Ka. Subramanian's Verum Vizhuthum Book Review By G.B. Chathurbhujan. Book Day is Branch of Bharathi Puthakalayam



ஒரு அணைக்கட்டு கட்டப்படும்போது ஓர் அருமையான கதையும் கட்டப்பட்டிருக்கிறது.

தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் மகளான லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்தி வந்த அமைப்பு “வாசகர் வட்டம்”. “வேரும் விழுதும்” என்ற இந்த நாவல் முதலில் ஜூன் 1970 இல் வாசகர் வட்ட வெளியீடாக வந்திருக்கிறது. மீண்டும் 50 வருடங்களுக்குப் பின் ஜூன் 2021ல் கோவை சிறுவாணி வாசகர் மையத்தின் “மாதம் ஒரு நூல்” திட்டத்தில் பவித்ரா பதிப்பகத்தின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய தரமான, வாசிக்க வேண்டிய நூலுக்கு மறுபதிப்பின் மூலம் புத்துயிர் அளித்ததற்கு சிறுவாணி வாசகர் மையத்திற்கு தமிழ் வாசகர் உலகம் நிச்சயம் நன்றி தெரிவிக்கலாம்.

இந்த நாவல் எழுதி பதிப்பிக்கப்பட்டதே ஒரு சுவையான கதையாகத் தெரிகிறது. அதை முதலில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த “வேரும் விழுதும்” நாவலை இதன் ஆசிரியர் க.சுப்ரமணியன் அவர்கள் 1960 இறுதியில் எழுதத் துவங்கி 1968 இல் நிறைவு செய்திருக்கிறார். சில பிரபல தமிழ்ப் பத்திரிகைகளும், பதிப்பாளர்களும் “தங்கள் பிரசுரத்திற்கு ஏற்றதாக இல்லை” என திருப்பி அனுப்பிவிட்டார்கள். அப்போது க.சுப்ரமணியன் அவர்கள் புதுடில்லியில் ஷாஜகான் ரோட்டில் எம்எஸ் பிளாட்சில் குடியிருந்திருக்கிறார். வீட்டு எண்: 707. அவருடைய அதிர்ஷ்டம் – அதே குடியிருப்பில் எண் 703 இல் அப்போது அகில இந்திய வானொலியில் வேலையில் இருந்த தி.ஜானகிராமன் குடியிருந்தார். இருவரும் நண்பர்களாகவே, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இந்த நாவலை தி,ஜா.ராவிடம் க.சுப்ரமணியன் காட்டியிருக்கிறார். “இது ஒரு பொக்கிஷம்!” என்று பாராட்டிய தி.ஜா.ரா, சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி, திருத்திய பிரதியை சிட்டி அவர்களுக்கு அனுப்பி, “வாசகர் வட்டம்” மூலம் பதிப்பாக வழி கோலியிருக்கிறார். இப்படித்தான் “வேரும் விழுதும்” நாவல் உயிர்பெற்று வாசகர்களை வந்து சேர்ந்திருக்கிறது.

இப்போது மீண்டும் மறுபதிப்பால் மறு பிறப்பு எடுத்திருக்கிறது இந்த குறிப்பிடத் தகுந்த நாவல்.

இந்த புதினம் ஒரு தனித்த வடிவம் கொண்டது. இதில் வரும் என்ஜினீயர் தான் கதை சொல்லி. அவரே இதில் முக்கிய கதாபாத்திரமும். இந்த நாவலின் அறிமுகமாகவுள்ள பீடிகையும் இதில் வரும் கிராம கணக்குப் பிள்ளையின் நாட்குறிப்புகளும் ஆசிரியர் கூறுவது போல ஓர் ஆர்கெஸ்ட்ராவின் ட்ரம்போன் கருவியைப் போல கதையின் மத்திய பகுதியுடன் இணைந்து ஓர் அருமையான இலக்கிய இன்னிசையை வாசகருக்கு தருகிறது. இந்த விதத்தில், ஆசிரியர் சுப்ரமணியன் நாவலை புதுமையாக, விறுவிறுப்பான, அதே நேரத்தில் எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைப்பதில் அதீதக் கவனம் செலுத்தியுள்ளார். அதன் விளைவு வாசகனுக்கு ஓர் அருமையான வாசிப்பு அனுபவத்தையும் நாவலைப் படித்து முடிக்கும்போது ஒரு முழு மனநிறைவும் கிடைக்கிறது.

ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், கதை நடக்கும் காலம் 1960இல் இருந்தாலும், அதிலுள்ள கதாபாத்திரங்கள் அக்காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இன்றும் நாம் படிக்கும்போது இந்த நாவல் சற்றும் நம்மிடமிருந்து அந்நியப்படாமல் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. கதையில் நுழைந்து கதையின் கடைசி வரியைப் படித்து முடிக்கும் வரை, நம் மனம் முழுவதும் கதை நடக்கும் குழுமணி கிராமத்திலேயே வாசம் செய்கிறது. அந்த சிறு கிராமத்தின் தெருக்களின் வாசமும், கோவிலின் மணியும், ரயில் நிலையத்தின் புகை கக்கும் வண்டிகளும், சுற்றிவரும் கதை மாந்தர்களும் நம்மை விட்டு அகலுவதில்லை. இது இந்த நாவலின் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது.

Ka. Subramanian's Verum Vizhuthum Book Review By G.B. Chathurbhujan. Book Day is Branch of Bharathi Puthakalayam
வேரும் விழுதும் – க.சுப்ரமணியன்

இந்த நாவலைப் படிக்கும்போது இன்னொரு விஷயம் என் மனதிற்குப் பட்டது. அது முக்கியம் என்று தோன்றுகிறது. அந்தக் காலத்து பல நாவல்கள் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தே எழுதப்பட்டிருக்கும். வளைய வரும் பாத்திரங்கள் அந்த சமூகத்தின் பிரத்யேக மொழியையே பேசுவார்கள். அது நாவலுக்கு உண்மைத் தன்மையைத் தந்தாலும், அந்த சமூகத்துடன் நாம் பழகியவராய் இல்லாவிட்டால், நாம் சற்றே அந்நியப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுப்ரமணியத்தின் “வேரும் விழுதும்” எந்த ஒரு சமூகத்தைச் சார்ந்த மொழியிலும் இல்லாமல், மானுடம் என்ற பொது மொழியில், எளிதான நடையில் நம்முடன் பேசுகிறது. இதனால், நாம் கதையுடன் முழுமையாக ஒன்றி போய் விடுகிறோம்.

கதை என்ன ? நாவல் எதைப்பற்றி ? இதை அறிய எந்த வாசகனும் துடிக்கத்தான் செய்வான்.

சுதந்திரத்திற்குப் பின் அரசால் போடப்பட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களில் ஒன்று பரலியாற்றின் குறுக்கே வந்த மேக்கூர் அணைத் திட்டம். அந்த அணைக்கட்டு கட்டப்படுவதால் குழுமணி என்னும் கிராமத்தில் ஏற்படும் விளைவுகளை உணர்ச்சி மிக்கதொரு காவியமாக அளித்திருக்கிறார் சுப்ரமணியன். அணைக்கட்டுப் பொறியாளர், அவர் பெரியப்பா, டாக்டரய்யா, முன்னாள் பகுத்தறிவுவாதியான அறம் வளர்த்தான், ஸ்டேஷன் மாஸ்டர் ராயர் போன்ற பல உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்கள் கதையில் உலாவருகின்றன. இவர்களுடன் நாமும் குழுமணி என்ற கிராமத்தில் வாழ்கிறோம் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி விடுகிறார் நாவலின் ஆசிரியர்.

இதற்கு மேல் கதைப் பின்னல்களை இங்கே பகிர்ந்து கொள்வது சரியல்ல என்று நினைக்கிறேன் – அது நீங்களே இந்த நாவலை வாசிக்கும்போது ஏற்படும் சுவாரஸ்யத்தை குறைத்து விடும் அல்லவா !

சுப்ரமணியன் அவர்கள் எழுதிய ஒரே நாவல் இந்த “வேரும் விழுதும்” மட்டும்தான் என்று அறியும்போது ஆச்சரியம்தான் ஏற்படுகிறது. மாறாக இது போல ஒரு பூரண திருப்தி அளிக்கும் நாவலை மீண்டும் தன்னால் படைக்க முடியாது என்ற கணிப்பினாலேயே ஆசிரியர் க.சுப்ரமணியன் மேலும் முயற்சி செய்யவில்லையோ என்றும் நம்மை எண்ண வைக்கிறது.

இந்த நாவல் தரும் வித்தியாசமான அனுபவத்தை அனைத்து தீவிர தமிழ் வாசகர்களும் சுவைத்தாக வேண்டும். “வேரும் விழுதும்” நிச்சயம் உங்களை உங்கள் வேர்களுக்கு இட்டுச் செல்லும்.

“வேரும் விழுதும்” ( நாவல் )
க.சுப்ரமணியன்
பவித்ரா பதிப்பகம், கோவை
சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு
பக்கம் : 210
விலை : ரூ.200/

*********************

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *