ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

 

 

 

 

நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம் புழங்கியதால்
சரித்திரத்தின் உள்செல்ல சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.

ஆனால் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த 70 வயதைத் தாண்டிய எனது அத்தை
காலாபாணியை எடுத்துவாசிக்க துவங்கியது எனைஆச்சர்யப்படுத்தியது.
அவர்களே வாசிக்கத் துவங்கிய பின் நாம் சும்மா இருப்பது முறையல்ல என்று
புத்தகத்தை ஆர்வத்துடன்படிக்க ஆரம்பித்தேன். காலாபாணியெனும்
கருப்புத் தண்ணீருக்குள் நானும் நீச்சலடிக்கத் துவங்கினேன். வாசித்து முடிக்கையில் தியாக வரலாற்றின் கண்ணீர் பக்கங்களின் மீதேறி கரையேறினேன்.

இந்நூல் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களை தூக்கிலிட்டபின் நிகழ்ந்த
வரலாற்று நிகழ்வுகளை விவரித்துப் பேசுகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிரான முதல் இந்திய சுதந்திரப் போர் 1801 இல் இருந்தே துவங்கியது என்பதை ஏற்கனவே 1801 என்ற நூலில் ஆதாரங்களுடன் ஆசிரியர் நிறுவியிருக்கிறார். அதைத்தொடர்ந்து அந்த சரித்திர உண்மையின் கண்ணி அறுபடாமல் தொடர்ந்து இழுத்துச் செல்கிறார். எந்த இடத்திலும் பொய்யும் புனைச் சுருட்டும் இல்லை. 500 பேரை தூக்கிலிட்டு 73 பேரை நாடு கடத்திய கொடூர வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பதிவு செய்யவே இல்லை என்பது எவ்வளவு பெரிய இருட்டடிப்பு. அத்தனை ஆதாரங்களையும் ஆசிரியர் தூக்கிப்போடுகிறார்.

நாடுகடத்தப்பட்ட 73 தியாக வீரர்களையும் பெயர் ஊர் இன்னபிற அடையாளங்கள் யாவற்றையும் ஆங்கிலேயர்களின் ஆவணங்களில் இருந்து அள்ளித்தருகிறார். சிவகங்கை காளையார்கோவில் துவங்கி சுமத்திரா தீவு வரை சரித்திரத்தின் பாதம் பற்றி உண்மையைத்தேடி அலைந்திருக்கிறார். காலத்தை எழுதுபவர்கள் பெரும்பாலும் வரலாறுகளை அதீதப் புனைவுகளாக்கி அதன் உண்மைத் தன்மைகளை நீர்த்துப்போக செய்துவிடுவார்கள். ஆனால் ஆசிரியரோ வரலாற்றின் பக்கங்களை உண்மைகளால் நிரப்பி மிக மெல்லிய புனைவை எழுதிச் சென்றுள்ளார். ஆகவே இந்நூல் பெருமதிப்பு பெருகிறது. துவக்கத்தில் இருந்த வாசிப்பு தடைக்கும் அதுவே காரணமாகிறது. 100 பக்கங்களை கடந்ததும் அதுவே நம்மை உள்ளிழுத்துக்கொள்ளவும் காரணமாக அமைகிறது.

ஆங்கிலேயர்கள் போராட்டங்களை ஒடுக்க பல்வேறு குரூர தண்டனைகளை இந்திய மக்களுக்கு வழங்கினர். அதில் ஒரு பகுதியே காலாபாணியெனும் தீவாந்திரத் தண்டனை. அந்த வார்த்தையை கேட்டதுமே கேட்பவர் அனைவரும் அச்சத்தால் உறைகின்றனர் என்பதில் இருந்தே அந்த தண்டனையின் கொடூரத்தை அறியமுடிகிறது. அரசன் வேங்கை பெரியஉடையணத்தேவன் சின்னமருது மகன் துரைசாமி துவங்கி அரசப் பரிவாரங்கள் உதவி செய்தோர் என73 பேரை கைது செய்து சிவகங்கை மேலூர் மதுரை திருமங்கலம் தூத்துக்குடி வழியாக சுமத்திரா தீவு வரை பயணிக்கிறது. போராட்டக்காரர்களின் துயர்மிகு வாழ்வு கொடூர மனம் படைத்த வெள்ளையர்களும் மனிதநேயமுள்ள வெள்ளையர்களும் சேர்ந்தே பயணிப்பது மனித வாழ்வியலின் எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

கப்பல் பயணத்தில் 3 பேர் இறப்பதும் பலர் மனநிலை பிறழ்ந்த நிலையில் பயணிப்பதும் துயரத்தை அடர்த்தியாக்குகிறது. ஒவ்வொரு தீவாக இறங்க அனுமதி மறுக்கப்பட்டு கடைசியில் பினாங்கு தீவில் கைதிகள் அடைக்கப்படுகிறார்கள். அங்கே உடல்நலக்குறைபாடால் 10 கைதிகள் இறக்கின்றனர். பினாங்கு தீவில் குற்றவிசாரணை நடத்தப்பட்டு அரசன் பெரிய உடையணத்தேவன் மட்டும் தனியே பிரித்து பென்கோலன் தீவில் சிறைவைக்கப்படுகிறார். சிவகங்கை சீமையின் கடைசி மன்னர் சிறைக்கொட்டடியில் நான்கு மாதம் துன்புற்று ஒரு அனாதையாய் உயிரிழக்கிறார் என்று சரித்திரத்தை கண்ணீருடன் நிறைவு செய்கிறார். நமது விழிகளிலும் கண்ணீர் வழிந்தோடுகிறது.

சுதந்திரப் போரில் உயிரை விலையாகக் கொடுத்த எண்ணற்ற வீரர்களின் மகத்தான தியாகங்கள் இன்றைய இந்திய மண்ணில் நினைவுகூறப்படும் அவலம் கண்டு மனம் வெதும்புகிறது. உடனடியாக கொல்லப்பட்டிருந்தால்கூட அந்த வீரர்கள் அத்தனை வேதனைப்பட்டிருக்க மாட்டார்கள். காலாபாணியெனும் கொடூர தண்டனை குறித்த பிம்பங்களை சன்னஞ் சன்னமாக விஷ ஊசியென மனதில் செலுத்தி அலை கடல்வழியே அலைகழித்து உளவியல்ரீதியான பச்சைப் படுகொலை செய்கிறார்கள். ஆதாரங்கள் புகைப்படங்கள் யாவற்றையும் பின்னிணைப்பு செய்துள்ளார் ஆசிரியர். 73 காலாபாணி கைதிகள் அனைவரின் பெயர் பிற விபரங்கள் உட்பட அத்தனையும் துல்லியமாக பதிவு செய்துள்ளார். இந்த 73 பேரில் இடைநிலை சாதிகள் முற்பட்ட சாதியினர் கிறித்துவர் இஸ்லாமியர் ஏன் ஒரு அய்யர் கூட இருக்கிறார் ஆனால் பட்டியலினத்தவர் பற்றிய விபரம் இல்லை அது ஒன்று நெருடலாக இருக்கிறது அது ஏன் என்பதும் கேள்வியாக இருக்கிறது.

சிறைவைக்கப்பட்ட தீவுகள் கொட்டடிகள் சமாதிகள் என தேடிச் சேகரித்த தரவுகள் யாவையும் படப்பதிவிட்டுள்ளார். காலத்தின் பின்சென்று ஒரு உண்மையான வரலாற்றை வாசிக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம். இந்த நூலின் வெற்றி ஆசிரியர் இராஜேந்திரன் அவர்கள் எழுதிய பிற நூல்களையும் வாசிக்கத் தூண்டுகிறது. நிச்சயம் வாசிப்பேன் நூலை வாசித்து முடித்த எனது அத்தையிடம் நூல் குறித்து கேட்டேன். கண்ணீர் மல்க ஒரு அரசனாக இருந்த வேங்கை பெரிய உடையணத்தேவன் தனிமைச் சிறையில் இறந்துபோவதும் கூட இருந்த நாய் வெள்ளையனிடம் தன் கண்ணீர் கதையை கூறுவதும் அந்த நாய்க்கு வெள்ளையன் என்று பெயரிட்டு வளர்த்த அவரின் தேசப்பற்றும் மிக நெகிழ்வாக இருந்தது என்று கூறினார்.

வெள்ளையன் என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்ட நாய் புனைவாக கூட இருக்கலாம். ஆனாலும் உண்மையான கதாபாத்திரமாக வாசக நெஞ்சில் உலவுவது மிக நெகிழ்வாக இருக்கிறது. உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது ஒரு எளிய வாசிப்பில் உள்ளவரை கூட நாவலின் உள்ளடக்கம் கட்டிப்போட்டிருக்கிறதென்றால் நிச்சயமாக சாகித்ய அகாடமி விருது வாங்கிய நூலாசிரியர் ஜெயித்திருக்கிறார் என்றே கூறலாம். டாக்டர் மு.ராஜேந்திரன். இ.ஆ.ப அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர் மு.ராஜேந்திரன். இ.ஆ.ப
பக்கம்: 534
விலை: 650
பதிப்பகம்: அகநி வெளியீடு

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
ctamilraj@gmail.com

 

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Show 1 Comment

1 Comment

  1. Sundara Palanivel

    இந்த புத்தகத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். தோழர் தமிழ்ராஜ் அவர்களின் அறிமுகம் மிக சிறப்பு. இந்த புத்தகத்தின் கருப்பொருள் இது வரை யாரும் கூறாதது என்று அறிந்ததும் உடனே வாங்கி படித்தேன் தோழர் தமிழ் ராஜ் கூறியது போல் முதலில் சிறிது தடுமாற்றமாக இருந்தது நிறைய வரலாற்று கதை மாந்தர்கள் அத்தியாயங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் மாறி மாறி வந்ததும் வாசிக்க சிரமமாக இருந்தது. ஆனால் வாசித்து முடிந்த பொழுது நெஞ்சம் அடைத்தது இரண்டு மூன்று நாட்கள் அதிலிருந்து விடுபட முடியவில்லை. பிரித்தானியர்களின் கயமை தனமும் நம் வீரர்களின் கையுறு நிலையும் படிக்கும் பொழுது இருப்பு கொள்ளவில்லை. மன்னரின் கடைசி அத்தியாயத்தை படிக்கும் பொழுது அந்த வேதனையை நானே அனுபவித்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. துரைசிங்கத்தை பற்றிய செய்தி இந்த உலகுக்கு தெரியாமலே போனது அதை அறிந்து கொள்ள இந்த சமூகம் முற்படாமல் போனதும் சாபக்கேடே . தோழர் சே குவாரா வின் கல்லறை நாற்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கியூபாவிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ததை நினைவு கூறுகிறேன். இந்த நாட்டின் இறையாண்மை காக்க போராடியபோராளிகள் அனைவரின் வீரத்திற்கும் எனது சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவிக்கிறேன். மிக சிறப்பான நூல் தந்த நூலாசிரியருக்கு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *