காளி ( Kaali)- நூல் அறிமுகம்
இந்தப் புத்தகத்தில் மொத்தம் பன்னிரெண்டு தலைப்புகள் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பாக இருக்கும். ஒரு கதையைப் படிக்கும்போது, அந்த கதையோடு புத்தகத்தில் பயணம் செய்யும் உரையாடல்களும், உணர்வுகளும் கிடைக்க பெற்றது. இந்தப் புத்தகத்தில் எழுத்தாளரின் எழுத்துகள் மிகவும் எளிமையாகவும், புரியும் படி இருப்பதையும் அறிய முடிந்தது.
பாரசூட் இரவுகளின் பயணம் என்று முதலில் தலைப்புகள் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாக இருக்கும் என்று பார்த்தேன். “கடலோர உப்புக்காற்று மிக இதமான குளிர்மையைப் பரப்பி கொண்டிருக்க, இலவசமாய் வரிசையில் கடக்கும் அப்பகுதியின் துர்நாற்றத்தையும் கொசுக்கடியையும் எல்லோரையும் போல் சகித்துக்கொள்ளும் யசோதா என்ற பெண்ணின் கதை”. சென்னையில் கூவ நதியில் இருந்து பிறந்த யசோதாவின் வாழ்க்கையும், அவள் இரவில் சந்திக்கும் பிரச்சனைகளும், முதலில் குடிசைகளிலும், அடுத்தது பிளாட்பாரத்தில் வசிக்கும் போது சந்திக்கும் அவலங்களை முன்நிறுத்தி பேசுவதாக இந்தப் புத்தகத்தில் இருக்கும். சமூகத்தில் மிகவும் அடித்தட்டில் வாழும் மக்களின் பாதிப்புகளை கண்முன் கொண்டு வந்து எழுத்தாளர் எழுதிருப்பார். கடைசியாக யசோதா பிளாட்பாரத்தில் நாயைப் பார்க்கும் காட்சிகள் மனதில் ஏதோ வலியையும் வேதனையும், உருவாக்கிக் கொண்டிருந்து சிறுகதை செல்கிறது.
” வேண்டாம் சாந்தி யாருக்கும் சொல்லாதீங்க ப்ளீஸ்” என்று டிடிஆர் சாந்தி காலில் விழுந்ததாக புத்தகத்தில் இருக்கிறது. இரயில் பயணங்கள் நிறையப் பயணங்களையும், அனுபவங்களையும் நமக்கு பெற்றுத் தரும். இரயிலில் செல்வது மிகவும் பாதுகாப்பானது என்று நம்பிக்கையோடு பயணம் செய்யும் எத்துணையோ மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதைப் புத்தகத்தில் இருக்கும் பிருந்தா முற்றிலும் ஏற்க மறுக்கிறாள். சாந்தி தொடர்ந்து இரயில் பயணங்களில் இயற்கையை இரசித்து கொண்டே, இரயிலில் சந்திக்கும் மனிதர்களோடு உரையாடிக்கொண்டே பயணம் செய்வாள். ஒரு நாள் இரயில் பயணத்தில் அவள் சந்திக்கும் பிரச்சனைகளை முன்நின்று எப்படி போராடுகிறாள், என்று இரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள் கதை சொல்கிறது.
” உனக்கென்ன கிறுக்கா பிடிச்சுருக்கு? ஏண்டீ நீ மட்டும் இப்படியிருக்க” என்று மீராவின் அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். மீராவும் ஜம்மு காஷ்மீரை நோக்கி அவளுடைய தோழி சுதா உதவியோடு பயணம் செய்தாள். இரண்டு விதமான காஷ்மீரை அவளால் காண முடிந்தது, ஒன்று இயற்கை அழகு நிறைந்ததும், குளிர் நிறைந்த பிரதேசமும், மற்றொன்று இராணுவ வீரர்கள் நிறைந்த பரபரப்பான களமாக இருந்தது. மீராவும் தொடர்ந்து ஸ்ரீநகர் பயணம் செய்கிறாள். அதைத்தொடர்ந்து மீரா மலைப்பகுதிக்கு கோயில் செல்வதற்கு நடைபயணம் செல்லும்போது இருக்கும் நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ” மீரா,மீரா என யாரோ அழைக்கிறார்கள்.வைஷ்ணவி ஒளிரும் முகத்தோடு பார்க்கிறாள், மீண்டும் கவலைப்படாதே மீரா! நானும் உன்னைபோல் பெண்தான். அது பெண்ணின் உயிர்க்கோளம் மூடித்திறக்கும் வாசல் இடையில் வந்தவர்கள் அவரவர் எண்ணப்படி கட்டுப்பாடுகளை வைத்தார்கள். நான் உயிராக உடலோடு குருதித்துளியாக இருக்கிறேன் நீ வா!” என்று ” ஜெய்மாதாஜீ” எழுப்பிய குரலில் மீராவின் கனவு கலைந்து காலையில் கோயிலுக்கும் சென்றாள். ஆடையிலும் உடலில் மறைந்த சிவப்பின் நிறத்தில் நின்ற வைஷ்ணவி தேவி இருந்ததாக கதையின் முடிவில் இருக்கிறது.
” என்னடி இது விவாகரத்துனு போட்டுருக்கு? நீ லீவுக்குதான் வந்திருக்கேன் பார்த்தா இதென்ன கூத்து” என்று பேசும் அம்மாவின் கேள்விகளோடு ஈவாவின் கதை தொடங்குகிறது. சமூகத்தில் ஆண் எந்த தவறுகளையும் செய்தாலும், பெண் அனைத்தும் ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்ல வேண்டும். இந்த சமூகத்தில் பெண்ணுக்கு துணை என்பது ஆண் மட்டுமே என்று சராசரி மனிதர்கள் பார்வையை உடைக்கும் கதையாக இருக்கிறது. அருண் என்ற ஈவா எப்படி உருவாகிறாள். கடைசியாக தன் மகனுக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கிறார்கள் என்று கூறி கதையை முடிந்திருக்கும். ஒரு பெண் அன்றாட வாழ்க்கையில் அவள் குறைந்தபட்சம் எதிர்பார்ப்பது அன்பை மட்டும்தான் என்று சிறுகதை நிறைய இடங்களில் புரிய வைத்திருக்கும்.
“அட சனியனே, ஏன்டா இப்படி என் உயிர எடுக்குற?” என்று காளி தன் மகன் சூர்யாவைப் பார்த்து சொன்னாள். இந்தப் புத்தகத்தின் தலைப்பே, இந்த கதையின் அடிப்படையாக கொண்டு எழுத்தாளர் வைத்திருக்கிறார். பாலாவும், காளியும் காதலித்து வீட்டின் அனுமதி கிடைக்காததால் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதற்கு பின்பு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசும் கதைக்களமாக இருக்கிறது.
” பாவம் பிள்ளை” என்று சூர்யா முகத்தை துடைக்கும் காளி, கடைசி வரை என் பிள்ளை குழந்தையாகவே இருக்கும். யாரு என்ன சொன்ன என்ன? “சீ” சொல்லக்கூடாது என்ற வார்த்தையில் காளியின் வலிகள் நிறைந்த உலகத்தைப் புத்தகத்தில் புரிய முடிந்தது.
” நான் ஒன்னும் கோபி இல்ல, அண்டர்டேக்கர்” என்று கோபியின் வார்த்தையின் ஆழ்மனதில் இருக்கும், கதையை மையமாக வைத்து புத்தகத்தில் வருகிறது. பள்ளிச்செல்லும் வயதில் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வம் சென்றால் ஏற்படும் விளைவுகள், தவறான நண்பர்கள் அணுகுமுறையால், தன் அம்மாவையும், தனக்கு பிடித்த சுமதி மிஸ் இழக்கும் கோபியின் வாழ்க்கையின் நடந்ததை பற்றி எழுத்தாளர் புத்தகத்தில் கூறுகிறார்.
“அம்மா சுபா! யவனாவிற்கு ஏதோ நடந்திச்சு. உயிருக்கு ஆபத்துன்னு சொல்லுறாங்கம்மா” என்று மாமாவின் குரலை போனில் கேட்ட, சுபா அரசு மருத்துவமனைக்குச் செல்கிறாள். யவனா என்னும் பத்து வயது பெண் குழந்தையின் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஏற்படும், கடைசி நேரப் போராட்டங்கள் குறித்தும். எங்கள் வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தைகள் சொல்லி முடிக்கும் கதையின் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
” இதோ தொலைக்காட்சியில் குடிசைப்பகுதியில் எரிந்து நாசம் உயிர்பலி இல்லை” என்று ஓடுகிறது. செல்லமாள் என்னும் பெண்ணின் வாழ்க்கை சொல்லிக்கொண்டு, மகனுடன் சென்னைக்கு வந்த செல்லம்மாளுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் அவிப் பலி என்னும் கதையில் இருக்கிறது.
“மீண்டும் வயிற்றில் அசைவு… அடங்காம இப்படிதான் துள்ளிக் கொண்டே இரு…உன்ன என்ன செய்றதுன்னு தெரியல” என்று தாயின் குரல் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுகிறாள். ஒரு தாய் தன் கருவில் இருக்கும் குழந்தையை இந்த உலகத்தில் எவ்வளவு சிரமத்தின் மத்தியில் பெற்று எடுக்கிறாள். இந்த புத்தகத்தில் “இரவிலும் விடியலின் வெளிச்சம் குருதி வாசனையோடு மெல்லப் பரவியது” என்று உயிர்ப்புடன் கதையை எழுத்தாளர் கூறுகிறார்.
காடுகளையும், மலைகளும் சார்ந்து வாழும் உயிரினங்கள் இருக்கிறது. மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அபகரிக்க நினைக்கிறார்கள். ருத்ரா என்னும் புலி காடுகளை காப்பாற்றியதா, என்பதுதான் கடைசி கதையாக புத்தகத்தில் இருக்கிறது.
காளி புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் பெண்களின் வாழ்வாகவும், சமூக அக்கறையோடு கருத்துகளை எழுத்தாளர்.விசயலெட்சுமி முன் வைக்கிறார். ஒரு எழுத்தாளராக தன் எழுத்துகளுக்கு நிறைய உயிர்ப்பு கொடுத்தாக நான் பார்க்கிறேன்.
குரலற்றவர்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்கட்டும் உங்கள் எழுத்துகளில் தொடரட்டும் என்று முடிக்கிறேன்.
தோழர்.விசயலெட்சுமிக்கு நன்றி.
நூலின் தகவல்கள் :
நூல் : காளி
ஆசிரியர் : ச. விசயலெட்சுமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ . 130
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.