“கால் முளைத்த கவிதை”, “சொட்டுச்சொட்டாய் வெயில்” இரண்டு கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்
”எளிமை சூடிய கவிதைகள்” என்று ஹைக்கூச் சக்கரவர்த்தி மு. முருகேஷ் முன்மொழிந்ததை நானும் வழிமொழிகிறேன். எளிமையே இனிமைவானத்தின் முதல் தூறல்.
பெரும்பாலான கவிதைகள் காதலையும் வாழ்வியல் அனுபவங்களையும் மையமிட்டுச் சுழல்கின்றன. இயற்கை உபாசனையும் உறைந்திருக்கிறது. காணும் காட்சிகள் கவிதையாய் மாறி இன்பக் கேணியில் சேகரம் ஆகின்றன. வாழ்ந்து பார்த்த அனுபவங்களும் வாழத் துடிக்கும் அபிலாஷைகளும் கவிதை வயலின் வரப்போரப் புல்படுகையாய் செழித்துக் கிடக்கின்றன. பல கவிதைகள் முதல் பேனாவின் முதல் பதிவு என்று நம்பமுடியவில்லை.
பூட்டு, சாவி, தாழ்ப்பாள் ஆகியவை பாதுகாப்பு மாளிகையின் முக்கோணப் படிவங்கள். சிறு குடிசையாயினும் பிரம்மாண்ட மாளிகையாயினும் அவைதான் பாதுகாப்புத் தருகின்றன. அவை ஒன்றோடு ஒன்று இணக்கம் காட்டினால்தான் பாதுகாப்பு என்பது வசப்படும்.
“பிறவி பயன்” என்ற கவிதையில் சாவி ஒன்று புலம்புகிறது. பூட்டையும் சாவியையும் வைத்து இப்படி ஒரு கவிதை எழுதப் பட்டிருப்பதை முதலில் பாராட்டித்தான் ஆகவேண்டும். “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்றும் “தாழிடப் படாத கதவுகள்” என்றும் இலக்கியப் பனுவல்கள் பேசுகின்றன. ஆனால் பூட்டு உடைந்துபோன போது சாவி விரக்தியடையும் காட்சி எந்த இலக்கியத்திலும் பதிவாகியிருக்கிறதா என்று தெரியவில்லை. கவிஞர் சூரியப் பிரபா அதைச் செய்திருக்கிறார். இப்படிச் சிந்திப்பதே கவிதா மகாத்மியத்தின் பசுமைப் பரவல்தான்.
”உனக்காகத்தான்
படைக்கப் பட்டேன்;
நீ உடைந்து போனாய்;
நான் உபயோகமில்லாமல்
போனேன்.
சாவியின் புலம்பல்.”
இது காதல்தோல்வி சார்ந்த படிமக் கவிதை என்றும் சொல்லலாம். அல்லது நெருங்கிய உறவு மரணித்தபோது உண்டாகும் மன அவஸ்தை என்றும் கூறமுடியும். வாழ்க்கையில் நேரும் இழப்பு மன உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் பெரும் சுமையைத் தருகிறது என்ற அனுபவத்தைக் கவிதை மொழியில் பதிவிடுகிறார் கவிஞர்.
இவர் ஓர் இசை ரசிகை என்பதைப் பல கவிதைகள் ப|றைசாற்றுகின்றன. அவற்றில் முக்கியமானவை “உலா” மற்றும் “வதம்” என்/ற படைப்புகளைக் குறிப்பிடலாம்.
கவிதை என்பது உள்ளில் இருந்து உருவாகி வெளியுலகைச் சென்றடையும் சிந்தனைப் படிவம்; இசையோ வெளியில் இருந்து காற்று வாகனமேறி உள்ளுக்குள் நுழையும் ஆத்மரூபம். இசையால் வசமாகும் உலகமிது. பேரமைதிக் காலத்திலும் “கும்ம்ம்ம்” என்ற நாதம் இசைவடிவமாகி மௌனவெளியை அளவீடு செய்வதை இலக்கியவாதிகளாலும் நுண்ணுணர்வுப் படைப்பாளிகளாலும் உணர முடியும். கவிஞர் எழுதுகிறார்;….
”உடல்மட்டும் கொண்டு
தாள்களில் கவிதை தனித்து இருக்கிறது;
ஊர் சென்று உலாவ
உயிர்கொண்டு வா இசையே.”.
கவிதை உடல்; இசையே உயிர் என்பது ஒரு புதிய பார்வை மட்டுமல்ல; ரசனைத் தத்துவத்தின் உள்ளீட்டுக் குறியீடும் ஆகும்.
அன்று தாள்களிலும் கார்டுகளிலும் எழுதப் பட்ட கடிதங்கள் இன்று மின்னேற்றம் ஆகியீருக்கின்|றன. “அஞ்சல்” என்ற ஆதிப்பெயர் “மின்னஞ்சல்” என மாறியிருக்கிறது. கடிதம் வரும் என்ற எதிர்பார்ப்பும் வந்துவிட்டால் அது தரும் உணர்வுகளும் உணர்ச்சிகளும், காதலைப் போல, குழந்தைக் கொஞ்சலைப் போல மேனியும் மனமும் சிலிர்த்து உவக்கும்; வெகுதூரப் பள்ளிகளில் படித்த பிள்ளைகளும் மகன்/மகளைப் பிரிந்து ஏங்கும் பெற்றோர்களும் கடிதம் என்|ற அந்த சாமான்யத் தாளின் வரவுக்காக தவம் கிடந்த காலங்கள் கடந்து சென்ற வாழ்வியல் வரலாற்றின் சுவடுகளை மட்டும் விட்டுவிட்டு மறைந்து போயின. உணவில்லாமல் ஏங்கிக் கிடக்கும் வயிறுபோல, கடிதம் வராத நாட்களின் ஜீவித உணர்ச்சி இன்|று சாத்தியமாகவில்லை. நினைத்ததும் அறிதிறன் கருவியை இயக்கி முகநூல் கட்செவி உதவியால் ஏங்கிக் கிடக்கத் தேவையில்லாத உரையாடலை நிகழ்த்த முடிகிறது. நவீன அறிவியலின் ஆளுகை சரிதான்; காவியத்துவம் செறிந்த அந்தநாள் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே நிஜம். ஓர் இளங்கவிஞர் அந்த உணர்வுகளை உள்வாங்கி எழுதியிருப்பது ஆச்சர்யமான சங்கதி. “காணாமல் போன கடிதங்கள்” என்ற படைப்பு அதைப் பிரதிபலிக்கிறது. அந்தக் கவிதையின் இறுதிவரிகள் உயிர்ப்பானவை.
”இப்படி உறவுகளை எல்லாம்
உணர்வுகள் சொட்டச் சொட்ட
` ஒருங்கிணைத்து
முகவரி சொன்ன கடிதங்கள்
இன்று முகவரி இழந்துவிட
காணாமல் போன கடிதங்களால்
வார்த்தையில் இருந்தும் காணாமல் போனது
”போனதும் கடிதம் போடு” எனும் அக்கறை.”
இக்கவிதையை வாசிக்கும் அந்தக் காலத்து மனிதர்கள் நிச்சயம் மனச்சலனம் அடைவார்கள்.
செழிப்பான நாற்|றங்காலாய்ப் பசுமை காட்டுகி|றது “கால்முளைத்த கவிதை.”
மனிதநேயம் மிக்க சில தெறிப்புக் கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு.
”மரணத்தை இறுக்கிப்பிடிக்கிறான்
இரு விரல்களுக்கிடையில்
சிகரட்.”
தங்களுக்குத் தாங்களே மரணத்தை வரவழைத்துக் கொள்கிற இளைஞர்களின் போதை அடிமை நிலவரத்தை இதைவிட எளிதாகச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.
பாட்டியின் தூக்கம் கலைகிறது;
விடுமுறை முடிந்து
ஊருக்குத் திரும்பிவிட்ட
பேரன் பேத்திகளின் சிரிப்பொலி.
இன்றைய சந்ததியின் வாரிசான கவிஞர் முதியோர் உணர்வுகளையும் புரிந்து வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. கவிஞர்கள் கண்ணெதிர்க் காட்சிகளையும் கண்காணாத உணர்வுகளையும் இலக்கியப் பனுவலுக்குள் இருத்திவைக்க முடிகிறது கவித்துவ அழகியலின் மூலக்கூறு.
கவிஞர் சூரிய பிரபாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதைப் பறையடித்து அறிவிக்கிறது “கால்முளைத்த கவிதைகள்.”
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கால் முளைத்த கவிதை |
| ஆசிரியர்: | சூர்ய பிரபா |
| வெளியீடு: | அகநி பதிப்பகம் |
| விலை: | ₹.120.00 மட்டுமே |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 தேனிசீருடையான் |
******************************************************************************
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்ற இலக்கிய அமைப்புக்குக் கிடைத்த பண்பாட்டுக் கருவூலம் எழுத்தாளர் ராஜிலா ரிஜ்ஸ்வான். சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியக் கட்டுரைகள், நாவல் எனப் பன்முகப் படைப்பாளி அவர். அதிலும் குறிப்பாக அவரை வானுயர வெளியில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பது ஹைக்கூ என்னும் படைப்புத்தளம். பல விருதுகளும் பரிசுகளும் அவரால் பெற முடிந்ததற்கு அச்சாரமிட்டுத் தந்தது ஹைக்கூக் கவிதை வடிவம்தான். இவரின் முந்தைய ஹைக்கூ படைப்புகளாகிய ”விரலிடுக்கில் வெளிச்சம்” மற்றும் “நானும் புத்தன்தான்” ஆகியவை தமிழ் இலக்கியப் புலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சில ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது “சொட்டுச்சொட்டாய் வெயில்.” புதுக்கோட்டை தமிழ் இலக்கிய மன்ற விழாவில், ஹைக்கூ ஜாம்பவான் அமுத பாரதி முன்னிலையில் வெளியிடப்பட்டு பாராட்டைப் பெற்றது.
விளிம்புநிலை வாழ்க்கையும் இயற்கை இயக்கச் செறிவும்தான் உள்ளடக்கம். அதிகப்படியான சொற்கள் இன்றி கச்சிதமான உடலமைப்புக் கொண்ட படைப்புகள் நிறைந்த தொகுப்பு “சொட்டுச்சொட்டாய் வெயில்”. ஒரு சொல்லை நீக்கினாலும் கவிதை சிதைந்துவிடும். கவிதையாக்கத்தின் பிரம்ம ரகசியம் தெரிந்த படைப்பாளியாய்த் திகழ்கிறார் ராஜிலா.
”குடிசைதான்; அதனாலென்ன,
கூரை முழுவதும்
பிச்சிப்பூக்கள்.
இக்கவிதையில் படைப்பு நுட்பம் பதியமாகியீருக்கிறது. படைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டிய ஓர் இணைப்புப் பாலத்தை, கவிஞர் மிகச் சாதாரணமாகக் கையாண்டு புதுமை படைத்திருக்கி|றார். கூரையில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன; மழை பெய்தாலும் வெயிலடித்தாலும் அவற்றுக்கு இடம் கொடுத்து விலகுகிறது கூரை. அந்த வெயிலிடுக்கு வெளிச்சங்கள் மட்டுமின்றி நட்சத்திர ஒளிப்பரல்களும் பிச்சிப் பூவாய்க் காட்சியளிகின்றன. பிச்சிப்பூ என்ற வார்த்தையில் இருப்பது மகிழ்ச்சியா சோகமா என்றால் சோகம்தான். உள்ளே வசிக்கும் ஏழை வெயிலையும் மழையையும் வீட்டுக்குள் இருந்தே அனுபவிக்க நேர்கிற சோகவாழ்வின் புற வடிவமே பிச்சிப் பூக்கள். பிச்சிப்பூ அழகியலின் குறியீடு; கூரை ஓட்டைகள் விளிம்புநிலை வாழ்க்கையின் சோகச் சுவடு. “சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நன் அழுதுகொண்டே சிரிக்கிறேன்” என்றொரு திரைப் பாடல் உண்டு. அதுபோல் இரு உணர்ச்சிகளையும் உட்கொண்டிருக்கும் கவிதை இது. அழகியல் நுட்பம் ஆழ்ந்து படிந்த படைப்பு..

முதுமை அடையும்போதுதான் மாணவப் பருவத்தின் மகிழ்ச்சியும் துள்ளலும் ஆண்பெண் நட்பும் புரிகிறது. நட்பு, காதல் போன்றவை, சமயலறையில் அம்மா இட்டிலி சுடுவது போல இயல்பாய் வருபவை. பொன்வண்டு பிடித்து விளையாடுவதும் மயிலிறகை நோட்டுக்குள் வைத்துக் குட்டிபோட வைப்பதும், அன்பின் நினைவாய் பூக்களைப் புத்தகத்துக்குள் பாதுகாப்பதும் மாணவப் பருவத்தின் சத்தியத் தருணங்கள். குறிப்பாக ஆண் மாணவர்கள் தமது தோழிகளுக்குத் தான் ஒரு சாகசவாதி என நிரூபிக்க ஏராளமான சங்கதிகளைச் செய்வார்.. மாணவப் பருவம் முடிந்த பின்னொரு நாள், அந்த நோட்டுகளைப் பிரிக்கும்போது குட்டி போடாத மயிலிறகு கிடைக்கும்போது ஏற்படுகிற பிரிவுச் சோகம் இருக்கிறதே; இறந்தகால வாழ்வியல் வரலாறு என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளி வாழ்க்கை முடிந்து வெளிவாழ்க்கைக்கு வந்து புதிய குடும்பம், புதிய தாம்பத்தியம் என்ற பரிமாணத்தில் அந்தப் பழைய நினைவுகள் புதிய ஏக்கத்தையும் சுகத்தையும் தருகின்றன. இறந்தகால மாணவப் பருவத்தின் நிகழ்கால நினைவுச் சுவடுகளை அனுபவிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு. அப்படி ஒரு நினைவைப் போற்றும் கவிதை;
பழைய புத்தகத்தில்
உலர்ந்த பூக்கள்;
பழைய காதலின் வடுக்கள்.
வியர்வை என்பது வெப்பக்காலத்தில் உடலைக் குளிர்விக்க உடலில் இருந்து வெளிவரும் இயற்கை ஊற்று என்று நாம் பள்ளிநாட்களில் வாசித்திருக்கிறோம். வியர்வை உடலின் வெப்பநீக்கி குளுமைத் துலக்கி எனப் புரிவது ஓர் உடலியல் அறிவி9யல். அது ஓர் உழைப்பாளியின் உடலிலிருந்து வருவது, மனித ஜீவிதத்தைக் காக்கும் இயல்பான உடலியக்கம்; இதைக் கவித்துவ அழகோடு பதிவிடுகிறார் கவிஞர்.
வெயிலைக் கட்டிக் கொண்டவன்;
உடலைக் குளிர்விக்கிறது
வழிந்தோடும் வியர்வை.
வெயிலைக் கட்டிக் கொண்டவன் என்ற வார்த்தை கவித்துவம் செறிந்தது. வெயிலைக் கட்டிக்கொள்ளுதல் என்பது நிழலில் நின்று வேலை செய்தாலும் நிகழக் கூடிய படிமம். தோட்ட வெளியில் வேலை பார்ப்பவர்களும் கட்டுமானப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் திருப்பூர்க் கம்பனிகளில் நிழலடியில் நின்று பணியாற்றுபவர்களும் வெயிலைக் கட்டிக் கொண்டவர்கள்தான். இங்கு வெயில் உழைப்பின் படிமக் கூறு. அதைக் கட்டிக் கொள்வ்பவன் பாட்டாளிக் கூட்டத்தில் பிரதிநிதி.
இன்னும் எழுந்து உட்கார முடியாத ஐந்துமாதக் குழந்தை! மல்லாந்து படுத்திருக்கும்போது அதன் அருகில் இரு கைகளையும் விரித்துநின்றால், கைகளையும் கால்களையும் ஆட்டியபடி, முகத்தில் சிரிப்புமலர் பூக்க எகுறிக்குதிக்கும். இதைக் கூட கவிதையாக்கியிருக்கிறார் ராஜிலா.
கைகளை நீட்டுகிறேன்.
வாரி அணைக்கிறாள்
குட்டி மகள்.
வாரி எடுக்கப் போவது தாய்; வந்து கைகளுக்குள் அடங்கப் போவது குழந்தை; “வாரி அணைக்கிறாள்” என்று குழந்தையின்மீது “பழி” போடுவது தாய்மையின் அளவற்ற பாசப் பிணைப்பு. வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் கவிதையாக்க முடிந்திருக்கிறது என்பது வளமான படைப்பாக்கத் திறன்.
இத்தொகுப்பில் உள்ள 164 ஹைக்கூத் துளிகளும் கடலளவு விரிந்த உட்பொருளைக் கொண்டவை. ஒவ்வொரு துளியையும் அருந்த அருந்த நீரூற்றாய் விரிவடைகிறது. இன்பம், துன்பம், இயற்கை ரசனை என்று வாழ்வின் சகல கூறுகளையும் அழகியலின் சிரிப்பொலியோடு ஆத்ம மொழியில் பேசுகின்றன. இலக்கிய உலகம் கவிஞருக்கு நிகரற்ற தருணங்களைத் தரக் காத்திருக்கிறது. அவரின் பேனா மேலும் கூர்மையும் குளுமையும் கொள்ளட்டும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “சொட்டுச்சொட்டாய் வெயில்” ஹைக்கூ தொகுப்பு |
| ஆசிரியர்: | ராஜிலா ரிஜ்ஸ்வான் |
| வெளியீடு: | அகநி பதிப்பகம் |
| விலை: | ₹.120.00 மட்டுமே |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 தேனிசீருடையான் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

