திரைப்பட விமர்சனம்: கானல் நீர் – ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ | இரா.இரமணன்‘கானல் நீர்’ 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம். நேரடியாக தமிழில் எடுக்கப்பட்டதா அல்லது மலையாளத்திலும் தமிழிலும் எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு படம் அமைந்துள்ளது. இணையத்தில் தமிழ்ப் படம் என்றே குறிப்பிடப்படுகிறது.

பரோட்டா மாஸ்டராக இருப்பவனுக்கும் அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் பெண்ணிற்கும் காதல் உண்டாகிறது. அவள் அவனுக்கு வீடு இருந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வதாக கூறுகிறாள். அவன் தனக்கு நாலு சென்ட் நிலம் இருப்பதாக பொய் சொல்லி அவளை திருமணம் செய்துகொள்கிறான். அவன் வீட்டில் சகோதரர்கள் சகோதரிகள் என நிறைய உறுப்பினர்கள். படுக்கவே இடம் இல்லை. இந்த நிலையில் திருமணம் செய்துகொண்டு வந்ததற்காக அவன் தாய் திட்டுகிறாள். இருவரும் அங்கிருந்து வெளியேறி பல வேலைகள் செய்து கொண்டு நடைபாதையிலேயே வாழ்கிறார்கள். ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. அமைச்சர் ஒருவரின் விழாவில் இலவச நிலம் கொடுக்கும் ஆணை அவனுக்குக் கிடைக்கிறது. அதற்கு பட்டா வாங்க அலைகிறான். ஆனால் அந்த நிலம் தனியார் நிலம்;அதை இலவச மனைப் பட்டாவாக கொடுக்க முடியாது என்று தெரிகிறது. சி ஆர் எனும் செயற்பாட்டாளர் வாழ்விடம் இழந்த மக்களுக்காக போராடுகிறார். இவர்களுடைய பிரச்சினையையும் எடுத்துக் கொள்கிறார். இதற்கிடையில்  ஒரு விபத்தில் அவன் இறந்துவிடுகிறான்.    மனைப் பத்திரத்திற்காக அலையும்போது குடியிருப்புகளுக்கு துணி துவைத்து கொடுக்கும்  வயதான பெண்ணும் அங்கே துப்புரவுப் பனி செய்யும் இன்னொரு இளம் பெண்ணும் இவளுக்கு  அறிமுகமாகிறார்கள். அவர்கள் இருந்த குடிசைப் பகுதி, நகர வளர்ச்சிக்காக காலி செய்யப்பட்டு  ஒரு பழைய ஓட்டல் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.. அவர்கள் இவளுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.  குடியிருப்பில் துப்புரவு வேலையும்  வாங்கித் தருகிறார்கள். ஆனாலும் தங்களுடன் அவளை தங்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அவள் நடைபாதையிலேயே மகனுடன் இரவுகளைக் கழிக்கிறாள். கணவன் வேலை செய்த நடைபாதை ஓட்டல் உரிமையாளர்,  இவள் வேலை செய்யும் குடியிருப்பு நிர்வாகி, நடைபாதையில் முகம் தெரியாத ஒருவன், மனைப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டிய அரசாங்க அதிகாரி எல்லோரும் இவளை படுக்கைக்கு அழைக்கிறார்கள். இவர்களுடைய தொந்தரவிற்கு அஞ்சி அவள் யாரும் வர முடியாத ஒரு பாலத்திற்கு அடியில் இரவுகளை கழிக்கிறாள். நிலம் யாருக்கு சொந்தம் என்கிற கேள்வியுடன் படம் முடிகிறது.                   

இந்த திரைப்படத்தை சோஹன் ராய் தயாரித்துள்ளார். பிரபல இயக்குனர் எம்.பிரேம்குமார் இயக்கியுள்ளார்.திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் (நிறுவன சமூகப் பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நன்கொடை திரைப்படமாம். இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு போட்டியிட்டது.

இந்தத் திரைப்படத்தின் மூலம் கிடைகும் லாபம் அனைத்தும் நிலமில்லாதவர்கள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு கருப்பொருள்களும் திரைப்படத்தில் பிரதானமாகக் கையாளப்பட்டுளளது. பெரும்பாலான நிலமில்லாதவர்கள், தங்கள் குடும்பப் பெண்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பதற்கான பாதுகாப்பான இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பெரும்பாலும் அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்யப்படும், நில உரிமை போராட்டம் பற்றியும் திரைப்படம் பேசுகிறது. இந்தியா அதிகாரவர்கத்தின் மந்தமான தன்மை மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவாமல் இருக்கும் அதிகாரவர்க்கத்தின் தன்மை பற்றியும் ’கானல் நீர்’ வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச மற்றும் தேசியத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளதாம். கலை, நேர்த்தி மற்றும் சிறந்த நடிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுள்ள படமாக விளங்குகிறது. ( ‘யுவர் ஸ்டோரி’ இணைய தள விவரங்கள்.- சைபர்சிம்மன்)

Watch Kaanal Neer | Prime Video

இந்த விவரங்களுக்கு மேல் சில விமர்சனக் கருத்துகளை கூற வேண்டியதிருக்கிறது.  நகர வளர்ச்சியினால் வாழ்விடத்தை இழந்தவர்களில் இரண்டு பெண்கள்  கதாநாயகிக்கு உதவுகிறார்கள். ஆனால்  தாங்கள் இருக்கும் இடத்தில் அவளையும் அவளது குழந்தையையும் தங்க வைக்க முடியாது என்கிறார்கள். அது சற்று பொருத்தமற்றதாக  இருக்கிறது.

சி ஆர் எனும் செயற்பாட்டாளர் வாழ்விடங்களை இழந்த மக்களுக்கு ஆலோசனை கூறுவது,அவர்களை திரட்டிப்  போராடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆக்டிவிஸ்ட். அவர் இந்தப் பெண்ணிற்கும் மனு எழுதுவது, அதிகாரிகளை சென்று சந்திப்பது போன்றவற்றில் உதவுகிறார். இது போன்ற விசயங்களில் பொறுமையாகப் போராட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் ஒரு கட்டம்வரை அவருடைய உதவியை நாடிய பெண், இறுதியில், நிலம் வழங்க கையெழுத்துப் போடும் அதிகாரி, தன்னை படுக்கையறைக்கு அழைப்பதை மட்டும் அவரிடம் சொல்வதில்லை. தானே நேரடியாக அந்த அதிகாரியை அவருடைய அலுவலகத்திற்கு இரவில் வர சொல்லி தன் மகன் முன்னால் தன்னை அடைந்து கொள்ள சொல்கிறாள். அந்த அதிகாரி மவுனமாக வெளியேறிவிடுகிறார். இந்தக் காட்சி எதார்த்தமாக இல்லை. 

இந்தப்படம் மையப்படுத்தும் வாழ்விடம் இழந்தவர்கள் மற்றும் இருப்பிடமே இல்லாதவர்கள் துயரம், பெண்கள் கவுரவமாக வாழ முடியாத சூழல் ஆகியவை நம் நாட்டின் பொதுவானவைதான்.  சென்னையில்கூட  குடிசைப் பகுதி மக்களின் இருப்பிடங்களைக் காலி செய்து அவர்களை செம்மஞ்சேரிக்கும் கண்ணகி நகருக்கும் அனுப்பும் அவலத்தைப் பார்க்க முடிகிறது. அதேபோல் இருப்பிடங்களை இழந்த இன்னொரு பகுதி மக்களுக்காகவே  நகரத்தின் மையத்தில் கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பை அவர்களுக்கு அளிக்காமல்  வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதை தடுத்து அவர்களை குடி அமர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இந்தக் கதை நடக்கும் களமான கேரளாவில் இடதுசாரி அரசு  வீடில்லாதவர்களுக்கு 500சதுர அடியில் வீடு கட்டித் தரும் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.அப்படிப்பட்ட மாநிலத்தில் நடந்த  ஒரு சம்பவத்தை பொதுமைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

                     வானுயர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் காட்டி ‘அங்கெல்லாம் யார் இருப்பார்கள்? நாம் இருக்க முடியாதா?’ என்று அந்த சிறுவன் கேட்பது வலுவான கேள்விதான். அந்தக் குடியிருப்புகளாவது பரவாயில்லை; சில நூறு குடும்பங்களாவது இருக்கும். ஆனால் அம்பானி போன்றவர்களின் ஒரு குடும்பமே பிரம்மாண்ட 27தள வீடுகளில் வாழ்வதும்  கதாசிரியர்கள் கண்களில் படவேண்டும். அதேபோல் படத்தில் இரண்டு மூன்று இடங்களில் வரும் ‘நம்ம  இடங்களைப் பறித்து  அரசாங்கம் பிரம்மாண்ட மெட்ரோ ரயில்  திட்டங்களை செயல்படுத்துகிறது’ என்கிற கருத்தும் பதில் சொல்லப்பட வேண்டியது. 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)