காலா பாணி- டாக்டர். மு. ராஜேந்திரன் இ.ஆ.ப ( Kaala paani : Dr.M.Rajendran )

“காலா பாணி” நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசனின் கதையைச் சொல்லிடும் வரலாற்று நாவல்

இந்திய அரசுப் பணி அதிகாரியாக இருந்த டாக்டர் மு.ராஜேந்திரன் இயற்கை ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர் என்று பன்முகத் திறன் பெற்ற ஆளுமையாவார். சோழர்காலச் செப்பேடுகள், பாண்டியர்காலச் செப்பேடுகள், சேரர்காலச் செப்பேடுகள், பல்லவர்காலச் செப்பேடுகள், பாதாளி, 1801, வடகரை-ஒரு வம்சத்தின் வரலாறு, யானைகளின் கடைசி தேசம், சட்ட வல்லுநர்- திருவள்ளுவர், வெயில் தேசத்தில் வெள்ளையர்கள், செயலே சிறந்த சொல் ஆகிய நூல்களை எழுதி பல வகைமையான படைப்புகளிலும் தடம் பதித்து சாதித்துள்ளார். தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, கம்பம் பாரதி தமிழ்ச் சங்க விருது, கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கான விருது போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ள இராஜேந்திரன் ‘காலா பாணி நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்.

டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு – NaanMedia
நூலாசிரியர்  : டாக்டர். மு.             ராஜேந்திரன்

தென் தமிழகம் இந்திய விடுதலைப் போராட்டத் தியாகச் சரித்திரத்தைத் தொடக்கிவைத்த பெருமை கொண்டது. வீரமும், தீரமும் நிறைந்த அந்த வரலாற்றின் துவக்கப் புள்ளிகளாய் புலித்தேவன், வீர பாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது பாண்டியர்கள் போன்றோர் இருந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தென் தமிழ்நாட்டின் தற்போதைய சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் 1801ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கு எதிராக வீரஞ் செறிந்த போரை நிகழ்த்தி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றுள்ளார். அந்தப் போரையே இந்திய நாட்டின் முதல் விடுதலைப் போராகக் கொள்ள வேண்டும் என்று ‘தென்னிந்தியப் போராளிகள்’ எனும் தன்னுடைய வரலாற்று நூலில் வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யன் தக்க ஆதரங்களுடன் தெளிவுறுத்துகிறார். அந்தப் போரின் முடிவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர்களை கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் கொடூரமாகத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் வெறி அத்துடன் அடங்கவில்லை. 1796 முதல் 1801ஆம் ஆண்டு வரையிலும் சிவகங்கையின் அரசராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவர் உள்ளிட்ட 73 பேரை காலா பாணிகளாக பினாங்கிற்கு நாடு கடத்தினர், ‘வேங்கை’ என்றழைக்கப்பட்ட இந்த அரசரே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் ”முதன் முதலாக நாடு கடத்தப்பட்ட அரசர்” என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர் ஆவார். செந்நீர் சிந்திப் போராடிய அந்த வரலாறு மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருவது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக, இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாக இருந்து வருகிறது. இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்திடும் முகத்தான் ’காலா பாணி’ எனும் நாவலை எழுதி நாவலாசிரியர் மு.இரஜேந்திரன் தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

திருமயம் கோட்டையில் 73 போர்க் கைதிகளை அடைத்து வைத்த கம்பெனி அதிகாரி லெப்டினென்ட் ராக்கெட் மேலதிகாரிகளின் கட்டளைக்காகக் காத்திருப்பதில் `காலா பாணி’ நாவல் தொடங்குகிறது. கைதிகளை இருவரிவராக இரும்பு சங்கிலிகளால் பிணைத்து திருமயத்திலிருந்து மதுரைக் கோட்டைக்கும், மதுரையிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வரைக்கும் நடத்தியே கூட்டிச் செல்கிறான் லெப்டினென்ட் ராக்கெட். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ’அட்மிரல் நெல்சன்’ என்ற பழைய கப்பலில் ஏற்றி அவர்களை பினாங்கிலிருக்கும் காரன் வாலீஸ் கோட்டைக்குக் கொண்டு போகிறான். அரசர் வேங்கையை மட்டும் பினாங்கிலிருந்து மீண்டும் கப்பலில் கூட்டிச்சென்று சுமத்திரா தீவின் பென்கோலன் துறைமுகத்திலிருக்கும் மால்பரோ கோட்டையில் சிறையில் அடைக்கிறான். தனிமைச் சிறையில் உடலாலும், மனதாலும் வாடிவதங்கும் வேங்கை பெரிய உடையணத் தேவர் நான்கு மாதம் கழித்து உயிர் நீப்பது வரை இந்த நாவல் விரிந்து செல்கிறது. கைதிகளுடன் இந்தப் பயணத்தில் நாமும் ஒருவராக இருப்பது போன்ற பிரமையை நாவலாசிரியர் உருவாக்குகிறார்.

மதுரைக் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ உயரதிகாரி கர்னல் அக்கினியூ விசாரணை நடத்தி தண்டனை வழங்குகிறான். கைதிகளை காலா பாணிகளாக பினாங்குத் தீவிற்கு கடத்துவது என்று கொடிய தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனைச் செய்தி இடியென இறங்குகிறது. சிறைப்பட்டவர்கள் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதிகளாகத் தென்படுகிறார்கள். அந்த தியாகிகளின் பட்டியலில் அரசர் வேங்கை, அவரது மைத்துனன் பனிரெண்டு வயது சிறுவன் துரைசாமி, ஐந்து பாளையக்காரர்கள், குளத்தூர் பாளையக்காரரின் பேரன் ராமசாமி என்ற மற்றுமொரு சிறுவன், கத்தோலிக்க கிறித்துவரும் மீனவத் தலைவருமான மணக்காடு சாமி, திண்டுக்கல் புரட்சியாளர் சேக் உசேன் என்ற துலுக்கர், அமல்தார் ஜெகன்நாத அய்யர் என்ற பிராமணர், மறவர்கள், நாயக்கர்கள், சேர்வைக்காரர்கள், மணியக்காரர்கள் என்று அன்றைய தமிழ்நாட்டின் அனைத்து சாதி, சமய மக்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர். சாதி, சமய வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து அனைவரும் சேர்ந்து போராடிப் பெற்றதுதானே இந்திய விடுதலை!

இதற்கிடையில் பெரிய மருதுவின் மகளும், வேங்கை பெரிய உடையணத் தேவரின் மனைவியுமான மருதாத்தாள் கம்பெனி அதிகாரிகள் பலரையும் சந்தித்து தன் கணவர் வேங்கை, தன்னுடைய பனிரெண்டு வயது தம்பி துரைசாமி மற்றும் அனைத்து கைதிகளையும் விடுதலைச் செய்யச் சொல்லிக் கெஞ்சுகிறார். அவளின் வேண்டுகோளை ஈவிரக்கமற்ற வெள்ளை அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.

நீண்ட நெடிய கப்பல் பயணம் தொடங்குகிறது. கப்பலில் போதிய அளவு குடி தண்ணீர் இல்லை. பயணக் காலத்தில் மழையும் பெய்யவில்லை. கைதிகள் பலரும் கொடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். பயணத்தின்போது நோய் வாய்ப்பட்ட ஒருவர் இறந்து போகிறார். கடலில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 70 பேர் மட்டுமே பினாங்கு துறைமுகம் சென்று சேருகின்றனர்.Kaala paani : Dr.M.Rajendran IAS: Amazon.in: Books

இப்போது அந்தக் கைதிகளின் எதிர்காலம் பினாங்குத் தீவின் லெப்டினென்ட் கவர்னர் வில்லியம் ஸெயித் பொறுப்பில் சிக்குகிறது. கவர்னர் அலுவலகத்தில் வேலையிலிருக்கும் அண்ணாமலை செட்டியார் அந்தக் கைதிகளுக்கு சற்று உதவியாக இருக்கிறார். இருப்பினும் மன நோயாலும், உடல் நோயாலும் பாதிக்கப்பட்டு பத்து கைதிகள் பினாங்கில் இறந்து போகின்றனர். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதிகள் அனைவரையும் பினாங்குத் தீவில் விடுதலை செய்வதாக அறிவிக்கும் கவர்னர் வில்லியம் ஸெயித் அரசர் வேங்கையை மட்டும் விடுவிக்கவில்லை. அவரை சுமத்திரா தீவின் மென்கோலன் துறைமுகத்திலிருக்கும் மால்பரோ கோட்டையில் வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க ஆணை பிறப்பிக்கிறார். மீண்டும் கப்பல் அரசரை மட்டும் ஏற்றிக்கொண்டு சுமத்திரா தீவை நோக்கிச் செல்கிறது. துயரக் காலத்தில் தங்களுக்குத் துணையாயிருந்த அரசரை தங்களிடமிருந்து பிரிக்க வேண்டாம் என்று மற்றவர்கள் கதறி அழுகின்றனர். அவர்களின் அழுகுரல் ஆங்கிலேய அதிகாரிகளின் காதுகளை எட்டவில்லை. சிறையிலிருந்து விடுதலை பெற்றவர்கள் மலேசியாவின் தகரச் சுரங்கங்களில் அடிமைகளைப் போல் வேலை செய்து வாழ்நாளைக் கழிக்கின்றனர்.

சிவகங்கை அரசி வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சியை மணந்த சிவகங்கைச் சீமையின் அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவர் வெள்ளச்சி இறந்த பிறகு பெரிய மருதுவின் மகள் மருதாத்தாளை மணந்தார். கிழக்கிந்திய கம்பெனி வசமிடருந்து சிவகங்கைச் சீமையைக் காப்பாற்றிட நடந்த போரில் சிறைப்பட்டு சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி எங்கோ ஓர் தீவில் தனிமைச் சிறையில் உயிர் துறக்கிறார். இத்தகு மாபெரும் வீரமும், தியாகமும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம் பெறாமல் போவது மிகப் பெரிய விடுதல் அல்லவா? “இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857இல் வட இந்தியாவில் நடந்த ’சிப்பாய்க் கலகம்’ அல்ல. அதற்கு 56 ஆண்டுகளுக்கும் முன்னரே மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், விருப்பாச்சி கோபால்நாயக்கர், வேங்கை பெரிய உடையணத் தேவர் போன்றோர் சிவகங்கையில் நடத்திய போரே இந்தியாவின் முதல் விடுதலைப் போர்” என்று உலகுக்கு உரக்க உரைக்கிறார் நாவலாசிரியர் இராஜேந்திரன்.

வேங்கை பெரிய உடையணத் தேவர் பயணித்த வழியில் தானும் பயணித்து வரலாற்றை நேர்த்தியுடன் சொல்லியுள்ளார் நாவலாசிரியர். கள ஆய்வு மேற்கொண்டும், ஆவணங்களைத் தேடியலைந்து உண்மைகளைச் சேகரித்தும் அவர் இந்த நாவலை எழுதியுள்ளார். சிவகங்கையில் தொடங்கி திருமயம், மதுரை, தூத்துக்குடி, பினாங்கு, சுமத்திரா தீவின் மால்பெரோ கோட்டைவரை வாசகர்களை அவர் தன்னுடன் கைப்பிடித்துக் கூட்டிச் செல்கிறார். எது வரலாறு- எது புனைவு என்று புலப்படாமல் ஒன்றோடொன்று கலந்திருப்பதே இந்த வரலாற்று நாவலுக்கான வெற்றியாகும். அதனை அடைவதில் நாவலாசிரியர் முழுமையாக வெற்றி கண்டுள்ளார்.

காலா பாணி நாவல் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் தொடங்கி 1802ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம்நாள் வேங்கை பெரிய உடையணத் தேவர் இறக்கும் வரையிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இருநூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிப்பது வாசகர்களுக்கு அலாதியான அனுபவமாகிறது.

நூலின் தகவல்கள் 

நூல் : “காலா பாணி”

நூலாசிரியர்  : டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப

வெளியீடு : அகநி வெளியீடு

விலை : ரூ650.00

பக்கம் : 536

 

நூலறிமுகம் எழுதியவர் 

பெ.விஜயகுமார்

Secretary
Indian School of Social Sciences,
Madurai Chapter,
Madurai.

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *