காடென்பது யாதெனில்
இந்தியக் காடுகளின் பரப்பளவு மற்றும் கார்பன் சேமிப்பு குறித்த ஆய்வறிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘இந்தியக் காடுகள் ஆய்வு’ நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. 2019-21இல் 1540ச.கிமீ உம் 2021-23இல் 1445 ச.கிமீஉம் அதிகமாகியுள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது. இதில்156 ச.கிமீகள் இயற்கைக் காடுகள் என்றும் மீதம் மரம் நடுதல் மூலம் உண்டானது என்றும் கூறுகிறது. சுற்றுசூழல் வரையறுப்பின்படி இயற்கைக்காடுகளும் மரம் நடுதல் மூலம் கிடைக்கும் பரப்பும் ஒன்றல்ல. காடுகள் பல்லுயிர் சூழல், நீர், மண் பாதுகாப்பு போன்ற பலவகை பலங்களை அளிக்கின்றன.
நம் நாட்டில் 25 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்த இயற்கை சுற்றுசூழல் அமைப்பை நம்பியுள்ளனர். விறகு, கால்நடைகளுக்கான உணவு, மக்களுக்கான உணவு, மருந்துப்பொருட்கள், கட்டடப் பொருட்கள் என பல பொருட்களை காடுகள் தருகின்றன. காடுகளில் வசிப்போர் அதன் பகுதியாகவே உள்ளனர். அவர்களின் கலாச்சார கலனாக காடுகள் உள்ளன.
இது ஒரு புறம் இருந்தாலும் இந்த ஆய்வு தரும் புள்ளிவிவரங்கள் தவறானவை என்று உலக காடுகள் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. செயற்கைக்கோள் போன்ற நல்ல தொழில்நுட்பங்கள் மூலம் காடுகளின் பரப்பு கணக்கிடப்பட்டாலும் மற்ற புள்ளிவிவரங்களை இணைத்துப் பார்க்கும்போது காடுகளின் பரப்பு குறைந்திருப்ப்து தெரிகிறது. எடுத்துக்காட்டாக ஐ நா சபையின் பருவநிலை மாறுதல் அமைப்பு நடத்திய ஆய்வில் 2000-2003 காலத்தில் 23300 ச.கிமீ இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இன்னொரு ஆய்வில் காடுகள் வளிமண்டலத்திலிருந்து சேகரித்த 1410 இலட்சம் டன் கார்பன்டை ஆக்சைடில் 900 இலட்சம் டன் மட்டுமே பூமிக்குள் சேமிக்கப்பட்டுள்ளன. மீதி 500இலட்சம் டன் மீண்டும் வளிமண்டலத்திலேயே விடப்பட்டிருக்கின்றன. அரசாங்கமே மாநிலங்கள் அவையில் 2011 க்கும் 2021க்கும் இடையில் வளர்ச்சி திட்டங்களினால் 1734 ச.கிமீீ காடுகளை இழந்துள்ளோம் என்று ஒத்துக்கொண்டுள்ளது. ஆய்வறிக்கையே தேயிலை, காப்பி மலை தோட்டங்கள், பழ தோட்டங்கள், கரும்பு தோட்டங்கள், வணிக பயிர் பண்ணைகள் போன்றவை காடுகளுக்கான புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டன என்று கூறுகிறது.
ஆனால் அரசின் ஆய்வறிக்கை ஏன் காடுகளின் பரப்பு அதிகமாகியுள்ளது என்று தவறான தகவலை அளிக்க வேண்டும்? காடுகள் பராமரிப்பில் அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று மக்கள் நம்ப வேண்டும் என்பது ஒரு நோக்கம். காடுகள் அழிப்பு மற்றும் நிலப் பயன்பாடு மாற்றம் ஆகியவற்றினால் விளையும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை சர்வ தேச ஒப்பந்தங்களின் படி இருப்பதாக சரிக்கட்டுவது இன்னொரு நோக்கம். மூன்றாவது கார்பன் உமிழ்விற்காக நாடுகள் இடையே நடக்கும் கார்பன் வணிகத்தில் வருமானம் ஈட்டுவது.
மரங்கள் நடுவதன் மூலம் ஏற்படும் வெளியை காடுகள் என்று கருத இயலாது. வுட்லேண்ட் எனப்படும் மரக்காடுகளானலும் சரி, சவன்னா எனப்படும் புல்வெளிகளானாலும் சரி, மனிதர்கள் நடமாட்டம் இல்லாமலிருப்பதுவே காடுகளுக்கான பிரதான காரணியாகும். ஆனால் 2023இல் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அரசு ஆவணங்களில் காடுகள் என்று பதிந்திருந்தாலோ அல்லது அறிவிக்கப்பட்டாலோ அவை காடுகள் என்று தகுதி பெறும். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கின்றார்கள்.
தனிநபர் அல்லது சமுதாய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஏராளமான பரப்பை காடுகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் பழ தோட்டங்கள், பனந்தோப்புகள் மற்றும் மூங்கில் பண்ணைகளை காடுகள் என்கிற வரையறைக்குள் கொண்டு வரப்படுகின்றன. இவைகளையெல்லாம் செயற்கைக் கோள் புகைப்படங்கள் ஒன்றாகவே காட்டுகின்றன என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. இப்போதுள்ள செயற்கைக்கோள் புகைப்பட விளக்க திறன்களின்படி இவற்றைப் பிரித்து பார்க்க முடியும்.
கார்பன் சேமிப்பிற்கும் இவற்றை கணக்கு காட்ட முடியாது. ஏனெனில் இவை சேகரிக்கும் கார்பன், அத்தோட்டங்கள் அறுவடை செய்யும்போது மீண்டும் வளிமண்டலத்தில் விடப்படுகிறது. மேலும் தோட்டங்களின் சூழல் அமைப்பு, காடுகளின் கார்பன் சேமிப்பு திறனுக்கு இணையானதல்ல. காடுகளின் நிலத்தில் சேமிக்கப்படும் கார்பன் அளவு தோட்டம், வயல் போன்றவற்றில் சேமிக்கபப்டும் அளவை விட மிக அதிகம். மேலும் கார்பன் சேமிப்பிற்கு மட்டும் அதிக அழுத்தம் கொடுப்பது காடுகளின் மற்ற பயன்களை புறம் தள்ளுவதாகும். கார்பன் சேமிப்பின் மீது குவி மய்யமாக இருப்பது, வளரும் நாடுகளில் கார்பன் வணிகத்திற்கு கதவுகளை திறந்து விடுவதற்கே.
இந்தியா பெரும் மக்கள் தொகை கொண்ட வளரும் நாடுதான். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் ஜீவாதாரமான சுற்று சூழல் பணிகளையும் பல்லுயிர் சூழலையும் சமரசம் செய்ய முடியாது. அரசு கொள்கை வகுப்போரின் கார்பன் மய்யப் போக்கை எதிர்க்காவிட்டால் நமது காடுகளும் அங்கு வசிப்பவர்களும் இப்போதை விட இன்னும் அதிகமாக விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
(இந்தியக் காடுகள் பரப்பளவை மிகைப்படுத்துதல் – தபன் மிஷ்ரா அவர்களின் மார்ச் 03- 09 தேதியிட்ட பீபிள்ஸ் டெமாக்கரசி கட்டுரையிலிருந்து)
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.