காலச் சிற்பம் - தமிழ் மணவாளன் | KaalaSirppam - ThamizhManavaalan

 

தன்னையும் நின்னையும் உணர வைக்கும் காலச் சிற்பம்

கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, கோபம், துக்கம், ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கவிதை எப்போதும் நம்மோடு இருக்கிறது. மனிதன் எப்போதும் அழகைத் தேடிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய அறிவுக்கும் உணர்வுக்கும் ஒரு வடிவத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். கவிதை அவனுக்கு ஒரு புதையல் என்பார் பேராசிரியர் தி.சு.நடராசன்.

சங்கத் தமிழின் கவிதைப் படைப்பாக்கம் அகம் – புறம் என்ற இரு திசைகளில் பாய்ந்து பிரகாசித்ததை நாமறிவோம்.

அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை போன்றவை அகப்பாடல்களின் முத்திரையெனில், புறநானூறு, கலிங்கத்து பரணி போன்றவை புறப்பாடல்களின் புகழ் பாடுபவை.

பாரதி / கவிமணி / நாமக்கல்லார் / பாரதிதாசன் / சுரதா / கண்ணதாசன்/ஏர்வாடினர், கருமலைத் தமிழாழன் ஆகியோரின் கவித்தூரிகை மரபின் செழுமையை ஓவியங்களாய்த் தீட்டித் தந்தது.

முண்டாகக் கவிஞனின் – வசன கவிதைகள் – ஓர் விதிவிலக்கு, பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சு. பசுவய்யா, எஸ்.வைதீஸ்வரன், சி.மணி, ஞானக்கூத்தன் போன்றவர்களின் கவியோவியங்கள். இவைகளில் அடர்த்தி பரவியிருந்தவை. அக உணர்வுகளும் இருண்மை பற்றிய வியாக்கியானங்களுமே.

வானம்பாடிகளோ சுதந்திர கீதம் இசைத்தனர் புவியரசு, ஞானி, சிற்பி, மு.மேத்தா, சக்திகனல், தமிழ்நாடன், மீரா, சிதம்பரநாதன், அப்துல்ரகுமான், கங்கை கொண்டான் என கவிதையில் ஜனநாயகமும், மக்கள் பிரச்சனைகளும் கலந்து அழகியல் பூசிய (அதிர்வுகளாக) முகிழ்த்தன.

மரபுக் கவிதையாய் தவழ்ந்து புதுக்கவிதையாய் வளர்ந்த இன்றையத் தமிழ்க் கவிதை நவீனம், பின் நவீனம் எனப் புதுப்புது திசைகளில் பாய்ந்தோடும் நதியாகப் பொங்குகிறது.

“நவீனத்துவம் என்பதும் நவீனமயமாதல் என்பதும் வேறு வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேலைச் சூழலில் எதார்த்தவாதத்திற்குப் பின் தோன்றிய ஓர் இலக்கியக் கோட்பாட்டை நவீனத்துவம் என்பர். நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கியப் போக்கைக் குறிப்பதென்றால் நவீனமயமாதல் என்பது பொதுவாக மொழியானது என்பார் அ. மார்க்ஸ்.

தமிழின் பாடுபொருள்கள் மாறின. வடிவம் புதிதானது. உரைநடையிலிருந்து சற்றே விலகி உள்ளடக்கத்தால் புதிய உத்திகளோடு கவிதைகள் உருவாயின. மொழி புதுப்பிக்கப்பட்டது. தமிழின் நவீன கவிதை என ஓர் ராஜபாட்டை உருவாகியது

“என்னைப் புரிவது சுலபம்

என்னைத் தொடர்வது

கடினம்” – (ப.29) எனும் தன் புரிதலோடு வெளிவந்திருக்கும் தமிழ் மணவாளனின் புதியக் கவிதைத் தொகுப்பு – ‘காலச்சிற்பம்’. இரண்டு வரி முதல் இரண்டு பக்கங்கள் வரை, ஏராளமாய், தன் முனைப்புக் கவிதைகள் வாசிக்கும் நம் முகத்தோடு முகம் கண் பார்த்து பேசுகின்றன! வினா எழுப்புகின்றன! விடை சொல்கின்றன.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பிறர் தன்னை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற பெரும் ஆசை இருக்கவே இருக்கிறது. தோழமை. நம்பு என ஒருப் புதியப் பயணம் தொடங்குகையில சக பயணியாக, நாம் ஏற்கும் தோழமை நம்மை புரிந்து கொள்ளவும், நாம் அந்த தோழமையைப் புரிந்து போஷிக்க வேணுமென்பதும் மனதின் அவா.

‘நிலை குலையும் போதெல்லாம் நிமிர்ந்து நிற்கக் கற்றுத் தருகிற தென் கவிதை’ எனும் முதல் பக்க பிரகடன வாசகம் ‘காலச்சிற்பம்’தொகுப்பு முழுக்க நிரவிக் கிடக்கும் துரோகங்களின் வலியை, தோழமையின் உயர்வைப் பேசுகின்றன.

சரியானப் புரிதல் இருப்பின், அவ்விடத்தில் எந்த வித முரண்களுக்கும் முகாந்திரமே இல்லை. என அறுதியிட்டு கூறுகிறது தமிழ்மணவாளனின் இந்த வரிகள் :

நட்பை/ பழகித்தான்/ காப்பாற்ற வேண்டுமெனும்/ கட்டாயமில்லை/ விலகியும் காப்பாற்றலாம் தானே/ (ப.21)

தோழமைகள் தம்மைப் பகிர்ந்து கொள்ளல், சம காலத்தின் அவசியம் சுயங்கள் புரியாத போது தான் முரண்கள், மோதல்கள் எனும் சூறாவளி மையம் கொள்கிறது. இவை உறவுகளுக்கும் பொருந்தும்.

பகிர்தல் என்பது இருளும் ஒளியும் இணையும் அற்புதக் கணத்தின் மாயத்துளி! மகிழ்வுப்பதிவு! அத்தகைய தருணம் அமையாமலேப் போனால்..? உறவின் பிரிவில் உதித்த துயர்க் கோடுகளிவை :

என் கண்பார்த்துக்/ கை பற்றுகிறாய்/ உன் சொற்களின் விஷம் முறிகிறது. (ப.19)

 

நூலின் தகவல்கள் 

நூல் : காலச் சிற்பம்

நூலாசிரியர் : தமிழ் மணவாளன்

விலை : ரூ. 200/-

வெளியீடு : சுவடு 

 

எழுதியவர் 

அன்பாதவன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

One thought on “தமிழ் மணவாளன் எழுதிய “காலச் சிற்பம்” – நூலறிமுகம்”
  1. சிறந்த பதிவு, கவிதை வரலாற்றில் அறியப்பட்டோர் வரிசையில், மரபு, வசன , புது, நவீன வடிவங்களின் மாற்றங்களோடு, ஆழமான கவிதை வரிகளைக் கோடிட்டு காலச்சிற் பத்துக்கு மேலும் மெருகூட்டியுள்ள அன்பாதவனுக்கும், சிற்பத்தை வடித்த தமிழுக்கும் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *