காலாபாணி (Kaalapani) மு.ராஜேந்திரன்

டாக்டர்.மு.ராஜேந்திரன் இஆப, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர், அவர்கள் எழுதிய நூல் காலா பாணி, நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை. இது சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இந்நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய காலத்தை படம் பிடித்துக் காட்டும் நூல். இது வரலாற்றின் சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் அல்ல. முற்றிலும் வரலாற்று ஆவணங்களை அடிப்படையாக வைத்து எந்தவிதமான கற்பனையும் கலக்காத ஒரு வரலாற்று இலக்கியம்.

முற்றிலும் ஆவணங்களுடன் கூடிய வரலாறாக இருந்தாலும் இதில் காணப்படும் வர்ணனைகள் அதை இலக்கியமாக மாற்றியுள்ளது. ஆதரங்களுடன் கூடிய ஆய்வு நூலாக மிளிர்கிறது. அக்காலத்திய உறவு முறைகள் பழக்க வழக்கங்கள், மந்திர மாயங்கள், நிலவி வந்த மூடநம்பிக்கைகள், தட்ப வெட்ப நிலைகள், இயற்கை விவரணைகள் ஆகியன இந்நூலை ஒரு உயர்ந்த இலக்கிய அந்தஸ்த்திற்கு எடுத்துச் செல்கிறது.

இந்தியா பிரிட்டிஷ் அரசுக்கு அடிமை ஆகுவதற்கு முன் இந்தியாவில் வியாபாரம் பார்க்க வந்த ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போத்துக்கீசியர்கள் எப்படி இங்கு ஆண்டு கொண்டிருந்த பல்வேறு சமஸ்தானங்களின் ராஜாக்கள், பாளையக்காரர்கள், சுல்தான்கள், நவாப்புகளை படிப்படியாக அடிமைப்படுத்தி பிரிட்டிஷ் ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலம்.

அப்பொழுது உள்ளூர் ராணி/ராஜாக்கள்/ அவர்களின் தளபதிகள், சமஸ்தானங்களின் மந்திரி பிரதானிகள்/ விசுவாசிகள் எவ்வாறு தங்கள் ஆட்சியைக் காப்பாற்றி நிலத்தையும் மக்களையும் காப்பாற்ற நடத்திய போராட்டங்கள் /உயிர்த் தியாகங்கள் செய்த ஆதிக் காலக்கட்டம். அதே போல் கிழக்கிந்தியக் கம்பெனியும் அதனை காப்பாற்றுவதற்கான படைகளும் செய்த சூழ்ச்சிகளும், துரோகங்களும், கொலைபாதகச் செயல்களும் அதற்குத் துணையாக இருந்த பிரிட்டிஷ் அரசும் செய்த கொடூர காலக்கட்டம்.

M.K.Stalin on X: "'காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' எனும் வரலாற்றுப் புதினத்துக்காக @sahityaakademi விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு ...

இந்நாவலில் முக்கிய கரு என்பது சிவகங்கை சமஸ்தானம் எவ்வாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டது, வீரநங்கை வேலு நாச்சியார் (ஜான்ஸி ராணிக்கு முன்னரே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டவர்) மடிந்ததும், அதன் பின்னர் வேலு நாச்சியாருக்குப் பின் அவரது மருமகன் வேங்கை பெரிய உடையணத் தேவர் அரச பதவியை ஏற்றதும், அதன் பின்னும் சொந்த சமஸ்தானத்திற்காக மட்டுமல்லாமல் தென் இந்தியா முழுமைக்கான ஜம்புப் பிரகடனம் செய்து தொடர்ந்து போரிட்ட மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதும், அதற்கு பின் சிவகங்கை அரசரும், சின்ன மருதுவின் மகனுமான 12 வயது பாலகன் துரைச்சாமி உட்பட 73 பேர்கள் காலா பாணியாக கடல் வழியாக நாடு கடத்தப்பட்டதும், பலர் கடல் பயணத்தின் போதும், சிறைகளிலும் மடிந்தும் இறுதியாக வேங்கை தனிமைப்படுத்தப்பட்டு பென்கோலன் தனிச் சிறையில் 34 வயதில் மரணமடைவதுடன் நாவல் முடிவடைந்தாலும் பிற்சேர்க்கையில் சிறுவன் துரைசாமி இளைஞனாய் மதுரை திரும்பி வருகிறார் என படிக்கும் போதே மகிழ்ச்சி வரும் போது அவர் வண்டியூரில் மரணமடைந்து விடுகிறார் என்ற பதிவு நெஞ்சத்தை உருக்குகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் அவர் பினாங்கிலேயே மரணித்து விட்டார் என்கிறார்கள்

காலா பாணி என்பது கருப்புத் தண்ணீர் என்று நேரடி அர்த்தம் இருந்தாலும் போராளிக்குக் கொடுக்கப்படும் தீவந்திரத் தண்டனை என்று அதற்குப் பெயர் என்கிறார் ஆசிரியர். சிவகங்கை சமஸ்தான ராஜா உள்ளிட்ட 73 போராளிகள் கால்களில் விலங்கிடப்பட்டு விலங்கினும் கீழாக கப்பலில் கடத்தப்பட்டு பினாங்கிற்கும் பின்னர் ராஜா வேங்கை உடையணத் தேவர் மட்டும் சுமத்ராத் தீவிலுள்ள பெங்கோலன் தீவில் சிறையில் அடைக்கப்பட்டு கொசுக்கடி, எலிக் கடி, சரியான உணவு இல்லாமை ஆகியவற்றினால் அவர் ஐந்தே மாதத்தில் மரணமடைகிறார். துரைசாமி அவரது பையில் போட்டிருந்த கொடுக்காப்புளி விதைகளை மரணமடைவதற்கு முன் ஊன்றி விட்டு மரணமடைகிறார். அந்த மரத்தின் அருகில் ஆசிரியர் நின்று எடுக்கப்பட்ட படம் நம் கண்ணில் கண்ணீர் வரவழைக்கிறது. ராணுவ விசாரணைகளில் வேங்கை ஒத்துழைப்பது என்பது தன்னோடு வந்தவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை அவர் கடைசி வரை வைத்திருந்தார்

கப்பலில் ஏற்றுவதற்கு முன்னர் அவர்கள் பெற்ற துயரங்களும், கப்பலில் அவ்ர்கள் சந்தித்த அடக்குமுறைகளும், இடையிலேயே இறந்தவர்கள் கடலுக்குள் தூக்கி எறியப்படுவதும் இடையில் சிலர் பைத்தியமாக மாறிப் பிதற்றுவதும் நெஞ்சைப் பிழிகிறது. பினாங்கு வருவதற்கு முன்னர் வழியில் உள்ள தீவுகளைப் பற்றியும் பினாங்கு தீவில் வாழும் மக்கள் பற்றியும் நாவலின் சிறப்பான பகுதிகள். அந்தக்கால சீனர்கள், சீனப் பெண்கள் குறித்த படப்பிடிப்பும் சுல்தான்கள் வாழ்க்கை முறைகள் நமக்கு அன்றைய காலக் கட்டம் பற்றி நம் முன்னே ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார். பினாங்கில் வாழும் செட்டியாரும் அவர் மனைவி மகள் ஆகியோரும் காலாபாணிகள் தாங்கள் பிறந்த மண்ணின் அரச குலத்தவர், மைந்தர்கள் என அன்பைப் பொழிவதை ஆசிரியரின் எழுத்து நம்மை பிரமிக்க வைக்கிறது.

நூலின் இறுதிப் பகுதியில் 73 காலாப் பாணிகள் பெயர்கள், அவர்களின் குறிப்புகள், வரலாற்றுக் கதை மாந்தர்களாக சமஸ்தான ஆளுமைகள் பற்றியும், கிழக்கிந்தியக் கம்பெனிக்கான ஆட்சியாளர்கள், ராணுவ தளபதிகள் பற்றியும் ஆசிரியர் குறிப்புகள் கொடுத்துள்ளார். அதே போல் சமஸ்தானத்தின் வாரிசுகள் சந்திப்பு, பென்கோலன் கோட்டை என வரலாற்று முக்கியத்துவம் கொண்ட படங்களுடன் வேங்கை அடக்கப்பட்ட சிறையில் தன்னுடைய புத்தகமான 1801 என்பதையும் வேட்டியையும் வைத்து வணங்கியது தாய் மண்ணிற்காகப் போரிட்டவருக்கு நூலாசிரியர் செய்யும் மேன்மையான மரியாதையாகும்.

நூலின் தகவல்கள்: 

நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர். மு.ராஜேந்திரன்,இ.ஆ.ப
விலை: ₹.650
பதிப்பகம்: அகநி
பக்கம்: 536
வெளியான ஆண்டு: ஆகஸ்ட், 2020

அறிமுகம் எழுதியவர்: 

பொ.இராஜமாணிக்கம் 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *