காதலினால் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : காதலினால் (வரலாற்றில் வாழும் காதல்)
ஆசிரியர் : மாலன்
வெளியீடு : புஸ்தகா
பக்கம் ; 192
விலை: ரூ.160
காதல், இலக்கணத்திற்குள் அடங்கி விடுவதில்லை; எந்த கட்டுப்பாட்டிலும் கட்டுப்படுவதில்லை; சட்டென்று பறக்கும் பறவையின் முயற்சியை போல, புன்னகை விரிக்கும் பூவின் பொழுதறியா நிகழ்வைப் போல, எங்கே, எப்போது, எப்படி மலரும் எனத் தெரியாது மனங்களில் ஆட்சி செய்யும்.
காதலினால் மரணம் பொய்யாகும் என்று பாரதிப் பெரும் புலவன் செப்புகிறான். காதல் இல்லாத அகமோ அந்த அகத்தோடு தொடர்புடைய புறமோ கிடையாது என்று பாரதி உறுதிப்படுத்துகிறார்.
இன்றைய சூழலில் காதல் எப்படி மனங்களை ஆள்கிறது, அந்த காதல் இளைஞர்களை, மனிதர்களை எவ்விதம் ஆட்டிப் படைக்கிறது என்பதை இலக்கியம் சினிமா இந்த இரண்டு சாளரங்களையும் தள்ளி வைத்துவிட்டு வரலாற்றின் வழியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் மாலன்.
வரலாற்றின் வழியாக காதல் நூலின் வழி மிகப்பெரிய ஆளுமைகளை எவ்விதம் அசைத்துப் பார்த்தது, அந்தக் காதலினால் ஆளுமைகளின் ஆளுமைத் திறன் செதுக்கப்பட்டதா? சிதைக்கப்பட்டதா? காதல் அவர்களின் மனதைத் தின்ற காதலா?வென்ற காதலா? என்று நம்மை ஆச்சரியப்படுத்தி, அதிர்ச்சிக்குள்ளாக்கி இப்படியும் நடக்குமா என்று நமக்குள் வினா எழுப்ப வைத்து வரலாற்றை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தருகிறார்.
காதலினால் நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஆளுமைகளும் தங்களின் துறையில் தனிப்பட்ட பேராற்றலுடன் விளங்கியவர்கள். அரசியல் துறையாகட்டும் சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபட்டவர்களாகட்டும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக விளங்கியவர்கள்.
அரசன் முதல் சாதாரண ஏழை விவசாயி வரை தாங்கள் அனுபவித்த காதல் அவர்களை எப்படியெல்லாம் திசை மாற்றியது, மேம்படுத்தியது என்பதை வரலாற்றில் வாழும் காதல் என்ற தலைப்பில் சுவைக்கும்படியும் கண்ணீர்விடும்படியும் நமக்குத் தருகிறது காதலினால் நூல்.
இந்நூலில்
ஆபிரகாம் லிங்கன்- மேரி லிங்கன் ஜின்னா-ருட்டி
நேரு -கமலா
துய்ப்ளே-ஜேன்
பூட்டா- ஜெனீப்
எட்வர்ட்- வாலிஸ்
பியர் கியூரி -மேரி கியூரி
மண்டேலா -வின்னி
மார்க்ஸ்- ஜென்னி
பீத்தோவன்- ஜோசப்பின்
நெப்போலியன் -ஜோஸ்பின்
பெரோன் -எவா
வான்கா-மார்க்ரேட்
பெரோஸ்- இந்திரா
காந்தி -கஸ்தூரிபா
ஐன்ஸ்டீன் -மிலிவா
ராஜீவ்- சோனியா
என்ற 18 காதலர்களின் வரலாற்றை நமக்கு எழுதிச் செல்கிறார் மாலன். ஒவ்வொருவருடைய காதல் தளமும் வெவ்வேறானவை.
*இளமையின் தீவிரத்தில் முதுமையை எப்படி வாழலாம் என்று கற்றுத் தருகிறது.
*வயதுகள் காதலுக்கு முக்கியமல்ல வாழ்க்கையில் எவ்வாறு மனங்களை ஒன்றிணைப்பது கற்றுத் தருகிறது.
* காதலியின் துயரத்தை தன் துயராய் எண்ணி வருந்துகிறது.
* காதலியே சகலமும் என்று மனதிற்குள் அடைத்துக் கொண்டு அவளை சுதந்திர வானில் பறக்க விடாமல் தனக்குள்ளேயே வைத்து காப்பாற்றப் பார்க்கிறது.
* தனக்கு மனைவியானவள் இன்னொருவனுக்கு மனைவியானபோது தனது குழந்தையாவது அவளிடம் நல்லமுறையில் வாழ வேண்டும் என்று காதலின் வழியாக அவளிடம் இறைஞ்சுகுகிறது.
*உலகையே கட்டியாளும் ஒற்றை அரசனாய் இருந்து அரசாள முடியாமல் காதலியின் சுவாசமே பெரிது என்று மணிமுடி துறந்து அவள் பின்னே செல்கிறது.
* ஆசையாசையாய் காதலித்து விட்டு திரும்பக் கூட நேரமில்லாத ஓட்டத்தில் காதலியை மறந்துவிட்டு அவள் மறைந்ததும் அவள் கல்லறையில் சென்று கதறிக் கதறி அழுகிறது.
இதில் வரும் ஒவ்வொரு காதலும் வயதுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மனங்களின் சேர்க்கை எந்த வயதில் எப்படி நிகழும் என்று யாருக்கு தெரியும் என்பதை உணர்த்துகிறது.
ஒவ்வொருவரின் காதலும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை நமக்கு கற்றுத் தருகிறது. காதலுக்கு வயதோ, அழகோ அவசியமில்லை. காதலுக்கு நம்பிக்கையும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் உள்ளமும் வாய்க்கப்பெற்றால் போதும்.
எத்தகைய இடர்பாடுகள் வரினும் அவற்றை எதிர்த்து நின்று வாழச் செய்யும் தகுதி அவர்களின் காதலுக்கு உண்டு என்பதை வரலாற்றில் வாழும் காதலர்கள் நமக்கு நிரூபிக்கின்றனர்.
காதலினால் காட்டும் நேசத்தை
நூலின் வழியாக வாசிப்போம்.
அது காட்டும் அன்பை அறிந்து கொள்வோம்.
நூல் அறிமுகம் எழுதியவர்:

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

