‘புத்தகங்கள் என்பன கைக்கடக்கமாகச் சுமந்து செல்லக்கூடிய மந்திரப் பெட்டி’ என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங். காலமே போதிமரம் என்னும் இந்நூலை நான் பெற்றுவந்ததிலிருந்து இன்றுவரை நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் என்னோடு எடுத்துச்சென்றுகொண்டே இருக்கிறேன். மிகப் பிடித்துப்போகும் புத்தகங்களை ஒரே மூச்சில் வாசித்துமுடிப்பது என் பழக்கம். இடையில் தடைகள் ஏற்பட்டால் மீண்டும் முதலிலிருந்து படிப்பது என் வழக்கம். அப்படி ஏற்பட்ட தடைகளினால், பாதி வரை கடந்துவிட்ட பிறகும் நான்காவது முறையில் முழுதாகப் படித்துமுடித்தேன்.
அட்டைப் படத்தைப் பார்த்தமாத்திரத்தில் பளிச்சென்று ஒரு மின்னல். ஒற்றை அரசு இலை ஒரு கடிகார ஊசலைப் போல் (Pendulum) தொங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது அட்டைப் படம். காலமே போதிமரம் என்னும் இந்நூற்தலைப்புக்கு எத்துணைச் சிறந்த முகப்புப் படம்.
கிமு 300களில் கிரேக்கத்தில் வாழ்ந்த கவிஞரும், நாடகாசிரியருமான ‘மெனேன்டர்’ என்பவரே முதன்முதலில் ‘காலமே எல்லாக் காயங்களும் மருந்து’ என்று கூறியதாக அறிகிறோம். ஆனால், இந்நூலாசிரியர் என்.குமார் காலம் காயங்களை ஆற்றும் மருந்து மட்டுமன்று. காலமே நமக்கு ஞானங்களை வழங்கக்கூடிய போதிமரம் என்றே குறிப்பு காட்டுகிறார்.
எல்லார்க்கும் அது அரசமரம்தான். புத்தனால்தான் அது போதி மரமானது. காலம் எல்லார்க்கும் பொதுவானதுதான். சிலருக்குத்தான் அது போதி மரமாகிறது. காலத்திடம் கற்றுக்கொள்ள, ஞானம் பெறத் தயாராக இருந்தால் காலம் நமக்குமே போதி மரமாகும் என்று நாம் உணரவேண்டும்.
காலம் ஒரு போதி மரமாக நின்று, அவருக்குத் தந்த நினைவுகளையும் அனுபவங்களையும் ஓர் அற்புதமான நூலாக்கித் தந்துள்ளார் ஆசிரியர்.
மொத்தம் பதினைந்து அத்தியாயங்கள். ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை போன்றவை. சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் அவை சிறுகதைகள் என்பதையும் தாண்டி ‘நினைவடுக்குகளின் சில தாள்கள்’ எனலாம். அவற்றைப் படிக்கும்போது ஆசிரியர் எத்துணை அழகான நாள்களை, எத்தனை அன்புமிகு, உணர்ச்சிமிகு மனிதர்களைக் கடந்துவந்துள்ளார் என்பது புலனாகின்றது. சில காட்சிகளை, சில சூழல்களை, சில உணர்ச்சிகளை விவரிக்க அவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகளும் படிமங்களும் மிக ஆழமானவையாக உள்ளன.
முதல் அத்தியாயமான ‘ஒரு இராஜகுமாரன் சம்பவம்’இல் ‘இனக்கவர்ச்சிகூட
இசையோடு ஏற்பட்டது’ என்கிறார். இனக்கவர்ச்சி என்பது விடலைப் பருவத்தில், ஏன் வருகிறது என்று தெரியாமலேயே வரும் தவிர்க்கயியலாத ஓர் உணர்வு.
அது உயிரியற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளக் கையாளும் தந்திரம்.
இசையோடு இனக்கவர்ச்சி ஏற்பட்டது என்பது, உயிர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளத் தேடும் இன்னோர் உயிர் இசை என்றாகிறது. எத்தனை ஆழம்.
அடுத்த வரியிலேயே ‘தூங்காத இரவுகளால் முகத்தில் இசைப்பருக்கள் தோன்றின’ என்கிறார். ஆண்கள் பருவமெய்தியதைக் காட்டிக்கொடுப்பவை இந்தப் பருக்கள்.
அப்பருக்கள்கூட இசைசெய்த ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டவை என்றாகிறது. (‘என் ஹார்மோன்கள் வாசித்த ஹார்மோனியம் என்மீசை’ என்று நான் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது).
பின்னோர் இடத்தில் ‘செய்தது தவமாக இருந்தால் கிடைப்பது வரமாகத்தானே இருக்கும்’ என்கிறார். பெரும் நம்பிக்கை தரும் சொற்கள். இப்படி இசையோடு பயணித்து, இசைஞானி எப்படி அவரது செவிக்குள் நுழைந்தார் என்பதிலிருந்து இசைஞானியின் அறைக்குள் அவர் நுழைந்தது வரை சுவைபடச் சொல்லியிருக்கிறார் முதல் அத்தியாயத்தில்.
மன்னிப்பூ என்ற அத்தியாயத்தில் ஒரு மஞ்சட்பூவிடம் மன்னிப்புக் கோருவதில் உயிர்நேயத்தைப் போதித்த நம் வள்ளல் பெருமானை நினைவூட்டுகிறார். எழுத்தின் மீதும், அந்தப் பூவின்மீதும் எவ்வளவு காதல் இருந்தால் ‘உன் வாசம் நுகர்கிற சாக்கில் முத்தமிட்டிருக்கிறேன்’ என்று எழுதமுடியும்…
நான் ஆர்? என் உள்ள மார்? ஞானங்கள் ஆர்? என்ற மாணிக்கவாசகரின் வரிகளோடு, ‘காலத்திற்குப் பிடித்த வார்த்தை ‘கேள்வி’! என்று முடித்த ‘ஆர்’ என்னும் அத்தியாயம், ‘உன்னையறிவதற்கோ வுடலெடுத்தேனென்றென்னைச் சின்னஞ்சொல் வார்கட்கென் செய்வேன் பராபரமே’ என்று குணங்குடி மாஸ்தான் சாகிபு பாடிய பராபரக்கண்ணி வரை என்னை இழுத்துச் சென்றது.
Foretelling என்ற உத்தியில் அமைந்த ‘ஆகாயப் பவழமல்லி’ அத்தியாயத்தை மிக இரசித்தேன். பவழ மல்லிக்கும் நாயகி நர்மதாவுக்குமான ஒப்பீடு மிக அழகாக, இயல்பாக அமைந்திருந்தது. தரையில் விழும் பவழமல்லிப்பூவைச் சேகரிப்பதுதான் வழக்கம். ஒருமுறை என் தங்கை பவழமல்லிப்பூவைத் தலையில் சூடிக்கொள்ளக் கேட்க, என் தந்தை அவரது ஒரு வேட்டியை அத்தரையில் விரித்துக் கிடத்திவைத்திருந்து, காலையில் சேகரித்துக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.
‘அம்மா ஒரு.. ஒரு மாத மனைவி’ என்றொரு வித்தியாசமான சொல்லாடல் மற்றும் சபேசன் என்ன கேட்டிருப்பார்?, தையல் நாயகி என்ன சொல்லியிருப்பார்? போன்ற விடையறியாக் கேள்விகளோடு நெஞ்சில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டு முடிகிறது ‘அம்மாவுக்கு வயது பதினெட்டு’.
‘காலம் எதையும் கொடுக்கும். எடுக்கும். நிரந்தரமாய் அன்பை மட்டும் விட்டுவைக்கும்’ என்ற அடிக்குறிப்போடு முடியும் ‘நெஞ்சே நெஞ்சே’ வின் கிருஷ்ணன் சார் போன்ற மனிதர்களை நான் சந்திக்கும்போதெல்லாம், நான் அவர்களாக இருக்கக்கூடாதா என்றே தோன்றும். கூடவே ‘உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்’ என்னும் பாரதியின் பாட்டும் ஒலிக்கும்.
‘அவர் வீட்டுப் பல்லி’ பாரதியோடு நான் வாழ்ந்த உணர்வைத் தந்தது. நானும்கூட அவர் வீட்டுப் பல்லிதான். ஏன், நாமெல்லாரும்தானே!
எல்லா அத்தியாயங்களையுமே மிக அற்புதமாக எழுத்தாக்கம் செய்திருக்கிறார். மேலும், நூற்தலைப்பான காலமே போதிமரம் என்னும் தலைப்பையொட்டி, ஒவ்வோர் அத்தியாய முடிவிலும் ஓர் அடிக்குறிப்பாக, காலம் தந்த ஞானானுபவத்தை ஒருவரிக்கவிதையாக்கி அழகூட்டியிருக்கிறார் ஆசிரியர் என்.குமார். இந்நூலுக்கு ‘அனுபவங்களின் நிழல்’ என்று துணைத் தலைப்பு கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
நடந்தவற்றைக் கதையாக எழுதும்போது அப்படியே எழுதவேண்டியதில்லை என்பார் ஜெயகாந்தன். சுஜாதாகூட ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் சிறுகதைத் தொகுப்பில் உள்ளவற்றில் எத்தனை விழுக்காடு உண்மை, எத்தனை விழுக்காடு புனைவு என்பது தனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
போலவே, ‘காலமே போதிமரம்’ இல் உள்ள சிறுகதைகளில் எதுயெது உண்மை, எதுயெது புனைவு என்பதை ஆராய்வதைக் காட்டிலும், அவற்றில் மிகுந்திருக்கும் பல உண்மைகளையும், அற்புத உணர்வுகளையும், தத்துவங்களையும் உணரவேண்டியதே மீப்பெரும் கடமையாகும்.
மொத்தத்தில் ‘காலமே போதிமரம்’ தியானிக்கும் உணர்வைத் தரும் ஒரு நூல்.
-பித்தன் வெங்கட்ராஜ்
கவிஞர், பாடலாசிரியர்.
நூல்: காலமே போதி மரம்
ஆசிரியர்: என்.குமார்
வெளியீடு: அகநி வெளியீடு
விலை : ரூ 150
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.