட்ராக்சன், பம்பரம் போல் சுறுசுறுப்பாய் வளையவரும் சேல்ஸ் கேர்ள், கஸ்டமர் சர்வீஸில் அபாரம், எல்லா கஸ்டமர்களுக்கும் ஆராவை ரொம்ப பிடிக்கும், மொழி தெரியாத ஹிந்திகாரர்கள் கூட ஆராஜி ஆராஜி என கொண்டாடுவார்கள் அந்தளவுக்கு ஆரா பிரபலம்.

ஒருநாள் நான் கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டு பெரிய லிஸ்டுடன் படிக்க முடியாமல் தவித்தபோது ஆராதான் லிஸ்டை வாங்கி எல்லா சாமான்களையும் எடுத்து பில் போட்டு என் வண்டியில் கொண்டு வந்துவைத்து கொடுத்தாள் அன்று முதல் ஆராதான் எனக்கு மளிகை சாமான் காய்கறிகள் வாங்குவதில் பெரும் உதவி.

கட்டை பையையும், துண்டு சீட்டையும் கொடுத்து விட்டால் போதும், கடை முதலாளியுடன் பேசிகொண்டிருக்கும் நேரத்தில் எல்லா பொருளையும் எடுத்து பில் போட்டு விடுவாள். என் எல்லா விபரங்களும் அவளுக்கு தெரியும், எனக்கு எந்த மாதிரி வெள்ளரிக்காய் பிடிக்கும் , வாழைப்பழம் எந்த பக்குவத்தில் வாங்குவேன் , என் பேத்தி பெயர், என் ஏடிஎம் கார்டு பின்நம்பர், முதற் கொண்டு அவளுக்கு அத்துப்படி .

ஆரா என்ற பெயரே ரொம்ப வித்யாசமாக இருந்தது. ஒரு முறை ஆரா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா என்று அவளிடம் கேட்டேன், தெரியாது சார் , எங்க மாமா ஆராவதின்னு பெயர் வச்சிட்டாங்க என்றாள்.

ஆரா என்றால் மிக பெரிய “பிரபஞ்ச சக்தி” என்று அவள் பெயர் விளக்கம் கொடுத்தேன். எங்கே சார், அந்த மாதிரி சக்தியெல்லாம் இருந்தா நான் ஏன் சார் இங்க வந்து புளி உருட்டனும் என்று சிரித்தாள்.

மற்றபடி ஆராவைப் பற்றி எனக்கு பர்சனலாக எதுவும் தெரியாது அதையெல்லாம் கேட்டுப்பெற அங்கு நேரமும் இல்லை, அவள் பெரிதாய் விருப்பம் காட்டுவதுமில்லை .

ஒருநாள் காலையில் நான் கடைக்குப்போகும் போது அவள் வயதான ஒருவரின் பைக்கில் வந்து இறங்கினாள் நான் அவளிடம் பையையும் துண்டுச்சீட்டையும் கொடுத்துவிட்டு நலம் விசாரித்தேன், வண்டியில் வந்து கொண்டுவிட்டது உன் அப்பாவா என்று கேட்டேன், அப்பா இல்லை என்று சொன்னாள், அப்பா இல்லையா? என்று மறுபடியும் கேட்டேன், திடீரென்று அவளுக்கு கோவம் வந்துவிட்டது. இதுவரை பார்க்காத ஆராவை அன்று பார்த்தேன், அதான் நான் அப்பா இல்லைன்னு சொல்றேன்ல சார், விடுங்களேன் என்று சத்தமாக சொன்னாள், வயசானவரா தெரிஞ்சாரு, உங்க அப்பாவா இருக்குமான்னு கேட்டம்மா என்று நான் சொல்லி முடிப்பதற்குள் மறுபடியும் வெடித்தாள், வயசானவங்க எல்லாம் என் அப்பாவா ? உங்களுக்கும் தான் வயசு ஆயிடுச்சு நீங்க எனக்கு அப்பாவா? என்று பட படவென பொறிந்து தள்ளிவிட்டாள், எனக்கு எதுவுமே புரியவில்லை.

கூடவேலை செய்யும் மற்ற பெண்களும் திகைத்து நின்றார்கள், எனக்கு மிகவும் தர்மசங்கடமாக போய்விட்டது. நான் அமைதியாக சேரில் அமர்ந்துவிட்டேன், கடகடவென்று என் பொருள்களை எடுத்துக்கொடுத்து விட்டாள், முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அவள் நடந்து கொண்டாள். எனக்கு பெரும் கோபம் வந்துவிட்டது, ஈகோ பொத்துக்கொண்டு நின்றது, ஒரு சாதாரண சேல்ஸ் கேள் என்னை இப்படி பேசிவிட்டாளே, நான் எதுவும் தப்பாக கூட கேட்கவில்லையே ? ஏன் இப்படிநடந்து கொண்டாள். ஒரு மகளை போல் நினைத்தோமே, பழகினோமே ? உன் அப்பவா என்று கேட்டது தப்பா ? என்று அவள் மீது கடும் கோபம் அதிகரித்தது.அடுத்த முறை கடைக்கு போன போது அவள் என்னிடமிருந்து கட்டை பையையும் துண்டுச்சீட்டையும் வாங்க கை நீட்டினாள். நான் அவள் முகத்தை கூட பார்க்காமல் அவளை நிராகரித்து வேறு ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டேன். ஆரா அப்போதும் எந்த சலனமும் இல்லாமல் திரும்பிப்போய்விட்டாள்.
இதுபோல் தொடர்ந்து நடந்தது நான் அந்தக்கடையில் இருக்கும் வரை ஆரா என் கண்ணில் தென்படுவதில்லை, ஆரா மீதுள்ள கோபம் எனக்கு போகவில்லை.
இப்படியாக நாட்கள் நகர்ந்தன, ஒருநாள் முதலாளியின் முன் நின்று கொண்டு அவளுடைய சம்பள கணக்கு வழக்குகளைப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தாள் மற்ற எல்லா பணிப்பெண்களும் கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தார்கள், விசாரித்ததில் ஆரா வேலையை விடுகிறாள், அவள் சொந்த ஊருக்கு போகிறாள் என்றார்கள்.

அப்போதும் எனக்கு ஆரா மீதான கோபம் தீரவில்லை, போகட்டும் ஆரா இல்லையென்றால் மீரா, கடை என்ன இடிந்தா போய் விடப்போகிறது? என்று நினைத்துக் கொண்டேன்.

ஆரா முதலாளியை விட்டு நகர்ந்து கண்ணீரைத்துடைத்துக் கொண்டாள்.

நான் முதலாளி முன் போய் அமர்ந்தேன். ஆரா மாதிரி ஒரு ஸ்டாப் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் சார், என் சொந்த மகளே போறமாதிரி எனக்கு ஒருபீலிங் இருக்கு சார், என்று கலங்கினார்.

அந்த பொன்னு ஏன் சார் வேலைய விடுது ? கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா ? என்று கேட்டேன் .

உங்களுக்கு எதுவுமே தெரியாதா சார் ? கடை முதலாளி கோபமாய் கேட்டு பின் அவரே பேசலானார்.

ஆரா வீட்டில் இருந்து கல்லூரிக்கு படிக்க தினமும் பஸ்ஸில் வந்திருக்கிறாள், அந்த பஸ்ஸில் வேலை செய்யும் தன்னை விட 20 வயது மூத்தவரான ஒரு கண்டக்டரை அவள் நேசிக்க தொடங்கியிருக்கிறாள், அவளுக்கு அந்தக் கணமே அந்த மனிதனைப் பிடித்துவிட்டது.

ஆனால் அந்த கண்டக்டர் கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் ஆராவின் நேசிப்பைத் தனக்கு சாதகமாக மாற்றித் தன் மகளைப் போன்ற அவளைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டான். அறியாத பருவத்தில் ஹார்மோன்கள் செய்த கோளாறில் ஆராவும் இடறியிருக்கிறாள்.

விபரம் வீட்டுக்கு தெரிந்து படிப்பு பாதியிலே நின்று சமூகத்தின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகி , அவர்கள் குடும்பமே சின்னா பின்னமாகி, பெற்றோர்கள் ஆராவை வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள்.

ஆராவுக்கு வேறுவழி தெரியாமல் அந்த கண்டக்டர் வீட்டிலேயே தஞ்சம் அடைந்து விட்டாள். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி இவளை ஒட்டிய வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.கண்டக்டரின் மனைவி இவளை ஒரு ஜென்ம விரோதியாக நடத்தினாள். டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை மொத்தமாக வாங்கிக்கொள்வாள், வீட்டிலும் போய் இவள் எல்லா வேலையும் செய்ய வேண்டும், தினமும் இவளை சபித்து கொட்டுவாள், அடியும் வசவும் ஆராவுக்கு பழகி விட்டது, எல்லாவற்றையும் தாம் செய்த தவறுக்குக் கிடைக்கும் தண்டனையாக ஏற்று வாழ ஆரம்பித்து இருக்கிறாள்.

அவளுக்கு இங்கு நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போனது, அந்த அப்பா வயது கணவனும் அவன் மனைவியும் இவளை மிக கீழ்த் தரமான வார்த்தைகளில் சொல்ல முடியாத வழிகளில் நடத்த ஆரம்பித்தார்கள். சரியான உணவு, தூக்கம் இல்லை, நிலைமை மிகவும் மோசமடைந்தது. நிலைமை கை மீறி போகவே, கடை முதலாளி ஆராவின் அப்பா அம்மாவுக்கு தகவல் தெரிவித்து, வந்து அழைத்து போக சொல்லியிருக்கிறார்.

அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டுவந்து விட்டாளே தவிர ஆராவின் நெஞ்சமெல்லாம் அவர்களின் நினைவுகள் அகலவே இல்லை . அவர்களும் அப்படியே துடித்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

இப்போது தாய் தந்தையர்கள் ஒருவழியாக மனது மாறி அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று கதையை முடித்தார்.

எனக்குத் தலையே சுற்றியது. அடப்பாவமே இது தெரியாமல் இரண்டு மாதமாய் ஆராவை திட்டி தீர்த்து ஒதுக்கித் தள்ளினோமே என்று மனது அரற்ற ஆரம்பித்தது.
உடனே எழுந்து அவளைத் தேடினேன் கடையிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஆரா தன் தாய் தந்தையுடன் போய்க் கொண்டிருந்தாள்.

வழிமறித்தேன் ஆராவைப் பார்த்தவுடன் “சாரி ஆரா” என்று சொன்னேன்.

ஆராவும் “சாரி சார், என் தப்புதான் நான் அப்படி உங்க கிட்ட பேசியிருக்க கூடாது” என்றாள். அவள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.

“இது தான் சார் என் அப்பா !” என்று அழுத்தமாக சொல்லி என்னை தீர்க்கமாக பார்த்தாள்.

நான் கை கூப்பி வணங்கினேன் எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“ஆரா, எப்படியோ தெரியாமல் நாம் சிலசமயம் சாக்கடையில் விழுந்து விடுகிறோம் ஆனால் அதே சாக்கடையில்தான் விழுந்து கிடக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. குளித்துக் கழுவி நறுமணம் பூசிக்கொண்டு மறுபடியும் நாம் காற்றைப் போல் கடலைப் போல் மேலேழுந்து வர வேண்டும், எங்கே விட்டோமோ அங்கிருந்து தொடங்கலாம். இந்த உத்தம வேஷம் போடும் சமூகத்தில், நீ உண்மையின் உரைகல், யாரைப் பற்றியும், எது பற்றியும் யோசிக்காதே, உன் புதிய அத்தியாயத்தை தொடங்கு” என்றேன்.

“ரொம்ப நன்றி சார்” என்றாள்.

ஆராவின் அப்பா, ஆராவை ஹாஸ்டலில் தங்க வைத்து சட்டம் படிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக சொன்னார். நான் ஆராவை பார்த்து, “வக்கீலம்மா வாழ்த்துக்கள்” என்றேன் சிரித்தபடி மூவரும் விடை பெற்றார்கள்.

நான் எப்போதும் போல் அந்தக் கடைக்குப் போகிறேன், எல்லா பணி பெண்களும், எல்லா வாடிக்கையாளர்களும், முதலாளியும் ஆராவை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். எல்லா பொருள்களிலும், எல்லா இடங்களிலும், அந்தக் கடை முழுதும் ஆரா நிறைந்து கிடக்கிறாள், ஆராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

ஆரா என்றால் பிரபஞ்ச சக்தி என்பது உண்மைதான்.