கா.சுப்பிரமணிய பிள்ளையின் 'தமிழர் சமயம்' புத்தகம் | Ka.Subramaniya Pillai's Tamilar Samaiyam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

கா.சுப்பிரமணிய பிள்ளையின் ‘தமிழர் சமயம்’ – நூல் அறிமுகம்

ஆய்வறிஞர் தொ.ப.வின் இரண்டொரு நூல்களில் தமிழறிஞர் கா.சு.பிள்ளை அவர்கள் பற்றிய குறிப்புகளைப் படிக்க நேர்ந்தது. அது தொடர்பாகத் தேடிய போது நூலகத்தில் கிடைக்கப் பெற்றது கா.சு.பிள்ளையின் ‘தமிழர் சமயம்’ எனும் இந்நூல்.

கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற கா.சு.பிள்ளையானவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசியராகவும் தாகூர் சட்ட விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வந்த சிறந்த கல்வியாளர். தமிழ் இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் பாரிய ஞானம் பெற்ற சைவ நெறியாளர்.

நூல் முழுக்க தமிழர் சமயங்களாக சைவத்தையும் வைணவத்தையும் முன்னிருத்தும் போக்கே தெரிகிறது. மூதாதையர் வழிபாடே பழந்தமிழ்ச் சமூக வழிபாட்டு முறை என்று குறிப்பிடும் கா.சு.பிள்ளை, தான் ஒரு சைவராக இருப்பதாலோ என்னவோ பின்னர் உருவான சைவமே தமிழ்ச் சமயங்களில் முதன்மையானது என்று நிறுவ விழைகிறார். திருவள்ளுவரையும் நாயன்மார்களில் ஒருவராக்கும் முயற்சியும் ஆங்காங்கே தெரிவது அதை உறுதியாக்குகிறது. தனக்கு உறுதுணையாக வைணவத்தை உடன் இருத்திக் கொள்கிறார். இதற்கான சான்றுகளாக அவர் பெருமளவில் நூலில் காட்டுவது பக்தி இலக்கியங்களையே..! காலத்தில் பிந்தைய அவற்றை பெரும்பான்மை ஆதாரமாகக் கொண்டு சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்று நிறுவ முயல்கிறார். கூடுதலாக திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் துணைக்கு நிறுத்த முயல்கிறார் – ஆனால் அது பலவீனமாகவே முடிகிறது.

பவுத்தம், சமணம், ஆசீவகம் போன்றவை வடக்கில் இருந்து வந்த சமயங்கள் என்ற அவரது கூற்று ஏற்கத்தக்கதே. பவுத்தம் குறித்து அயோத்திதாசர், பவுத்தம், சமணம் குறித்து மயிலை சீனி.வேங்கிடசாமி, ஆசீவகம் குறித்து நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல்வேறு அறிஞ பெருமக்களின் ஆய்வுகளையும் நூல்களையும் இவ்விடத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது என் கருத்து.

சமணம், பவுத்தம் போன்ற அவைதீக மதங்களின் வளர்ச்சி தமிழ்ச்சூழலில் வைதீகர்கள் – குறிப்பாக – சைவர்கள் மத்தியில் ஏற்படுத்திய அச்சத்தின் விளைவே பிற்கால பக்தி இலக்கிய காலகட்டம். சமணர்களின் சொற்கள் (இலக்கியங்கள் – ஆக்கங்கள்) தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் அதனால் ஏற்பட்ட பெருவாரியான மாற்றமும், சைவர்களிடையே கோவில்களையும் கோவில் நிலங்களைக் காப்பாற்றவும் மூவேந்தர்களின் – குறிப்பாக பாண்டிய சோழ மன்னர்கள் – துணையுடன் சமண பவுத்த மதங்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் வழி அறியமுடியும். அது போன்றதொரு பதற்றத்தையே (சற்றே மெலிதான வகையில்) இந்நூல் நெடுக என்னால் உணர முடிகிறது. அது எதனால் என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்நூல் வெளிவந்த காலகட்டத்திற்கு சற்று முற்பட்டு 1800களின் இறுதிகளிலும் 1900களின் தொடக்கத்திலும் அயோத்திதாசரின் ‘பூர்வ தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம்’ போன்ற நூல்கள், திராவிட பாண்டியன், ஒரு பைசாத் தமிழன் ஆகிய இதழ்களில் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் ஆதி திராவிடர்கள், ஆதித் தமிழர்கள், பூர்வ பவுத்தர்கள் போன்ற கருத்துகளை எழுதி வந்தார். அதே போல மயிலை சீனி.வேங்கிடசாமி போன்றோர் பவுத்தமும் தமிழும், கிறித்தவமும் தமிழும் போன்ற நூல்களையும் இந்நூல் வெளிவந்த காலகட்டத்தை ஒட்டியே வெளியிட்டு தமிழின் அடையாளமாக அதுகாறும் இருந்து வந்த (அல்லது நிறுவப்பட்டு வந்த) சைவத்தையும் வைணவத்தையும் அசைத்துப் பார்க்கும் வகையில் – பெரும் வாதப்பிரதிவாதங்களை எழுப்பியிருந்தனர். சமூகத் தளத்திலும் சுயமரியாதை இயக்கம் போன்ற இயக்கங்களும் மதரீதியிலான பல்வேறு புரட்சிகரக் கருத்துகளை முன்வைத்தும் அவை வலுப்பட்டும் வந்த காலகட்டம்.

இது போன்ற எதிர் நடவடிக்கைகள், நடப்பியல் மத வழிபாட்டு முறைமைகளுக்கு – குறிப்பாக சைவ வழிபாட்டு முறைமைக்கு – பாதகமாக இருப்பதை உணர்ந்த பல்வேறு சைவத் தமிழ் அறிஞர்களைப் (காட்டாக தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், அவ்வை துரைசாமி பிள்ளை, வேதாசலம் பிள்ளை என்ற மறைமலையடிகள் போன்றோர் – இவர்களைப் போன்றோர்தான் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றவர்கள் – சைவத்துக்கு எதிரானதாக இருந்ததாலேயே) போலவே கா.சுப்பிரமணிய பிள்ளைக்கும் தோன்றியிருக்கிறது. எப்படி சைவ/வைணவ சமயங்களைக் காப்பது என்ற சிந்தனையின் விளைவே இந்நூல் என்று தோன்றுகிறது. காரணம், இந்நூலின் வரவேற்கத்தக்க இரண்டு இயல்களை வைத்து அதனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

அவையாவன, ‘இந்து மதம் ஒரு மதமன்று’ என்ற இயலும், ‘சீர்திருத்தங்கள்’ என்ற இயலும். அப்போதைய காலகட்டத்தில் குறிப்பிடப்படும் இந்து மதம் என்பது தமிழர் மதமே இல்லை என்பதைத் தெளிவுற எடுத்து வைக்கிறார். மேலும் இந்து மதம் என்பது எவ்வாறு வைதீக மரபின் அடிப்படைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்பதையும் அவ்வியலில் எடுத்துரைக்கிறார். தொ.ப., கா.சு.பிள்ளையின் இக்கூற்றையே கவனத்தில் கொள்ள வேண்டும் என்பார்.

அதே போல், ‘சீர்திருத்தங்கள்’ என்ற பகுதியில் விதவை மறுமணம், கோவிலுக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதித்தல், அனைத்து சாதியினரையும் சைவ ஆகம முறைமைகளை முறையாகப் பயின்றிருப்பின் அர்ச்சகர் ஆக்குதல் போன்ற சீர்திருத்தங்களை இயன்றவரை ஏற்படுத்த வேண்டும் என்கிறார். இதுவும் இந்நூலில் வரவேற்கத்தக்க அம்சமே. ஆனால் இவற்றின் அடியில், சைவமும் வைணவமும் எங்கே அழிந்துபோய் விடுமோ என்ற அச்சம் குடிகொண்டுள்ளதையும் உணர முடிகிறது.

சைவர்கள் கோயில்களைக் காக்கும் நோக்குடன் வைணவத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தமிழினைத் தன் முகபடாமாக அணிந்து கொண்டு, உருவாக்கிய கருத்தியல் மூலமே இந்நூல் என்பது என் கணிப்பு. அதை வறட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டு இன்றுவரை இத்தகைய கருத்தியல்சார்பு நிலையை எவ்வித ஆய்வு நோக்குமின்றி எடுக்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்கு இந்நூல் துணை போகும் அபாயம் உண்டு.

மற்றபடி, ஒற்றைச் சமயக் கோட்பாடு முன்வைக்கப்படும் இவ்விருண்ட காலகட்டத்தில், இந்து மதம் என்ற ஒன்று தமிழர் சமயமே இல்லை என்று ஆணித்தரமாக முன்வைக்கும் இந்நூலின் பகுதி முக்கியமானதாகவே படுகிறது.

நூலின் விவரங்கள்:

நூல் : தமிழர் சமயம்
ஆசிரியர் : கா.சுப்பிரமணியபிள்ளை
விலை :  ரூ.120
பதிப்பகம் : சாரதா பதிப்பகம்
தொடர்புக்கு: 9952034876 – gowraputhagamaiyam@gmail.com

எழுதியவர் : 

✍🏻 – அன்புச்செல்வன்.

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ராமச்சந்திர வைத்தியநாத்

    கா.சு.பிள்ளையின் படைப்புகளை திராவிடர் கழகம் கூட முன்னர் பிரசுரித்திருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *